பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

12 Nov 2016

முயன்று_பார்க்கலாம் - ஒற்றுப் பெயர்த்தல்


முயன்று_பார்க்கலாம் :4


நண்பர்களே!  கவிஞர்களே!  மிகவும் கடினமான பாடல்களைப் பயிலும் இந்தப் பகுதியை மீண்டும் தொடர்வதில் மிக்க மகிழ்வடைகிறேன். 
        பைந்தமிழ்ச் செம்மல்கள் உட்பட பொருள்பொதிந்த பாவியற்றும் ஆற்றலுடைய அனைவரும் இதில் 
பங்குபெறலாம்.
      புதிதாகக் கற்பவர் விரும்பினால் முயலலாம்.
     
           #ஒற்றுப்_பெயர்த்தல்
            ***********-************
ஒற்றுப் பெயர்த்தல் என்பது, சித்திரக்கவிகளுள் ஒன்று.
அஃதாவது,
       முழுப்பாடலும் முதலில் ஒரு பொருளைத் தர,  அதையே மீண்டும் அப்பொருளொழிய வேறு பொருள் தருமாறு பாடுவது.

                   நேரிசை வெண்பா

உண்ணாருங் கொள்ளுமே ஒண்சீர் மணத்திசையப்
பண்ணார் அசைவுறும் பாணீயும் - கண்ணாரும்
ஆவலுறும் பாங்கில் அழகாய்த் திகழ்ந்திடுதேன்
பாவலரின் சோலை யிது!
        மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

இப்பாடலை,
        உள்ளே நாரினையுடைய செடிகள் தெளிந்ததோர் நல்ல மணத்தினை வீசவும், பாட்டிசைத்துப் பறக்கும் ஈக்களும், கண்போரை மீண்டும் காணத் தூண்டும் அழகுடன் மிளிர்வது தேன் பாவ மலர்கின்ற இந்த இனிய மலர்ச் சோலையாகும்.
       
   என்று ஒரு பொருள்படவும்.,

(சுவைக்க) எண்ணாதவரையும் ஈர்த்துத் தெளிந்த சீர்கள் மணக்கவும், பாக்கள் ஆர்க்கும் அசையுடன் கூடிய பாக்களைத் தருவதாகிய, காண்போரை ஈர்க்கும் பாங்கில் அமைந்தது இந்தத் தேன் பா அலர் இன்சோலையாகும்.(பாவலரின் சோலை எனினுமாம்)
     
என்ற பொருள்படவும் ஒற்றுப் பெயர்க்கலாம்.(ஒன்றை இன்னொன்றாகப் பெயர்த்தல்) .

அருஞ்சொற்பொருள் :
உண்ணார் - (சுவைக்க)எண்ணாதவர்,  உள்நார்
பண்ணார் - பண் ஆர்க்கும்,  பாட்டிசை
கண்ணார் - காண்பவர்
பாணீயும் - பாடல் தரும்,  பாடும் ஈயும்
பாவலர் - பா அலர், பாவு அலர்.
                                ***     ***
காளமேகத்தின்...
       கத்துகடல் சூழ்நாகை  காத்தன்தன் சத்திரத்தில்...
என்ற பாடல்  இதே வகைதான்.

முயன்றால் முடியாதது எதுவுமில்லை...
முயன்று பார்க்கலாமே!

No comments: