பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

12 Nov 2016

வண்ணப் பா/சந்தப் பா இலக்கணம்.

                                                         வண்ணப் பா/சந்தப் பா 
                                                                   இலக்கணம்.
                                                     *****************************
      தமிழிலக்கிய மரபில் இயல் இசை நாடகம் என முப்பகுப்பாய் யாப்பியல் விளங்கிவருகிறது.
    மரபு

பாக்களான வெண்பா, ஆசிரியம் முதலாய பாக்கள் "இயற்றமிழ் "எனப்படும். அவற்றினுள்ளும் 'சந்தம் உள்ளன, சந்தமில்லன 'என வகையுண்டு. சீர்களின் அமைப்பு, ஓசையமைதியைக் கொண்டு  அவை பகுக்கப்படும்.
      இசைப்பாக்களாகக் குறிக்கப்பெறுபவை நாட்டுப்புறப் பாடல்கள், சிந்துப் பாக்கள், சந்தப்பாக்கள், வண்ணப் பாக்கள் ஆகியவை. 
      இவ்விரண்டு வகைகளும் (இயலும், இசையும்) விரவி நடப்பவை நாடகப் பா (நாடகத் தமிழ்) ஆகும்.

வண்ணப் பாக்களும் இசைப்பாக்களான சிந்துப்பாடல்கள் பலவும் முடுகியலைக் கொண்டு திகழும்.

முடுகியல் சந்தங் கொண்டு நடப்பதால் அவற்றை நாம் தேமா, புளிமா போன்ற இயற்பாக்களின் அளவீடுகளான வாய்ப்பாடுகளால் அளவிட முடியாது. மாத்திரை வேறுபட்டுச் சந்தம் தப்பி ஒலிக்கும். எனவே வண்ணம் ,முடுகியல் ,சந்தப் பாடல்களைச் சந்த இலக்கணப்படியே வரையறை செய்தல் வேண்டும்.

சந்த இலக்கணம் வருமாறு :

★(இதைத் தனியாகக் குறித்து வைத்துக் கொள்ளவும்)

குறில், ஒற்று - 2 மாத்திரை

நெடில், ஒற்று - 2 மாத்திரை
நெடில்              - 2 மாத்திரை
குறில்               - 1 மாத்திரை
சுருங்கக் கூறின், குறிலுக்கு ஒரு மாத்திரை, மற்றவற்றிற்கு இரண்டு மாத்திரை.
இருகுறில் இணைந்து வரும்போதும் அதைத் தனித்தனியாகவே குறிக்க வேண்டும். இருகுறில் அடுத்து ஒற்று வரின் முதல் குறிலைத் தனியாகவும், அடுத்த குறில் ஒற்றைத் தனியாகவும் அலகிட வேண்டும்.
அனைத்திற்கும் சான்றுகள்.
கண்
கால்
பா
இவை இரண்டு மாத்திரை.

ப - இது ஒருமாத்திரை.


இருகுறிலொற்றுக்குச் சான்று.

                 எமன். 
இதை எ /மன் எனப் பிரிக்க வேண்டும். (இதை நாம் இயற்பாவில் நிரையசையான ஓரசையாகக் கொள்வோம்.(2.5 மாத்திரை)  ஆனால் சந்தப் பாக்களில் அது நான்கு மாத்திரை அளவாகும்.)

சந்த வாய்ப்பாடு

******************
தத்த, தாத்த, தந்த, தாந்த, தன, தான, தன்ன, தய்ய இவை எட்டும்  அடிப்படையானவை. 
இவற்றின் இறுதி நீட்டங்கள் சார்புச் சந்தங்கள் எனப்படும். தத்தா, தாத்தா என்பது போல்.

இவற்றுடன் இணையும் அரைச்சந்தங்கள்,

த்,ந்,,ன,த,னா,தா,னத்,தத்,னாத்,தாத்,னந்,தந்,னாந்,தாந், என்பனவாகும்.

இவை ஒன்றுடனோ, பலவற்றுடனோ கூடிச் சந்தம் இசைக்கும்.

சான்றாக, மேற்கண்ட பாடலில்,
தத் என்ற அரைச்சந்தம், தத்த என்பதுடன் கூடித் "தத்தத்த " என்று இசைக்கிறது. 
இவ்வாறு கோடிக்கணக்கான சந்தங்களை உருவாக்கலாம்.

இவ்வாய்ப்பாட்டை இசையாசிரியர் "தத்தகாரம் " என்பர்.

வண்ணப் பாடல்களுக்கும், சந்தப் பாடல்களுக்கும் அடிப்படை இந்தச் சந்தங்களே என்பதால்,
இந்த இலக்கணத்தைக் குறித்து வைத்துக் கொள்ளவும். இனிவரும் பயிற்சிகளுக்கு உதவும்.

★முக்கிய குறிப்புகள்★

************************
(வண்ணத்திற்கும், சந்தப் பாடலுக்கும் உள்ள வேறுபாடு.)
        சந்தப் பாடல்களுக்கு மாத்திரை மட்டுமே கணக்காகும். அப்பாடல்களைக் குறிக்க உதவும் தத்தகாரத்தில் எத்தனை மாத்திரை அளவுள்ள சீர்கள் பயில்கிறதோ அதை அளவுள்ள சீர்களே அனைத்து அடிகளிலும் அமைதல் வேண்டும்.
சான்றாக...
வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறைய
     இக்கம்ப ராமாயணப் பாடல் 
ஆறு மாத்திரை அளவுள்ள மூன்று சீர்களையும், நான்கு மாத்திரை அளவுள்ள ஈற்றுச் சீரையும் கொண்டது. இதே அளவுடன் அடுத்த அடிகளும் அமையும்.

பொய்யோவெனு - 6 மிடையாளொடும் -6

மிளையானொடும் - 6
போனான் -4
    என மாத்திரை அளவு மாறாமல் வரும். 
இதன் ஓசையைக் குறிக்க
     தன்னானன தன்னானன தன்னானன தானா
     எனக் குறித்தாலும்
தன்னானன சந்தத்திற்குப் பதில் அதே ஆறு மாத்திரை அளவுள்ள 
தனதானன, தந்தானன, தனதானன, தத்தத்தன, தானந்தன, தனதந்தன...
    இவ்வாறு எவ்வகைச் சந்தமும் வரலாம். சந்த மாத்திரை இவை அனைத்திற்குமே ஆறு தான். ஈற்றுச்சீரும் தானா,  தனன, தந்தா,  தத்தா என நான்கு மாத்திரை அளவுள்ள எதுவும் வரலாம். (அடிகளின் ஈற்றுச்சீரின் ஈற்றில் தனித்து நிற்கும் குறில் நெடிலாக இருமாத்திரையாகக் கொள்ளப்படும்.)
ஒற்றுகளும் எந்த இனமும் வரலாம். எனவே, 
★சந்தப் பாக்களுக்கு மாத்திரை மட்டுமே கணக்கு ★
                 
           வண்ணப் பாடல்கள்.
வண்ணப் பாடல்கள் மாறாச் சந்தத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்பதால்
சந்த வாய்ப்பாட்டில் கொடுக்கப்படும் ஒற்று எந்த இனத்தைச் சார்ந்ததோ அதே இனவொற்றெழுத்தே தத்தகாரத்தில் பயின்றுவர வேண்டும். மேலும்,
சந்தகுழிப்பில் 
ஒற்றுக்குப் பின்னுள்ள உயிர்மெய்யையும் சந்தக் குழிப்பின்படியே எழுத வேண்டும்.
சான்றாக,  தந்த எனும் குழிப்பு உள்ளதெனில்
குறில் - மெல்லொற்று - வல்லின உயிர்மெய் 
     எனும்படியான எழுத்தமைப்பே சரியாகும்.
வல்லின உயிர்மெய்க்குப் பதிலாக மெல்லின உயிர்மெய் வரின் அது "தன்ன 'சந்தமாகிச் சந்தக் குழிப்பு தவறும். 
(ஒற்றுக்குப் பின்வரும் எழுத்து மட்டுமே அதே இனத்தைக் கொள்ளும். அதற்கடுத்த எழுத்து பொதுவான உயிர்மெய்யாக வரலாம்.

தத்த என்பது வாய்ப்பாடு எனில் பாடலில், குறில்,வல்லொற்று,வல்லின உயிர்மெய்க் குறில் என்று வரவேண்டும்.

சான்றாக, 
தத்தத்த என்பது வாய்ப்பாடு என்றால்  குறில்,வல்லொற்று, வல்லினக்குறில்,வல்லொற்று.வல்லினக் குறில் என்று அனைத்து ஒற்றுகளும் வல்லொற்றுகளே வரவேண்டும். (சான்று : எற்றுக்கு) 
    தந்தந்த என வாய்ப்பாட்டைக் கொண்டால், ஒற்றுகள் மெல்லொற்றுகளாக இருக்க வேண்டும். குறில், மெல்லினவொற்று, மெல்லினக் குறில், மெல்லின வொற்று, மெல்லினக் குறில் என வரும்.(சான்று : வந்திங்கு)
    தன்ன என்பது குழிப்பானால்,
குறில் - மெல்லொற்று - மெல்லின உயிர்மெய் என்ற வகையில் வரும். (சான்று : அம்ம)

★ வல்லினம் மிகுமிடங்களால் மிகா இடங்களால் சந்தம் மாறாமல் வரும்படி எழுத வேண்டும்.


நெற்றிக்கு  பொட்டிட்டு என எழுதினால், நெற்றிக்கு"ப்" என தத்தத்தத் சந்தமாகிவிடும்.


குற்றியலுகரப் புணர்ச்சியையும் பார்க்க வேண்டும்.

பாட்டுக்கு ஏட்டிக்கு என்றால், பாட்டுக் கேட்டிக்கு என்று சந்தம் மாறும்.

வண்ணப் பா அமைப்பு...

       வண்ணப்பாடல்கள் விருத்த வகையாகவும், இசை வகையாகவும் அமையும்.
     விருத்த வகையாக அமையுமிடத்து அந்தந்த விருத்தங்களின் இலக்கணத்தையும், வண்ணப் பாவின் இயல்பையும் ஒருங்கே பெற்று வரும். எண்சீர் ஆசிரிய விருத்தமாக அமைந்தால் "எண்சீர் ஆசிரிய வண்ண விருத்தம்" எனப்பெயர் பெறும். இதேபோல் மற்றவற்றிற்கும் கொள்க.

இசைவகையாக அமையும் போது, 

      அளவொத்த நான்கடிகளையும்,  அடிக்கு இரண்டு கலைகளையும், கலைக்கு ஒரு தொங்கலையும் பெற்றுவரும். 
    இரண்டு கலைகளைக் கொண்ட அரையடிகள் மோனையால் இணைந்தும்,
    நான்கடிகளும் ஒரே எதுகையைப் பெற்றும்,  
    ஈற்றுச்சீர் ஏகாரம்பெற்றும்,
     முடிவது "வண்ணப் பா "எனப்படும்.

         அமையும் வடிவங்கள் சில...

வண்ண யாக்கள் நான்கடிகளால் அமைவது பல முறைகளில் இயலும்.

தனதான தந்தன தனதானா

தனதான தந்தன தனதானா
தனதான.தந்தன தனதானா   -    
                                  தனதானா
      இப்படியான பல வகைகளில் அமையும்.இவ்வாறு தத்தகாரத்தால் குறிப்பதைச் "சந்தக் குழிப்பு "என்பர்.
சந்தக் குழிப்பு கொடுத்தாலே அது "வண்ணப்பா வாகும் " 
      ("சந்தப் பாக்களுக்கு இவ்வாறு குறிக்கத் தேவையில்லை. சந்தவிருத்தம். சந்தக் கலிவிருத்தம் என அவற்றின் பெயருடன் இணைத்தாலே போதும்)

    மேற்கண்ட சந்தக் குழிப்பு "துள்ளல் "என்றழைக்கப்படும். துள்ளல் முழுதும் சேர்ந்தது ஒரு "கலை "எனப்படும். ஈற்றில் தனிக்கோட்டிற்கு அடுத்துள்ள தனிச்சீர் "தொங்கல் "எனப்படும்.

துள்ளல் தொங்கலுடன் முடிந்த ஒரு கலை அரையடியாகும். 
 இதேபோல் மோனையால் இணைந்த இரண்டாவது கலையும் சேர்வதே "ஓரடி "யாகும்.
          இதேமுறையில் எதுகையைப் பெற்ற நான்கு அடிகள் சேர்ந்ததே ஒரு வண்ணப் பாவாகும்.

மேலும் சில அமைப்புகள்...


தனத்த தந்தன தானன தானன

தனத்த தந்தன தானன தானன
தனத்த தந்தன தானன தானன
                   _ தனதானா

தத்தத்தன தத்தத் தனதன

தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
                         _தனதானா

தந்தனந் தந்தத் தனதானா

தந்தனந் தந்தத் தனதானா
தந்தனந் தந்தத் தனதானா
                          -தனதானா
(இப்படி நமக்கு ஏற்படும் கருவின் இசைக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம்.)
                           ★★★

No comments: