அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:1இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது.
இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
இப்பதிவை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வசதியாக நம்முடைய பைந்தமிழ்ச் சோலையின் வலைப்பூப் பக்கத்திலும் painthamizhcholai blogspot.com பகுதியிலும் பதியப்பட்டுள்ளது. அனைத்துப் பயிற்சிப் பாடல்களின் தொகுப்பும் அதில் பதியப்படும்.
பார்ப்பதற்கு ஒரு புத்தகத்தின் வழி யாப்பு இலக்கணம் கற்பது போல் இருக்கும்.
நன்றி.!
***** ***** *****
. பாட்டியற்றுக,--1
(வெண் செந்துறை.)
1. கவிஞர் பாலு கோவிந்தராசன்
உருவில் பலவாய் உளமதில் ஒன்றாய்த்
தருவாய் மகிழ்வைத் தரணியைக் காக்கவே!
அருள்வாய் நிறைவாய் அழகின் முதல்வா.!
குருவாய் மனத்தின் குறைகள் போக்கியே.!
★
2. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து
அரிவோம் (அரி ஓம்) நமக அடியேன் தொழுவேன்
அரியின் காலாம் அடியிணை பிடித்தே!
இருகை கூப்பி இறையை வணங்கி
அருளைப் பெறுவேன் அடியிணை பற்றியே!
★
3. கவிஞர் ரமேஷ் மாதவன்
வேழ முகத்தனை வேண்டி வணங்கிடச்
சூழ விருந்திடும் சூதும் மறையுமே!
ஈசன் மகன்தனை ஏற்றித் தொழுதிட
நாசம் அடையுமே நம்வினை இன்றே!
★
4. கவிஞர் வள்ளிமுத்து
ஆக்கலும் அளித்தலும் அன்புயிர் காத்தலும்
நீக்கலும் நிலைத்தலும் நீளியற் கையே
வகுத்தும் தொகுத்தும் வாழ்வியல் கொடுத்தும்
மிகுத்தும் குறைப்பதும் மீளியற் கையே..!
★
5. கவிஞர் சேலம் பாலன்
முருகனின் அண்ணனே மூத்தவா தம்பியின்
திருமணம் நிறைவுறச் செய்தவா வணக்கமே!
அருமையாம் தமிழிதே அகிலமே போற்றிடப்
பெருமைகள் வழங்கிடு பீடுடை நாயகா!
★
6. கவிஞர் கு.நா.கவின்முருகு
ஐங்கர நாதனே ஆனை முகத்தினன்
சங்கத் தமிழினைத் தந்தருள் நாதனே!
தொந்தி வயிற்றனைத் துதிக்கை வாசனைச்
சந்தத் தமிழால் தவமாய்ப் பாடவே.!
★
7. கவிஞர் பொன்.பசுபதி
முதல்வனே எங்கள் முருகனின் அண்ணனே
எதையுமே செய்யுமுன் ணெண்ணுவோ முன்னையே
சிதைவுயெம் வாழ்வில் சேர்ந்திடின் நீதான்
உதவுதல் வேண்டு முன்னரு ளீந்தே!
★
8. கவிஞர் கட்டிக்குளம் ஓ.சுந்தரமூர்த்தி
முன்னைப் பொருளே மூத்தநற் றிருவே
என்னைக் காப்பாய் ஏகச் சுடரே !
உன்னை யறிந்தே உலகம் சுழலும்
என்னை அறிய எனக்கருள் வரமே!
★
9. கவிஞர் கைலாசநாதன் காளிதாசு
போதியி னீழலில் பொலிந்திடு மாதவா
சோதியி னொளியென சுடருமுன் மேனியே!
ஆதியு மந்தமு மறிந்திடா வாழ்வினில்
தீதிலா நெறிதனைத் தேறிட அருள்வயே!
★
10. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
தீதிலா வாழ்வினைத் தீண்டும் வகைசெய
மேதினி மீதினில் மேன்மை பெருகவே !
ஈடிலாக் கீர்த்தி இறைவ னருளவும்
கேடிலாச் செல்வமும் கேண்மையும் கொள்கவே !
★
11. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்.
இருவினை நீங்க இனிதை யருள்வாய்
குருவாய் வருவாய் குரைகழல் காட்டவே
சத்தம் எழுப்பியே தன்னுரு காட்டிடும்
அத்தன் அருட்சொல் அறிவாய் மனமே!
★
12. கவிஞர் குருநாதன் ரமணி
ஐந்து கரத்தனாம் ஆனை முகத்தனே
மைந்தனென் மையல் மழுவினாற் கொள்வரே.
பிள்ளையார் வள்ளல் பெருமை பேசவே
கொள்ளையாய் என்னுள் குதுகலம் பொங்குமே!
★
13. கவிஞர் மதிவாணன்
பணிவேன் உனதிரு பாத மலரை
அணியவே தமிழை அருள்வாய்
குமரனே!
செறிவுறும் தமிழில் செய்திடக் கவிதை
அறிவினில் தெளிவே அருள்வாய் குமரனே!
★
14. கவிஞர் கனகரத்தினம் முரளிதரன்
செந்தூர் வேலனின் சேவடி போற்றிட
வந்திடும் கவலை வருந்தி ஓடுமே
வண்ண மயிலை வணங்கி நின்றிட
எண்ணம் யாவும் எழிலைச் சூடுமே!
★
15. கவிஞர் சுந்தரராசன்
ஒற்றைக் கொம்பனை ஓமெனுஞ் செவியனைப்
பற்றிப் பரவிட பவங்கள் ஓடுமே!
கற்றைச் சடையர் கண்ணுதற் கடவுள்
உற்ற மகனென் உடனிருப் பாமே!
★
16. கவிஞர் கனகரத்தினம் செல்லமுத்து
கருவாய் உறையும் கணேசனே போற்றி
மருவாய் சுயமாய் மாறி வருகவே!
குன்றில் குடியாய்க் குமரனாய் நின்றவேல்
என்றும் உனைநான் எண்ணிடு வேனே!
★
17. கவிஞர் மஞ்சுளா ரமேஷ்
ஈசனின் மகனே ஈர்க்கும் குணத்தனே
பாசந் தனையே பார்க்கும் நேசனே!
★
18. கவிஞர் அரவிந்த் கார்த்திக்
சிவனின் குருவாய்ச் சித்தம் செய்திடும்
கவர்ந்த உருவே கந்த குகனே.
யானை முகனே யாவு மறிந்த
பானை வயிற்றனே பஞ்ச முகனே!
★
19. கவிஞர் கணேசன் ராமசாமி
கன்னல் மொழியில் கவிதை படைக்க
உன்னருள் வேண்டி உயர்த்தினேன் கரமே
அன்னைத் தமிழே அமிழ்தினு மினியாய்
என்னைக் கவிதை எழுதவைத் தாயே!
★
20. கவிஞர் சியாமளா ராஜசேகர்
சங்கரன் மகனைச் சதுர்த்தி நாளில்
பொங்கு மன்புடன் போற்றிடு வோமே !
சுண்டெலி மீதில் சுற்றி வருபவன்
கண்பட வாட்டும் கவலை விலகுமே !
★
21. கவிஞர் கவினப்பன் தமிழன்
என்னை யினமா யிழைத்த பெருந்தமிழ்
அன்னை யெழிலா ளடிதொழு வேனே!
★
22. கவிஞர் புனிதா கணேஷ்
தொந்தி வயிற்றனைத் தொழுவோம் தினமும்
புந்தியில் வைத்தே புகழினைப் பாடியே!
சந்தமும் சிந்தையில் சாற்றிடு நாமமும்
வந்தனை செய்தே வணங்கிடு நெஞ்சே!
★
23. கவிஞர் விவேக் பாரதி
ஈசனிற் பாதி யிடத்தினை வென்ற
பேசருஞ் சக்திப் பெருங்கழல் சரணே !
கந்தர்க் கொருவேல் கடுகிக் கொடுத்த
செந்தா மரைமுலை செழுங்கழல் சரணே !
★
24. கவிஞர் பாலமுருகன்
திருத்தணி வேலனைத் தேடுவார் வாழ்வில்
அருளும் பொருளும் அணியாய் வருமே!
திருப்பரங் குன்றத் திருமண் பூச
உருப்பெறும் வெற்றிகள் உண்மை தானே!
★
25. கவிஞர் நிர்மலா சிவராசா
வெள்ளைக் கொம்பனை விரும்பித் தொழுதால்
துள்ளிப் பறந்தே துயரமு மோடுமே!
★
26. கவிஞர் தர்மா
கந்தன் திருவடி கண்டு வணங்கிடும்
எந்த மனத்திலும் என்றும் நலமே..
பாலும் தேனும் படைத்து வேண்டிட
வேலும் வந்து வெற்றியைத் தருமே..!
★
27. கவிஞர் முத்துக்குமார்பாலசுந்தரம்
இரைந்த மனத்தில் இயல்பு திரும்பிட
விரைந்து வந்தென் வினைதீர்த் தாயே!
ஆய்ந்தபன் மலர்கொடு ஆனை முகத்தனைத்
தோய்ந்தவல் வினையறத் தொழுவோம் நாமே!
★
28. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரப் அலி
அல்லும் பகலும் ஆண்டவ னடியில்
உள்ளம் நொந்தே உய்வினை வேண்டவே
சொல்லால் செயலால் தொட்டநம் தீயப்
பொல்லாப் பாவமும் பொசுங்கியே போகுமே!
★
29. கவிஞர் கலாம் ஷேக் அப்துல்காதர்
எல்லா உலகும் இனிது நிகழ்வது
அல்லாஹ் ஒருவனின் அன்பும் அருளுமே!
★
30. கவிஞர் சீனிவாச கோபாலன் மாதவன்
ஆயவர் கோமகன் ஆநிரைக் கண்ணனைத்
தூயவர் பாடிடத் துன்பமும் போகுதே !
★
31. கவிஞர் ராசாபாபு
சூழ வந்து சூடம் ஏற்றி
வேழ முகனை வேண்டி மகிழ்வமே!
அந்தி மாலை அழகிய வேளை
புந்தி நிறைய போற்றிடு வோமே!
★
32. கவிஞர் ரவி ரங்கராஜன்
முப்புரி நூலது தொப்பையில் தவழ்ந்திட
இப்புவி காத்தே என்று மருளே!
முப்புர மெரித்தவன் முதலாய் ஈன்ற
ஒப்பரி தாகிய அற்புதக் கடவுளே!
★
33. கவிஞர் ஃபர்சானா ரசீக்
இனிய மார்க்கம் ஈந்தோ னுன்னைக்
கனிவாய் நினைந்து கரைகின் றேனே
நிறைவா யுன்றன் நேசம் பெறவே
இறைவா நிதமுனை இறைஞ்சுகி றேனே!
★★★
No comments:
Post a Comment