பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

24 Apr 2016

சிந்துப்பாடுக 2 இன் தொகுப்பு - நொண்டிச் சிந்து



அன்பு நண்பர்களே !
சோலைக் கவிஞர்களே! சிந்துப்பாடுக இரண்டாம் பயிற்சி செவ்வனே முடிந்தது.பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் பாக்களைப் படைத்தனர். புதிய யாப்பைப் பயில்கின்றஆர்வம் பலரிடத்தே இருந்ததைக் காண முடிந்தது. அனைவருக்கும் நன்றியும், வாழ்த்தும் உரித்தாகுக.
பயிற்சியின் தொகுப்பு, அப்பயிற்சியில் கலந்து கொண்ட கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. கொடுக்கப்பட்டுள்ள வரிசை எண் தரவரிசைக்குரியதன்று. கவிஞர்கள் கவிதைளை அனுப்பிய வரிசைக்குரியது.
அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்... இந்தத் தொகுப்புப் பாடல்களைப் படிக்க வேண்டா. ★பாடிப் பார்க்கவும். அப்போது தான் சுவைக்கும்.
கவிஞர்களை வாழ்த்துங்கள்...உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


சிந்து பாடுக - 2
(நொண்டிச் சிந்து)


1. கவிஞர் நிறோஸ் அரவிந்த்

நெஞ்சினில் நின்றிடு வாள் - எனை
நித்தமும் சாய்த்திடச் சித்தங்கொண் டாள்
பஞ்சென வான,பா தம் - அதைப்
பக்கத்த மர்ந்துநான் பற்றல்போ தும்!

2. கவிஞர் பரமநாதன் கணேசு

கொள்ளைய டிப்பாருக் கே - பணம்
கோடியாய்க் கொட்டுதாம் பாரினி லே
அள்ளியள் ளிக்கொடுப் பார் - தம்
ஆசையும் பூசையும் செய்திடத் தான்.!

3. கவிஞர் ரமேஷ்மாதவன்

நாகவ ணைதனில் தான்- எங்கள்
நாயக னின்கள்ளத் தூக்கமும் தான்!
மோகத்தை நீக்கிடு வான் - அந்த
மோட்சமும் இங்கேயே தந்திடு வான்!!

4. கவிஞர் வள்ளிமுத்து

ஆடியு மோடிடு வாய்-பிள்ளாய்.!
அங்குமிங் கெங்கிலு பாடிடு வாய்..!
தேடியே நாடிடு வாய்-கல்வி
தெள்ளுத மிழினில் கற்றிடு வாய்...!

5. கவிஞர் பொன்.பசுபதி

ஊழல்பு ரிந்தவ ரே-நம்மை
யொப்போலைத் தாவென்றுக் கெஞ்சுவ ரே
வீழ்தல்தான் வேண்டும வர்-நல்லார்
வெற்றிய டைந்திடச் செய்திடு வோம்.!

6. கவிஞர் அழகர் சண்முகம்

கூடியே வாழ்ந்திடு வாய்-நீ
குற்றங்க ளைந்திடப் பொங்கிடு வாய்
தேடித்த மிழ்ப்படிப் பாய்-அதைத்
திக்கெலா மெட்டிடப் பாட்டிசைப் பாய்! 

7. கவிஞர் வீ.சீராளன்

பூவிழி நாணிடு வாள் - பூக்கும் 
புன்னகை என்னுயிர் தீண்டுகை யில் 
பாவினால் வாழ்த்துகை யில் - செந்தேன் 
பாகுளப் பைந்தமி ழாகிடு வாள் !

8. கவிஞர் அர.விவேகானந்தன்

காடும லைதனை யே -தினம்
கண்ணாக வேநாமும் காத்திடு வோம்
நாடுசெ ழித்திடும் பார் -நம்மை
நாடிட்ட யின்னலு மோடிடும் பார்!

9. கவிஞர் சியாமளா ராஜசேகர்

அன்பைவ ளர்த்திடு வாய் - நெஞ்சே 
ஆசைய டக்கப்ப யின்றிடு வாய் !
இன்பம்கி டைத்திடு மே - வாழ்வில் 
இன்னல கன்றும றைந்திடு மே !

10. கவிஞர் சேலம் பாலன்

பாவலர் என்பவர் யார்? – யாப்புப்
பற்றியே பாடிடும் பாங்குளர் தேர்
நாவலர் இல்லைஎன் பார் – சொல்
நாளுமே நற்கவி நாட்டிடு வார்!

11. கவிஞர் .மாரிமுத்து

நோய்தீர்க்கும் வைத்திய ரே..! - நீர்
நோட்டுக்கா சைப்படும் நோட்டத்தா ரே..!
வாய்பேசும் வித்தக மேன் - உம்மின்
வந்தவர் நோய்தீர்ந்தும் நொந்தது மேன்! 

12. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்

நன்மையைச் செய்வதற் கே – இங்கு
நாமும்நி னைந்திட சேமமன் றோ
இன்முகங் காட்டிநின் றால் - எங்கும்
எப்பொழு தும்சாந்தி தப்பிடு மோ!?

13. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்

முத்தமிழ் பேசிடு வாய் -- என்றும் 
முத்தெனப் போற்றிட வித்திடு வாய் . 
சத்தமாய் சாற்றியு மே - நம்மின் 
சாத்திரம் ஓங்கிடப் பார்த்திடு வோம்! 

14. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து

நெல்லையும் விற்றிட வே - பாரில்
நேர்மையாய் சம்சாரி வாழ்ந்திட வே
தொல்லையும் வந்திடு தே - எங்கும்
தோல்வியே தன்வாழ்வில் நின்றிடு .தே! 

15. கவிஞர் அஷ்பா அஷ்ரப் அலி

அந்தியில் கண்டவள் தான் - என்
அன்பினைச் சொன்னதும் அஞ்சினா ளேன்
பந்தினத் தாரிடம் போய் - என்
பாசத்தைச் சொன்னாளோ பக்குவ மாய் ?

16. கவிஞர் நாகினி கருப்பசாமி

கண்கட்டு வித்தையா மே .. நல்ல
காரியம் ஆற்றிடும் கம்பீர மே
விண்ணெட்டும் பாய்ந்திடு மாம்.. இந்த
வீணர்கள் சொல்வதே வித்தக மாம்! 

17. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்

நாளொரு பாபுனை வோம் - அதை
நன்றாகப் பாடியி சைத்திடு வோம்
நாளொன்று நன்மையை செய் -அது
நித்தியத் தில்நமை சேர்ப்பது மெய்.

18. கவிஞர் விவேக் பாரதி

என்னவள் கூந்தலி லே - நித 
மேறித்தி ரிந்துற வாடிட வே 
இன்னுயிர்ப் பூக்களெ லாம் - தனி 
இச்சைகொண் டேங்கிடும் பாரினி லே! 

19. கவிஞர் சுரேஷ் சீனிவாசன்

கண்ணனைப் பாடிடு வேன் - சொன்ன
காதையை நாளுமே பேசிடு வேன்
மண்ணினை உண்டவன் தான் - பெண்
மானத்தைக் காத்திட வந்தவன் தான்!

20. கவிஞர் குருநாதன் ரமணி

சோலையில் கால்நடந் தேன் - காற்று
தோய்ந்ததென் வாடிய மேனியி லே!
சாலையி ரைச்சலி லை - மனம்
சாதிக்க வேண்டிய தேதுமில் லை!

21. கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி

சிந்துவைச் சிந்தையி லே - கொளத்
தித்திக்கும் எண்ணங்கள்  சித்திக்கு மே
தந்தமிழ்த் தந்தத்த மிழ் - செறி
சந்தத்தைச் சிந்திடும் அந்தத்த மிழ்.

22. கவிஞர் வனராசன் பெரியகண்டர்

பண்ணிலாப் பாடலி லே - நல்ல
பாங்குறும் தேனிசைச் சேர்ந்திடு மோ!
எண்ணிலா மாந்தரி லே - நல்ல
எண்ணமி லாதவர் மாண்புறுமோ!

★★★★★

No comments: