பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

12 Nov 2016

என் க(வி) தை : 189 சீர் விருத்தம்







                               வரதராசன்_பாக்கள்


நான் முன்பே குறிப்பிட்டது போல் இப்பாடலை 210 சீர்களாகவே எழுதினேன். ஆனால் வள்ளலாரின் 'திருவடிப் புகழ்ச்சியை ' (192 சீர் விருத்தம்) மீறி எழுத என் மனம் இசையவில்லை. எனவே, 189 சீர்களாகக்
குறைத்துப் பதிவிடுகிறேன்.

                                                   என் க(வி)தை                                                                                                    ****************

நூற்றெண்பத்தொன்பது சீர் ஆசிரிய விருத்தம் (27×7 சீர்கள் ஓரடிக்கு) ×நான்கடி

பூவிழிப் பார்வை நோக்கினில் வீழ்ந்து
  புதைந்திடு மகவை தனில்நானும்
பொற்றமிழ்ப் பெண்ணாள் பார்வையி லின்பம்
பொங்கிட வீழ்ந்து பொலிவுற்றேன்
புண்ணெனத் தாக்கும் உற்றவர் மற்றோர்
பொசுக்கியும் வாழ்வில் இடறாமல்
பொங்கியெ ழுந்தேன் என்முனே நின்ற
பொறுப்பையு ணர்ந்தே செயல்பட்டேன்
புண்மைகள் தீர நன்மைகள் சேரப்
போற்றிட லானேன் என்வாழ்வில்
பொற்பினைச் சேர்க்கும் கல்வியைக் கண்ணாய்ப்
பொங்கிடு மாவ லால்கற்றேன்
போதுமுன் கல்வி வறுமையைத் தீர்க்கப்
புறப்படு வாயே வேலைக்குப்
பூத்திடும் பசியைப் போக்கிடு மகனே
போபோ என்றார் என்னன்னை
போதெனு மிளமை இன்பங்கள் கழியப்
புரிந்தன வாழ்வின் உண்மைகள்
புரிந்தவப் போது கீழ்மைகள் மிஞ்சிப்
புகுந்தன பலவாய்த் துன்பங்கள்
புதைந்தவென் இன்ப நிலையினை மீட்கப்
பொருந்துவ தேதென வோர்ந்திட்டேன்
பொலிந்திட லுற்றே என்னுடைக் குடும்பம்
பூத்திட லொன்றே குறிக்கொண்டேன்
போதிய வுழைப்பும் போதிலா வுணவும்
புரிந்திடா வுணர்வும் வரப்பெற்றேன்
போற்றியுண் என்றார் உணவினை முன்னோர்
போற்றியும் உணவு கிடைக்கவிலை
போதுமோ என்றே ஏக்கமாய்க் கழியும்
புதிரென வயிறும் சோர்ந்ததுவே
போட்டிடும் உரமே பயிர்தனை வளர்க்கும்
பொசுங்கிடும் பற்றாக் குறையானால்
பூட்டிய அறையின் குப்பையாய் வயிறும்
பொசுக்கென நசுங்கி யுள்வாங்கப்
புதிரினை அவிழ்க்கும் வழிதனைக் கண்டேன்
புதுப்பய ணத்தைத் தொடர்ந்திட்டேன்
புதியவென் பயணம் புலர்ந்திடுங் கதிரின்
புத்துணர் வாக எழுந்ததனால்
பொசுக்கிய வறுமை உடனழிந் தொடப்
புனர்நிலை நோக்கி யேசென்றோம்
புயலெனச் சூழ்ந்த துன்பமாய்த் தன்னின்
பொறுப்பினை மறந்த என்தந்தை
புறப்பபட லானார் தனிமையில் வீழ்ந்தோம்
பொறுப்பினை நானே ஏற்றிட்டேன்
பொறுமையாய்ச் செய்யும் மின்பணி என்றன்
புழினை நாளும் கூட்டியதால்
பொசுங்கிய வாழ்வும் விரிகதி ரோனாய்ப்
புத்துணர் வெய்தி எழுந்ததுகாண்
பொறுப்புகள் தானே மனிதனின் நிலையைப்
புதுக்கிடும் கருவி? அதனாற்றான்
பொறுப்பைம றந்த தந்தையின் கடனைப்
போட்டுச்சு மந்தேன் தலைமீதே
போதையி னாலே தந்தையும் மறையப்
பொசுங்கிய துள்ளமும் உணர்வுகளே!

ஆவியும் சோர உடலது தேய
அயர்விலா துழைத்தேன் மின்பணியில்
அருமையாய்க் கற்றேன் அனைத்துயு மறிந்தேன்
ஆங்கிலோர் மேன்மை நிலைபெற்றேன்
அடிப்படை அறிவால் மின்னியல் துறையில்
அனைத்தையும் பயின்றேன் தொழில்செய்தே
அதன்வழி தனியே தொழில்செய லானேன்
அளவிலாப் பணத்தையும் சேர்த்திட்டேன்
அதன்பினே நானும் பலதொழில் கற்றேன்
அதன்வழி வறுமை தொலைத்திட்டேன்
அரிசியும் விற்றேன் அணிதுணி விற்றேன்
அடுத்திடும் பொருள்களும் நான்விற்றேன்
அண்ணனும் எம்மை நீங்கியே சென்றே
அவனுடை வழியில் பயணிக்க
அக்கையை நானும் அன்னையும் சேர்ந்தே
அவள்துணை சேர வைத்தோமே.
ஆனவ ரைக்கும் வாழ்வினில் நானும்
அனைத்தையும் கற்றேன் இளவயதில்
ஆயீனோம் அவற்றைப் படிப்பினை யென்றே
அறிந்தத னாலே மகிழ்வுற்றேன்
அதிர்ந்திடு வகையில் சறுக்கலு முற்றேன்
ஆருயிர் போக்கிட வும்முனைந்தேன்
அன்பினாள் என்றன் முழுத்துணை யிருக்க
அதிலிருந் தேநான் தேறிட்டேன்
அருமையாய் இரண்டு மக்களைப் பெற்றேன்
அணுவணு வாக உயர்ந்திட்டேன்
அவர்களின் அறிவைக் கண்டறிந் தேநல்
லாசிகள் தந்து வளர்த்திட்டேன்
அறிவுட னழகும் சேர்ந்திட மூத்தாள்
அரங்குகக ளதிர முழங்குகிறாள்
அயர்ந்திடும் கணக்கில் இளையவள் சிறக்க
ஆருக்கு வாய்க்கும் இதுபோலே?
அவர்களை யென்றன் வாழ்வினில் பெற்ற
அருந்தவத் தோனாய் நான்மகிழ்ந்தே
அடைந்திடு மின்பம் அளவிலா தாக
ஆண்டவ னருளால் உயர்ந்திட்டேன்
அச்சகப் பணியும் ஆலயப் பணியும்
அமைதிக்கு வழியாய் மாறிடவே
அவ்விரு பணியை என்மனத் தாசை
ஆழ்த்திட விரும்பிச் செயலானேன்
அருந்தமிழ்ப் பெண்ணாள் முதல்மனை யானாள்
அடுத்ததே இல்லாள் இருக்கின்றாள்
அருந்தமிழ்க் கவிகள் ஆயிரம் கற்றேன்
ஆன்றவர் துணையே யில்லாமல்
அமைந்தன ராசான் நெறிசெல வைக்க
அவர்கள்கங் காதரன் திருமுருகன்
அந்தமிழ் பரப்பும் அரும்பணி யொன்றே
அமைந்தநல் வாழ்வின் பணியாக
ஆனவ ரைக்கும் இதுவரை வாழ்வில்
அப்பணி செய்தே மகிழ்கின்றேன்
அமைதியும் என்றன் வாழ்வினில் சேர
அடிப்படை வாழ்வை நான்வென்றேன்!

ஊழ்வினை யாலே பாதியில் நின்ற
உயர்நிலைப் படிப்பைத் தொலைகற்றேன்
ஒருவழி யாக முடித்தபின் மேலும்
ஓர்ந்தே முதுகலை சேர்ந்திட்டேன்
ஒன்பதின் ஏழாம் ஆண்டினில் அந்த
உயர்கலைக் கல்விசெல் லாததென
உயர்நெறி மன்றத் தீர்ப்பினை யடுத்தே
ஓய்ந்ததே படிப்பில் ஆர்வமுமே
உணர்ந்துநான் மீண்டும் நெறிமுறை யாக
ஓங்கிமு யன்று கற்றேனே
ஒண்டமிழ்த் துறையில் முனைவராய் ஆகும்
ஒருநாள் வரையில் காத்திருப்பேன்
ஒவ்வொரு நிலையும் புதியன வாக
உற்றநல் புகழைச் சேர்த்திடவே
உடனிருந் தோர்கள் பொறாமையி னாலே
உள்ளிருந் தேயெனை வாட்டினரே.
உயர்மரம் பழுத்தால் ஒவ்வொரு அடியும்
உறுவதே இயல்பென இருந்திட்டேன்.
உருப்பெறும் வகையில் ஒண்டமிழ் நூல்கள்
உழைப்பினில் விளைந்தன உயர்முத்தாய்
ஒண்டமிழ் நாட்டில் உயர்கவிக் குலத்தில்
ஒருவனாய் என்னை ஆக்கினவே
உற்றஎன் முதல்நூல் பாக்களின் தொகுப்பாய்
ஒன்றுநற் காவியம் மற்றிரண்டோ
உயர்புகழ் கங்கா தரனவர் சிறப்பை
உயர்த்திடும் தொகுப்பாம் பிறவற்றுள்
ஓங்கிடும் சித்த மருத்துவம் ஒன்றாம்
ஒருநூல் இறைசிவ புராணமதே
உண்மையைச் சொன்னால் ஒன்னலர் செயலால்
ஊக்கமே பெற்றேன் பல்துறையில்
உதவின ரன்றி அவர்களி னாலே
ஒருவித இன்னலும் தோன்றவில்லை
உற்றவர் செயலும் மற்றவர் செயலும்
ஒவ்வொரு படியாய் எனையுந்த
ஒருவெறி யோடே ஓடினேன் வாழ்வின்
உண்மையை உயர்வைக் காண்பதற்கே
ஒன்னலர் என்றால் அஞ்சுவ தில்லை
உறுபயன் கிடைக்கும் என்பதனால்.
உண்மையில் அவரை ஒறுத்ததே இல்லை
ஒதுங்கியே வந்தேன் இணையத்தில்
ஒருவித அச்சம் ஆயினும் வெற்றி
உருக்கொளத் துணிந்தே செயல்பட்டேன்
உற்றநல் நண்பர் பலரென வானார்
ஒண்டமிழ்ப் பெண்ணும் துணையிருக்க
ஒண்டமிழ்க் கவிதைத் தேரினைச் செலுத்தும்
ஓர்பணி யாளாய் மனங்கொண்டே
உருப்பெறச் செய்தேன் "பைந்தமிழ்ச் சோலை
உற்றநல் புகழைப் பெற்றதுவே.
ஒவ்வொரு நொடியும் ஒண்டமிழ்ச் சீரை
உளத்தினில் கொண்டே உழைத்திட்டேன்
ஒப்பிலா நண்பர் நற்றுணை யாலே
உயர்வினி லமர்ந்த தக்குழுவே!

தாவிடு மெண்ணம் கொண்டவர் சிலரோ
தாழ்த்திட எண்ணிச் செயல்பட்டார்
தாழ்மனத் தாலே சீர்குலை வெய்யத்
தகாதன வற்றைச் செயலுற்றார்
தாங்கிடும் வயிர நெஞ்சினோன் அவற்றைத்
தாக்கியே வீழ்த்தி அழித்திட்டேன்
தாழ்த்தியே சொல்லிப் பயிற்சிகள் தம்மைத்
தளர்ந்திடச் செய்ய முனைந்தாரே
தன்னலந் தானே அழிவினை எய்தும்?
தனியனாய்த் தமிழ்நலங் காத்ததனால்
சழக்கரின் முயற்சி சாய்ந்திட நானும்
தளர்விலா வண்ணம் தமிழ்பரப்பத்
தமிழ்மகள் துணையும் சங்கரன் துணையும்
தக்கநல் நண்பர் துணையுடனே
தமிழ்ப்பெருஞ் சோலை தரணியில் புகழைத்
தனித்துவ மாகப் பெற்றதையா.
தமிழ்ப்பணி யொன்றே தம்பணி யென்னும்
தக்கவர் உடன்வரத் தொடர்கின்றேன்
தருமதன் லெற்றி விழவினை நடத்தித்
தந்தனர் தமிழ்த்தாய் திருமக்கள்
தமிழ்வர லாற்றில் இப்படி யோர்விழா
தமிழர்கள் கண்டார் என்பதுவோ?
தன்னலம் அழியத் தமிழ்நலம் சொரியத்
தறுகணார் பலராய்ச் சேர்கின்றார்
தமிழ்வழிப் பாக்கள் கற்பதைக் கடனாய்த்
தமிழ்மக னாக நினைக்கின்றார்
தங்களின் அன்பை என்னிடம் பொழியத்
தாங்கொணா இன்பம் அடைகின்றேன்
"தன்னிலை மறந்தே இன்னலைச் செய்வோர்
சறுக்கலைத் தானே சந்திப்பார்
சழக்கினை மனத்தில் நிறைப்பவர் வாழ்வில்
தங்கிடும் இன்பம் இருக்காதே
தப்புகள் மட்டும் வாழ்க்கையாய்க் கொண்டோர்
தப்பித மாகித் தொலைவாரே.
தவறெனப் புரிதல் கொண்டவர் இன்பத்
தகுநிலை இழந்தே துடிப்பாரே
தமிழுணர் வொன்றே உளத்தினில் நிறுத்தச்
சாதனை பலவும் கைக்கூடும்
தமிழ்ப்பணி யாளன் தனைவருத் திட்டால்
தமிழ்மகள் பாரா திருப்பாளோ?
தமிழழிப் போரின் முயற்சிகள் தானாய்த்
தடமிழந் தோடி அழிந்திடுமே
தன்னல மில்லா நல்லவர் வாழ்வில்
தாக்கிடும் துயர்கள் நில்லாதே
தன்னிலை யறியாச் சழக்கரின் சூழ்ச்சி
தமிழ்மொழி முன்னே செல்லாதே
தமிழ்மணம் வாழும்...தாழ்மணம் வீழும்
தக்கதோர் உண்மை நானறிந்தேன்
சழக்குகள் கூடி எதிர்ப்பினும் நல்லோர்
தாந்துணை நிற்க நானஞ்சேன்
தரணியில் மூத்தத் தமிழ்ப்பணி யொன்றே
தகுந்தநற் பணியாய்த் தொடர்கின்றேன்
"தமிழ்மகள் வாழ்க தமிழ்மகள் வாழ்க
தமிழ்மகள் வாழ்க வாழியவே!!!
                                  ★★★

No comments: