பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

20 Apr 2017

#பாட்டியற்றுக_தொகுப்பு - 12 (எழுசீர் ஆசிரிய விருத்தம்)


அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:12 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
இந்தப் பயிற்சியில் பிழை திருத்தம் செய்து உதவிய "பைந்தமிழ்ச் செம்மல்கள் " உள்ளிட்ட அனைருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பதிவை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வசதியாக நம்முடைய பைந்தமிழ்ச் சோலையின் வலைப்பூப் பக்கத்திலும் painthamizhchsolai blogspot.com
பகுதியிலும் பதியப்பட்டுள்ளது. அனைத்துப் பயிற்சிப் பாடல்களின் தொகுப்பும் அதில் பதியப்படும். 
பார்ப்பதற்கு ஒரு புத்தகத்தின் வழி யாப்பு இலக்கணம் கற்பது போல் இருக்கும்.
நன்றி.!
***** ***** *****
. பாட்டியற்றுக,--12
(எழுசீர் ஆசிரிய விருத்தம்)
1. கவிஞர் விவேக்பாரதி
ஆங்கிலம் பேசும் போதொரு மொழியை 
அதனொடு கலந்திடு வீரோ ? 
மாங்கனிச் சாற்றில் ஊனதன் துண்டை 
மன்னிடச் சேர்த்திடு வீரோ ? 
தீங்கனித் தமிழில் ஆங்கிலம் கலந்து
திமிருடன் மொழிதலு மேனோ ? 
ஈங்கிவை நீக்கி இழிநிலை மாற்றி 
இன்றமி ழேமொழி வீரே ! 

2. கவிஞர் தர்மா
எம்மொழி மண்ணி லென்றுமே சிறந்த 
தென்றுநாம் பெருமிதங் கொள்வோம்.. 
செம்மொழி யென்ற சிறப்பினைப் பெற்றுச் 
சீருட னுள்ளநம் மொழியை 
அம்பெனப் பாய்ந்திங் கழித்திடப் பலரும் 
ஐயமு மின்றியே வந்தால் 
நம்மிட மொருமை யிருப்பதைக் கண்டு ..
நலிவுட னோடிடு வாரே...

3. புலவர் செயராமன்
அரிசியில் கல்லைக் கலப்பவர் தம்மை,
அறிஞரென் றேற்பவ ரில்லை!
வரிசையைக் கலைத்து வன்மைய ராக 
வருபவர் வலியவ ரல்லர்! 
அருந்தமிழ் மொழியில் ஆங்கில முதலா 
அயல்மொழி கலந்திடல் கயமை!
உரியவர் அகத்தில் அயலவர் புகுதல்
ஒழுக்கமா பண்புடை அறமா?

4. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
தாய்மொழி நன்றாம் பேசுதல் கேட்டல் 
தமிழ்மொழி நலந்தரும் காண்க ! 
வாய்ப்பது வந்த போதினில் தோழா 
வகையுற மொழியினைப் பேசு ! 
நோய்விழும் நேரம் நோக்கினும் மருந்தாம் 
நோய்ப்பிடி அகலுமே நம்பு ! 
காய்ந்ததோர் நெஞ்சம் கருவறை என்றே 
காவியம் படைத்திடும் தமிழே !

5. கவிஞர் சீனிவாச கோபாலன் மாதவன்
அரியதாய்க் கற்ற நல்மொழி, பலவே
ஆயிடி னும்செழு மைக்கும்
உரியதாய், என்று மினித்திடும் தமிழும்,
உயர்மொழி யேயெமக் கெல்லாம் ;
உரிமையாய் எழுதிப் படைத்தநற் பாவும்,
உயர்வுடன் வந்திடும், தூய்மை
சொரிந்திடும் தமிழ்ச்சொல் மணத்துடன், பிறிதோர் 
சொல்மொழி கலப்பிலா திருந்தே !

6. கவிஞர் சுசீந்திரன் சுப்பிரமணியன்
எந்தையும் தாயும் இனிதுற வாடி
இயங்கிய தமிழமு தெங்கே
செந்தமிழ்த் தோழி செப்பிடும் காதல்
செவிவழி புகுந்தினித் திடுமே
வந்திடும் புனலாய் வனப்புடன் சொற்கள்
வகைவகை யாயிருந் திடவே
கந்தகக் கலப்பில் களிப்பது காயைக்
கனியெனக் கடிப்பதொப் பாமே.!

7. கவிஞர் பொன்.பசுபதி
என்றமிழ் மொழியி லித்தனை கலப்பா? 
என்றிதை மாற்றிட வியலும்?
இன்றுநம் மரசும் ஏற்றதைச் செய்யா 
திருந்திடின் நாமெலா மொன்றாய்க்
குன்றென எழுந்தே செயல்பட வேண்டும்
குலவிடும் தனித்தமிழ் காக்க
அன்றுதான் தமிழில் அயல்மொழிச் சொற்கள்
அகன்றிடும்! தனித்தமிழ் சிறக்கும்! 

8. கவிஞர் சோமு சக்தி
தாயவள் அன்னைத் தமிழ்மொழி யுனக்குத்
தரங்கெடச் சிதைப்பதைத் தடுப்பாய் 
தூயவள் சிந்தை நிலவுவ ளெனவே
துணிவுடன் எதிர்த்திட வருவாய் 
தீயவர் சொல்லித் திருந்தில ரென்றால் 
திமிரினை அடக்கியே வெல்வாய் 
நீயவள் பிள்ளை நினைவகற் றாதே 
நிலவிடும் இழிநிலை நீக்கே!

9. கவிஞர் பரமநாதன் கணேசு
ஆடையில் அழுக்குக் கண்டிடில் அதனை
அகற்றியே அணிந்திட விழைவாய்
கூடையில் கெட்டுப் போனதை யள்ளிக்
கொண்டதைப் போகவும் துணியாய்
ஓடையில் நீராய்ச் சலசலத் தோடும்
ஒண்தமிழ் ஓசையைக் கேட்டும்
மூடராய்ப் பேச்சில் பிறமொழி சேர்த்து
முனகியே கிடப்பது மேனோ?

10. கவிஞர் கோவிந்தராசன் பாலு
கண்ணெனக் காத்து விழியென மலர்ந்து
கனியென இனிதெனப் போற்றி.!
எண்ணெனக் கண்டெ ழுத்தென மனத்தில்
எழுதிடப் படித்திடப் போற்றி. 
மண்ணெனத் தோன்றா நாளினில் உதித்தே
மற்றமொ ழிகளுமே கலந்தே 
திண்ணிய தமிழில் திணித்திடக் கண்டோம்
திருத்திடும் வழிகளும் உண்டோ?

11. கவிஞர் புனிதா கணேசன்
மொழிதலிற் றூய்மை கொள்ளலே பேசும் 
மொழியதன் அழகதாம் காண்பாய் 
மொழிதலிற் றூய்மை எம்மொழி யேனும் 
மொழிந்திட அழகதாம் அறிவாய் 
மொழிதலிற் றானே மொழியதன் ஆழம் 
மொழிந்திடும் அழகதாம் தோற்றம் 
மொழிதலைப் பேண மொழிந்திடு மெந்த 
மொழியதும் தூயதே உணர்வாய்! 

12. கவிஞர் சுந்தரராசன்
சிந்தனை தன்னை ஆங்கில மதிலே
செய்திடுந் தலைமுறை ஒன்று
வந்தது கண்டும் வாடிடா தீங்கே
வாழ்வதற் காங்கில மொன்றே
செந்திற மென்று நம்பிடும் பெற்றோர்
சேற்றிலே சந்தனம் தேட
முந்துகின் றாரே ஆங்கிலக் கல்வி
மூட்டவே முடிவிதற் கென்றோ?

13. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரப் அலி
செம்மொழி யென்றன் தாய்மொழி என்போர் 
செப்பமி லாமலே நம்மில் 
துப்புர வின்றித் தூய்தமி ழிதனைத் 
துகள்துக ளாகவே யாக்கி
எப்படி யெல்லா மிகழ்கிறா ரறிந்தே
எவ்விதச் சலனமு மின்றித் 
தப்புகள் செய்யுந் தாய்மொழி கொண்ட 
தமிழரைக் காணவே சினமே !

14. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து
ஒண்மையில் பழமை இலக்கணம் முன்மை 
ஒளிமிகு இலக்கிய முளதே
எண்களில் தமிழ்போல் அருதியாய்ச் சொல்ல 
எம்மொழி யுள்ளது பாரில்
நுண்மையில் சொல்லில் பலபொருள் சிறப்பில்
நுண்ணிய சொல்பல உளவே
தொன்மையில் முதுமைச் செம்மொழி களிலே 
தூய்மையின் தமிழ்மொழி யன்றோ!

15. கவிஞர் முத்துகுமார் பாலசுந்தரம்
புதியதாய்த் தமிழில் புகுகிற அயற்சொல்
புகட்டிய தேவையை உணர்ந்தே 
அதுவுணர்த் துகிற அரும்பொருள் கொண்டும்
அந்தமிழ் தன்னிலே பெயர்த்தும்
கதுமென நாட்டில் புதுத்தமிழ்ச் சொல்லைக்
காழ்த்திடச் செய்யவோர் குழுவை
மதலையாய் இங்கு மன்னிடச் செய்ய
வழிவகை செய்யுமோ அரசே?

16. கவிஞர் குருநாதன் ரமணி
அடிசிலை அன்னை வட்டிலில் வைக்க
. அளாவிடும் குழந்தையின் நாளில்
படிக்கவோர் பனுவல் பள்ளியில் பயிலும்
. பையனும் கற்றிடும் நாளில்
அடிப்படை நலன்கள் அகமுறத் தேடி
. அலுவலில் திளைத்திடும் நாளில்
கொடுந்தமிழ்ப் பேச்சும் செந்தமிழ் எழுத்தும்
. கொள்வமேல் தமிழ்மொழிக் குயர்வே! 

17. கவிஞர் அய்யப்பன்
பைந்தமிழ் மொழியைப் பயின்றிட மொழியப் 
பைந்தமிழ்ச் சோலையே நாடு 
செந்தமிழ்ச் சிறப்பை நாடொறும் நாடச்
செந்தமிழ்ச் சேயெனப் பாடு 
வந்துடன் கலக்கு மயல்மொழி தன்னை 
வழக்கிலும் தவிர்த்திடு வீரே !
தந்திரம் கொண்ட தமிழினை யாரும் 
தலையினில் ஏத்திடு வாரே!

18. கவிஞர் மஞ்சுளா ரமேஷ்
பாரினி லுலவும் பலமொழி அவையும்
பாங்குறத் தனித்துமே யியங்கா
சீரிய தமிழோ வென்றுமே யிங்குச்
சிறப்புறத் தனித்துமே யியங்கும்
ஊரினில் மக்கள் பலருமே யுயர்ந்த
உவப்புடை மொழியினை மறந்து
வேரிலாப் பிறமொ ழியினையும் கலக்கும்
வேதனை நிலையினி வேண்டா!

19. கவிஞர் இரா.கண்ணண்
மதுவென மயக்கம் மணிபிறழ் நடையும்
மனிதனை மொழியினைச் சிதைக்கும்
முதுதமிழ் மொழியில் முழங்கிடு வோமே
முள்ளெனப் பிறமொழி ஏனோ!
புதுப்புது கவிதை படைத்திடும் போதும்
புனைந்திடல் மரபினில் சரியே!
அதுதமிழ் போற்றும் அருங்கட னாகும்
அமுதினில் கலப்பதோ நஞ்சே...!

20. கவிஞர் வள்ளிமுத்து
பூவினும் மென்மை புயலெனும் தன்மை
பொன்னெழில் பொலிவுறும் மேன்மை
காவினில் மலர்ந்த கவியெழில் பூவாய்க்
காற்றினில் கவிந்திடும் வாசம்
மாவினும் நீக்கி மனிதனாய் மாற்றும்
மலர்நெறி அறங்களும் கோடி
நாவினில் தமிழோ நாளதும் படிக்க
நம்மொழி வளர்ந்திடும் பாரீர்!

21. கவிஞர் அரவிந்த் கார்த்திக்
பிறமொழி் தமிழில் கலந்துமே வந்து
பிணியினைத் தருவது மேனோ?
சிறப்புடைத் தமிழை உவப்புறப் பேசச்
சிந்தனை செய்வது மேனோ?
திறமுடை மொழியைத் திறம்படக் கற்றால்
தினமுமே வாழ்வினில் நலமாம்
மறந்துமே கலவா மத்தினைக் கொண்டால்
மாண்புறுந் தமிழ்மொழி யதுவே.

22. கவிஞர் சாமி சுரேஷ்
பூக்களில் அனிச்சம் புள்ளிலே அசுணம்
பாக்களில் மரபென மலர்ந்து
வாக்கினில் வாய்மை வாழ்வினில் நேர்மை
வாய்த்திட உறுபொருள் தெளிந்து
தேக்கிய நெறியில் அறமிகுப் புகுத்தித்
தெள்ளிய இனமென நம்மை
ஆக்கிய மொழியில் அமிழ்திணைத் தமிழில்
அயல்மொழி கலந்திடல் பிழையே!. 

23. கவிஞர் நிர்மலா சிவராச சிங்கம்
பிறமொழி நாட்டில் காலடி பதித்த
பின்னரே அருமையை அறிந்தேன்
திறமையில் சிறந்த எம்மொழி கன்னல் 
தீந்தமிழ் மொழியெனக் கண்டேன் 
அறநெறி சொல்லும் இலக்கியம் தமிழின் 
அகவையை அழகென இயம்பும் 
உறவுகள் சேர்ந்து செம்மொழிச் சிறப்பை 
உலகெலாம் பரப்பிடு வோமே!

24. கவிஞர் ஃபக்ருதின்
தமிழதன் பேறு தேர்ந்தவர் வேறு
சழக்குகக ளின்றியே ஏற்பார்.
அமிழ்தினை அருந்தி அடுத்ததும் அருந்தி
அமிழ்தென வேறெதை அழைப்பார்?
உமிகளும் நெல்லும் ஒன்றிலை என்றே
உணர்ந்தவர் கருத்தினை உரைப்பார்
அமைதியாய்த் தமிழை ஆக்குக வாழ்வில்
அரளுமே பிறமொழி தாமே.

25. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
நம்மொழி அதுதான் தமிழ்மொழி இன்றும் 
நாளையும் உலகினை ஆளும்
செம்மொழி ஆன நம்மொழி அன்றோ
செழுமையாய் உள்ளது தமிழா
எம்மொழி இருப்பின் அதற்கிது முன்மை
என்பதில் பெருமிதம் கொள்வோம்
இம்மொழி ஒன்றே தூய்மொழி யதனை
எண்ணிலும் எழுத்திலும் காணே

26. கவிஞர் உமாபாலன் சின்னதுரை
தம்மொழி தம்மைத் தகுமொழி யென்றே
தரணியிற் புகழ்வரே யாரும்
எம்மொழி தானும் எழிலுடைத் தாகும்
எம்மொழி யென்றிடு வோர்பால் 
நம்மொழி தம்மின் நயமது தேர்ந்தார்
நமக்கதன் நயவுரை செய்வார்
செம்மொழி யென்னும் சிறப்பது கண்டார்
செப்பினர் செந்தமிழ் என்றே!

27. கவிஞர் சேலம் பாலன்
செந்தமி ழொன்றே செம்மொழி களிலே
சிறந்தநல் தூய்மொழி அறிக
இந்தநல் உலகில் பிறமொழி கலக்கா
தியங்கிடும் தனிமொழி புரிக
வந்தவர் போற்றி வழுத்தினர் தமிழை
மணித்தமிழ்ப் பெருமைகள் தரமே
எந்தநாள் எனினும் நம்தமிழ் நல்ல
இன்மொழி வாழ்ந்திடும் நன்றே

28. கவிஞர் க. அர.இராசேந்திரன்
தூய்மையோ டிருக்க நம்மொழி தன்னைத் 
தூமொழி யாக்கமுஞ் செய்து 
தாய்மையோ டணைத்துச் செம்மொழி தன்னைச் 
தண்மொழி யாக்கியுந் தந்து 
வாய்மையோ டிணைத்துத் தொன்மொழி தன்னை 
வாய்மொழி யாக்கியு மிங்குத்
தூய்மையோ டதனை யின்னுமே சிறப்பாய்த் 
தொடர்ந்திட வோங்கிடுந் தமிழே...!

29. கவிஞர் சுந்தரி தேவன்
கலப்பினை யென்றும் வெறுத்ததை நீக்கிக் 
கணக்கென வாழ்திடும் மனிதன் 
கலப்பினை விடுத்துச் செருக்கென மிடுக்கிக் 
களமதை நாடியே வாழ்வான்
கலப்பிலை சாதியில் சிந்தையில் மறைகள் 
கலப்பதும் சாத்திய மில்லை 
கலந்துதான் மொழிவான் அயல்மொழி யதனைக்
கவித்தமி ழொலித்துத்தான் மன்னே
★★★

1 comment:

Ram said...

எழுசீர் விருத்தம் விளம் மா விளம் மா விளம் விளம் மா என்ற ஒரே வாய்பாடுடைய வகை எல்லோரும் பரவலாகப் பயன்படுத்துவதொன்றா?

--ராம் ராமகிருஷ்ணன்