பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

2 Dec 2016

வெண்பாவில் விளாங்காய்ச் சீர்



வெண்பாவில் விளாங்காய்ச் சீர் வரலாமா ?

   வெண்பாவில் விளாங்காய்ச் சீர் வரக் கூடாது எனச் சிலர் கூறுகின்றனர்.
அதைப் பற்றிய சில கருத்துகளைப் பார்க்கலாம்

      யாப்பில் அடிப்படை அலகுகள்
நேர், நிரை, என இரண்டு.
தனிக்குறில்,தனிக்குறில் ஒற்றடுத்து, தனிநெடில், தனிநெடில் ஒற்றடுத்து
வருவது நேரசை யாகும்.
குறிலிணை, குறிலிணை ஒற்றடுத்து, குறில்நெடில், குறில்நெடில் ஒற்றடுத்து
வருவது நிரையசையாகும்.
இவை ஈரசைச் சீர்களை உருவாக்கும் போது, நேர்நேர்--தேமா, நிரைநேர்--புளிமா,
நிரைநிரை--கருவிளம், நேர்நிரை--கூவிளம் என வரும்.
மூவசைச் சீர்கள் உருவாகும் போது, இவைகளுடன் நேர் சேர்ந்தால், தேமாங்காய்,
புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய் என வரும்.
நிரை சேர்ந்தால் கனிச்சீராகும்.
இவ்வளவுதான் நம் அடிப்படை இலக்கணம்.விளாங்காய்ச் சீரென ஒன்றில்லை.
ஆனால் அப்படி ஒன்றை உருவாக்கலாம் எனக் கி.வா.ஜ. குறித்திருக்கலாம்.
' நமசிவாய வாழ்க' என்பதில் முதற்சீரைக் கருவிளங்காய் எனக் கொள்ளலேநலம். கருவிளாங்காய் என்பது தேவையில்லை.(இது என் கருத்து)
நம் இலக்கணம் மிகவும் நெகிழ்ச்சியுடையது. அதையும் மீறியே புதுக்கவிதைகள் தோன்றின.
புறம். கலி. இவைகளைப் பார்த்தால் மரபின் நெகிழ்ச்சி தெரியவரும்.
' இலக்கியங் கண்டதற் கிலக்கணம் இயம்பலின்' என்பதே உண்மை.
புதிய வடிவங்கள் உலாவந்து, நிலைபெற்று விடின்,அங்கே புதிய இலக்கணம்தோன்ற வேண்டும்.தமிழ் இலக்கணம் அப்படித்தான் வளர்ந்துள்ளது.
அதனாலேயே தமிழ்மொழி என்றும் நிலைத்து வாழ்கிறது.

     குறிலிணை, குறில்நெடில், இவை ஒற்றுடன் சேர நான்கும் "நிரையசை " என்பதே யாப்பியல் விதி. குறில் நெடில் இடையுற்ற நேரீற்று முச்சீர் "விளங்காய் " எனப்படும். எந்த யாப்பியலாரும் "விளாங்காய்" எனக் குறிப்பிடவில்லை. இவ்வகைச் சீருள்ள பல வெண்பாக்கள் திருக்குறள், நளவெண்பா., திருவாசகம் போன்ற முன்னோர் பாடல்களில் பயின்றுள. இவை வாராவெனின் அவர்கள் எடுத்தாளக் காரணம் உண்டா? அவர்களுக்குத் தெரியாதா?
இது தவறான கருத்து (விதியன்று)

கவிதைகளையும், செய்யுட்களையும் இக்காலத்தில் உரைபோல் படித்துவிடுகிறோம். ஆனார் முற்காலத்தில் அவற்றை இசையாகவே பாடினர். அவ்விதம் பாடும்போது இவ்வழி விளங்காய்ச் சீர் சற்றே நீண்டொலிப்பதால் சந்தம் கெட்டுத் தடுமாறும் நிலையின் காரணமாக விளாங்காயைக் கூடுமானவரை தவிர்த்தார்கள். இதைக் காரணம் காட்டியே இற்றைப் புலவர் விளாங்காய் வரலாகா என்றனர்.(வரக்கூடாது எனச் சொன்னாரில்லை) வரலாகா என்றால் அது இசைத்தற்கு ஆகா என்று பொருள்.
சான்றுகளாகப் பல முன்னோர் பாடல்களே இருக்கையில் விளாங்காய் வரக்கூடாது எனச் சொல்வது பிழை. 
குறிப்பு :
விளாங்காய் என்ற வாய்ப்பாடு எந்த யாப்பியல் நூல்களிலும் இல்லை. யாப்பை விளக்க வந்த யாப்பருங்கலக் காரிகையிலும் இச்சீர்கள் உள்ளன, 

1 comment:

Sai Giridhar Iyer said...

உழவினார்க் கைமடக்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை

குறள் படைத்த வள்ளுவரே கருவிளங்காய் என்றே எடுத்தாள விளாங்காய் ஏனோ எனக்கூறுதல் குறளைப் பழிப்பது போலாகும்.