பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

20 Apr 2017

#பாட்டியற்றுக_தொகுப்பு - 14 (எண்சீர் ஆசிரிய விருத்தம்)


அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:14 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
இந்தப் பயிற்சியில் பிழை திருத்தம் செய்து உதவிய "பைந்தமிழ்ச் செம்மல்கள் " உள்ளிட்ட அனைருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பதிவை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வசதியாக நம்முடைய பைந்தமிழ்ச் சோலையின் வலைப்பூப் பக்கத்திலும் 
http://painthamizhchsolai.blogspot.com/?m=0
பகுதியிலும் பதியப்பட்டுள்ளது. அனைத்துப் பயிற்சிப் பாடல்களின் தொகுப்பும் அதில் பதியப்படும். 
பார்ப்பதற்கு ஒரு புத்தகத்தின் வழி யாப்பு இலக்கணம் கற்பது போல் இருக்கும்.
நன்றி.!
***** ***** *****
. பாட்டியற்றுக,--14
(எண்சீர் ஆசிரிய விருத்தம்)
1. கவிஞர் சுந்தரராசன் 
பாரதத்தின் சாரதியாம் பாரதியின் பாட்டைப் 
படித்தவுடன் வீரமதே  பாய்ந்தோடும் நெஞ்சில்! 
பாரதத்தில் பார்த்தனுக்குச் சாரதிகண் ணன்பா
படிக்கையிலே பத்தியினால் பாய்ந்துவரும் கண்ணீர்!
பாரதிரு மோர்சபதம் பாஞ்சாலி செய்தாள்!
படைத்ததனைப் நாட்டினர்க்குப் பாய்ச்சினனே வேகம்!
பாரதியின் தீங்குயிலோ பாடிடும்வே தாந்தம்!
பரவுமிசைப் பாவலன்றாள் பாடிடுமென் பாவே!

2. கவிஞர் கோவிந்தராஜன் பாலு
உன்னால் முடியும் உயர்ந்திடலாம் தம்பி 
உழைப்பே உயர்வாய் உணர்ந்திட்டால் நம்பி.
என்னால் எளிதாக எப்படியும் என்றும் 
எழிலாய் இனிதாக எப்போதும் செய்தே.
தன்னால் முடியும் தயவேது மின்றித் 
தடைகள் உடைக்கத் தயக்கம்கொள் ளாதே.
சொன்னால் புரிந்து சுழற்றிட்டால் சொற்கள் 
சொலல்வல்லன் நீயென்பார் சொல்வேந்தர் நன்றே.

3. கவிஞர் தர்மா
இரக்கமுங் கொண்டிங் கிருப்பவரை என்றும் 
இழிவாகத் தானே இவ்வுலகில் காண்பர்.. 
தரணியும் போற்றத் தமிழென்றும் வாழத்
தலைகுனி வின்றித் தமிழரின்கை யோங்க., 
வரத்தினைத் தந்து வழிநடத்த இங்கே 
வழிகாட்டி யாவார் வடிவேலன் தானே ... 
கரங்கூப்பித் தானுனைக் கண்டிடவே வந்தோம் 
கருணைகொள்ள வேண்டும் கதிர்வேலா நீயே..

4. கவிஞர் நாகினி கருப்பசாமி
எங்கெங்கு காணினும் ஏமாற்றும் நச்சு
.. எதிரிகளின் கூடார ஏணியென்றுப் போகும்
தங்கமான நேரமும் தள்ளாட்டம் காணும்
.. தரணியில் வேதனை தாங்கிடவும் உண்மை
பங்கமின்றி இன்புறவும் பாரதியின் பாடல்
.. பரிமளிக்கும் கோலம் பகலிரவாய் வாட்டும்
அங்கலாய்ப்பு நீக்கிடும் அக்கினியாய் மாறி
... அறக்கவியாய்க் காட்டிடும் ஆற்றொழுக்காய் நின்றே! 

5. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து
வர்தா சுழலின் வரவயுமே எண்ணி 
வருந்திடும் நம்முடைய மக்களையும் காக்க
சர்வ அமைப்பும் இணைந்தங்கே சென்று 
தலத்தில் முனைப்பாய்த் தயாராக நின்று 
புர்காவைப் போர்த்திய போர்வீரன் போலப் 
புகுந்தன மேகமும் போரிடவே பாய்தாம் 
பொர்மாக்கள் அச்சிலும் ஏற்றிவெளி யிட்டார் 
பொதுமக்கள் பார்த்துக் கதிகலங்கி னாரே!

6. கவிஞர் ஜாய்சக்தி
பாரதியே உன்னுடைய பாடல்கள் கற்றால்
பயம்ஓடும் கோழைக்கும் பாய்ந்துவரும் வீரம்
தாரணியில் உன்கவிக்குத் தக்கநிகர் ஏது?
தனிமானம் மிக்கவனே தாய்நாட்டிற் காகப் 
பூரணமாய்ப் பாடிவைத்தாய் புத்தமுதப் பாக்கள்
புகழ்ந்ததனைக் கற்றானோம் போதையுற்றே ஈப்போல்
சாரமெல்லாம் நாடு தமிழ்வாழத் தந்தாய்
சமுதாயப் புத்திரனே சாமியடா எந்தாய்! 

7. கவிஞர் நியாஸ் அசன் மரக்காயர்
காணும் படைப்பெல்லாம் கண்குளிரச் செய்யும் 
கணக்கொன்றைத் தந்தே கவர்ந்திழுக்கக் கூடும் 
வாணம் முதற்கொண்டு மாயங்கள் செய்யும்
வசீகரிக்கும் வண்ணம் விதியொன்றை வீசும் 
நாணல் முதலாய் நயங்கொண்ட பூக்கள் 
நளினமாய்ப் பார்த்து நலமுடனே பூக்கும்
கோணம் எதுவென்று கூறிடலாம் இங்குக்
குழப்பம் எதுவும் குறைத்திடலாம் நன்று

8. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரப் அலி
காலமெலாம் கண்ணிமைபோல் காத்தவளே தாயே 
கடைசிவரை கண்கலங்கிக் காடுவரை செல்ல 
மூலமென நானிருந்தேன் மூத்தவன்தா னுன்றன் 
முகமலரக் காணலையே ! மூர்க்கத்தில் நானோ 
கோலலுக்கும் காரணமாய்க் கோடிஇன்னல் தந்தே 
கொடும்பாவி யானேனே கொல்லுதம்மா நெஞ்சம் 
ஓலமிட்டு வாடுகிறே னோர்முறைநீ வந்தால் 
ஒருவார்த்தை சொல்லிடுவே னோர்தலுற்றே னானே !

9. கவிஞர் பரமநாதன் கணேசு
பொல்லாத் துயரெலாம் போய்த்தொலைய நாளை
புகழும் பதவியும் பூத்திடுமாம் வாழ்வில்
எல்லையே யில்லா இன்பங்கள் சேரும்
இடும்பை அனைத்தும் இருப்பிடமே யின்றிச்
சொல்லாமல் ஓடியே தூரத்தான் போகும்
துறக்கமே வந்து சுகம்கோடி தந்து
நல்லதைச் செய்யுமென்ற நம்பிக்கை கொள்வாய் 
நலத்தோடு நல்வாழ்வும் நாடிவரும் தானே!

10. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
கண்ணே அமுதே ! கனிச்சுவையே தேனே .
கதியெனவே நின்றுனைக் காதலிப்பேன் நானே !
பெண்ணே அழகே !பெருமைமிகு சீரே .
பெருந்தெய்வம் பேசாதோ பேரெழிலே நீயே !
விண்ணே மதியே !வியன்பொருளே மானே !
விடிவெள்ளி நீயன்றோ விந்தைகளும் செய்வாய் .
பண்ணே தமிழே !பசுமைகீதம் பாடு 
பரவசமாய் நேசிப்பேன் பாசத்தா லன்பே !

11. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
முத்து மொழியன்றோ முன்னவனின் அன்பு
முதலென்றுச் செப்பிடுவார் சான்றோரே தேர்ந்து 
சத்தும் அதுவன்றோ சாதிக்கச் சொல்லும்
சமரசமும் செய்திடத் தூண்டிவிடும் ஒன்றாம் 
சித்தம் தெளிந்திடவும் சீர்மைதரும் என்பார்
சிரமதில் நிற்குமிடம் முக்கியமே அன்றோ 
பத்தியுடன் கொண்டிடுவோம் பாரளிக்கும் இத்தைப்
பகர்ந்திடவும் வாழ்வாகும் வீடாகும் தானே

12. கவிஞர் குருநாதன் ரமணி
புதியன என்றே புகுந்தவைநம் வாழ்வின்
. புகலிட மாகும் பொலிவினிலே வாழ்வோம்
பதிவன பேச்சாய்ப் பகர்தலுடன் நாளில்
. பகிர்தல் இணைய வலைப்பக்கப் பாங்காம்
மதியிற் சிறந்த வராய்முன்னோர் தந்த
. மரபுகள் எல்லாம் மறைவாழ்வைக் கொள்வோம் 
புதியன ஆழலின் புற்றெனச்சி தைத்தே
. புயல்தான் பழமை புகுத்தியதின் னாளே.

13. கவிஞர் பொன்.பசுபதி
என்னுயிர் நீயே எனதுடலும் நீயே
எனதுளே தோன்றிடு(ம்) எண்ணமெலாம் நீயே!
என்னன்புத் தாயுட(ன்) எந்தையும்நீ தானே
இருளு(ம்) ஒளியு(ம்) இரண்டுமேநீ தானே!
விண்மேல் வெளியும் விரிகடலும் காற்றும்
விளங்குகிற மண்ணுடன் வெந்தழலும் நீயே!
இன்னுயிர்க் கெல்லாம் இறைவாநீ தானே
இலங்கும் துணையாம் எமையாலும் கோவே! 

14. கவிஞர் மஞ்சுளா ரமேஷ்
உண்மை யுழைப்பை யுலகிற்குத் தந்தால்
உளமே களிக்கு முயர்வதுவும் கிட்டும்
தன்னல மெல்லாந் தவிடுபொடி யாகும்
தரணியும் நாளும் தழைத்துமேயி ருக்கும்
வண்மைகள் தங்கும் வளந்தனையே சேர்க்கும்
வழிமுறை யாகிய வாழ்வதுவும் வாய்க்கும்
நன்னெறி கொண்டு நலமுடனே வாழ்ந்தால்
நலமாய் மனிதம் நலிவின்றி வாழும்! 

15. கவிஞர் அரவிந்த் கார்த்திக்
அன்பினால் நாளும் அகிலத்தை வெல்வோம் 
அதனால் தழைக்குமே யன்புநிலை தானே
என்றுமே வாழ்வினி லேற்றத்தை யெட்ட
எளிமை வழியதை யெந்நாளு மேற்போம்
கன்னலா மன்பினைக் காத்திட்டால் நாளும்
கருணையே யென்றுமே காசினியில் தங்கும்
இன்னலை நீக்கியே இன்பத்தைச் சேர்க்கும்
இனிமையும் தங்கிடும் ஈகையுமே பொங்கும்

16. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்
குன்றினை யேந்திக் குலந்தன்னைக் காத்தாய்
குடியெமைக் காத்திடக் குன்றேந்த நின்றாய்
கன்றுக ளோடே கறவையினம் மேய்த்தாய்
கடுஞ்சகடம் கொண்டேநீ கன்றுதனைக் கொன்றாய்
கொன்றாய் முதலையைக் கோட்டானைக் கென்றால்
கொடுத்தாய் மரணம் கொடுங்களிற்றொன் றுக்கே!
என்றா னறிவன் இறைவனேயுன் எண்ணம்
இயலாதே வானத் திமையோர்க்கும் இங்கே!

17. கவிஞர் இரா.கண்ணன்
கவிதைக் கணைகளால் காலத்தை வென்றான்
களங்க ளமைத்தவன் காசினியில் நின்றான்
புவியிலே பாட்டில் புரட்சியினைச் செய்தான் 
பொதுமைத் தமிழாலே போருக்கும் சென்றான்
செவிக்கி னிமையாகச் செந்தமிழைத் தந்தான்
சிறந்திட மானுடம் சீர்திருத்தம் செய்தான்
அவிழும் இதழ்போல் அழகுடனே நெய்தான்
அகிலமது போற்றும் அவன்செய்த பாட்டை

18. கவிஞர் சேலம் பாலன்
அன்னைத் தமிழை அகத்தினிலே வைத்தே
அனைவரும் போற்ற அரும்பணிகள் செய்தோர்
என்றும் பலர்போற்ற ஈங்குபுகழ்ப் பெற்றார்
இயல்பாயிந் நாளிலே இன்தமிழைப் பேச
நன்று படித்தவரோ நாட்டத்தோ டில்லை
நமதுமொழிச் சீர்சிறப்பை நன்றறிய எண்ணார்
என்றுமொரு மன்றத்தும் ஏறிடவும் மாட்டார்
இவர்வாழ்வோ எச்சிறப்பும் இல்லாத வாழ்வே!

19. கவிஞர் வள்ளிமுத்து
வலைசாயா மீன்கள் வயல்களிலே துள்ளும்
மயல்கொண்ட கொக்குகளும் வாயாலே அள்ளும்
தலைசாயா மஞ்சளுடன் தாமரையும் கொஞ்சும்
தளிர்நுனியில் நின்றயர்ந்து தண்பனியும் துஞ்சும்
குலைசாயா நாற்றில் குருவிகளும் ஆடும்
குடுகுடுவென் றோடிக் குரங்குமரந் தாவும்
நிலைசாயா மெல்லியற்கை நீண்டகாலம் வேண்டும்
நிலவுயிர்கள் வாழ்க நெடுங்காலம் யாண்டும்.!

20. கவிஞர் புனிதா கணேசன்
காலைக் கதிரவன் கண்விழிக்கும் காற்றில் 
கலந்திசை காதில் களிப்புடனே பாடும் 
காலைக் குருவிகள் கத்துதலோ கேட்டுக் 
கடுதியிற் சேவல்தான் கொக்கரக்கோ கூவும் 
காலை புலரக் கதிர்களேகும் அங்குக்
கசிந்த பனியும் கரைந்தொழுகி ஓடும் 
காலம் விரைந்து விழித்திருக்க இன்னோர்
கனிவாம் பொழுதும் கடிதாகி ஏகும்!

21. கவிஞர் சியாமளா ராஜசேகர்
ஆற்றி லலைகள் தவழ்ந்துவிளை யாடி 
அழகாய்க் கரையை வருடிவிட்டுப் போகும் !
காற்றி லசையும் மரக்கிளையின் பூவில் 
கமழும் மணமும் மனம்நிறைத்துச் செல்லும் !
சேற்றில் கமலம் கதிரவனைக் கண்டு 
சிவந்து சிரித்தே இதழ்விரித்துப் பூக்கும் !
நாற்றின் நடுவே வளைந்தோடும் தென்றல் 
நலமாய் வளர நவிலும்நல் வாழ்த்தே !

22. கவிஞர் சுசீந்திரன் சுப்பிரமணியன்
ஆளவந்தான் அன்றென்னை ஆண்டிடத்தான் வந்தான்
அருவியாய் அன்பெனும் நீர்காட்டி வந்தான்.
மீளவிட்டான் ஊரதைச் சொல்லித்தான் வந்தான்
மிளிர்முகத்தில்புன்னகை செய்திடத்தான் செய்தான்
காளையவன் தான்நல்ல கட்டழகன் தானாம்
களவுசெய்து பார்க்கவே வந்திருக்கி றானாம்
தாளமவன் தான்தாகம் தீர்க்கின்ற தீர்த்தத் 
தடாகமவன் தான்தாலி வாங்கப்போ னானே!

23. கவிஞர் இதயம் விஜய்
கண்ணில் வழிந்தோடும் கண்ணீர்கள் நின்று 
கனவுகளு டைந்திடும் சோகத்தைக் கேட்கும்...
கண்ணாய் வளர்ந்திடும் கிள்ளைகள்தான் அன்று 
கருவிழிகள் நீந்திடும்கோ லத்தைக்கொ டுக்கும்...
கண்ணாலே பேசிடும் கண்ணாத்தாள் சிந்தும் 
கருணையில்தான் வீசுகின்ற முல்லைகளின் வாசம்...
கண்ணாண அன்னைக்குக் கோபத்தால் வேண்டா
கருணையின் பாசத்தால் பூசித்தல் நன்றே......

24. கவிஞர் சோமுசக்தி
ஏத்தா புயலே ஏனிந்த ஆட்டம் 
இயல்புவாழ்க்கை சீர்குலைய இப்படியா காட்டல்? 
போத்தா உனது பெரியக்கா நாடா
பொறுமையுடன் போனாளே  புரிகிறதா வர்தா
ஆத்தா மரங்கள் அடுக்கடுக்காய் வீழ்ந்தே
அழிவுதரு மின்வெட்டால் ஆட்தொடர்பும் போச்சே
கூத்தால் குலுங்கக் குறைபடுமோ சென்னை
குவலயத்தில் பீனிக்ஸ்போல் கூர்ந்தெழுதல் பாரே !

25. கவிஞர் சீனிவாச கோபாலன் மாதவன்
முண்டாசு கட்டியும், முன்வயதில் நற்பா
...முழுதும் படைத்தே, மகிழ்வளித்த சுப்பு,
திண்டாடிக் கொண்டிருந்த தீயநாளில், பண்னால்,
...திருநாட்டின் இன்னல்கள் தீர்ந்தோடச் செய்தாய்!
மண்ணின் மொழிகள் மனத்தினிலே வாங்கி,
...மதியுட் புகுத்தி மதுசுவைப்'பா' தந்து,
கண்போன்ற தாய்மொழியைக் கற்கண்டுச் சொல்லால்,
...கவிபடைத் திவ்வுலகில் காண்பித்தாய் நீயே !

26. கவிஞர் நிர்மலா சிவராச சிங்கம்
உறவுகள் என்றுமே வாழ்விற்கு நல்ல. 
உறுதுணையென் றாகி உதவிடுவார் நன்கு 
புறங்கூறித் தீயதைச் செய்திடாது நன்றே 
புதுமைகளைச் செய்தே பெருமையினைத் தேடி 
அறங்களைச் செய்து கடமையினைச் செய்க. 
அனுதினமும் கண்ணியமாய் வாழ்ந்திடுவாய் நல்ல 
திறன்களைத் தேடியும் கல்வியறி வையும் 
திறம்படப் பெற்று மகிழ்வாக வாழி!
★★★

No comments: