அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:26 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது.
இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
இந்தப் பயிற்சியில் பிழை திருத்தம் செய்து உதவிய "பைந்தமிழ்ச் செம்மல்கள் " உள்ளிட்ட அனைருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பதிவை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வசதியாக நம்முடைய பைந்தமிழ்ச் சோலையின் வலைப்பூப் பக்கத்திலும்
http://painthamizhchsolai.blogspot.com/?m=0
பகுதியிலும் பதியப்பட்டுள்ளது. அனைத்துப் பயிற்சிப் பாடல்களின் தொகுப்பும் அதில் பதியப்படும்.
பார்ப்பதற்கு ஒரு புத்தகத்தின் வழி யாப்பு இலக்கணம் கற்பது போல் இருக்கும்.
நன்றி.!
***** ***** *****
. பாட்டியற்றுக,--26
(மருட்பா.)
செவியறிவுறூஉ
1. கவிஞர் அர. விவேகானந்தன்
மண்ணி லுழைத்தே மடியு முழவனின்
கண்ணில் குறையினைக் கண்டு வருத்தமின்றி
யென்று மொதுக்கிடின் ஏற்றம் பெருகுமோ?
நன்றா யவரின் நலனோங்க வேண்டுவாய்
ஏழையவன் இன்ன லின்றி
வாழவே வழிவகை வழங்கிடு வாயே!
★
2.கவிஞர Valayapatti Kanniappan Kanniappan
தந்தையின் வாக்கே தகுந்த அறிவுரையாய்ச்
சிந்தையில் கொண்டுநீ சிந்தித் திருந்தால்
அனைத்துமுயர் நாட்களே ஆகுமன்றோ! நாளும்
இனிதாய் அவர்சொல்லை எண்ணி நடந்தால்
கேடில்லா வளமும் கையில்
தேடிவந் துன்னைச் சேரும் நிறைவே!
★
3. கவிஞர்Somu Sakthi
நீர்மக் கரிப்பொருளால் நெல்வயல் பாழாகும்
சேர்மக் கருப்பொருளைச் சீண்ட விடலாமோ ?
நீண்ட போராட்டம் நெடுவாச லிற்றொடர்ந்தும்
மீண்டும் வடகாடு மீட்க முயல்வாய்
ஆட்டம் போடும் அரசின்
ஆட்டம் ஒடுக்க ஆர்த்தெழு வாயே!
★
4. கவிஞர் Raghunathan Rangasamy
கல்லாமை கள்ளுண்ணல் காலமும் ஓரிடம்
நில்லாமை நல்லோரை நாடாமை பொல்லாத
இங்கே இருக்கும் ஈன அரசும்
எங்கே திருந்தும் இயம்பென் றயராது
நம்மில் அறவழி நடப்பின்
நம்முடை அரசியல் நலமாய் விளங்குமே!
★
5. கவிஞர் Paramanathan Kanesu
ஏழ்மையே சொத்தாய் இருப்பினு மிவ்வுலகில்
வாழ்வி லொருபோதும் வாய்மை தவறாது
வாழ்ந்திட வேண்டும்! மனத்தில் இருத்திடுவாய்
சூழ்ந்திடும் வேதனையைத் தூக்கி யெறிந்திங்கே
நல்லதை யெண்ணி நாளும்
செல்லடா! அதுவே சிறப்பென வுணர்ந்தே!
★
6. கவிஞர் Manjula Ramesh
தாழ்வுகள் நீங்கித் தரணியும் போற்றிடும்
வாழ்வினைப் பெற்றிட வாய்மையைப் போற்றுவீர்
வாய்மைதான் நாளும் வசந்தத்தை நல்கிடும்
தூய்மையாம் வாழ்வும் துலங்கிடச் செய்திடும்
இதனை யென்று மின்பமாய்
நிதமு மேற்றிடின் நிறைவினை விளைக்குமே!
★
7. கவிஞர் Bknagini
என்றும் கலவரம் ஏந்திய கைகளாய்ப்
கன்றித் திரிவதே காவல் தருவதாய்
உள்ள நினைப்பில் உழன்றுத் தவிப்பதைத்
தள்ளும் மகத்துவத் தாரக மந்திரம்
அன்பு காட்டும் ஆறுதல்
கன்னல் பேச்சைக் காத்திடு வாயே!
★
8. கவிஞர் Dharma Ktm
நல்வழி சென்றும் நலமேதுங் காணாமல்
அல்லலுங் கொண்டே அவதியுற் றோர்களைக்
கல்வியைக் கற்றுக் கரையேற வைத்திட்டால்
வெல்லும் வழியை விரைந்தறி வார்களே!
மாற்றமு மோர்நாள் மலர
ஏற்றவை செய்வாய் ஏழைகள் வாழவே!
★
9. கவிஞர் Niyas Hasan Maraicar
பாலைநெய் கொண்டு பகட்டுப் பணமீட்டும்
மேலைநாட்(டு) உத்திகள் வேண்டாவே தேன்விருந்தாய்த்
தீராத நன்னதி தீஞ்சுவை நன்னிலங்கள்
நீராதா ரங்கள் நிலைக்கொண்ட நந்நாடாம்
விளைநி லங்கள் விளைத்தும்
இளையோர் வாழ ஏற்றதைச் செய்கவே!
★
10. கவிஞர் Kavingnar Ponn Pasupathy
இன்றிருப்பார் நாளையிலை என்றறிந்து(ம்) ஏனோதான்
வன்முறைகள் செய்கின்றீர் மாண்பின்றிப் புன்மனத்தால்
கொள்ளையும் மாந்தக் கொலையும் புரிகின்றீர்
கள்ளம் விடுத்துநீர் கண்ணியராய் மாறும்நாள்
என்று வருமோ அன்றுதான்
குன்றும் மானுடம் கோலமுற் றோங்குமே!
★
11. கவிஞர் Ashfa Ashraf Ali
கல்லாக் குழந்தை கரையேறக் கைகொடுக்கும்
நல்லார் மகவுகளை நற்கல்வி நாடிவரும்
வல்லா ரெவருமே வாய்ப்பளிப்பீர் வாணாளில்
இல்லாக் குழந்தையரு மின்புறுவா ரென்நாளும்
கற்கவழி செய்வீர் கருணையாய்
உற்றநல் லறமிஃ துலகத் தாரே !
★
12. கவிஞர் GurunAthan RamaNi
உடலும் உளமும் உயர்வுறப் பேணி
திடமுறும் பற்றினில் தெய்வதம் போற்றுவாய்
சுற்றமும் நட்பும் துணையெனக் கொள்வதில்
பற்றிலா அன்புறும் பண்பை வளர்ப்பாய்
வரையறு பணிகொள் வாழ்வினில்
திரைப்படம் கணினியின் தினவை நீக்கியே!
★
13.கவிஞர் தண்டபாணி தேசிகன்
மனிதம் செழித்திட மாண்பாய் வளர்த்தார்
புனிதம் இதுவெனப் புண்ணியர் அந்நாள்
பிறப்பின் பெயரால் பிரிவினைப் பேசிச்
சிறப்பிழந்து, சன்மார்க்க சிந்தை இழந்தீர்
விந்தை மக்களால் விதைத்த
சந்தை ஆவதோ சகத்தினில் மதமே !
★
14. கவிஞர் Venkatesan Srinivasagopalan
பிறமொழி கற்றல் பெருங்குற்ற மாகா
சிறந்த செயலுமாம் தீங்கிலை யென்பன்
பிழையெது வென்னில் பிறதமிழ ரோடே
அழகு தமிழ்விடுத்(து) ஆங்கிலம் கொள்ளல்
தமிழா உரைப்பாய் தமிழெனும்
அமிழ்தாம் மொழியில் அகமது மகிழ்ந்தே!
★
15. கவிஞர் Sara Bass
பெண்மையைப் பேணுதல் பேருலகில் தான்வேண்டும்
கண்ணெனவும் காத்திட்டால் காசினி உய்வுறும் .
வண்ணமிகு நற்செயலாம் வாருங்கள் மானிடரே
எண்ணம் சிறந்திட ஏற்ற நிலையிதுவாம்
பண்ணில் நானும் பாட
விண்ணிலும் ஒலித்திட வியனாய்ப் போற்றவே !!
★
16.கவிஞர் Nirmala Sivarajasingam
அன்பாய்ப் பழகியே ஆறுதல் தந்தாலும்
நன்றென நாடுவர் நண்பரும் காணீர்
விதியாக வந்ததும் வேற்றிடம் காண
உதிரும் உறவுகளும் உண்மையை என்றும்
மனத்தில் இருத்தி வருமொரு
சினத்தைத் தவிர்த்துச் சிறப்பாய் வாழ்கவே
★
17.கவிஞர் Krishnamurthy Nandagopal
சொற்பதம் காட்டிடுமாம் சோதியும் ஆகிடுமாம்
அற்புதன் தந்திடும் அற்புதமாம் - நிற்பதுவாம்
கற்றிடும் கேள்விபதில் காட்சியாய்த் தோன்றிடவே
நற்பதத்தைத் தேட்டமாய் நாடுவீர்
கூடும் அடியார் கூட்டம்
ஆடும் அரங்கன்முன் ஆடுதல் பாரீர்.!
★
18. கவிஞர்.இரா.கண்ணன்
உழவே உலகின் உயிர்நாடி யாகும்
அழியாது காப்பீ ரதனை--- உழுவோர்
உயர்ந்திட யாவரும் உறுதுணை யாக
அயரா துழைப்போம் அதன்வழி நிற்போம்
எழுவீ ரின்றே இணைந்தே
எழுதிடும் பாட்டில் எழுச்சி கொண்டே..!
★
19.கவிஞர் VivEk BhaRathi
சொல்லிவிட்டுச் சென்ற சுடரும் மரபெல்லாம்
பல்லக்கில் ஏற்றிப் பவனிவரச் செய்தற்கோ ?
அன்றாடம் வாழ்வில் அருந்தும் உணவேதான்
வென்றாடும் நல்மருந்தாய் வைத்தநிலை காண்கிலையோ ?
மரபின் உணவை மகிழ்ந்தே
தரமாய் உண்பாய் தரணியில் வாழவே! !
★
20. கவினப்பன் தமிழன்
மண்ணே முதலாஅ வைம்பெரும் பூதமம்
மண்ணே மலர்க்குமண மாந்தர்க்கு - மண்ணே
கொழியாத் திகழுங் குலதெய்வம் முன்னோர்
பழைமைமேற் பூத்திடும் பாயாம் - உழவன்
காதன் மகளாங் கண்களாம்
ஈந்துயிர் காத்தல் இற்றைக் கடனே.
★
21. கவிஞர் சாமி சுரேஷ்
யாரெங் கிறப்பின் எமக்கென வந்ததென்று
சோரம்போய் வாழ்வதற்குச் சோறெதற்குத் தோழா
விலையில்லா ஊனுயிரும் வீணாகப் போகும்
நிலைபெறவே நெஞ்சுயர்த்தி நீதிகொள்ள வாடா
வாழ்வ தொருமுறை வருவோர்
வாழ்த்திடும் வண்ணம் வாழ்ந்திடு வோமே.
★
22.கவிஞர் Paari Daasan
சன்மார்க்கம் சன்மார்க்கம் சன்மார்க்க மேயுலகில்
நன்மார்க்கம் நன்மார்க்கம் நன்மார்க்கம் துன்மார்க்கம்
துன்மார்க்கம் துன்மார்க்கம் துன்பமிழை மற்றவெல்லாம்
துன்மார்க்க மென்றெண்ணித் தூய்மை யடைந்து
தன்னை யுணர்ந்து சகலர்க்கும்
நன்மை புரிந்து வாழ்தல் நலமே!
★
23. கவிஞர் வள்ளி முத்து
பயிர்பெருக்கி நாட்டிலெங்கும் பஞ்சபசி நீக்கி
உயிர்காக்கும் நல்லுழ வோரை மறப்பின்
நன்னிலை விலகும் நடுங்குது யர்மிகும்
கன்னல் வாழ்வும் கசக்கும்
உழவோர் காப்பதே உடனடிக் கடனே.!
★
24.கவிஞர் Vajjiravelan Deivasigamani
வேற்றுமையி லொற்றுமை வேண்டிநா மெந்நாளும்
போற்றிட வேண்டும் பொதுநலமே காற்றுநிலம்
நீரும்வான் சுட்டும் நெருப்புமேயார்க் கும்பொதுவென்
றூருட னொன்றி யுழைத்திடி லென்றும்
நன்மையே நடக்கும் நாளும்
இன்பமே பெருகி இல்லற மினிக்குமே.
★
25.கவிஞர் Shyamala Rajasekar
பாழும் குடியே படுகுழிக்குள் தள்ளிவிடும்
வாழும் புவியில் மதிப்பிழந்து போய்விடும்
நோயு முடன்வந்து நொந்திட வைத்திடும்
பாயும் பகையாகும் பாவமும் சேர்ந்திடும்
ஒதுக்கித் தள்ளிநீ யுணர்ந்திடு
மதுவின் போதை மரண வாயிலே !
★
26.கவிஞர் Ayyappan Ayyappan Ayyappan
ஆடுகளை கோழிகளை அன்பாய் வளர்த்திடுவாய்
மாடென்றால் தெய்வமென்பாய் மாதாவென் றேற்றிடுவாய்
தானே வளர்த்ததனை தன்கையால் கொல்வதுமேன்?
ஊனைத்தான் தின்றுன்றன் ஊனை வளர்ப்பதற்கோ ?
உணவே உணர்வென உணருவாய்
உணர்ந்த பின்னும் ஊன்உண் ணாதே!
★
27.கவிஞர் நெடுவை இரவீந்திரன்
உழவனைப் போற்றி உலகில் வளமாய்
உழவனும் வாழ உறுதுணையாய் நாமும்
இருந்தாலே என்றென்றும் ஏழைவிவ சாயி
இருள்நீங்கி வாழ்வானே என்றார் பெரியோர்
நாளும் அவனும் நலத்துடன்
வாழும் நிலைபெற வாழ்த்துவோம் இனிதே!
★
28.கவிஞர் Aravind Karthick
இப்புவியில் மக்களினம் இன்பத்தைப் பெற்றிடவும்
எப்போதும் போற்றிடுவோம் இன்மொழியாம் வாய்மையினை
நன்னெறியாம் வாய்மையினை நல்லுலகில் கற்றிட்டால்
இன்பமெங்கும் தங்கிடும் ஈகைகுணம் தோன்றிடும்
நன்மைகள் உணர்வாய் நாளும்
இன்பம் தங்கிடும் இனிமைப் பொங்கவே.
★
29. கவிஞர் Tanggamani Sugumara
அறிவது யாருண் டகண்ட உலகில்
சிறியவர் போற்றுவ தில்லை பெரியவர்
சொல்லு மறிவுறை செய்யும் செயலதோ
புல்லுக் கிறைத்திடும் பொய்நீராய் ஆவது
கரியை முகம்பூசிக் கொள்வ
பெரியோர் பெருமையைப் பரப்புதல் நன்றே
★
30. கவிஞர் Nadaraj Maiyan
காசினை மட்டுங் கவனத்திற் கொண்டென்றும்
மாசுகள் சூழ்ந்த மதிகொண்டு வாழ்வோரே
நீட்டிப் படுக்கையில் நின்னுயிர் போய்விடின்
கூட்டிக் குவித்தபணம் கூட வருவதில்லை
நின்று நிதமும் நிலைக்கும்
அன்பைச் சொரிந்தே அமைதிகொள் வீரே!
★★★
No comments:
Post a Comment