காரிகைக்_களிப்பு - 01.தொகுப்பு
அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்த. புதிய பகுதியான காரிகைக் களிப்பு 01 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.பல்வேறு கருத்துகளை வெளிக்கொணர்ந்த
இப்பயிற்சியில் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
இந்தப் பயிற்சியில் பிழை திருத்தம் செய்து உதவிய "பைந்தமிழ்ச் செம்மல்கள் " உள்ளிட்ட அனைருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காரிகைக்_களிப்பு : 01
************************
கொடுக்கப்பெற்ற அடி.. . .
வாட்டம் குறைந்திடின் வாழ்க்கை நலமுறும் மானிடரே (அல்லது)
வாழ்க்கை நலமுறும் வாட்டம் குறைந்திடின் மானிடரே!
****************************************
1. கவிஞர் குருநாதன் ரமணிவாட்டம் குறைந்திடின் வாழ்க்கை நலமுறும் மானிடரே
தேட்டம் நெறிப்படின் தேடல் நலமுறும் தேய்விலையே
நாட்டம் குறைவுற ஞானம் வசப்படும் நாட்படவே
கேட்கும் அறிவுறும் கேண்மை யுணர்வழி கேள்விகளே!
★
2. கவிஞர் வெங்கடேசன் சீனிவாசகோபாலன்
ஊட்டம் குறைய உடல்நலம் குன்றும் உலகியலில்
நாட்டம் குறைந்திட நம்மனத் துன்பம் நலிவுறுமே
கேட்டைத் தவிர்க்கக் கெழுதகை கூடிக் கிளைபரவும்
வாட்டம் குறைந்திடின் வாழ்க்கை நலமுறும் மானிடரே!
★
3. கவிஞர் விவேக்பாரதி
வாட்டம் குறைந்திடின் வாழ்க்கை நலமுறும் மானிடரே !
ஊட்டம் உடையவர் ஊன்றி வளருவர், ஊமையராய்
நாட்டமி லாத்தொழில் நாளு மியற்றுதல் நன்றலவே !
ஈட்டும் பொருளுக்கென் றிப்படிச் செய்தலும் ஈனமன்றோ !
★
4. கவிஞர் சீனிவாசகோபாலன் மாதவன்
தோட்ட மலர்களால் தூவப் படுமணஞ் சூழ்வதுபோல்,
நாட்டத் துடன்கூடி நல்லோ ரிணைவது நன்மைதரும்;
கேட்ட நொடியினிற் கேடு விலகிடுங், கேட்டிடுவாய்
வாட்டம் குறைந்திடின் வாழ்க்கை நலமுறும் மானிடரே !
★
5. கவிஞர் நெடுவை இரவீந்திரன்
கூட்டு முறையினில் கூர்ந்து பயிர்செயின் கூட்டணியின்
தோட்டம் பயன்பெறும் தொண்மைப் பயிர்களால் தூய்மையிலாக்
கோட்டம் சரிபடும் கோணின் செயல்முறைக் கூர்மையினால்
வாட்டம் குறைந்திடின் வாழ்க்கை நலமுறும் மானிடரே!
★
6. கவிஞர் ரகுநாதன் அரங்கசாமி
தேட்டம் குறைந்திடும் தேடல் குறைந்திடின் தேறிடுவீர்
நாட்டம் நலிந்திடும் நாக்கு திகட்டிடும் நற்சுவையால்
ஆட்டம் முடிந்திடும் ஆவி விரைந்திடின் ஆன்றவரே
வாட்டம் குறைந்திடின் வாழ்க்கை நலமுறும் மானிடரே!
★
7. கவிஞர் கோவிந்தராஜன் பாலு
வாட்டம் குறைந்திடின் வாழ்க்கை நலமுறும் மானிடரே.
நாட்டம் மிகுந்திடின் நன்மை பெருகும் நலமிகவே.
பாட்டும் இசையும் பழகிட நாளும் பழரசமே.
கூட்டுக் குடும்பமே கோடி நலங்களைக் கூட்டிடுமே.!
★
8. கவிஞர் சோமு சக்தி
தேட்டம் நிறைய தினமும் உழைத்தீர் திருவுளத்தீர்
கூட்டம் குழுமிக் குடித்தே யழிப்பதோ கொள்கையென்பீர்
நோட்ட மிடுவார் நொடித்தால் நுவல்வரோ நோயகல்வீர்
வாட்டம் குறைந்திடின் வாழ்க்கை நலமுறும் மானிடரே!
★
8. கவிஞர் தர்மா
நாட்டில் உழைத்து வியர்வையும் சிந்தி நலத்துடன்நாம்
ஈட்டும் பொருளே இனிமைகள் தந்திடு மெப்பொழுதும்..
தோட்டம் விளைந்தும், உழைத்தவர் வாழ்வில் தொடர்ந்துவரும்
வாட்டம் குறைந்திடின் வாழ்க்கை நலமுறும் மானிடரே!
★
9. கவினப்பன்
ஈட்டம் பெருக்க விருப்பெலாங் கொட்டி யிலாததற்கே
யோட்டமா யோடி யுறவோ டுறவா துழல்வதென்னே
தேட்டப் பெரியோ ரறிவுரை கேட்டுத் தெளிந்துநெஞ்ச
வாட்டங் குறைந்திடின் வாழ்க்கை நலமுறு மானிடரே.
★
10.கவிஞர் சாமிசுரேஷ்
வேட்கை மிகக்கொண்டு வேண்டிப் பலகேட்டு வேலனிடம்
நாட்கள் நகர்ந்துபோய் நம்பிக்கை வீழ்ந்து நலனழிவோர்
கேட்பதெல் லாம்கிடைக் காதென் றுணர்ந்து கெடுமனத்து
வாட்டங் குறைந்திடின் வாழ்க்கை நலமுறும் மானிடரே!
★
11. கவிஞர் அர.விவேகானந்தன்
ஏட்டில் படித்திடு மெல்லா முலகி லினித்திடுமோ?
நாட்டின் வளமெலாம் நான்கு சுவரில் நனிந்திடுமோ?
காட்டை உழுதே களித்திடின் மாற்றங் கனிந்துவரும்
வாட்டம் குறைந்திடின் வாழ்க்கை நலமுறும் மானிடரே!
★
12. கவிஞர் பொன்.பசுபதி
நாட்ட முடனே உழைத்திடின் யாரும் நலம்பெறலாம்
கூட்டை யமைக்கும் குருவிகள் கூட குதுகலமாய்த்
தேட்ட முடனே தினமு(ம்).உழைத்தலைத் தேர்ந்தறிக
வாட்டம் குறைந்திடின் வாழ்க்கை நலமுறும் மானிடரே!
★
13. கவிஞர் இளம்பரிதியன்
வாட்டம் குறைந்திடின் வாழ்க்கை நலமுறும் மானிடரே!
ஆட்டும் அவன்வழி ஆடு நிலமிதில் ஆணவமே
மூட்டும் விறகினை மொய்க்கும் அழலென மூண்டுநமை
வாட்டும் நிலையற நாடுக, மாணடி மாநிலமே!!
★
14. கவிஞர் ஐயப்பன்
காட்டம் குறைந்திடின் சாந்தம் மிகுந்திடும் காசுபண
நாட்டம் குறைந்திடின் நட்டம் குறைந்திடும் நாளும்மன
வாட்டம் குறைந்திடின் ஆற்றல் மிகுந்திடும் வாய்த்தமன
வாட்டம் குறைந்திடின் வாழ்க்கை நலமுறும் மானிடரே
★
15. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரப் அலி
ஊட்டம் இலையென ஊரில் அலைவோர்க் கொருகவளம்
ஊட்டி மகிழ்தல் உயர்வே ! பசியால் உழலுபவர்
வாட்டம் குறைந்திடின் வாழ்க்கை நலமுறும் மானிடரே
ஈட்டும் அதனில் இரப்பவர்க் கீவீர் இனிதுவந்தே !
★
16. கவிஞர் நியாஸ் அசன் மரைக்காயர்
தீட்டும் விதிகளில் தீங்கென யாதுள செம்மையாக
மீட்டும் இறையவன் மீண்டும் தருவான் விதவிதமாய்த்
தோட்டச் சகதியில் தோன்றும் நறுமணச் சூரியன்போல்
வாட்டம் குறைந்திடின் வாழ்க்கை நலமுறும் மானிடரே!
★
17. கவிஞர் மஞ்சுரா ரமேஷ்
போட்டிக ளின்றியே பொன்னென வாழுவோம் பொன்மயிலே
ஊட்டிடும் நற்குண முண்மையாய் நாளு முதவிடுமே
நாட்டம் மிகுந்திடின் நன்மையைச் சேர்த்திடும் நம்மிடமே
வாட்டம் குறைந்திடின் வாழ்க்கை நலமுறும் மானிடரே!
★
18. கவிஞர் அரவிந்த் கார்த்திக்
காழ்ப்பினை மாற்றிடக் கல்வியை கற்பாய்க் களிப்புறவே
ஊழ்வினை நீங்கிடும் உண்மை விளங்கும் உணர்ந்திடுவாய்
தாழ்வும் அகன்றிடத் தீமைகள் வீழத் தரணியிலே
வாழ்க்கை நலமுறும் வாட்டம் குறைந்திடும் மானிடரே!
★
19. கவிஞர் சியாமளா ராஜசேகர்
ஊட்டி வளர்த்த உறவை உதறி யொதுக்குவதால்
வீட்டி லமைதி விடைபெறு மென்றே விளங்கிடுவீர்!
ஆட்ட மடங்குமுன் அன்னையை அன்புட னாதரிக்க
வாட்டம் குறைந்திடின் வாழ்க்கை நலமுறும் மானிடரே!
★
20. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
தீட்டும் நெறிமுறை திட்டம் வகுத்திடும் தீந்தமிழே
ஊட்டும் தமிழ்மொழி உண்மை வழிகளும் ஊரினிலே
நாட்டம் நிறைந்திடின் நன்மை பெருகிடும் நாட்டினிலே
வாட்டம் குறைந்திடின் வாழ்க்கை நலமுறும் மானிடரே !
★
21. கவிஞர் வள்ளிமுத்து
கூழும் கிடைக்காக் குடும்பம் பலவுள கொள்கைநிமிர்.!
ஆழ்த்தும் அரசுக்(கு) அறிவுரை செய்வீர் அவனியிலே
தாழ்வைத் தவிர்த்துத் தலைவராய் நீரெழச் சாதனைதான்
வாழ்க்கை நலமுறும் வாட்டம் குறைத்திடின் மானிடரே.!
★
22. கவிஞர் நடராசன் பாலசுப்பிரமணியன்
பாட்டன் வழியில் பயணம் குறைந்திடப் பட்டிணத்து
நாட்டம் மிகுந்து நடைதான் அழிந்து நலம்கெடுத்தீர்
நீட்டும் துயரது நோயென வந்ததே நீரிழிவாய்
வாட்டம் குறைந்திடின் வாழ்க்கை நலமுறும் மானிடரே!
★
23. கவிஞர் தண்டபாணி தேசிகன்
காட்டின் வழியதில் கள்வர் நிலையதாய்க் கல்லெறியக்
கூட்டின் நிலையதில் கூடும் உறவுகள் கூட்டமென
வாட்டும் உலகியல் வல்வினை மாறிட வல்லுறவில்
வாட்டம் குறைந்திடின் வாழ்க்கை நலமுறும் மானிடரே !
★
24. கவிஞர் பரமநாதன் கணேசு
நாட்டம் அனைத்திலும் நாளுமே வைத்திட்டால் நானிலத்தில்
ஓட்டம் எடுக்குமா பேரிடர்! ஒட்டி உடனிருந்தே
ஈட்டும் பொருளுக்காய் எத்தனை பொய்களாம் என்றறிந்தே
வாட்டம் குறைந்திடின் வாழ்க்கை நலமுறும் மானிடரே!
★
25. கவிஞர் இரா.கண்ணன்
ஊட்டம் குறையா துழைப்பினில் யாவரும் ஊரினிலே
நாட்டமும் கொண்டால் நனிவுறும் ஏரதும் நாட்டினிலே
ஈட்டிடும் இன்பம் எதுவென் றறிகுவாய் எப்பொழுதும்
வாட்டம் குறைந்திடின் வாழ்க்கை நலமுறும் மானிடரே!
★
26. கவிஞர் அழகர் சண்முகம்
ஈட்டும் பொருளை இனிதென எண்ணியே இன்புறாமல்
பூட்டும் கதவினில் பேரவா கொண்ட புயல்கரங்கள்
மூட்டும் நெருப்பினில் மூழ்கியே வெந்து முறியுமன
வாட்டம் குறைந்திடின் வாழ்க்கை நலமுறும் மானிடரே!
★
27. கவிஞர் நடராஜ் மெய்யன்
ஆட்டம் அடங்கிடின் ஆறடி மண்ணில் அடைக்கலமே
நீட்டும் பணத்தாலே நில்லா உயிரும் நிலைத்திடுமோ
ஓட்டம் பிடித்துயிர் நீங்கிடும் யாவர்க்கு மோர்ந்திடுக
வாட்டம் குறைந்திடின் வாழ்க்கை நலமுறும் மானிடரே !
★
28. கவிஞர் நிர்மலா சிவராச சிங்கம்
போட்டி பொறாமை அழித்திடும் நல்வாழ்வைப் பொன்னுலகில்
ஈட்டும் பொருள்களைச் சேமித்து வாழ்ந்திட ஏற்றமுண்டாம்
நாட்டங்கொண் டேகிடு நல்லவர் நட்புகள் நன்றெனவே
வாட்டம் குறைந்திடின் வாழ்க்கை நலமுறும் மானிடரே!
★
29. கவிஞர் நாகினி கருப்பசாமி
காட்டும் பரிவுடன் காட்டம் விடுபடக் கண்ணியத்தில்
நாட்டம் செலுத்திடும் நல்லோர் உறவினை நாடுகின்ற
ஊட்டம் நிறைந்திடும் உற்சா கமுந்தரும் உள்ளுணர்வால்
வாட்டம் குறைந்திடின் வாழ்க்கை நலமுறும் மானிடரே!
★
30. கவிஞர் மாரிமுத்து
சூழ்ந்திடும் நோயால் சுழன்றிடும் உள்ளம் சுகமறியா
வீழ்ந்திடும் போதிலும் வீறி வளரும் விதையெனத்தாம்
தாழ்க்கைச் செயலால் தவறிடா மக்கள் தளர்வதில்லை
வாழ்க்கை நலமுறும் வாட்டம் குறைந்திடின் மானிடரே!
★
31. கவிஞர் வ.க.கன்னியப்பன்
ஈட்டம் பெருக்கவே என்றும் இனிதுடன் ஈங்குழைப்போம்
நாட்டம் மிகுந்திடின் நல்லோர் நலிந்திடல் நாமுறவோ?
வேட்டம் பெரிதெனில் வாட்டம் மிகுதலும் வேண்டுவமோ?
வாட்டம் குறைந்திடின் வாழ்க்கை நலமுறும் மானிடரே!
★
32. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
நாட்டம் குருமொழி நல்கும் கருத்தினை நாடிடலாம்
தேட்டம் அதனிலே கொண்டு தெளிவினால் தேர்ந்திடலாம்
கூட்டம் அறிவுடை ஆன்றோர் குழுவினில் கூடிடலாம்
வாட்டம் குறைந்திடின் வாழ்க்கை நலமுறும் மானிடரே!
★
33. கவிஞர் வஜ்ரவேலன் தெய்வசிகாமணி
வாட்டம் குறைந்திடின் வாழ்க்கை நலமுறும் மானிடரே
ஓட்டம் குறைந்தால் உளத்தில் அமைதி உணர்ந்திடுவீர்
ஈட்டம் அளவாய் இருந்தால் கவலை இருப்பதில்லை
தேட்டம் புகழது சீர்வழிப் பெற்றல் சிறந்ததுவே.
★★★
1 comment:
பாவலர் ஐயாவின் மாணவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமையடைகிறேன்.
Post a Comment