பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

17 May 2017

சோலை மெய்ஞ்ஞானப் புலம்பல்

                  சோலை மெய்ஞ்ஞானப் புலம்பல்

     அன்பு நண்பர்களே!

நம் சோலையில் தனியாக உள்பெட்டியிலும் , கருத்து பகுதியிலும் தான் இதுவரை நாம் அந்தாதி பாடிப் பதிவு செய்துள்ளோம்..
முதன் முறையாக பொதுவான ஒரு பேச்சுச் சாளரத்தில் (உள்பெட்டியில்) நிகழ்ந்த அந்தாதிக் கூத்து !
பத்திரகிரியாரின் மெய்ஞ்ஞானப் புலம்பலை
அடியொற்றி. . .)

                                       எக்காலம் ??                                       *************

மரபு மாமணி

வாடுதல் விட்டொழித்து வாகாய்ப் பரமனடி
தேடுதல் கண்டு திளைப்பதுவு மெக்காலம். . .?

இருட்டறையின் வெங்கொடுமை இல்லா நிலையும்
வெருட்டுதலே யின்றி விரும்புவது மெக்காலம்?

காணாச் சிறப்பிழந்து கையறுந்த போதினிலும்
வீணா மிழிபிறவி மீள்வதுவு மெக்காலம்?
*
விவேக்பாரதி

ஞானம் விழைந்து நலம்விழைந்து இப்புவியில்
ஊனம் அகற்றி உருப்படுவ தெக்காலம் ?

நானும் அகற்றி நல்லிறையின் பாதத்தை 
வானென் றுணர்ந்து வணங்கிடுதல் எக்காலம் ?

பொல்லாப் புகழோடும் போகும் உறவோடும் 
இல்லாத பற்றோ டிலங்குவது மெக்காலம் ?
*
மரபு மாமணி

ஈசன் திருப்பாதம் இன்றெனக்கு வேண்டுதே 
ஏசா தொருஞான ஏக்கறுப்ப தெக்காலம்?
*
விவேக்பாரதி

நல்லார் வழிநடந்து நாசம் அறுத்தந்த 
தில்லைச் சிவனடியில் சேர்வதுவு மெக்காலம் ?

அறிவினும் ஆணவத்தில் ஆகாத சேர்த்தச்
சிறியன் இறையடியில் சேர்வதுவு மெக்காலம் ?
*
மரபு மாமணி

காலன் மருளொழித்துக் காட்டானின் பாதத்தில்
ஞாலத் தொருதுளியாய் நானடைவ தெக்காலம்
*
விவேக்பாரதி

காமக் கனவறுத்துக் காகுத்தன் தாளினிலே 
ஏம நிலைதன்னை எய்துவது மெக்காலம் ?
*
மரபு மாமணி

எட்டி இனித்திடவும் கன்னல்வேர் ஏற்றிடவும்
மட்டுப் படாத மருளொழிவ தெக்காலம்?
***** *****
இப்படித் தனியாக சென்றுகொண்டிருந்த பாடல்கள் அந்தாதியின் ஒழுங்கைப் பூண்ட சமயம்....
**********
விவேக்பாரதி .

அம்பைப்போல் பாயும் அகத்தினிலே நல்லொளியின் 
தெம்புந்தான் தோன்றவுயிர் தேருவது மெக்காலம் ?
*
மரபு மாமணி

தேருவதும் மாறுவதும் தீரா இடைவெளியாய்
நீறதிலே நீர்த்து நிறமழிவ தெக்காலம்?
*
விவேக்பாரதி

அழியும் உடலின்மேல் ஆசை அறுத்துப்
பொழிலாய்ச் சிவனடியைப் போற்றுதலு மெக்காலம் ?
*
மரபு மாமணி

போற்றும் இழியல்குல் பொய்ச்சேற்றில் வீழாமல்
தூற்றம் ஒழித்துத் துணைபெறுவ தெக்காலம்?
*
விவேக்பாரதி

பெறுவதெலாம் நின்றன் பெருங்கழலே என்று
சிறுவனுரை சொல்லிச் சிவனடைவ தெக்காலம் ?
*
மரபு மாமணி

சிவசிவனே யென்றுந்தன் சீர்கழலைப் பற்றி
அவமறுத்து வீடடைந்தே ஆள்வதுவு மெக்காலம்?
*
விவேக்பாரதி

ஆளும் மனப்பேயின் ஆட்ட மறுத்தடியன் 
நீளும் துயராழி நீங்குவது மெக்காலம் ?
*
மரபு மாமணி

நீங்கிப் பிறப்பழித்து நீங்கா அருளடைந்து
தூங்கிச் சிவனடியில் சூழ்வதுவு மெக்காலம்?
*
விவேக்பாரதி

சூழும் பழவினையின் சூழ்ச்சி அறுத்திறைவன் 
வீழும் அடியவன்மேல் வீற்றிருப்ப தெக்காலம் ?
*
மரபு மாமணி

வீற்றிருத்த லெல்லாம் வினைகளைவோன் என்பாரோ 
மாற்றிருக்க மைய மயக்கறுத்த லெக்காலம்?
*
விவேக்பாரதி

அறுக்கும் அறியாமை ஆண்டவனின் காலில் 
சறுக்கி விழுவும் சரியாவ தெக்காலம் ???
*
சியாமளா ராஜசேகர்

பற்றெலாம் விட்டொழித்துப் பார்வதி நாதனின்
பொற்பதம் பற்றிப் புகழ்வது மெக்காலம்?
*
மரபு மாமணி

சரியையும் சேரும் கிரியையும் சேர்ந்து
விரித்துரைத் தென்னை மீட்பதுவு மெக்காலம்?
*
விவேக்பாரதி

புகழ்படைத்த ஈசனவன் பொன்னடியைப் போற்றி 
அகங்குளிரப் பாட்டில் அழுவதுவு மெக்காலம் ?
*
சியாமளா ராஜசேகர்

தில்லைவாழ் கூத்தனைச் சேவிக்க மாட்டாமல்
கல்லாமெ னுள்ளம் கனிவது மெக்காலம்?
*
விவேக்பாரதி

கனியொன்றால் பெண்ணைக் கடவுளுக்கே தாயாய் 
இனிதாய் அமைத்தவனை இங்கடைவ தெக்காலம் ?
*
மரபு மாமணி

இங்கிருக்க மாட்டாமல் ஈனப் பிறப்பழிந்தே
அங்குவந்துன் மார்பில் ஆடுவது மெக்காலம்?
*
விவேக்பாரதி

ஆடி நடிக்கின்ற ஆண்டவனின் பாதத்தைத் 
தேடி அலைந்துயிரைத் தேய்ப்பதுதான் எக்காலம் ?
*
சியாமளா ராஜசேகர்

பனிலிங்கப் பேரழகைப் பார்த்துளம் பூக்கப்
புனிதாவுன் நல்லருள் பெய்வது மெக்காலம்?
*
மரபு மாமணி

தேயும் உயிராசை தேய்ந்தேபின் ஈசனவன்
தாயாம் மலர்ப்பதத்தில் தானடைவ தெக்காலம்?
*
விவேக்பாரதி

அடையும் மனத்தழுக்கை அக்கினியில் இட்டுத் 
துடைக்கும் உமையவள்தாள் தூளாவ தெக்காலம் ?
*
தங்கமணி

மலர்பாதம் என்றந்த மாஅடி சென்றோர்
சிலர்தானே அவ்வழிநாம் செல்லுவ தெக்காலம்
*
மரபு மாமணி

தூளாய்ப் பிறந்ததிந்தத் தோதான பூமியிலே
தாளாம் மலர்ப்பதத்தைச் சார்வதுவு மெக்காலம்?
*
சுந்தரராஜன்

சார்வதுவும் ஆங்குச் சார்ந்தபின்பு மீளாமல்
சேர்வதுவும் சேர்க்கை சிறப்பதுவும் எக்காலம்
*
சியாமளா ராஜசேகர்

தூளாக்கிப் பாவத்தைத் தீர்த்தெறியு மீசனே
மீளாத் துயர்விடுத்து மீட்டெடுப்ப தெக்காலம்?

சிறப்பான வாழ்வெண்ணிச் சீரழிந்த பின்னே
இறப்பில்லா வாழ்வை இனியடைவ தெக்காலம்?
*-
விவேக்பாரதி

சிறக்கும் வழியறிந்து சீர்பெற்று ! நெஞ்சம் 
பறந்தே உமையடியைப் பற்றுவ தெக்காலம்

இனியடையும் பேர்செல்வம் ஈட்டும்பொருள் எல்லாம்
மனிதமனம் தானாய் மாளுவது மெக்காலம் !
*
சுந்தரராஜன்

பற்றுவதை விட்டுப் பறந்துமகிழ் பாழ்மனது
உற்றவனை அண்டி உவப்பதுவும் எக்காலம்
*
மரபு மாமணி

பற்றறுத்த பின்னாலே பாவம் தொலைந்தோட
மற்றந்த வீடடைந்து மாசறுப்ப தெக்காலம்?
*
விவேக்பாரதி

உவப்பதுவும் தேடி உழல்வதுவும் மாண்டு 
தவப்பதவி எய்தி தயைபெறுவ தெக்காலம் ?
*
சுந்தரராஜன்

மாசறுத்த நெஞ்சம் மன்னவனைப் போல்தானும்
தேசடைந்து சீவன் திகழுவதும் எக்காலம்
*
விவேக்பாரதி

மாசறுக்கு மீசனடி மன்னித் தொழுதென்றன் 
ஆசை அறுபடவே ஆடுவது மெக்காலம் ?
*
சியாமளா ராஜசேகர்

இனியடை யாமல் எனதாவி போமோ
தனித்தயென் துன்பம் தணிப்பது மெக்காலம்?
*
மரபு மாமணி

உவப்பென் றிதுநாளும் ஓர்ந்திருந்த காயம்
தவறென் றெனையாண்டு தாங்குவது மெக்காலம்?
*
சுந்தரராஜன்

தயையடைந்த நெஞ்சம் தான்தவறே செய்யா
நயப்படுமுன் தாளில் நடமிடுவ தெக்காலம்
*
விவேக்பாரதி

திகழும் மலமெல்லாம் தீரன் சிவனை
முகிழும் மலரடியில் மூழ்குவது மெக்காலம் ?
*
கவிஞர் கனகரத்தினம்

உவப்பத் தலைகூடி உள்ளம் சிறப்பாய்ச்
சிவப்பு விரிப்பினில் செம்மையாவ தெக்காலம்
*
விவேக்பாரதி

நடனமிடும் ஈசன் நனியுடலின் பாகத் 
தடங்கும் உயர்ப்பொருளை ஆவிதொழல் எக்காலம் ?
*
மரபு மாமணி

ஆடுவதும் பாடுவதும் ஆண்டவனின் கூத்தென்றே
நாடி யவனடியை நத்துவது மெக்காலம்?
*
சுந்தரராஜன்

தாங்குபவன் தாளைத் தன்தலையில் தாங்கிநிதம்
பாங்குடனே ஏழை பதறுவதும் எக்காலம்
*
விவேக்பாரதி

பதறும் வழக்கறுந்து பக்குவமே பெற்றுக்
கதறும் எளியன் கதியடைவ தெக்காலம் ?
*
சியாமளா ராஜசேகர்

நடமிடுங் காட்சியை நாயேனுக் கீந்த
விடமுண்ட ஈசனும் வீடளிப்ப தெக்காலம்?
*
மரபு மாமணி

கதியென் றிணைசேரக் காத்திடுவான் ஈசன்
மதித்தொருகால் நானும் மகிழ்வதுவு மெக்காலம்?
*
சுந்தரராஜன்

மகிழ்வதனை புரந்தருளும் மன்னன் பதங்கள்
திகழ்ந்தென்னுள் கூத்தை இயற்றுவதும் எக்காலம்
*

விவேக்பாரதி

இயற்றும் கவியெல்லாம் ஈசன் செவியில் 
வியக்கப் பதிந்திடநான் வித்தைபெறல் எக்காலம் ?
*
மரபு மாமணி

வித்தூன்றி வைத்த வியனீசன் எம்பாவச்
சத்தெல்லாம் நீக்கிச் சதமளிப்ப தெக்காலம்?
*
சியாமளா ராஜசேகர்

இயற்றிடும் செய்யுளில் ஏதேனும் தப்போ
பயம்தெளி விக்கப் பரம்வருவ தெக்காலம்?
*
சுந்தரராஜன்

சதமும் அவன்புகழைச் சாற்றும் நிலையில்
நிதமுமென் நெஞ்சில் நிலைப்பதுவும் எக்காலம்
*
விவேக்பாரதி

நிலையான செல்வமது நிர்மலனின் தாளென் 
றலையும் மனமும் அறிவுபெறல் எக்காலம் ?
*
மரபு மாமணி

அலைவதும் ஆற்றல் அளத்தலும் இல்லா
நிலையாக ஓரிடத்தில் நின்றிருப்ப தெக்காலம்
*
சுந்தரராஜன்

நின்றிருக்கும் ஈசன் நிலையிருக்கப் பாழ்நெஞ்சோ
பொன்புகழ்வின் ஓடுவதைப் போக்குவதும் எக்காலம்
*
விவேக்பாரதி

போக்குவதும் ஆக்குவதும் போதை வழங்குவதும் 
தேக்குவதும் ஈசனெனத் தேர்வதுவு மெக்காலம் ?
                                                                         ★★★

No comments: