பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

31 Oct 2022

பாட்டியற்றுக_தொகுப்பு - 02 (புதியது )



அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! 

    பாட்டியற்றுக:02 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.

பயிற்சிக்குழுவில் தேர்வான பாடல்களை இந்தத் தாய்க்குழுவில் பதிவிட்டதற்குக் காரணம்...உங்களுடைய ஊக்கம் தரும் வாழ்த்துகளை வேண்டியே.

   இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. 

   இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும்.  பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.

                       நன்றி.!

           *****     *****     *****

           .  பாட்டியற்றுக,--02 

              (குறள்வெண்பா)

1.கவிஞர் Sachithananthan Kuganathan 

எண்ணத்திற் சீர்கள் எழுந்து நடைபயில

வெண்பா வருமே விரைந்து

2.கவிஞர் Swarna Sabarikumar 

இறைவன் அருளால் எடுத்த பிறப்பில் 

மறைபொருள் காண்பதே மாண்பு.

3.கவிஞர் Anbudan Ananthi 

முத்தமிழே மூலமே மூத்தவளே உன்னாலே

தித்திக்கும் எந்தன் பிறப்பு.

4.கவிஞர் Umaipalan Thiyagaraja 

இன்பத் தமிழ்பருக ஈர்த்தணைத்தாய் சோலைக்கே

அன்னைத் தமிழே அழகு

5.கவிஞர் Balanethiram Kannan 

கடலிலே மூழ்கையில் கைகொடுப் பாரும் 

கடனுக்கு நீட்டிடார் கை

6.கவிஞர் சேக்கிழார் அப்பாசாமி 

பாட்டுக்குப் பாரதிபோல் பைந்தமிழ்ச் சோலையாம்

காட்டாற்று வெள்ளத்தில் கல்

7.கவிஞர் க.சந்தோஷ்குமார் 

முப்பால் நெறிநின்று மூவுலகும் ஆழ்ந்தறிந்தால்

ஒப்பிலா வாழ்க்கை உயிர்க்கு

8.கவிஞர் CA Manimaran Kathiresan 

தேவைக்காய் வந்திடும் தேடுபொருள் யாவையும் 

சேவைக்காய்க்  கொள்ளற் சிறப்பு

9.கவிஞர் திலகவதி

அன்பென்ற சொல்லால் அகிலமும் கட்டுண்டு 

நன்றென்று நாட்டப் படும்

                                ★★★


#பாட்டியற்றுக_தொகுப்பு - 01 (புதியது )



அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! 

    பாட்டியற்றுக:01 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.

    இந்த ஆண்டின் முதல் பயிற்சியின் தொகுப்பு இது. 

பயிற்சிக்குழுவில் தேர்வான பாடல்களை இந்தத் தாய்க்குழுவில் பதிவிட்டதற்குக் காரணம்...உங்களுடைய ஊக்கம் தரும் வாழ்த்துகளை வேண்டியே.

   இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. 

   இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும்.  பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.

                       நன்றி.!

           *****     *****     *****

           .  பாட்டியற்றுக,--01

       (குறள்வெண் செந்துறை)

1. கவிஞர் Anbudan Ananthi 

சிவமே சீவனே சிந்தையில் நின்றவா

தவமே புரிவேன் தருவாய் அருளே!

2.கவிஞர் Sachithananthan Kuganathan 

வேழ முகத்து விநாயகா வுன்பதந்

தாழப் பணிந்தேன் தமிழினிற் பாடவே!

3.கவிஞர் Umaipalan Thiyagaraja 

உமையொரு பாகம் உடையாய் நீயே

அமைதி தருவாய் அகிலத் தரனே!

4.கவிஞர் Swarna Sabarikumar 

சங்கரன் மனமகிழ் சங்கரி உன்னருள்

எங்களை அரண்போல் என்றுமே காக்கவே!

5.கவிஞர் CA Manimaran Kathiresan 

வேலுடன் நின்றவா வேதனை அகற்றவா

வேலும் மயிலும் வேண்டும் துணையே!

6.கவிஞர் Kannan Balanethiram 

மனத்திலே திடமும் மகிழ்வுட னுளமும்

தினமுமே தருவாய் தில்லையம் பலனே

7.கவிஞர் க.சந்தோஷ்குமார் 

வினையின் பயனால் விளைந்தேன் முருகா

வினைகள் ஒழித்துயர் வீடளித் தேற்கவே

8.கவிஞர் சேக்கிழார் அப்பாசாமி 

ஏறு முகமாய் ஏற்றி விடவே

ஆறு முகமே அருளைத் தருகவே

9.கவிஞர் திலகவதி

மாயக் கண்ணனே மரகத வண்ணனே

காயம் பொய்யே காத்திடு நீயே

                                ★★★

15 Feb 2020

தமிழ்ப் புத்தாண்டு


லகெங்கிலுமுள்ள தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

அறிவியலுக்கொவ்வாத சித்திரை 1 (ஏப்ரல் மாதம். . .கடுங்கோடைக் காலம்) தமிழ்ப் புத்தாண்டென்று நுழைக்கப்பெற்று அதை இன்றளவும் ஏற்றுக் கொண்டாடும் தமிழர்காள். . .

ஆடியில் விதைத்துத் சுறவத்தில் (தைத்திங்கள் என்னும் சனவரியாம் .. .வாழ்வின் மலர்ச்சிக் காலம்) அறுத்து இந்த உலகத்திற்கே சோறிடும் நம் பண்டைய முன்னோர் கண்டறிந்த வானியற் கூற்றின்படி நமக்கெல்லாம் இன்றுதான் தமிழ்ப் புத்தாண்டாகும்.!

5 Sept 2019

நோவறு_பதிகம்

நோவறு_பதிகம்
* * * * * * * * * * *
பாவலர் மா.வரதராசன்
(என் குடும்பச்சூழலையும், மன இறுக்கத்தையும் நன்கறிந்த என் கெழுதகை நண்பர் மன்னை வெங்கடேசன் அவர்கள் நீண்ட காலமாக "நோயறு பதிகம்"

3 Apr 2019

நெஞ்சொடு கிளத்தல் .

இன்றைக்கு (நாள் – 24.03.2019 ) நிகழ்ந்த ஒருநிகழ்வால் மனம் கொதித்துக் கொண்டிருக்கிறது. அம்மனத்தை ஆற்றுவிதத்தான் 'என்னெஞ்சே அமைதிபெறு ' என

                          நெஞ்சொடு கிளத்தல் .

ஒற்றை இலக்கப் பாடல்கள் பாவலர் மா.வரதராசன் 
இரட்டை இலக்கப் பாடல்கள் விவேக்பாரதி 


கேளாய் மடநெஞ்சே கீழோர் நிறைவையம்
தேளாய்க் கொடுக்காற் றிகைப்பூட்டும் - நாளாக
எல்லாம் தெளிவாகும் ஈசன் செயலென்று
நல்லதே நாளும் நினை                                                                         .

நினைவே அழையாதே நீயுந்தேம் பாதே
கனவே அனைத்தும் கலையும் - மனமே
அமைதியுடன் வையத்தின் ஆட்டத்தைக் கண்டால்
சுமையெதுவும் இல்லை சுகம்!

சுகமொன்றே நோக்காய்ச் சுமக்கின்றார் பல்லோர்
முகம்முன்னே பாடித் துதிப்பர் - அகத்திலோ
ஆயிரம் கீழ்மை அணைந்திருக் கச்செய்வான்
பேயினும் தீய செயல்

செயல்கண்டு பல்லோர் செழிப்பெல்லாங் கண்டு
வியப்புற்றுச் செய்திடுவார் வஞ்சம் - அயலானா
நம்நிலைமை மாற்றுவது நன்னெஞ்சே தேம்பாதே
கம்மென் றிருத்தல் கலை!

கலையே உயிரென்பான் கன்னித் தமிழை
விலைகொண்டு விற்றுப் பிழைப்பான் - அலைநெஞ்சே
பொன்னாடைக் கேங்கிப் புலைதீய செய்யுமப்
பன்னாடை யையுள் தவிர்

தவிர்ப்பவரை நம்செய்கை கண்டு மனத்தால்
தவிப்பவரை வாழ்வில் தரிசி - அவர்சொல்வார்
நம்வழிப் பாட்டையது நல்வழி என்பதை
உம்மெனும் வார்த்தை உகுத்து

உகுக்கின்ற கண்ணீரே உம்மத்தர் தம்மைச்
செகுக்கின்ற வாளாம் தெருள்க - பகுக்கின்ற
காக்கைக்கும் உண்டாம் பகுத்தறிவு இவ்வோட்டை
யாக்கைக்கு முண்டோ அது?

அதுசெய்க இன்னும் இதுசெய்க வென்பார்
மெதுவாக கால்வாரிச் செல்வார் - பொதுநலத்தை
எண்ணுதல் முக்கியம் ஏ!மனமே அத்துடன்
உண்மையும் சேர்த்தே உணர்

உணரும்போ தெல்லாம் உயிர்கொய்யு மாகில்
திணறுத லாமே இயற்கை - அணங்கிற்கும்
நன்மன முண்டாங்கொல் நாயா மிம்மூடர்க்குக்
கன்மனம் தானே களிப்பு

களிப்பார் விழிகள் கலங்கிடக் கண்டு
விளிப்பார் நகைத்திடுவார் வீணாய் - புளித்திருக்கும்
பாலை எறிதல்போல் பாவியரை நாமெறிந்தால்
நாலும் நடக்கும் நலம்

நலமென்று கண்டும் நலமில்லை யாமால்
பலங்கொள்ள லாமோ பகர்வாய் - முலைகெட்ட
மாதர்தம் வேட்கையும் மாய்க்கும்நற் பண்பென்னும்
ஓதலே நன்றாம் உணர்

உணர்ந்துவிட்டால் நெஞ்சே உதரலினி இல்லை
புணர்ந்து பிரிகின்ற பொய்யர் - வணங்கிடுவார்
வாலாட்டு வார்பின்னால் வாரிமண் தூற்றுவார்
நூலாட்டம் நீயறுப்பாய் நட்பு!

அறுப்பாய்நன் னெஞ்சே அடுப்பாய் பகையை
ஒறுத்தல்நம் வேலை ஒழிக - பொறுத்தலும்
முட்டாள் தனமாகும் முந்தி யுணர்வாயே
பட்டால் தெரியும் வலி

வலிமை வளர்ப்பாய் வளைநெஞ்சே உன்னை
எலியாய் நினைத்திங்கே ஏசும் - வலியில்லாப்
புல்லரை உன்செயலால் பூழ்தி யெனவாக்கு
கல்வியால் தீர்ப்பாய் களை

களைப்பால் அயராதே காண்நெஞ்சே தீதை
உளைப்பாய் உயர்தொண்டால் ஒன்றி - விளைசெய்கை
நற்றமிழே என்னும் நறும்பணியைக் கொள்ளப்
பெற்றிடுவாய் என்றும் சிறப்பு

சிறப்புடையான் நீநெஞ்சே சேராத நட்பால்
சிறப்பிழந்து நோயில் சிதையாய்! - பொறுப்புனக்
குண்டுபல வேலை உடனுண்டே உன்பகைவர்
உண்டு கொழுத்திருப்பார் உற்று!

உற்றறிக நன்னெஞ்சே ஒல்லார்தம் தீமனத்தை
முற்றொழித்த லாகா முனையழியும் - நற்றுணையாய்ப்
பொற்றமிழைக் கொள்வாய் புதுத்தெம்பை நீயடைவாய்
கற்றுயர வேண்டும் கனிந்து

கனிந்தபடி பேசுவார் காலம் நெருங்க
மனத்தில் அவிழ்ப்பார் விலங்கை - மனிதரிங்குப்
பொய்சூழ் உலகத்தைப் போகமென வாழ்கின்றார்
மெய்நீ உணர்ந்திட்டால் மேல்

மேலும் நிலையில்லை கீழூம் நிலையில்லை
காலுமிரண் டென்பாய் கவினெஞ்சே - பாலுள்
துளிநஞ்சும் கூடத் துயராக்கும் போதிங்
குளைதலோ நல்லோர் உளம்?

உளமே உனகோர் உபாயம் மொழிவேன்
களிப்பை உனதாய்க் கருது! - குளத்தினில்
கல்லை எறிந்தால் குழப்பந்தான் தேம்பாதே
எல்லாம் நடக்கும் இனிது

துன்பம் வருங்கால் நகுகவென் றையனும்
முன்ன முரைத்த தறிநெஞ்சே - இன்னமும்
தீயோர் செயலெண்ணித் தேம்பிக் கிடக்காமல்
மாயோன் பதத்தை வளை!

வளையப் பழகிக்கொள் மென்நெஞ்சே உன்னைத்
தளையிடும் தீயுணர்வைத் தீர்ப்பாய் - விளையாட்டே
யாவும் எனநினைத் தானந்தம் நீகொள்க
யாவும் அடங்கும் அணைந்து!

அணைந்தாலும் கங்கு கனன்றிருத்தல் காண்பாய்
இணையாரை என்றும் இருத்து - முனைநெஞ்சே
தண்ணீரும் தீயாய்ச் சுடுமுண்மை யோர்கவே
மண்ணில் இதுவே நிலை


நிலையாமை எல்லாம் நினைக்குமென் நெஞ்சே
கலையாமை தன்னைக் கருது! - மலைபோலத்
துன்பம் நெருங்கும் துணையாக நம்பிக்கை
இன்பம் கொடுக்கும் இதம்

தம்முள்ளத் தைநம்பும் தக்காரின் நற்பண்பு
இம்மியும் வீணாய் இரியாதே - எம்மனோர்
சொன்ன தெலாமோர்க தூயநன் னெஞ்சமே
நன்னயம் என்றும் நலம்

நலமதனை மட்டும் நினைப்பாய் மனமே
பலமது! கண்டு பழகு! - உலகமிதில்
இன்னாசெய் தாரை ஒருத்தர் அவர்நாண
நன்னயம் செய்தலைநீ நாடு

நாடும் நலமெல்லாம் நற்றமிழத் தொண்டென்றே
நாடுகநீ நன்னெஞ்சே நட்டாரைத் - தேடுக
தீயோர் செயன்மறந்து சேர்வாய் தமிழோடு
நீயோர் பிறவி நெருப்பு

நெருப்பென நின்றால் நெருங்குவோர் தாமாய்ச்
செருக்கழி வெய்திடுவார் செய்வாய்! - கருத்திலே
தூய்மை யுடனிருத்தல் தோன்றும் நெருப்பாகும்
வாய்மையே கங்கு! வளர்!

வளர்மரமே கல்லடிக்கு வாய்க்கும் அறிவாய்
தளராமல் செய்வாய் தமிழோ(டு)- உளைநெஞ்சே
நல்லார் பலரிருக்க நாளும் நடுங்காதே
ஒல்லார் வினையை யொழி

ஒழிக்க நினைப்பவருக் கோரத்தில் நின்று
வழிவிடக் கற்றால் வசந்தம் - பழிவந்தால்
விட்டான் எனும்பழி மேல்தான் பிறரைநீ
சுட்டாய் எனும்சொல் சுடும்!

சுடுசொல்லும் தீய்க்கும் கொடுஞ்செய்கை மாய்க்கும்
அடுப்பாரே தீமை அகத்து - விடுநெஞ்சே
நாளை நமக்குண்டு நற்பணிக ளென்றீசன்
தாளை நினைந்து தொடர்

தொடர்ந்தின்னல் செய்கின்ற தொல்லைகளை மாய்க்கப்
படர்ந்தின்னும் தொண்டைப் பழகு! - முடக்கிடுவான்
எல்லாத் திசையும் எதிர்க்க வியலாதே
வெல்வாய் வெகுண்டால் விரைந்து

விரைகநன் னெஞ்சே வியன்றமிழின் சீரை
உரக்கப் பணிசெய்க ஓர்ந்து - திரைகடல்
ஓசை யடங்குமோ ஓட்ட மொடுங்குமோ
ஆசை யடங்குமோ சொல்

சொல்லால் நலம்கொள்வாய் சொற்கள் இருக்கையிலே
இல்லை யொருகுறை என்நெஞ்சே - சொல்லே
பகையாக்கும் சொல்லை பகைமாய்க்கும்! சொல்லே
நகைசெய்யும் நம்மை நனைத்து

நனைத்தருள் செய்வான் நமையாளு மீசன்
எனைத்தொன்றும் துன்பமில் நெஞ்சே - பனையுச்சி
வாழும் புழுவுக்கும் வாழ்வளிக்கும் அவ்வீசன்
தாழ்சடை தன்னை யடை

அடையும் புகழை அழைக்கும் மதிப்பை
உடைமையைக் காண்பார் உறுத்தத் - தடைசெய்வார்
ஏதும் நமதல்ல எல்லாமே தெய்வத்தின்
தூதென் றுணர்திடுதல் தோது

தோதாய்ப் பல்லன்பர் தோற்றித் துணைசெய்ய
தீதாய் எதையும் நினையாதே - ஆதாயம்
கொண்டலையும் தீயர் குறையுள்ளங் கண்டுணர்வாய்
கொண்டலென நற்பா குவி

குவிந்தொரு மோனத்தில் குந்தப் பழகு
தவிப்படங்கிக் காண்பாய் தவத்தை - அவனியில்
சித்தம் அடக்கச் சிவனைநாம் கண்டிடலாம்
பித்தும் அவன்செய்யும் பீடு

பீடுறுக நன்னெஞ்சே பித்தனவன் றாள்போற்றி
வீடுறுத லொன்றே வினையாகும் - கேடுடைய
நற்றமிழைக் காக்கும் நயஞ்செய்க இவ்வையம்
பொற்றேரில் வைக்கும் பொதித்து.

பொதிந்து கிடக்கின்ற போதந்தான் மோனம்
அதிராமல் அஃதை அறிவாய் - பொதுவாக
ஆண்மை எனமோன ஆழத்தைச் சொல்லிடுவர்
கேண்மை அதனுறவு கேள்

31 Mar 2019

சோலை ஆசுகவி விருந்து

சோலை ஆசுகவி விருந்து 

- 3௦/௦3/2௦19 பைந்தமிழ்ச் சோலை முகநூற் குழுவில்
இரவு 9மணி முதல் 1௦மணிவரை எழுதப்பட்ட 1௦௦ பாடல்கள்

ஒற்றை இலக்கப் பாடல்கள் பாவலர் மா.வரதராசன் 
இரட்டை இலக்கப் பாடல்கள்  கவிஞர் விவேக்பாரதி 


நிலவுதரு தண்மை நினைவுதனைக் கொல்லக்
கலையழகே வந்தென்னைக் கா

காதல் கிளியே கனிவாய் மலர்ந்துநீ
ஓதாய் எனதுபெயர் ஓர்ந்து

துவர்வாய் செழிப்பில் துவண்டு கிடத்தல்
எவருக்கு வாய்க்கும் இனி

 இனியும் வழியில்லை இன்பக் கிளியே
மனத்தில் துடித்தேன் மருண்டு

மருண்டோடும் மானாய் மலைக்கின்ற கண்கள்
உருள்கின்ற தேர்க்கச்சாம் ஓர்

ஓர்மொழி சொல்வாய் உடனே மனம்தருவேன்
பார்வையி லேனும் பகர்

பகலும் இரவும் பரிதவிக்கச் செய்வாய்
அகலாதே என்னுள் ளிரு.

30 Mar 2019

சோலை மெய்ஞ்ஞான வந்தாதி




சோலை மெய்ஞ்ஞான வந்தாதி

* * * * * * * * * * * * * * * ** * * * * * * ** 
பாடியோர் : 
காப்பும் , இரட்டையிலக்கப் பாடல்களும் பைந்தமிழரசு பாவலர் மா.வரதராசன்
ஒன்றையிலக்கப் பாடல்களும் நூற்பயனும் 
பைந்தமிழ்ச்செம்மல் விவேக்பாரதி

         பைந்தமிழ்ச்சோலை முகநூகுழுவில் நேரலையாக ஒன்றரை மணிநேரத்தில் பாடப்பெற்ற 100 பாடல்கள்.

காப்பு
(நேரிசை வெண்பா)
----------
கருத்தோன் முதல்வனே காப்பென நிற்பாய்
கருத்தாவைப் பாடப் புகுந்தோம் - திருத்தாளில்
வந்தணைந்த எங்கள் வழுவா எழுத்தினில்
செந்தமிழைச் செய்க சிறந்து! 


உலகம் முழுமைக்கும் ஒன்றாய் விளங்கும் 
தலைவன் திருப்பாதந் தான்பெறுதல் எக்காலம்? (1)

பெறுதலைத் தானீக்கிப் பேரானந் தத்தில்
உறுதலை யான்பெற் றுருப்படுவ தெக்காலம் (2)

படுகின்ற காயங்கள் பாவங்கள் நீங்கிச்
சுடுகின்ற நல்லிறையைச் சுற்றுவதும் எக்காலம்? ( 3)

சுற்றித் தொடர்ந்தவனைத் தூயவனை மாதவனைப்
பற்றிப் படர்ந்து பணிகுவது மெக்காலம் ( 4)

பணியைம் புலனின் பயனை அறிந்து
துணிந்தென் உடலத்தைத் தூற்றுவது மெக்காலம்? (5)

தூற்றலையும் போற்றலையும் தூய வுளத்தோடு
மாற்றிக் களைந்து மகிழ்வுறுவ தெக்காலம்(6)

மகிழ்ச்சி இறைவன் மலர்ப்பாதம் வேண்டல்
புகழ்ந்தவன் தாளில் புகுவதுமு மெக்காலம்?(7)

புகுந்து மலர்ப்பாதம் போற்றிப் பணிந்து
வெகுதல் வினைநீக்கி மேலுறுத லெக்காலம் (8)

மேலிருக்கும் நாயகனின் மேன்மை நினைத்திந்தத்
தோலிருக்கும் பொய்ச்சிறையைத் தூரவிடல் எக்காலம்? (9)

விடலாய் வினைமிகுத்து மேதினியில் பற்றுகுத்துப்
படலாய்ப் பரமனைப் பாவுதலு மெக்காலம்(10)

பாவி எனையந்தப் பாருக் கிறைவனுவந் 
தாவி இனிமையுற ஆட்கொள்வ தெக்காலம்?(11)

கொள்வதூஉ மன்றிக் கொடுப்பதூஉம் சிந்தையறத்
தெள்ளிறையைத் தேடித் திளைப்பதுவு மெக்காலம்(12)

திளைக்கின்ற இன்பங்கள் தீர்ந்தே அமைதி
முளைக்கின்ற நாதன்தாள் முத்திடுத லெக்காலம்? (13)

முத்தும் மணியும் முகிழ்த்த மலர்க்கரமும்
நத்தாமல் நாதன்றாள் நாடுவது மெக்காலம் ? (14)
/
நாடும் பொருளனைத்தும் நாயகனே என்றுரைத்துக்
கூடும் மனத்தாசை கொன்றிடுதல் எக்காலம்? (15)

இட்டாரைத் தேடி இருட்குழிக்குள் வீழாமல்
பட்டாங்கில் ஈசனைப் பாடுவது மெக்காலம்(16)

பாடும் மொழியனைத்தும் பாரா இறைகொடுத்த
கூடல் எனச்சொல்லிக் கும்பிடுதல் எக்காலம்? (17)

கும்பிட் டொருங்காமல் கூடித் திளைக்காமல்
நம்புமிவ் வாழ்வின் நயப்பறுத்த லெக்காலம்(18)

அறுக்கும் அவாநீங்கி ஆழத்தில் மூழ்கிப்
பொறுத்துத் தவமேற்றுப் பொற்புறுத லெக்காலம்? (19)

பொற்புடைய ஈசன் பொலிவை யுணராத
அற்பத் தனமொழித்து ஆட்படுவ லெக்காலம்(20)

ஆட்கொள்ளும் ஆண்டவன்மேல் ஆசை வளர்ந்தென்றன்
நாட்களைநான் போக்கும் நலம்வருத லெக்காலம்? (21)

வருமுயிர்க ளாவுமிங்கு வாழ்விழத்தல் கண்டும்
திருவிடத்தை நீங்கிச் சிறப்புறுத லெக்காலம் (22)

சிறந்த இறைவனையே சிந்தித்து வாழ்வில்
கறந்தபா லுள்ளத்தைக் கண்டிடுத லெக்காலம்? (23)

கண்டுன் மலர்ப்பாதம் காதலித்து வாழாமல்
உண்டுயிர்த்தல் தீதென் றுணர்வதுவு மெக்காலம் (24)

உணர்ச்சிக் கிரையாகி உள்ளொழிந்து வீழா
திணங்கி யிறையோ டிணைந்திருத்த லெக்காலம்?(25)

இருத்தலும் போதலும் ஈசன் வினையென்று
இருத்தியவன் பாதம் இணைந்திருத்த லெக்காலம்(26)

இருக்கும் நிலையறிந் தின்னும் தெளிந்த
கருத்தை எதிர்பார்த்துக் காத்திருத்த லெக்காலம்?(29)

காத்தலும் ஆக்கலும் காணா தழித்தலும்
ஆத்தம்செய் ஈசனென் றாய்வதுவு மெக்காலம்(30)

அறிவுகளுக் கெல்லாமும் அப்பாலாய் ஆகிச்
செறிந்தவனை என்னுள் தெரிசிப்ப தெக்காலம்?(31)

பல்லூழி வாழ்வேன் பரமன் தனையேத்தி
நல்லூழே என்று நனைவதூஉ மெக்காலம்(32)

 உமையொடு நிற்கும் உயர்ந்தவனை என்னுள் 
அமைந்திடக் கண்டே அதிசயித்தல் எக்காலம்? (33)

அதிசயமே ஈசனருள் ஆகத்தாள் தானும்
விதித்த தெனவறிந்து வீடுறுத லெக்காலம்(34)

வீடும் உறவும் விதியும் எனவாழ்ந்தே
ஓடும் நிலைமை ஒழிந்திடுதல் எக்காலம்?(35)

ஒழியா தெனவெண்ணி ஒழியும்வினை செய்வார்
கழியா நிலைகண்டு கட்டறுத்த லெக்காலம் (36)

கட்டி மனத்தைக் கணக்கிட்டு நானாளும்
ஒற்றை நிலைமை உயர்ந்துவரல் எக்காலம்?(37)

வருமச்சில் சுற்றும் பரிதிவடு நீங்கிப்
பருவொழிதல் கண்டு பதைப்பதுவு மெக்காலம்(38)

பதைபதைக்கும் உள்ளதின் பாடுகளைப் போக்கும்
கதையுணர்ந்து வாழ்வில் கதியடைத லெக்காலம்?(39)

அடைந்தமட் பாண்டம் அழியுநீர் சேர
உடையுமுட லோர்ந்தே உருப்படுவ தெக்காலம் (40)

உருப்படும் நாள்பார்த்தே ஓய்ந்திருக்கா தேநான்
திருப்பணிகள் செய்யும் திணவடைதல் எக்காலம்(41)

திணவுடனே செய்த சிறப்பில் வினையால்
உனையடைத லோர்ந்தே உணர்வுறுத லெக்காலம்(42)

தளையாக்கும் ஆசை தனையுடைத்து ஞான
விளையாட்டை நான்காண வீதிவரல் எக்காலம்?(43)

வீதி தனிலிருந்த மேலாடைப் பெண்வீழ்ந்து
நாதியற நின்றொழிந்த நான்தேற லெக்காலம் (44)

 தேற்றி அழுமென்னைத் தேடி யிறைவந்து 
மாற்றி அருளி மருள்நீக்கல் எக்காலம்?(45)

நீக்கலும் யாவையும் நீக்கலாச் சோதியன்
நோக்கினில் வீழ்ந்து நுரைத்திருப்ப தெக்காலம் (46)

நுரையாய் விழிமறைக்கும் நூதனக் காமம்
விரைந்தோட என்னுள்ளம் வீச்சுறுதல் எக்காலம்? (47)

 வீச்சில் விளையாடி வீணில் வினைசேர
மூச்சடங்கு முன்னே முனைந்திருத்த லெக்காலம் (48)

 முனைந்தென்றன் எண்ணத்தால் முக்தி கொடுக்கும் 
வினையோனைப் பாடி வியத்தலுந்தான் எக்காலம்? (49)

வியக்கின்ற வாழ்வுற்று வீட்டையிழக் கின்றார்
நயந்தவர் நாதன்றாள் நத்துவது மெக்காலம் (50)

துவக்கத்தில் கொண்டிருக்கும் தூய்மையான பக்தி
தவக்காலம் முற்றுலுமே தானிருத்தல் எக்காலம்?(51)

இருக்கின்ற தெல்லாம் இறப்ப தறிந்தும்
செருக்கோ டலைபவர் சீருறுத லெக்காலம்(52)

சீருடையர் மாதர் சிறப்புடையர் என்றெல்லாம்
பேருரைகள் செய்வார் பிழைப்பதுதா னெக்காலம்? (53)

 பிழைக்கின்றா ராயின் பிழைசெய்வார் இல்லென்
றிழைக்கின்ற தீயோர் இணைப்புறுத லெக்காலம்(54)


இணையைக் கடிந்திடுவார் இல்லத்தை நோவார் 
துணையெனக் கோவிலைச் சார்ந்திருப்ப தெக்காலம்? (55)

சார்ந்தும் பணிந்தும் சாகாத வாழ்வுற்றுத்
தேர்ந்தவன் தாளிணையைச் சேர்வதுவு மெக்காலம் (56) 

சேர்க்கும் பொருள்மீதே சென்றிடுமோர் நாட்டத்தை
ஆர்க்கும் பணியில்லான் ஆட்சிசெயல் எக்காலம் (57)

ஆட்சி யவனாகும் ஆள்வன் அவனாவான்
மீட்சியெவ ரென்று மிரளாமை யெக்காலம் (58)

மிரண்டு பயங்கொண்டு மீண்டும் பிறவா
வரம்வந் தெனையுந்தான் வாழ்வித்தல் எக்காலம்? (59)

 வித்தாக்கி யுண்டாக்கி மேனிலையைத் தந்தோனும்
செத்த தறிந்து திருவிழத்த லெக்காலம் (60)

இழந்தேன்நான் யாவும் எனப்புலம்பி வீழா
துழைத்து முதல்வன்தாள் உற்றிடுதல் எக்காலம்? (61)

உற்றாளும் மாடும் மனையும் மறைகின்ற
உற்றறியா உண்மை உணர்வது மெக்காலம் (62)


தூயோனை நெஞ்சத்துத் தூணில் நிறுத்தியான்
வாயாரப் போற்றி வணங்கிடுதல் எக்காலம் (63)

வணங்கா திருப்போரை வாழ்விக்கு மீசன்
இணங்கா குறைபொறுத்து ஏற்பதுவு மெக்காலம் ( 64)

ஏற்பான் எனையிறைவன் ஏற்றிடுவேன் என்குறைகள்
தீர்ப்பான் அவனைத் தெரிந்துகொளல் எக்காலம் (65)

கொளுமிந்தச் செல்வம் குறையுநிலை யோர்ந்து
தெளிவுற்ற சிந்தையில் சேர்வதுவு மெக்காலம் (66)

சேர்க்கைகளை நம்பிச் செலவழிக்கும் வையத்தீர்
ஊர்க்குமுனம் நாதனைநீர் ஒப்பிடுதல் எக்காலம் ( 67)

ஒப்பி யவன்பாதம் உச்சிதனிற் கொள்ளாமல்
பிச்சியென வாழ்வழித்துப் பின்னிவர லெக்காலம் ( 68)

பிணைக்கும் அழுக்குகளைப் பேர்க்க முதல்வன்
துணைக்கு விழிமுன்னம் தோன்றுவதும் எக்காலம்?( 69)

தோன்றிய யாவும் தொடக்கறுதல் கண்டறிந்தும்
ஊன்றி யவன்பாதம் ஊர்வதுவு மெக்காலம் (70 )

ஊரும் விலங்கோ டுலக உயிர்யாவும்
சாரும் தலைவனையான் சந்திப்ப தெக்காலம்?(71)

சந்தித்த லீசன் சடைத்தலை யென்றாகி
நிந்தித்த லின்றி நிலைபெறுத லெக்காலம் (72)

 நிலையாமை என்பதன் நிச்சயம் கண்டிங் 
கலையாமல் நெஞ்சம் அமர்ந்திருத்தல் எக்காலம்?(73)

அமரும் பராசக்தி அருட்பாதத் தையான்
அமரன்என் றாகி அரவணைத்த லெக்காலம் (74)

அரவணைக்கும் அன்னையவள் அன்பனெனைக் கண்டு
சுரக்கும் திருப்பாற் சுவைதருத லெக்காலம்(75)

சுவையும் ஊறோசை சுற்றுமிவ் வையக்
கவையில் நுழையாமல் கனிதுவு மெக்காலம்(76)

கனிந்த மனத்தில் கடவுளின் பாதம்
நினைந்தெனது வாழ்க்கையை நீட்டுவது மெக்காலம் (77)

நீட்டிப் படுத்தார் நிலையழியக் கண்டாலும்
ஆட்டுவான் ஆட்டத்தில் ஆகிடுத லெக்காலம்(78)

ஆகும் நிலைமாற்றம் அத்தனையும் வாழ்வினிலே
மேகம் எனவிறையை மேவிடுதல் எக்காலம்?(79)

மேவும் உயிர்க்கூட்டம் மேலான ஈசனருள்
யாவும் எனவுணர்ந் தாடிடுவ தெக்காலம் (80)

ஆடும் வறுமை அழிக்கும் பொருளாசை
நாடும் இறைவுணர்ந்து நன்மையுறல் எக்காலம்(81)

நன்மையும் தீமையும் நாடாமல் நத்துவர்
உண்மை யுணர்ந்தவர் ஊர்ப்புகுத லெக்காலம் (82)

 ஊர்ப்புகும் முன்னம் உயரிறைவன் எண்ணத்தின் 
வேர்பிடித்து மாந்தர்கள் வெற்றிபெறல் எக்காலம்? (83)

 பெறவாம் அருளாசி பெற்றிந்த வாழ்வில்
திறலாய்ச் சிவனருளிற் றோய்வதுவு மெக்காலம் (84)

தோய்கின்ற ஆன்மீகத் தொல்லியலில் நம்மிச்சை
மாய்கின்ற தென்கின்ற மாயம்வரல் எக்காலம் (85)

மாய மறுத்து மயக்கறுத்து ஈசனடி
தோய விழுந்து துணைபெறுவ தெக்காலம் (86)

பெறுகின்ற வாய்ப்பிலெலாம் பேரிறைவன் நாமம்
சிறப்புடனே சொல்லிச் செபித்திருத்தல் எக்காலம் (87)

 பித்தாகிச் சோராமல் பேசா தொழிந்துநான்
வித்தாகி முன்னம் வினையறுத்த லெக்காலம்(88)

வினைவழியே வாழ்க்கை விளையாடும்! ஆங்கே
எனையாள வெந்தலையன் ஈண்டிருத்தல் எக்காலம் (89)

 ஈன்றாளின் பாசப் பிணைப்பும் சிவனருளாய்
வேண்டுவாம் மேன்மை விளங்குவது மெக்காலம் (90)

விளக்கமிலா ஞான வினாவறியத் தெய்வம்
துளக்க வருதல் தொடங்குவது மெக்காலம்(91)

தொடக்கமாய் நிற்பான் துலக்கமு மாவான்
விடைகொள வேண்டி விழைந்திருத்த லெக்காலம் (92)

விழைகின்ற யாவையுமே விந்தை அவற்றை
அழைக்கின்ற ஈசன் அளிப்பதுவு மெக்காலம்(93)

அளிப்பான் அழிப்பான் அலைப்பான் அருள்வான்
களிப்போடு நானவனைக் கண்டிணைத லெக்காலம் (94)


கண்டிடாத மாயங்கள் காட்டி உயிரீர்க்கும்
கொண்டலைத் தெய்வத்தைக் கொண்டிடுதல் எக்காலம்(95)

கொண்டாளும் சேராளே கொள்வதும் சேராவே
உண்டீசன் ஞானம் உயிர்ப்பதுவு மெக்காலம் ( 96)

உயிர்வந்த காரணமே உன்னதமாந் நாம
செயஞ்சொல்ல வென்று செழித்திருத்த லெக்காலம் (97)

 செழிக்கின்ற வையச் சிறப்பொழிய கண்டோம்
விழித்தீசன் மேனி விதிர்ப்புறுத லெக்காலம் (98)

விதிவிதிர்த் தீசன் விளையாடல் கண்டு 
மதிமயங்கி பக்தியினை மந்திவரல் எக்காலம் (99)

வரவாய்ச் சிவனருளில் வாய்த்தயிச் சோலை
உரமுஞ் சிவனென்றே உலகறிவ தெக்காலம் ( 100)




                      நூற்பயன்

இரட்டைப் புலவர்கள் ஈண்டளித்த பாடற் 
றிரட்டை உணர்ந்தால் தெளிவர் - விரவி
இறைவன் பதம்காண்பர் இவ்வுலக வாழ்வின் 
நிறத்தை நிலையை நினைத்து!