பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

7 Dec 2016

வரதராசன்_பாக்கள்



வரதராசன்_பாக்கள்
(கட்டளைக் கலித்துறைப் பாடல்கள்)
             "மெய்யுணர்வு "
               **************
உள்ளம் பெருங்கோயி லூனுடம் பேபெரு வாலயமாம்
கள்ள மதிலுறைந் தாலதி லீசன் கலப்பதில்லை

எள்ளு ளிருக்கின்ற எண்ணெய்யைப் போலே இறைவனவன்
உள்ளி லிருப்பதால்
இவ்வுடல் காத்த லுயர்வுறுமே!            

போற்றிடு நற்செய லெல்லாம் பரம்பொருள் போற்றுவதாம்
ஆற்றில் கரையுடைந் தாலதால் ஏதும் பயனுளதோ 
மாற்ற மெதுமிலா நற்செய லாலிறை வாழ்ந்திடுவான்
ஊற்றென வாகி உளம்நிறை   வாகும் உணர்குவையே!    

ஆளும் நிலையினை ஆட்கொளச் சொன்னாரப் பட்டினத்தார்
மூளும் சிறுமையாம் பெண்ணின்பம் நீங்க முழுமையுறும்
வாளதன் கூரென உள்ளம் மிளிர்ந்திடில் வாழுமிறை
கோளெனக் கொள்ளுக வேயிந்தப் பாரில்வாழ் கோளதிலே

பட்டினத் தாரு முரைத்ததை நன்றாகப் பாரப்பாநீ
எட்டி யிருந்திடச் சொன்னது பெண்ணின்ப மென்றதுவே
கட்டி யிழுத்தியி ருத்திடச் சொன்னார் கறையொழித்து
மட்டிலா ஆனந்த மாகிடு முள்ளம் மகிழ்வுறுமே

தேவப் பெருவாழ்வு தேடி வருமுனைத் தேறுகவே
பாவப் பொதியென வாழ்வதி லேதும் பயன்களுண்டோ
சாவப் புகுந்திடும் போதினில் சாற்றும் திருமுறையால்
ஆவது மேதுண்டோ ஆரு மறிகிலர் ஆண்டவனே!

இங்குப் புகுந்திடும் ஈனப் பிறவிகள் ஈசனவன்
பொங்கு கடலன்பைப் போற்றத் தெரியாமல் போய்விழுவார்
மங்கி விழுகுவர் மாதரார் அல்குலில் மாந்திடுவார்
தங்கு மிறையரு ளேதுள தோவதில் தாமுரையே!

உள்ளத்தி லுன்னையு முன்னில் பிறரையும் உன்னுகவே
வள்ளற் பெருமானே யாவிலும் நிற்பவன் என்றறிக
தள்ளற் கரியதோர் மானுடத் தன்பைத் தருகுவையேல்
பள்ளம் நிறைகுளிர் நீரருள் வாரப் பரம்பொருளே! 
                        ★★★

No comments: