சிற்றிலக்கிய_விளக்கம்
(இலக்கண /இலக்கிய விளக்கத் தொடர்)
கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தமிழின் மரபு வடிவங்களைப் பாட்டியற்றுக, முயன்று பார்க்கலாம், சிந்து பாடுக போன்ற பயிற்சிகளின்மூலமாகக் கற்றுத் தனிப்பாடல்களாகப் படைத்து வந்த நம் சோலைக் கவிஞர்கள் "தொடர்நிலைப் பாக்களைப் பாடும் ஆற்றலைப் பெறுதற்காக இக்கட்டுரை விளக்கம் தரப்படுகிறது.
இக்கட்டுரையில் சிற்றிலக்கியத்தைப் பற்றியும், அவற்றின் வகைகள், பாட வேண்டிய முறைகள் உள்ளிட்ட விளக்கங்களையும் ,இந்தப் பாடத்தைத் தொடர்ந்து வரப்போகும் என்னுடைய சிற்றிலக்கிய வகை சான்றுகளையும் கண்டுணர்ந்து அவற்றை அடியொற்றிச் "சிற்றிலக்கியம் "படைக்கும் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
சிற்றிலக்கியம்
****************
தமிழில் வழங்கும் இலக்கியங்கள் பேரிலக்கியம், சிற்றிலக்கியம் எனப் பாகுபடும். பேரிலக்கியம் என்பது "பெருங்காப்பியம் "என்றும் வழங்கப்பெறும். இராமாயணம், சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம் போன்றவை இவ்வகையாகும்.
சிற்றிலக்கியம் என்பதைக் "காப்பியம் "எனப் பாட்டியல் நூலார் பொதுவாகக் குறிப்பர். பெருங்காப்பியப் பா அடிகளாலும், பாவகைகளாலும் மாறுபடுவனவும், நான்கு உறுதிப் பொருள்களுள் குறைந்து வருவனவும் "காப்பியமாகும் "
"அறமுத னான்கினுங் குறைபா டுடையது
காப்பிய மென்று கருதப் படுமே "
"அவைதாம்,
ஒருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினும்
உரையும் பாடையும் விரவியும் வருமே "
(தண்டியலங்காரம்)
எனத் தண்டி விளக்குவார்.
பெருங்காப்பியம் பேரிலக்கியம் என வழங்கப் பெறலால், காப்பியம் "சிற்றிலக்கியம் "எனப் பெயர் பெறும்.
சிற்றிலக்கியத்திற்குப் பிரபந்தம் எனும் வடமொழியும் வழங்கப்படுகிறது. பிரபந்தம் எனில் "நன்கு கட்டமைக்கப்பட்டது"எனப்பொருளாகும். அனைத்து இலக்கியங்களும் நன்கு கட்டமைக்கப் பெறுபவையே என்பதால் பிரபந்தம் எனும் பெயர் பொருந்தாமல் தற்கால அறிஞர் தம் ஆய்வு முடிவுகளின் கூற்றுப்படி "சிற்றிலக்கியம் என்னும் பெயர் வழங்கலாயிற்று.
சிற்றிலக்கிய வகைகள் (எண்ணிக்கை)
***-*********************
சிற்றிலக்கியங்கள் 96 வகையாகும். இதனை, கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் தோன்றிய பிரபந்த மரபியல் என்ற பாட்டியல் நூல் கூறுகின்றது. இந்நூல்,
"பிள்ளைக் கவிமுதல் புராண மீறாகத்
தொண்ணூற் றாறென்னும் தொகையதாம். .
எனக்கூறுகிறது. வீரமாமுனிவரின் சதுரகராதியும் 96என்றே கூறுகிது.
பாட்டியல் நூல்களுள் ஏறக்குறைய 65 வகைகளையே விளக்கினலும் அவற்றின் உட்பிரிவுகளின்படி 96 வகையாக விளங்கும்.
(ஆயினும் இக்காலத்தில் 300 க்கும் மேற்பட்ட சிற்றிலக்கிய வகைகள்உள)
சிற்றிலக்கியங்கள் எவை.,.
*****************************
பிள்ளைத்தமிழ், பல்சந்தமாலை, வெண்பா அந்தாதி, கலித்துறையந்தாதி, கலம்பகம்.,ஒலியந்தாதி, மும்மணிக்கோவை, ஊர் நேரிசை, ஊர் இன்னிசை, கோவை, கைக்கிளை, மும்மணிமாலை, நான்மணிமாலை, இருபா இருபஃது, இரட்டைமணிமாலை, இணைமணிமாலை, ஒருபா ஒருபஃது, பன்மணிமாலை, சின்னப்பூ, தசாங்கப்பத்து, (குடை, கோல், ஊர், நாடு, வேல், யானை, குதிரை, வில். வேல், வாள் விருத்தம்) ஊர்வௌண்பா அலங்காரப் பஞ்சகம், ஊசல், கடிகைவெண்பா, அட்ட மங்கலம், நவமணிமாலை, தசப்பிராதுற்பவம், நயனப் பத்து பயோதரப் பத்து, உலா, குழமகன், வளமடல், அங்கமாலை, பாதாதிகேசம் கேசாதிபாதம், ஆற்றுப்படை, தானைமாலை, வஞ்சிமாலை, வாகைமாலை, தாரகைமாலை, மங்கலவள்ளை, யானை வஞ்சி, மெய்கீர்த்தி, கையறம், புகழ்ச்சி மாலை, நாமமாலை, வருக்க மாலை, செருக்கள வஞ்சி, வரலாற்று வஞ்சி, பரணி, புராணம், பெயர் நேரிசை, பெயர் இன்னிசை, அம்மாணை, குறவஞ்சி, சதகம், பதிகம். . .
போன்றவை "சிற்றிலக்கியங்களாகும் "(இக்காலத்தே இன்னும் பலவுள)
காலம்
********
சிற்றிலக்கியங்கள் சங்க காலத்திலேயே தோன்றி விட்டன. பத்துப் பாட்டு நூல்களில் ஆற்றுப்படை நூல்களும், பதிணெண் கீழ்க்கணக்கில் கார்நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது போன்றவையும் சிற்றிலக்கியங்களே.
பக்தி இலக்கியங்களில் பெரும்பான்மை இவ்வகையே.
கி.பி.15 ஆம் நூற்றாண்டே சிற்றிலக்கிய வளர்ச்சியின் உச்சநிலையாகும். இக்காலத்தைச் "சிற்றிலக்கியப் பொற்காலம் " எனலாம்.
பொதுத் தன்மைகள்
**********************
சிற்றிலக்கியம் அளவில் (பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை) சுருங்கியதாக அமையும்.
அகப்பொருள், அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப் பற்றியதாக அமையும். (கோவை போன்ற சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டு அமைவதும் உண்டு.)
பாடப்பெறும் கடவுள் அல்லது மன்னன் அல்லது வள்ளல் ஆகியோருடைய வாழ்வின் ஒரு சிறு கூறு மட்டுமே விளக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக: உலா இலக்கியம் தலைவன் உலாவரும் காட்சியை மட்டுமே சிறப்பித்துப் பாடப்படுவது.
அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களுள் ஏதேனும் ஒன்றைத் தருவதாக அமையும்.
முடிவுரை
***********
நண்பர்களே! இவை மட்டுமல்லாமல் இன்னும் பல நுட்பங்களும் ஒவ்வொரு சிற்றிலக்கியத்திற்கும் உள்ளன.அவை பற்றிய செய்திகளை ஒன்று திரட்டியும், விளக்குமுகத்தான் சான்றாக என்னுடைய படைப்பையும் இனிவரும் நாள்களில் கண்டு, களிப்பதோடு மட்டுமன்றி, நீங்களும் அவ்வகையை எழுத வேண்டும் என்பதே என்னுடைய இந்தக் கட்டுரையின் (பைந்தமிழ்ச் சோலையின்) தலையாய நோக்கமாகும்.
நன்றி!
தமிழன்புடன்
மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்
No comments:
Post a Comment