.....நிறைவு
"ஆண்டவனே என்கலக்கம் தீர்ந்த தையா
அடிமனத்தின் சுமைகூடக் குறைந்த தையா
வேண்டுதலும் பொதுநலமாய் இருக்கும் போது
வேண்டுவரம் தருவாயென் றறிந்து கொண்டேன்
தூண்டுதலே இல்லாமல் மக்கள் தங்கள்
துடித்தெழும்பும் ஆற்றலாலும் அன்பி னாலும்
நீண்டநாள்கள் துன்பமின்றி வாழ்வார் என்றீர்
நீங்கியதென் ஐயங்கள் நன்றி " என்றேன்.!
"நான்மட்டும் கடவுளில்லை தம்பீ.,நாளும்
நற்பண்பால் உயிர்க்குலத்தைப் பேணிக் காப்போர்
காண்கின்ற உயிர்களிடம் தம்மைக் காணும்
கருணைமனம் கொண்டோரின் உருவில் கூடக்
நானிருப்பேன் அவர்களெலாம் கடவுளப்பா
நல்லதுநான் போகின்றேன் " என்று சொல்லி
ஆண்டவனும் மறைந்துவிட்டான் அவனின் சொற்கள்
அடிமனத்தில் எதிரொலியாய் ஒலித்தி ருக்க,,
"எட்டுமணி ஆயிற்றே எழுந்தி ருங்கள் "
என்றெந்தன் மனைவிவந்து எழுப்பு கின்றாள்
பட்டென்று கண்விழித்தேன், "அடடா, என்னைப்
பரம்பொருளே தோழனாக்கிச் சொன்னவற்றைப்
பிட்டுப்பிட்டு வைத்திட்டேன் மனைவி என்னைப்
பித்தனெனப் பார்த்தபடி அதட்டு கின்றாள்
"சட்டென்று கிளம்புங்கள்.,உளறா தீர்கள் "
சமையலறை சென்றபடி பேசுகின்றாள்.!
கண்டதெலாம் கனவெனினும் கடவுள் சொன்ன
கருத்தெல்லாம் உண்மைதானே? அவற்றை நாமும்
பின்பற்றி நடந்திட்டால் துன்ப மில்லை
பிளவில்லை சாதிமத பேத மில்லை
என்றைக்கும் மனிதகுலம் உயர்வ தற்கும்
இறைவன்சொன்ன கருத்தெல்லாம் உதவு மன்றோ?
என்றுரைத்து வாய்ப்புக்கு நன்றி கூறி
இவ்வடியேன் கிளம்புகிறேன் மகிழ்ச்சி யோடே!!!
★★★★★
(முடிந்தது)
No comments:
Post a Comment