பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

20 Apr 2017

#பாட்டியற்றுக_தொகுப்பு 15 (கட்டளைக் கலித்துறை)


அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:15 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
இந்தப் பயிற்சியில் பிழை திருத்தம் செய்து உதவிய "பைந்தமிழ்ச் செம்மல்கள் " உள்ளிட்ட அனைருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பதிவை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வசதியாக நம்முடைய பைந்தமிழ்ச் சோலையின் வலைப்பூப் பக்கத்திலும் 
http://painthamizhchsolai.blogspot.com/?m=0
பகுதியிலும் பதியப்பட்டுள்ளது. அனைத்துப் பயிற்சிப் பாடல்களின் தொகுப்பும் அதில் பதியப்படும். 
பார்ப்பதற்கு ஒரு புத்தகத்தின் வழி யாப்பு இலக்கணம் கற்பது போல் இருக்கும்.
நன்றி.!
***** ***** *****
. பாட்டியற்றுக,--15
(கட்டளைக் கலித்துறை)
1. கவிஞர் புனிதா கணேசன்
பூமியிற் சேரும் புகழும் நிலைத்திடப் போவதில்லை 
பூமியில் வந்த பொருளும் தொடர்ந்திடப் போவதில்லை
பூமியின் வாழ்விலே பூவையர் காட்டிடும் போகமஃதில் 
பூமியி னீசனின் பொற்றாள் மறந்துயான் போயினேனே! 

2. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்
நிலையாமை ஒன்றே நிலையான தென்று நினைவிருத்த
மலைபோன்ற துன்பம் வரினும் கலங்கா மனமதுவும்
குலையாது வாய்விட் டலறாது கண்டாயே கொண்டகொள்கை
நிலைபிற ழாது நெடுநாள் உலவலாம் நீணிலத்தே!

3. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
எண்ணிலா மாந்த ரெடுக்கும் பிறப்பினி லேற்றமிலை . 
மண்ணினில் தோன்றும் மழலையர் யாக்கையும் மாண்டிடுமே . 
வண்ணமாய் நிற்கும் வயதினில் மூத்தவர் வாழ்வதில்லை 
திண்ணமாய்ச் சொல்வேன் திடமுடன் நீக்குக தீவினையே !

4. கவிஞர் அழகர் சண்முகம்
கல்லாய் இறுகிக் கருணை மறந்து கடமைவிட்டு
நில்லாப் பொருளை நிறுத்தத் துடித்து நிறமிழந்து
பொல்லாப் பழியைப் பொதியாய்ச் சுமக்கும் பொறுப்பிலிகாள்
எல்லா மொருநாள் எளிதில் மறைந்துமை ஏய்த்திடுமே!

5. கவிஞர் தர்மா
மண்ணி லுதித்திடும் யாவரு மோர்நாள் மரித்திடுவர் 
கண்ணாய்க் கருதிடும் கட்டுடல் மேனியைக் கைவிடுவர் 
கண்டதைக் கேட்டதைக் காலம் விரைவில் கலைத்திடுமெம் 
வண்டமிழ் மட்டுமிவ் வையகம் போற்றிட வாழ்ந்திடுமே..

6. கவிஞர் பரமநாதன் கணேசு
மாடிகள் கட்டி மகிழ்வொடு வாழ்ந்து களித்திருப்பீர்
கோடிகள் நாளெல்லாம் கொட்டிடும் பேறினைக் கொண்டிருப்பீர்
வாடினோர் வாழவே வாரி வழங்கிட வந்திடுவீர்
ஓடி யவையு மொருநாளில் போனால் எனநினைத்தே!

7. கவிஞர் சீனிவாச கோபாலன் மாதவன்
ஐந்தோ அதன்பத்தோ, ஐந்நூறோ முச்சுழி யாயிரமோ ?
எந்தப் பொழுதிலும், எம்மோ டிருக்கு மெனநினைக்கு
மிந்த 'நிலைக்காத' எண்ணங்க ளில்லாம லெந்தனுள்ளம்,
வந்ததை வைத்து, வளத்துடன் வாழ்ந்து, மகிழ்ந்திடுமே

8. கவிஞர் விவேக்பாரதி
கொண்ட வுயிரைக் கொடுமைசெய் காலனுங் கொண்டுசெல்வான் 
கண்ட வுடலது காட்டிற் தனியே கனன்றெரியும் 
பண்டைய செல்வம் பலசெல வாற்றின் பறந்துவிடும் 
மண்ணில் நிரந்தர மாவ தெதுமிலை மானுடமே !

9. கவிஞர் சோமுசக்தி
மெய்யாய் மிதக்கும் கனவினில் மேனிதான் மேதினியில்
உய்யா தறிதல் உணர்த்துமோ உள்ளுறை உண்மையைத்தான்
பொய்யாகப் போனதோ புண்களோ ஐம்பொறிப் போமுணர்வும்
அய்யா வளியா லணையுஞ் சுடரோ அவணிவாழ்வே !

10. கவிஞர் சுசீந்திரன் சுப்பிரமணியன்
காமக் குரோதத்தில் கன்றி களிவெறி கொண்டலைந்து
சாமக் குறத்தியர் சல்லா பமதில்தான் சஞ்சரித்துப்
பாமணப் பாவலர் பட்டய வார்த்தைகள் புண்படுத்தி
வாமன புத்தியில் வாழ்வோரே நீளுமோ வாழ்க்கையாமே.

11. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து
மெய்யோ டுயிரை யறிதலே மேன்மை மனிதனாமே!
மெய்யோ டுயிரு மிணைதல் உயிர்மெய் எழுத்துமாமே!
மெய்ப்பொ ருளையு மறிந்து முணர்தலும் ஞானமாமே!
மெய்யோ டுவிட்டு முயிரும் பிரிதலே தெய்வமாமே!

12. கவிஞர் இதயம் விஜய்
வன்சொற்கள் பேசாது வாழ்வினில் தாயை வணங்கிடுநீ...
வன்மம் தொலைத்து வறியோர்க்கு வள்ளலாய் வாழ்ந்திடுநீ...
பொன்னில் மயங்கிப் புவிதனில் சேர்த்த பொருட்களோடு
இன்னுயிர்த் தேகத்தை இம்மண்ணிற் கென்றும் இரையிடாதே......

13. கவிஞர் சிதம்பரம் சு.மோகன்
வாதம் பலசெய்து வாணாளைப் போக்கி வழியறியாக்
காதம் பலவோடிக் காலத்தை யீங்குக் கழித்திளைத்தேன்
பூதலம் ஏத்துநற் புண்ணியா என்றன் புலனழிந்தேன்
பாதகம் நீக்கப் பணிகின்றேன் நின்றன் பதமருளே!

14. கவிஞர் பொன்.பசுபதி
ஈட்டிடும் செல்வங்க(ள்) ஏராள மாயினு(ம்) ஏகிடுமே
தேட்ட முடனே யுடல்நலம் தேற்றினும் தேய்வுருமே
கூட்டினை விட்டுயிர் போகுமுன்
பாகிலும் கோலமுடன்
நாட்டுவோ(ம்) அன்பையே நம்மனத் துள்ளே நலம்பெறவே.

15. கவிஞர் நியாஸ் அசன் மரைக்காயர்
களத்தினில் கூத்திலே கூட்டம் முடியக் கலைவதைப்போல் 
வளமை வறுமை வருவதும் போவதும் வாய்த்திடும்காண் 
இளமை இனிமையும் இன்சுவை யாவும் இழந்திடும்காண் 
அளவிலா நற்செயல் அன்புமிவ் வாழ்வின் அடித்தளமே

16. கவிஞர் மஞ்சுளா ரமேஷ்
கண்ணில் படுகிற காட்சிகள் யாவையும் காலமெல்லாம்
மண்ணில் நலமாய் மகிழ்வாய் மலர்ந்திடா மானிடனே
மண்ணி லுதித்த மனித ரனைவரும் மாண்புறவே
திண்ணமாய் நாளுமே தீவினை போக்குத் திடம்பெறவே.

17. கவிஞர் வள்ளிமுத்து
சொந்தமும் பந்தமும் சுற்றமும் சேர்ந்துதான் சூழ்ந்திருக்கும்
விந்தைக் கதைகளும் வெற்றியும் போற்றியே வீற்றிருக்கும்
சிந்தை தடுமாறிச் செல்வ வளங்களும் சீரழிந்தால்
மந்தை மறிகளாய் மக்கள் விலகுவர் மாற்றிலையே.!

18. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரப் அலி
வாழ்வு நிலைக்காது வாணாளும் நீளாது வாழுகையில் 
தாழ்த லகற்றித் தருமமே செய்வீர் தரணியிலே 
காழ்ப்புணர் வின்றிக் கடத்துவீர் வாழ்வைக் கனிமுகமாய் 
மாழ்குத லுண்மை மனத்திற் குழப்பமேன் மானிடரே

19. கவிஞர் சியாமளா ராஜசேகர்
ஆட்டம் முடிந்ததும் ஆறடி மண்ணுள் அடங்கியபின் 
ஈட்டிய செல்வம் எதுவும் வருமோ இதையுணர்வாய் !
கோட்டை பிடிப்பினும் கூட்டைப் பிரிந்தவர் கொள்வதெது ?
பாட்டை யறிந்தால் பதப்படு முள்ளமும் பண்புடனே !

20. கவிஞர் பாலு கோவிந்தராசன்
மண்ணில் பிறந்த மனிதர் மறைந்திட மண்ணிடமே !
விண்ணில் கலந்திடும் விந்தை உயிருமே விண்ணிடமே !
கண்ணில் தெரிந்திடும் காட்சிகள் பொய்யெனக் கண்டிடுமே !
நண்ணும் உடலும் நசிந்திடும் நாள்பட நாறிடுமே.!

21. கவிஞர் குருநாதன் ரமணி
புறக்கண் உலகிது பொய்யென் றுணர்ந்த பொழுதடைவில்
அறம்பொருள் இன்பமென் றாயின் நிலைத்த அமைதியில்லை
அறநான் கிறுதி அறுதியாம் வீடுபே றாகநிற்கும்
துறவு நெறியினில் துய்க்கும் மனத்திறை தோன்றிடுமே.!

22. கவிஞர் நாகினி கருப்பசாமி
அதிர்வாக நாளும் அமைந்திடும் வம்புக ளாயிரத்தால்
உதிர்வாகும் மாந்தர் உதிரமும் கொட்டிட ஊனமெனக்
கதிர்வாழ்வு சாய்ந்து கருகிடும் நீரிட்ட கங்குகண்டே
எதிர்ப்போரும் சொல்வர் எழிலும் நிலையற்ற ஏந்தலென்றே!

23. கவிஞர் சங்கத்தமிழ்வேள் தமிழடிமை
பொன்னோ பொருளோ புவியோ பகட்டோ புலப்படுமோ? 
மன்னரோ மண்ணுழு(ம்) மாந்தரோ எல்லா மனிதருக்கும் 
இன்னும் புரிபடா இன்ன லிதுவாம் இகபரத்துள் 
மின்னும் அறிவுதான் மண்மிசை வாழ்வொரு மின்மினியே!! 

24. கவிஞர் இரா.கண்ணன்
கண்ணியம் கொன்று கடமை தவறிக் கனிவுமின்றி
எண்ணிய வாறிங் கிருந்திடும் வாழ்வும் இனித்திடுமோ
மண்ணில் எதுவும் மறையா திருமோ! மகிழ்வுடனே
புண்ணிய மொன்றே புகழாய் நிலைக்கும் புவிதனிலே!

25. கவிஞர் சேலம் பாலன்
ஒன்றி மகிழவும் ஓர்ந்துரை யாடவும் ஊக்கமிலார்
நன்றுண வுண்ணவும் நாட்ட மிலாமலே நாடியோடி
என்றுமே இங்கே எதுவும் நிலைக்கா தெனஅறிந்தும்
நன்று பொருளை நனிமிகச் சேர்ப்பவர் நன்றிலாரே !

26. கவிஞர் சுந்தரி தேவன்
நித்தம் உழலும் நிலையிலா வாழ்வை நிதமுணர்ந்தும்
சித்தம் முழுதும் சுயமே நிறைந்து சுழலுபவர் 
தத்தம் உளமோ தமரவர் விட்டே தவிதவிக்கும் 
பித்த மகற்றிப் புவியினைக் காப்பாய் பரம்பொருளே.

27. கவிஞர் சாமி சுரேஷ்
அழகும் வனப்பும் அரும்பொருள் யாவுமே அந்திமத்தில்
தொழுத ழுதாலும் தொடர வருவதில் தோழியர்காள்! 
பழகும் நொடிதனில் பாசம் மிகுந்திடும் பண்பினைசெய்
ஒழுகு முயிரோடும் ஓர்பொ ழுதும்வாய்க்கும் முற்பொழுதே!.

28. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
செல்வம் நிலையிலை சீரை உணர்ந்துமே சேகரிப்போம்!
செல்வம் நிலைத்திட நாளும் சிவனையே சிந்தனைசெய்!
செல்வத் தலையது சென்னி அமர்ந்தது சித்துருவாம்!
செல்வ மொழியதைச் சொல்லி
மகிழவும் சீர்கழலே

29. கவிஞர் நிர்மலா சிவராச சிங்கம்.
சேர்த்திட்ட பொன்னும் பொருளும் மரணத்தில் சேர்ந்திடுமோ
பார்த்திடும் போதே கரத்தி லிருந்து பறிகொடுப்பீர்
நேர்த்தியாய்க் காட்டிய நேசமும் போகும் நெடுந்தொலைவு
மூர்ச்சையாய்ப் போனபின் தேடிய தெல்லாம் முடங்கிடுமே!
★★★

No comments: