பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

18 Dec 2015

10) நன்கு அறிந்துகொள் !


அன்பர்களே !
இவ்வாரத்து ‪#‎இலக்கியத்_தேன்துளி‬ என்னும் இத்தொடரில் தங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகழ்ச்சி அடைகிறேன். இதோ இவ்வாரத்துத் துளி
11) நன்கு அறிந்துகொள் !
இறால் மீனின் பின் புறத்தைப் போன்ற சுரசுரப்பு மிகுந்த தன்மை உடையதுமாய்ச், சுறா மீனின் முகத்தில் தோன்றும் நீண்ட கொம்பினைப் போன்ற கூரான முட்களைக் கொண்டதுமாய் அந்தத் தாழம்பூ பூத்திருக்கிறது. அவ்வழகிய நெய்தல் நிலத்திற்கே சொந்தமான அந்தத் தாழம்பூ நல்லிதழ் மலர்த்து பூத்துச் சிரித்துக் கொண்டிருக்கிறது.

அப்படிப் பட்ட அந்தத் தாழம்பூ மிகவும் அழகாக அரும்பி இருக்கிறது. அப்படி அது அரும்பிப் பருவம் வந்த பெண் போல் தலை சாய்ந்து இருப்பது, யானைகள் இருக்கும் இடத்தில் தனித்து விளங்கும் அழகிய பெண் மானைப் போலவே காட்சி தருகின்றது. கடல் காற்றில் உப்பின் மனம் எங்கும் பரவி ஒரு வித கூரிய நெடியினை நல்குகின்ற அந்த நெய்தல் நிலத்தில் ஒரு மங்கள நிகழ்வின் வாயிலில் கட்டப் பட்டிருக்கும் அந்தத் தாழம்பூ கடற்காற்றின் உப்புத் தன்மை நீங்க, ஊரெங்கும் மணம் வீசி அழகுறச் செய்கின்றது
அந்தத் தாழம்பூவினைப் போன்றே எனது தோழியான தலைவி இருக்கின்றாள். கன்னியர் சூழும் இடத்தில் அவள் தலைவன் நினைவில் அவர்கட்கு மத்தியில் வேறாய்த் தோன்றுகிறாள். அந்தப் பெண் மானைப் போன்று நாணத்தின் உச்சத்தால் தலை சாய்ந்து தாழ்த்து காட்சி அளிக்கின்றாள். அவளைச் சுற்றி உள்ளவர் அந்த உப்புக் காற்றைப் போலவே அவளை அலர் தூற்றுகின்றனர். அந்தத் தாழம்பூப் பெண் தான் என்ன செய்வாள்?
தலைவனான நீயோ அந்த தலைவியைக் களவில் கூடி மகிழ்ந்து களிக்கும் செய்தி, ஊரவர் காதுகளில் எட்டவே அவர்களது பேச்சுக்கள் எல்லாம் அவளை அலர் தூற்றுகின்ற அந்த உப்புக் காற்றின் நெடியாக மாறிவிட்டது. இப்படி இருக்க, இம்முறையும் வந்து அவளைக் களவில் கூடி "அடுத்த முறை உன்னை மணம் முடிப்பேன்" என்று சொல்லிவிட்டு செல்கின்ற அத்தகு உயர்வான தாழம்பூவின் வளத்தை உடைய நெய்தல் நிலத்தில் தலைவனான சேர்ப்பனே !
அழகிய மணிகளால் ஆன தேரினை உனது தேர்ப்பாகன் விரைந்து இயக்க ஊருக்குக் கிளம்ப இருகின்றாய். ஒன்றை மட்டும் கேட்பாயாக, மணமுடிக்க உன் வரவினை எண்ணிக் காத்திருக்கும் எனது தலைவி அந்த உப்புக் காற்றில் இருக்கும் தாழம்பூவைப் போல உப்பின் நெடியினையும் மறக்கச் செய்யும் வண்ணம், அதாவது ஊராரின் அலர் தூற்றல் யாவும் பொய்யாகும் வண்ணம் அவளை விரைந்து வந்து கற்பில் மணம் பூண்டு ஒழுகுவாயாக ! இவ்வாறு நீ ஆற்றாது செல்வாயாயின் என் தலைவியும் வாழ்வு ஆற்றாள் ! இதனை நன்கு அறிந்துவிட்டுச் செல்வாயாக !
இப்படிப் புணர்ந்து நீங்கிய தலைவனை தோழி வரவு கடாய்வதாய்ப் பெண் பால் புலவரான நக்கண்ணையார் தொடுத்த நற்றிணை மலரில் இருந்து சிந்திய மகரந்தத் தேன்துளியே இவாரத்துத் தேன்துளி .இதோ பாடல்
பாடல் :
இறவுப் புறத்தன்ன பிணர்படு தடவுமுதல்
சுறவுக் கோட்டன்ன முள்ளிலைத் தாழை,
பெருங்களிற்று மருப்பினன்ன அரும்பு முதிர்பு,
நல்மான் உழையின் வேறுபடத் தோன்றி,
விழவுக் களம்கமழும் உரவுநீர்ச் சேர்ப்ப! 
இனமணி நெடுந்தேர் பாகன் இயக்க,
செலீஇய சேறி ஆயின், இவளே
வருவை ஆகிய சில்நாள்
வாழாளாதல் நற்கு அறிந்தனை சென்மே!
-நக்கண்ணையார்

No comments: