பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

6 Dec 2015

9) வறுமை மாற்றம்


அன்பர்களே வணக்கம்,
இந்த வாரத்து ‪#‎இலக்கியத்_தேன்துளி‬ யில் தங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன். இது இவ்வாரத்துத் தேன்துளி

9) வறுமை மாற்றம்
அந்த நாளில் கண் திறக்காத சாய்ந்த காதுகளை உடைய அந்த நாய்க் குட்டிகள் பாலுக்காக ஏங்கித் தவித்துக் கொண்டு இருந்தன. எப்பொழுதும் போல நாயின் பாலை வேறு யாரும் கரைப்பதில்லை என்றாலும், அந்நாட்களில் அந்தத் தாய் நாயால் கூட அதன் பாலைச் சுரக்க முடியவில்லை . உண்ண உணவற்று அது உடல் மெலிந்து குட்டிகளுக்குப் பாலூட்ட இயலாதவாறு சத்தற்று இருந்தது. அந்தத் தாய் நாய் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு குட்டிகள் பாலருந்த நெருங்கி வரும் பொழுது தள்ளி விட முற்பட்டது. பசியால் செய்வதை அறியாத குட்டிகள் பாலை உண்ண முற்படும் பொழுது அந்தத் தாய் நாய் வலியால் குரைத்தது.


வீட்டின் மேற் பரணில் கட்டியிருந்த கம்புகள் கீழே விழுந்ததில் பழைய சுவறுகளில் கறையானும் அரித்துப் படிந்திருந்தது. கீழே விழுந்த கம்புகளில் துளைகளை யுடைய காளான்களும் குப்பைகளும் சேர்ந்து பூத்திருந்தன. இப்படி வறுமையால் மெலிந்து வருந்திக் கிடந்தது அவரது இல்லம்.
பசியின் தாக்கம் மிகவே அந்த வீட்டில் மெல்லிய இடை கொண்ட அவரது மனைவியும் உடல் மெலிந்து நொந்து வருத்தத்தில் உழலுவாள் ஆயினாள். அவள் தனது கைகளில் மிகவும் தேய்ந்த நிலையின் இருந்து் ஒரு ஒற்றை வளையை அணிந்திருந்தாள். அந்த மெல்லிடையாள் தனது கூர்மையான நகங்களைக் கொண்டு காளான்கள் பூத்திருந்த குப்பைகளைக் கிளறி அதிலே அங்கங்கு முளைத்திருந்த குப்பைக் கீரையை ஆராய்ந்து பொருக்கி எடுத்தாள். அந்தக் கீரைகளை நீரில் இட்டு சமைக்க முற்பட்டாள். தனது பெரிய குடும்பச் சுற்றத்திற்கு உணவிடும் பொறுப்பு அவளுக்கு இருக்கும் நிலைமையால் அவள் அந்தக் குப்பைக் கீரைகளையாவது சமைக்கலாம் என்று எண்ணி அவற்றை நீரிலிட்டு வேக வைத்தாள்.

அவள் திடீரென வாயில் கதவுகளையும் வீட்டின் இதர சாளரங்களையும் மூடத் துவங்கினாள். பின்பு, உப்பில்லாத கீரையை அவள் சமைப்பதை அக்கம் பக்கத்தினர் கண்டால் அவளை எண்ணி நகையாடக் கூடுமே ! அவள் அந்த செயலை செய்து முடித்துத் தனது சமையலை சுற்றத்து உறவினர்களுடன் பங்கிட்டு உண்ணத் துவங்கினாள்.

மானம், குலம், கல்வி, வல்லாண்மை, அறிவு, தானம், தவம், உயர்ச்சி, முயற்சி, காதல் ஆகிய பத்தையும் மறக்க வைக்கும் பசியின் கொடுமையால் ஆட்கொண்ட அவள் கன்னங்கள் சிவக்கும் வண்ணம் அழுது புலம்பி அரற்றினாள்.

இவற்றையெல்லாம் கண்டு தனது குடும்பத்தின் நிலையினை மாற்ற வேண்டி அந்த நல்லியக் கோடனிடம் பரிசில் பெறச் சென்ற அவர், திரும்பி வந்துகொண்டு இருக்கிறார். பெரிய காதுளில் மணிகளை ஏந்திய யானையின் மீது, சிறிய கண்களைக் கொண்ட அந்தப் பட்டத்து யானையின் மீது, பற்பல பரிவாரங்கள் பரிசில்கள் புடை சூழ அந்த நல்லூர் நத்தத்தனார் வீடு திரும்புகிறார், தனது கும்பத்தின் நிலையினை மாற்றிய நல்லியக் கோடன் என்னும் அந்த வள்ளலில் புகழினைப் பாடிய வண்ணம். அப்படித் திரும்புகையில் அவனிடம் சென்று பரிசில் பெறுவாயாக என்று சிறிய செங்கோட்டு யாழினைக் கொண்ட பாணன் ஒருவனிடம் கூறி அவனை ஆற்றுப் படுத்துகிறார்.

இதுவே இவ்வாரத்து இலக்கியத் தேன்துளி. சிறுபாணாற்றுப்படையில் கடைந்து எடுத்தது இந்தத் தேன்துளி.
பாடல் :
திறவாக் கண்ண சாய்செவிக் குருளை 
கரவாப் பால்முலை கவர்தல் நோனாது 
புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில் 
காழ்சோர் முதுசுவர் கணச்சிதல் அரித்த
பூழி பூத்த புழல்கா ளாம்பி
ஒல்குபசி உழந்த ஒடுங்குநண் மருங்குல் 
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை 
மடவோர் காட்சிநாணிக் கடைய டைத்து
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும் 
அழிபசி வருத்தம் வீடப் பொழிகவுள்
தறுகண் பூட்கைத் தயங்குமணி மருங்கின் 
சிறுகண் யானையொடு பெருந்தேர் எய்தி 
யாமவண் நின்றும் வருத்தும் .....
-நல்லூர் நத்தத்தனார்

No comments: