பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

26 Mar 2016

‪சிந்துப்பாடுக 1 இன் தொகுப்பு‬


அன்பு நண்பர்களே !
சோலைக் கவிஞர்களே! சிந்துப்பாடுக முதல் பயிற்சி செவ்வ னே முடிந்தது.
பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் பாக்களைப் படைத்தனர். புதிய யாப்பைப் பயில்கின்றஆர்வம் பலரிடத்தே இருந்ததைக் காண முடிந்தது. அனைவருக்கும் நன்றியும், வாழ்த்தும் உரித்தாகுக.
முதல் பயிற்சியின் தொகுப்பு, அப்பயிற்சியில் கலந்து கொண்ட கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. 
கொடுக்கப்பட்டுள்ள வரிசை எண் தரவரிசைக்குரியதன்று. கவிஞர்கள் கவிதைளை அனுப்பிய வரிசைக்குரியது.
அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்...
இந்தத் தொகுப்புப் பாடல்களைப் படிக்க வேண்டா. ★பாடிப் பார்க்கவும். அப்போது தான் சுவைக்கும்.
கவிஞர்களை வாழ்த்துங்கள்...உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

சிந்துப் பாடுக - 1 (ஆனந்தக் களிப்பு)


★அன்பு நண்பர்களே! கவிஞர்களே! 
புதிய பகுதியின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.:
பாட்டியற்றுக பயிற்சி அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பெற்றது. வெற்றிபெற உதவிய அனைவருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
"#சிந்துப்பாடுக" இந்தப் பயிற்சியிலும் தவறாமல் கலந்து கொண்டு, இசைத்தமிழ் வடிவங்களைக் கற்க அன்புடன் அழைக்கிறேன். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.
★இந்தப் பயிற்சிப் பகுதி புதிதாகப் பாப்புனைவோர் அஞ்சியொதுங்கா வண்ணம் எளிமையாகவும், பாப்புனைய தேவையான குறிப்புகளோடும் தொடரும். மேல் விவரம் வேண்டுவோர் முன்னோர் யாப்பியல் நூல்களைப் பார்க்கவும்.
சிந்துப் பாடல்களின் இலக்கணங்கள் முனைவர் இரா.திருமுகன் அவர்களின் "சிந்துப் பாவியல் " நூலை அடியொற்றியும், என் சொந்தப் பயிற்சியைக் கொண்டும் கூறப்படுகின்றன.

சிந்துப் பாடல்கள் - ஓர் அறிமுகம். நிறைவுரை.



நிறைவுரை.
*************
பாட வேறுபாடுகள் : 
பிற நூலாசிரியர் வழி விவாதங்கள் தள்ளப்படும் என்றதற்குக் காரணமுண்டு. இயல்பான இசைப்பாடல் வடிவங்களான சிந்துப் பாடல்களை, சீர், தளை, யாப்பு எனத் தளையிட்டு மக்களின் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் போக்கே அவற்றிற்கு "யாப்பியல் வழி "இலக்கணம் வகுப்பதாகும். அந்த வழி விவாதங்கள் பெரு வேறுபாடு கொண்டிருக்கும் என்பதால் விவாதத்தில் தீர்வு கிடைக்காது.

சிந்துப் பாடல்கள் - ஓர் அறிமுகம். பாடம் - 2



பாடம் - 2
**********
சிந்து - இலக்கணம்
பாமர மக்களின் வாழ்வியலுடன் இரண்டறக் கலந்த சிந்துப் பாடல்கள் அவர்தம் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்ததால், அவற்றில் இலக்கியச் சொற்கள் அதிகமின்றி வழக்குச் சொற்களே அதிகமிருந்தன. கொச்சைச் சொற்களும் கலந்திருந்தன...ஆனால் அவை எதுகை, மோனை, இயைபு நயம் நோக்கி ஆளப்பெற்றன. 
தெரிசனம் (தரிசனம்) , தெசரதன் (தசரதன்) போன்று மோனைக்கும், எதுகைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பெற்றன.
இவ்வாறான பாடல்கள் வாய்வழியாக, செவி வழியாகவே இருந்தன. அவற்றிற்கென இலக்கணம் வகுக்கப்படாததால், பின்வந்த பாட்டியல் நூலோர் ஏதும் வகுத்தாரில்லை. 
அ.கி.பரந்தாமனார், புலவர் குழந்தை போன்றோர் சிந்துப் பாடல்களுக்கு அவை வழங்கப்பட்ட முறைமையினான் வகுத்த இலக்கணமும் சரியான முறையில் அமையவில்லை. பல முரணான விதிகளும் வகுத்தனர். (சான்று : கும்மிச் சிந்துக்கு வெண்டளை வேண்டும் என்றது)

சிந்துப் பாடல்கள் - ஓர் அறிமுகம் - பாடம் : 1




பாடம் : 1
**********
நாட்டுப்புற மக்களின் உரிமைச் சொத்தாகிய நாட்டுப்புறப் பாடல் வகையைச் சேர்ந்தவை"சிந்துப் பாடல்கள் ". 
யாப்பியல் நூல்களில் கூறப்பட்ட பாவகைகளின் இலக்கணக் கட்டுக் கோப்புகளில் அடங்காமல், தங்கள் மனத்தில் எழுந்த உணர்வுகளின் வெளிப்பாடாக, வடிகாலாகப் பாமர மக்கள் இப்பாடல்களைப் பாடிவந்தனர்.
இலக்கியத்திற்கே இலக்கணம் என்கின்ற தொல்காப்பியரின் பண்பு இப்பா வகைகளுக்குப் பொருந்தும். ஏனெனில் இவற்றை யாப்பியல் கூறுகளான தேமா, புளிமா போன்றவற்றால் அடக்க முடியாது. அவற்றில் இவை அடங்காது. பண், பண்ணத்தி, தோல், பாட்டு போன்ற சொற்களால் தொல்காப்பியர் இவற்றைப் பொதுவாக அடக்கினாரேயன்றி அவற்றிற்கு இலக்கணம் வகுத்தாரில்லை. அவை நாட்டுப்புறப் பாமரர்களின் உணர்வில் கலந்த உரிமை முழக்கங்கள்.
தங்கள் வாழ்வில் நிகழ்ந்த பிறப்பு, இறப்பு, திருமணம், பூப்புனித நீராட்டு, கோயில் திருவிழாக்கள், உழவுத் தொழிலில் ஈடுபடும் போது, நெடுந்தொலைவு நடைபயணத்தின் போது அம்மக்கள் இந்தப் பாடல்களைப் பாடினர். சந்தத்துடன் அவை இசைத்துப் பாடக் கூடியவை என்பதால் "இசைத்தமிழ் " வகையில் அவற்றை அடக்கலாம்.

கடவுள்என்தோழன்‬ 8


....தொடர்ச்சி : 8....

சுயநலமாய் வாழ்கின்றோர் பரம ஏழை
          தூய்மையிலா உள்ளத்தார் ஏழை.! நாட்டில்
கயமையினைப் புரிகின்ற கசடர் ஏழை
          கருணையிலா மனங்கொண்டோர் ஏழை! போதை
மயக்கத்தாற் பொறுப்பின்றி வாழ்வோர் ஏழை
          மானுடத்தைக் கொன்றொழிக்கும் மாக்கள் ஏழை
நயமாகப் பேசிப்பின் நட்பைக் கொல்லும்
          நரிக்குணத்தைக் கொண்டவர்கள் ஏழை தம்பீ!

16 Mar 2016

‪பாட்டியற்றுக 25 இன் தொகுப்பு‬


நிறைவு பயிற்சி...
அன்பு நண்பர்களே! கவிஞர்களே! பாட்டியற்றுக : 25 இன் தொகுப்பு அப்பாடல்களை இயற்றிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
புதிதாகப் பல கவிஞர்கள் இணைந்திருப்பது மனத்திற்கு மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் தருகிறது.
பைந்தமிழ்ச் சோலையில் விருப்பத்துடன் பலர் இணைவது, தமிழ் மரபைக் கற்கப் பலரும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பதையே காட்டுகிறது. 
கொடுக்கப்பட்டுள்ள எண்கள் தரவரிசைக்குரியதல்ல. கவிஞர் அனுப்பிய வரிசைக்குரியதே.
கவிஞர்களை வாழ்த்துங்கள். 
கவிதைகளைப் படியுங்கள். நண்பர்களுக்குப் பகிருங்கள்.
பாட்டியற்றுக : 25