பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

21 Apr 2017

#பாட்டியற்றுக_தொகுப்பு 18 (கலிவிருத்தம்)


அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:18 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
இந்தப் பயிற்சியில் பிழை திருத்தம் செய்து உதவிய "பைந்தமிழ்ச் செம்மல்கள் " உள்ளிட்ட அனைருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பதிவை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வசதியாக நம்முடைய பைந்தமிழ்ச் சோலையின் வலைப்பூப் பக்கத்திலும் 
http://painthamizhchsolai.blogspot.com/?m=0
பகுதியிலும் பதியப்பட்டுள்ளது. அனைத்துப் பயிற்சிப் பாடல்களின் தொகுப்பும் அதில் பதியப்படும். 
பார்ப்பதற்கு ஒரு புத்தகத்தின் வழி யாப்பு இலக்கணம் கற்பது போல் இருக்கும்.
நன்றி.!
***** ***** *****
. பாட்டியற்றுக,--18
(கலிவிருத்தம்)
1. கவிஞர் புனிதா கணேசன்
வான ளாவிடு வானர மானவன்
வான மேகியே மானமுங் காத்தவன்
மானத் தேயுயர் மாமயில் சீதையின்
மோன மேயதை முற்றும ழித்தவன்!

2. கவிஞர் விவேக்பாரதி
பூமி யெங்கணும் புத்துயிர் ஆக்கிடல் 
ஏமம் நல்கியென் றென்றுமே காத்திடல்
ஊமை யானபின் ஊனைய ழித்திடல் 
சாமி யென்பவர் செய்தொழில் ஆகுமே !

3. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
ஆதி நீயடி அந்தமும் நானடி 
பாதி என்னுடல் பாதியு முன்னுடல் 
சேதி சொல்லியும் சேர்ந்திடத் தூண்டியும்
தீது நீங்கிடத் தீண்டிடு மின்பமே 1

4. கவிஞர் ரமேஷ் மாதவன்
பொங்கும் ஆழியாய்ப் பொன்னுட லோங்கிட,ச்
சங்கும் ஆழியும் சார்ங்கமு மோங்கிட,
மங்க லம்தரும் வாளது மோங்கிட,
எங்கும் வாமனன் இன்னுடல் காண்மினே!

5. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்
நன்று செய்தவர் நன்மையே காணுவர் 
என்று ரைத்தனர் எம்முடை முன்னவர்
இன்று மிவ்வுரை இவ்வுல கந்தனில்
நின்றி ருப்பதை நெஞ்சமு ணர்த்துமே!

6. கவிஞர் சுசீந்தீரன் சுப்பிரமணியன்
காணும் புள்ளதில் காதலைக் கண்டதும்
நாணும் நாணலில் நாட்டியம் பெற்றதும்
பேணும் யானையின் பாசமும் பார்த்ததும்
பூணும் யாவையும் பூமியில் கற்றதே!.

7. கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி
வாய்க்க ரும்பது வாய்தவக் கோளது
வாய்த்தி கழ்ந்திடு மாமழை மாமலை
வாய்க்கொ ழுந்தது மாமணி வாய்த்திரு
வாய்ச்சிந் துந்தமிழ் வானெனுஞ் சோலையே!

8. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து
பாடு பட்டதில் பல்வித தானியம்
நாடு பெற்றிட நல்கிய ஏரரும்
நாடு விட்டதும் நல்லுயிர் போயின
மாடும் மற்றவை மண்ணிலும் மூடியே.

9. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரப் அலி
வாடி வாழ்பவர் வாழ்விலே யெம்மிடைத் 
தேடி யேயவர் தேவைக லைந்திடக்
கோடி புண்ணியம் கொண்டநற் காரியம் 
கூடி யாற்றிடக் கூடுவோம் தோழரே!

10. கவிஞர் தர்மா
ஏறு பூட்டியே இங்குழைத் தோர்களும் 
சோறு மின்றியே சோர்ந்தனர் பாரினில் 
வேறு பாடுகள் விட்டொழித் தொன்றினால் 
கூறு போட்டிடும் கூட்டமு(ம்) அஞ்சுமே...

11. கவிஞர் மதுரா
எண்ண மோங்கிட ஏற்றமும் கிட்டிடும்
திண்ணம் வேண்டுமே தீரராய் வாழ்ந்திட
வண்ணம் கூட்டிடும் வாழ்வினில் நேசமே
மண்ணில் மாந்தராய் மாண்புடன் வாழ்வமே....

12. கவிஞர் கோவிந்தராசன் பாலு.
பூக்கள் சிந்திடும் புன்னகை பூத்திடப்
பாக்கள் பாடிடப் பல்பொருள் தந்திடக்
காக்கும். வேலவன் கந்தனை வேண்டிட
வாக்கும் ஓங்கிடும் வாழ்க்கையும் ஏற்றமே.!

13. கவிஞர் சீனிவாச கோபாலன் மாதவன்
அன்று, வெண்ணையை ஐயனே வாயினில்
தின்னக் கண்டவள் சீற்றமாய்க் கேட்டிட,
நன்று காட்டினை நாவினில் யாவையும்
கன்று மேய்த்திடுங் கார்நிறக் கண்ணனே ! 

14. கவிஞர் பரமநாதன் கணேசு
நெஞ்சில் நஞ்சினை நித்தமும் தேக்கியே
கொஞ்சி யாடுவார் கூடியி ருந்துபின் 
வஞ்சம் செய்துனை வைதிடும் போதிலும் 
அஞ்சி டாதெழு அன்புற நாளுமே!

15. கவிஞர் பொன்.பசுபதி
உண்மை சொல்வதால் ஓங்கிடும் நற்புகழ்
நன்மை செய்வதால் நல்லதே நேர்ந்திடும்
புன்மை செய்திடின் பொன்றிடும் வாழ்க்கையே
எண்ணிப் பார்த்தபின் ஏற்றதைச் செய்கவே! 

16. கவிஞர் நியாஸ் அசன் மரைக்காயர்
நாற்று நட்டிடும் நற்பணி யேற்றிடு
மாற்ற மென்பது மண்ணிலே வந்திட
ஏற்றங் கொண்டிட ஏரினைக் கொண்டிடு
தோற்றிங் கோடிடும் தொல்லைகள் கண்டிடு

17. கவிஞர் நாகினி கருப்பசாமி
தங்கும் வீரமாய்த் தாவிடும் காளையின்
அங்கம் குத்திட ஆட்படும் காளையும்
மங்கி டாத்திறன் மாப்புகழ் காட்டிடப்
பொங்கும் பண்டிகை பொங்கலோ பொங்கலே! .. 

18. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
நல்ல சொல்லது நன்மைகள் தந்திடும்!
அல்லல் போக்கிடும் அன்பகம் சேர்த்திடும்!
இல்லை எங்குமே இத்தகை வாழ்க்கையும்!
எல்லை கூடிடல் இன்புற வைக்குமே!

19. கவிஞர் ஃபக்ருதின்
நன்றி என்றிடல் நல்லவர் பண்பது
என்று சொல்கிற ஏற்புடை நற்றமிழ்த்
தொண்டு செய்திடும் தூயவர் நற்பணி
கண்டு பண்புடன் கூறுவம் நன்றியை

20. கவிஞர் நடராஜ் மெய்யன்
தேடி னேனொரு தேவதை பூமுகம் 
நாடி னேனிள நாயகி யாள்வரம் 
கூடி னேன்மனக் கோயிலில் தேர்வலம்
வாடி னேனவள் வாசலில் தோரணம்.

21. கவிஞர் இரா.கண்ணன்
ஏழும் என்னிலே இவ்வகைப் பாடலே
சூழும் சோலையே சொல்லிடும் தேடலே
ஆளு மென்னையே அன்னையும் போலவே
வாழும் நாளுமே வாகையும் சூடுமே!

22. கவிஞர் அய்யப்பன்
தூய மாதவன் தூணினுள் நின்றதும் 
தாயும் தாயெனத் தண்ணமு தீந்ததும்
தாயு மானவன் தாயென வந்ததும் 
தாயின் அன்புதான் தாமெனச் சொல்லவே

23. கவிஞர் சேலம்பாலன்
போட்டிக் கேபலர் பூசலைக் கூட்டினும்
வீட்டி லுள்ளவர் விட்டிட வேண்டினும்
நாட்டி நின்றிட நன்றுழைத் தால்மிக
வாட்டம் தீருமே மாப்புகழ் சேருமே!

24. கவிஞர் சியாமளா ராஜசேகர்
வண்ணப் பூக்களும் வாசலில் கொஞ்சிடும்
துள்ளும் மான்களும் சொக்கிட வைத்திடும்
உள்ள மள்ளிடும் ஒவ்வொரு கோலமும் 
புள்ளி வைத்தவள் போட்டிட நாளுமே!

25. கவிஞர் நிர்மலா சிவராச சிங்கம்
வாடி நிற்பதால் மாறுமோ உன்துயர்
நாடி நன்செய நல்லதே வந்திடும்
கூடி வாழ்வதால் கோடிகள் கொட்டுமே
ஓடி யாடிட உன்புகழ் ஓங்குமே !

26. கவிஞர் குருநாதன் ரமணி
தேடும் யாவையும் தேர்ந்திலன் இம்மையில்
நாடும் நன்மைகள் நட்டமே சேர்த்தன
கூடும் சுற்றமும் கொள்கையில் லாதென
ஓடும் வாழ்விதன் உள்ளிருப் பென்னவோ?

27. கவிஞர் சாமி சுரேஷ்
ஓங்கு நற்றமிழ் நாட்டினில் நீவிரும்
தீங்கு செய்திடுந் திட்டமே செய்கிறீர்
தேங்கு மெம்மினம் தீயென ஆனபின்
வீங்கு மிந்தியம் வீழ்ந்துதான் போகுமே!

28. கவிஞர் சோமுசக்தி
வேலை யில்சுகம் வேண்டுவ தாயினும்
சோலை யில்மலர் சூடுவ தாயினும்
சாலை யில்நடந் தோடுவ தாயினும்
காலை யேயெழல் கைத்துணை யாகுமே !

29. கவிஞர் சுந்தரி தேவன்
பாடிப் போற்றிடப் பாவைநீ வந்திடு
கூடி வேண்டுவோம் கோதையர் நாளுமே 
நாடி நங்கையர் நல்லது பெற்றிடத்
தேடி னோமுனைத் தேவியைக் காணவே.

30. கவிஞர் அழகர் சண்முகம்
பாரைக் காத்திடப் பண்புமா றாமலே
ஏரைத் தோள்களில் ஏந்திடும் தோழரை
ஊரைக் காத்தருள் ஊட்டிடும் தெய்வமும்
தேரை விட்டுடன் தேடியே வந்திடும்!

31. கவிஞர் மஞ்சுளா ரமேஷ்
வாடி நின்றிட வானமும் பார்த்திடத்
தேடி வந்திடும் தேவதை வான்மழை . 
நாடி நாமுமே நட்புடன் காட்டினை 
ஓடி அன்பினால் ஒர்ந்திடப் பேணுவோம் ! 

32. கவிஞர் அரவிந்த் கார்த்திக்
கல்வி தன்னையே கற்றிட வாழ்வினில்
பல்கி யோங்குமே பன்முக ஆற்றலும்
செல்வ மென்றுமே சேர்ந்திடும் நம்மிடம்
நல்கும் கல்வியை நாடியே கற்பமே! 
★★★

No comments: