பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

21 Apr 2017

#பாட்டியற்றுக_தொகுப்பு 20 ( சந்தக் கலிவிருத்தம்)


அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:20 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
இந்தப் பயிற்சியில் பிழை திருத்தம் செய்து உதவிய "பைந்தமிழ்ச் செம்மல்கள் " உள்ளிட்ட அனைருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பதிவை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வசதியாக நம்முடைய பைந்தமிழ்ச் சோலையின் வலைப்பூப் பக்கத்திலும் 
http://painthamizhchsolai.blogspot.com/?m=0
பகுதியிலும் பதியப்பட்டுள்ளது. அனைத்துப் பயிற்சிப் பாடல்களின் தொகுப்பும் அதில் பதியப்படும். 
பார்ப்பதற்கு ஒரு புத்தகத்தின் வழி யாப்பு இலக்கணம் கற்பது போல் இருக்கும்.
நன்றி.!
***** ***** *****
. பாட்டியற்றுக,--20
( சந்தக் கலிவிருத்தம்)
1.கவிஞர் ரவீந்தின் காளிமுத்து.
மண்ணோடெரு மண்ணாகிட வந்தேரிட வயலில்
மண்ணோடொரு செடிநட்டிட வளமோடினி மரமும்
எந்நாளிலும் வளமோங்கிட இனிதேவரு மண்ணில்
நன்மாக்கனி வந்தெய்திட நலமாகிடு மன்றோ.!

2. கவிஞர் வள்ளிமுத்து
கொடியோயிடை நடையோபிடி கொலுமோவிழி மீனோ
வடிவோசிலை முகமோபிறை வனமோகினி தானோ
முடியோமுகி லுதடோகனி முகையோநகை தேனோ
அடியேயுனை கவியேசெய அடங்காதது மேனோ.!?

3. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்
எல்லாமுன தன்றோவர மெல்லாமரு ளெந்தாய்
நல்லானுனை என்னெஞ்சினி(ல்) நன்றாகநி னைக்க
வல்லேனல னென்றாகிலு(ம்) வந்தேயரு(ள்) தந்தே
பொல்லாவினை தன்னாலது போகும்படி செய்வாய்!

4. கவிஞர் தங்கமணி சுகுமாரன்
மணியோவிழி அணையாதொரு மெழுகேறிய சுடரோ
பணிவோயிது தலைதொங்கிய பனிபூமல ரேனோ
தணியாதது இளநெஞ்சினு(ள்) தணலென்றொறு யெண்ணம்
துணிவாறிட உடையேனினி துணியென்றெனை வுடுத்து! 

5. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
என்னேயிது புதிதாயிது இலையேயிது பழமை 
பண்ணேயிது பாவானது பண்டேயமு துளது 
எண்ணேயித னடியானது இன்சொல்லிது வளமை 
தொண்டேநனி செய்வோமொரு தொணியாலிதை உரையே

6. கவிஞர் விவேக்பாரதி
அன்றோர்தின மென்வாசலி லழகாயொரு பெண்ணாள் 
மின்னேரொளி தன்மேனியி(ல்) மிகையாகிட வந்தாள் 
என்னேயெழி(ல்) முன்போயவ ளெவளோவென நோக்கின் 
அன்னாளென துள்ளாடிடு மவளாம்சிவ சக்தி !

7. கவிஞர் சியாமளா ராஜசேகர்
உண்ணாமுலை யம்மாவுனை உள்ளூரநி னைந்தேன்
அண்ணாமலை வந்தேயுனை அன்போடுது தித்தேன்
வெண்டாமரை மலராலுனை மெய்யோடுப ணிந்தும்
மண்மீதினி லென்வேதனை மறையாதது மேனோ?

8. கவிஞர் பொன்.பசுபதி
எந்நோ(ய்)தரு மிடரேகிட இனியும்வழி யுளதோ
எனறா(ய்)மொழி தனிலேவரு மினிதாமதை மிகவே
என்நாவினி லுறவேசெய வெழுவா(ய்)வடி வேலா
இன்றேயெனை நலமேவிட இசைவா(ய்)முரு கோனே? 

9.கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
உன்காதலை ஏற்பேனென உணராவகை என்றும் 
மென்பாதமு மெழிலாயெனை மெலிதாயினி வருடும் 
பன்னாளிது கண்ணேவரு பதியேவென நன்றாம் 
பின்னாளொளி நின்றாடிடு பிசகாதிரு அன்பே !!!!

10. கவிஞர் தர்மா
கல்லாரினி இல்லாநிலை காண்போமறி வாலே..
இல்லார்களு மில்லாநிலை இங்காக்கிடு வோமே.. 
எல்லாம்விதி என்றேநமை ஏமாற்றிடு மாட்கள், 
பொல்லாரென நன்றாயறி புவிமீதினி லின்றே...!

11. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரப் அலி
அலையாயெழு (ம்) கடலாயெனி லடியேஉன தெண்ணம்
அலைபாயவு மலைமோதவு மழுவேனடி யுன்னால்
நிலையேயிலை நினைவாலுனை நினையாத்தின முண்டோ
கலையாதிரு ! கனியேயிரு கரமேந்திட வருவேன்

12. கவிஞர் நியாஸ் அசன் மரைக்காயர்
மறையேதரு மிறையேயுனை மறவாமுறை தொழுவேன் 
முறையாயுனை இறைவாவென முகநோக்கிட விழைவேன் 
குறையாயுள பலவேதனை குணமாகிட ருள்வாய்
நிறையாகிட நிலையாகிய நெறிகாட்டிய ருள்வாய்

13. கவிஞர் சாமி சுரேஷ்
முன்தோன்றிய எம்மாந்தரை முடமாக்கிய ரெவரும்
நன்றாயினி நடமாடிட நாம்பார்ப்பது முறையோ
வென்றேமுனி இன்றேவொளி மங்காமலு ழைப்போம்
இன்னாவினி இங்கேவர வியலாபடி மாய்ப்போம்!.

14. கவிஞர் மஞ்சுளா ரமேஷ்
நலமேயினி விளைவேவர நிதமேயெனை அன்பால் 
வளமேதரு சுகமேபெற வழியாயினி நாளும் 
குலமோவரு தயவாலொளி குணமேயென இங்கே 
உலகேவழி மலரோவிழி உலராவகை வாழ்வாய்.

15. கவிஞர் நாகினி கருப்பசாமி
மனமாறுத லுறவாடிட மதியாதவ ராலே
தினமாயிர வகையாகவு மிகையாகிய வாதே
தனமேயென அழகாயொரு தனிநாடக ஊரே
நனவாகிய திசைமாறிட நடமாடிட லாமோ! 

16. கவிஞர் அரவிந்த் கார்த்திக்
இன்றேபல நலமேவர இனிதாயுழை அன்பே
நன்றேபல விளைவே தர நலமேயினி விளையும்
வென்றேவர வினையேபுரி விண்மேவிடு வாயே
சென்றேயதை நிதமேநனி செயலேபல புரிவாய்

17. கவிஞர் புனிதா கணேசன்
முறையாயுன தடியேதிரு முறையாலவை பாடி 
மறையாநினை வினிதேகொள மகிழாமன மாற 
முறையேதரு முனதாமறு முகமேயதை நாட 
மறைநான்கினை அறியேனுனை மறவேனொரு போதே! 

18. கவிஞர் குருநாதன் ரமணி
கண்ணின்வழி கதிரோனொளி காணும்பொரு ளூட்டும்
பண்ணின்வழி ஓர்பாடலும் பரமன்புகழ் நாட்டும்
மண்ணில்வளர் பயிர்யாவையும் வளமாய்ச்சுவை கூட்டும்
எண்ணில்வளர் இழிவாயுரு மிதுமானிடர் கூட்டம்!

19. கவிஞர் பரமநாதன் கணேசு
பெண்ணேயுனை மறவேனடி பிரிவோதுய ராமே 
உன்னாலுயி ரிதுவோதின(ம்) ஒளிதானுறு மாமே
கண்ணேயிரு விழியோவது கருவண்டென வாடக்
கொண்டாடிட வருவாயடி கொளவேகளி பெறவே!

20. கவிஞர்.கட்டிக்குளம் ஓ.சுந்தரமூர்த்தி
கண்ணேயினி வாடாதிரு கம்பன்தரு பாவே !
பெண்ணாகிய சுடரேயினி பேகன்தரு கொடையே !
மண்ணாயினி உயிர்காத்திடு மழகேதவ மணியே !
விண்ணாகிய தெளிநீரென வீழ்வேனுன தடியே !

21. கவிஞர் நிர்மலா சிவலாச சிங்கம்
வங்கக்கட லலைதன்னொலி வண்ணக்கவி பாட
அங்கங்குள கட(ல்)மீனவை அழகோடுட னாட
அங்கேயிர வுப்போதினி லயராவிழி யோடு
சிங்கத்தினை யொப்பாரவ(ர்) சிறுமீனவ ராமே!

22. கவிஞர் பாலு கோவிந்தராஜன்
தங்கத்தமி ழின்சீருறு சந்தக்கவி யாலே
எங்கும்தமி ழேயென்றிட இன்பத்தமி ழாலே
சங்கத்தமி ழின்மாண்பொடு தந்தக்கவி யாலே
சிங்கத்தமி ழைக்காத்திடு சிந்தைக்கொளு வாயே.

23. கவிஞர் இரா.கண்ணன்
தோழாயெழு விடியல்பெறு துணிவோடினி நாளும்
வீழாதொரு போதும்மன(ம்) விழுதாகிடு(ம்) வீரம்
சூழும்பகை ஓடும்வகை சூதும்கலை யாதோ? 
வாழும்பொழு தாளும்நிலை வரமாய்வரு மினியே

24. கவிஞர் அர. விவேகானந்தன்
உண்மையெனு முறவேயென உறவாடிட வருவாய்!
கண்ணாயெனு முன்பேநிறை கவியாயரு(ள்) தருவாய்!
மண்பாடிடு(ம்) வளமேவர மனமேதரு வாயே
கண்தேடிடு மொளியாய்வரு கருணைபுரி வாயே!

25. கவிஞர் வீ.சீராளன்
பொல்லாவிதி இல்லாதொரு பொழுதாகினு முண்டேல்
வெல்லும்வரை துள்ளித்திரி வினைபோயிடு மன்றே
கல்லுள்ளொளி கண்டாலுளி கன்னிச்சிலை ஆகும் 
இல்லாததை எழிலாக்கிடு  இதயக்கறை போகும் !

26. கவிஞர் நடராஜ் மெய்யன்
கொல்லாவிழி கொலைவாளது குழைபூநகை எய்யும் 
வில்லோஇலை விழியோபல விதமாயது பெய்யும் 
பொல்லாமழை வயதோடொரு புதுசாதனை செய்யும் 
சொல்லாமொழி சுவையோஅது சுகவேதனை நெய்யும் . 

27. கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி
பொய்யாயின பொய்யாயின பொருளாயின வென்றே
மெய்யாயின; மெய்யாயின அரியாயின கொன்றே
பொய்யாயின பொய்யாயின நரியாயின நின்றே
செய்யாதன செய்யாதன செய்தாயின வின்றே! 

28. கவிஞர் அழகர் சண்முகம்
இல்லாரினை எளியோரென இகழாரொடு நின்றே
எல்லோரையு மொன்றாயிணை எழிலாகிட வையம்
நல்லோரெவ ரென்றெயறி நாளும்மதி யாலே
வல்லோனடி வந்தேதொழு வளமேதரு வானே

29. கவிஞர் சோமுசக்தி
இலையேயென இரவோர்வர இயலாநிலை கூறா
வளையாநிலை வழுவாநிலை வசமாய்வரல் வேண்டும்
கலையாநிலை கல்லாய்வர கனியாயுரு மாற்றும்
விளைவாயரு வினையாலணை வீண்சொல்லற வென்றே!

30. கவிஞர் சுந்தரி தேவன்
வடிவேலவ யெனநாடிட வரமேதரு முருகா 
கொடியேறிய வழியேகிட குணமேகொடு குமரா 
படியேறிட நலமேவிளை பணிவேனதை யருள 
விடிவேதரு துணையேயுனை வினையேயறு தொழுதேன்!
★★★

No comments: