பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

21 Apr 2017

#பாட்டியற்றுக_தொகுப்பு 24 (வஞ்சித் தாழிசை)


அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:24 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
இந்தப் பயிற்சியில் பிழை திருத்தம் செய்து உதவிய "பைந்தமிழ்ச் செம்மல்கள் " உள்ளிட்ட அனைருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பதிவை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வசதியாக நம்முடைய பைந்தமிழ்ச் சோலையின் வலைப்பூப் பக்கத்திலும் 
http://painthamizhchsolai.blogspot.com/?m=0
பகுதியிலும் பதியப்பட்டுள்ளது. அனைத்துப் பயிற்சிப் பாடல்களின் தொகுப்பும் அதில் பதியப்படும். 
பார்ப்பதற்கு ஒரு புத்தகத்தின் வழி யாப்பு இலக்கணம் கற்பது போல் இருக்கும்.
நன்றி.!
***** ***** *****
. பாட்டியற்றுக,--24
(வஞ்சித் தாழிசை)
தலைப்பு : அரசு சிறப்பு
1. கவிஞர் விவேக்பாரதி
உழவு வீழ்ந்திடில் 
இழவு உறுதியாம் ! 
முழங்கும் பேரொலி 
வழங்கிக் கூடுவோம் !
மண்ணைக் காப்பதோ 
கண்ணைக் காப்பதாம் ! 
எண்ணம் திண்ணமாய்க் 
கொண்டு கூடுவோம் !
வாடி வாசலைக் 
கூடி வென்றனம் ! 
தேடி இனிப்பிழை 
சாடக் கூடுவோம் !

2. கவிஞர் ரகுநாதன் ரங்கசாமி
அரசியல் பிழைத்தவர்க் 
அறமெமன் எனஉணர்
திறம்நிறைத் தகவினர் 
மறமுறித் துயர்வரே
அறம்பயில் அரசியல் 
கரம்படல் வரமெனக்
கருதுவோர் களம்படப் 
பொருதுவர் கெலிப்பரே
உடனுறை உறவினர் 
கடனெனப் பணிபவர்
மடமையில ்உழல்பவர் 
தடமிலா தொழிவரே! 

3. கவிஞர் அரவிந்த் கார்த்திக்
அழிவினைத் தடுத்திடும்
செழிப்பினை அளித்திடும்
இழிவினைத் தகர்த்திடும்
பழியிலா அரசுமே
வளத்தினைக் காத்திடும்
உளத்தினைப் பேணிடும்
குளத்தினை வெட்டிடும்
தளர்விலா அரசுமே
குடிகளைப் பேணிடும்
மடிதனைப் போக்கிடும்
விடியலை நோக்கிடும்
முடிவிலா அரசுமே! 

4. கவிஞர் மஞ்சுளா ரமேஷ்
திருவினைப் பெருக்கிடும்
செருபகை யழித்திடும்
மருள்தனைப் போக்கிடும்
பெருமையி னரசுமே!
உழவினைப் பெருக்கிடும்
சழக்கினைத் தடுத்திடும்
பழமையைப் போற்றிடும்
அழகிய வரசுமே!
ஏழ்மையைப் போக்கிடும்
ஊழ்வினை மாற்றிடும்
வாழ்வினை யளித்திடும்
தாழ்விலா வரசுமே!

5. கவிஞர் பரமநாதன் கணேசு
வழிநூறு படைத்திங்குத் 
தொழிலாளர் பணமீட்டி
எழில்கொண்டு மகிழ்வாட 
வழிவிட்டால் சிறப்பிங்கே!
அறம்காக்கும் செயலுற்று
மறம்காத்து நிலம்காத்து
நிறைவான வாழ்வீந்தே
உறவாடல் சிறப்பிங்கே!
அலைகின்றார் உணவின்றித்
தொலையட்டும் இதுவென்று
பலம்கொண்ட அரசொன்று
நிலைகொண்டால் சிறப்பிங்கே

6. கவிஞர் அர.விவேகானந்தன்
அன்பு மொழியதில்
வன்மை விதைத்துமே
தன்னை வளர்த்திடின்
இன்மை யோங்குமே!
வறுமை போக்கிடாச்
சிறுமை யாக்கிடின்
பொறுமை நீங்கிடும்
கருமை யோங்குமே!
நன்மை வேண்டிடின்
தொன்மை நீண்டிடும்
உண்மை ஆட்சியும்
மண்ணி லோங்குமே!

7. கவிஞர் குருநாதன் ரமணி
உழுவோர்தொழில் உயிர்மூச்செனப்
பழுதில்நிலம் பகிர்ந்தேயவர்
அழுந்தும்துயர் அகற்றும்கடன் 
தழுவிடுமெனில் தகையரசே.
இலவசம்தரா தேயெளியவர்
நலம்பேணலை நாடுவதெனப்
பலவாய்த்துறை பணிவாய்ப்புகள்
வலம்வரச்செயின் வல்லரசே.
அரசியல்நெறி அறமோங்கவும்
அரசியல்துறை அகமோங்கவும்
கரவூட்டினைக் கைவிடலெனும்
உரமோங்கிடில் உயரரசே.

8. கவிஞர் பொன்.பசுபதி
மண்ணின் வளமதைக்
கண்ணின் மணியென
எண்ணி செயல்பட(ல்)
என்றும் நலம்தரும்.
ஊழல் பெருகிடின்
தாழும் வளமையே
பாழும் பழியது
வீழின் நலமுறும்.
எண்ணி இதையெலாம்
மண்ணின் அரசியல்
திண்மை யொடுசெயல்
பண்ணின் சிறப்பதே.

9. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
உழைத்திடும் வாழ்வினில் 
அழைத்தநல் வான்மழை 
தழைத்திடச் செந்நெலும் 
விழைந்திடும் வேளையே !
இனிவரு மரசுமே 
நனிமிகு முழவினால் 
தனியொரு தொழிலினால் 
கனிந்திடும் வேளையே !
அரசுடன் சேர்ந்துமே 
மரமதை வளர்த்திடின் 
வரப்புடன் வயல்களும் 
பரவிடும் வேளையே !

10. கவிஞர் நிர்மலா சிவராச சிங்கம்
எவ்வினத் தோரும்
செவ்வனே வாழ
எவ்வர சுண்டோ
அவ்வர சேவா!
கல்வியைப் போற்றி 
நல்லன செய்தால்
வல்லவர் போற்றும் 
நல்லர சன்றோ
அன்னியம் இன்றி 
இன்னுயிர் காக்கும் 
நன்னயம் செய்யும் 
என்பதே அரசு

11. கவிஞர் நாகினி கருப்பசாமி
நீர்வளம் சரிசெய்து
ஊர்மெச்ச ஆள்வதற்குக்
கார்காலம் வருகவெனப்
பார்த்திருத்தல் நல்லரசோ!
வற்றாத கடல்நீரைப்
பெற்றிங்கு குடிநீராய்க்
கற்பித்துச் செயலாக்காத்
தற்குறியும் நல்லரசோ!
கார்கால மழைநீரைப்
பார்த்திங்குச் சேமிக்கும்
ஆர்வத்தை ஊட்டாமல்
மார்தட்டல் நல்லரசோ! 

12. கவிஞர் கோவிந்தராஜன் பாலு
கல்லாமை நீக்கி
இல்லாமை போக்கி
வல்லாட்சி மலர்வதே
நல்லாட்சிச் சிறப்பு.
பெருகட்டும் உழவும்
உருகட்டும் இரும்பு
கருகட்டும் வறுமை.
தருவதே சிறப்பு.
ஏற்றம் பெறவே
மாற்றும் சட்டம்.
வேற்றுமை நீக்கப்
போற்றுவதே சிறப்பு.

13. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்
கல்வியைத் தருவதிலும்
அல்லவை தவிர்ப்பதிலும்
வல்லதாய் இருக்குமெனில்
நல்லவோர் அரசதுவே!
தீயவை ஒறுப்பதிலே
ஓயுதல் மறுத்திடுமாம்
தாயென அணைத்திடுமாம்
நோயிலா அரசதுவே!
மக்களை அரவணைத்துத்
தக்கவா றுடனுதவப்
புக்குமோர் அரசுமெட்டுத்
திக்கிலும் புகழ்பெறுமே!

14. கவிஞர் நெடுவை இரவீந்திரன்
பழமையும் நிலைத்திடக்
கழனியும் செழித்திட
உழவனும் உயர்ந்திட
வழிசெயும் அரசனே
வளந்தரும் பலரசம்
இளநீரும் தருபவன்
வளத்துடன் விலைதனை
அளித்திடு அரசனே
அயலனின் விடரசம்
பயந்திடும் தமிழகம்
நயந்துமே ஒழித்திடு
துயரற அரசனே

15. கவிஞர் சீனிவாச கோபாலன் மாதவன்
அரசனா யானவன்
தரத்துட னாள்வதால்
கரமெலாங் கோத்திட
முரசொலி சேர்க்குமே !
குலமெலாங் கூடிடப் 
பலமெலா மோங்கிட 
நிலமெலாங் காத்திட
நலமெலாஞ் சேர்க்குமே !
சினமெலா(ம்) நீங்கிட 
மனமெலா(ம்) பூத்திட 
வனமெலா மோங்கிட
தனமெலாஞ் சேர்க்குமே !

16. கவினப்பன் தமிழன்
பொருபகை வருபிணி
திருடர்கள் அரசியல்
முரடுகள் அடக்கித்தன்
வரைவாழ்வ தரசே.
பிறந்திடுங் குழந்தைகள்
சிறந்துதம் வாழ்வினில்
திறமெலாம் பெறமுழுத்
திறம்பெய்வ திறையே
நல்வினை மேவிட
வல்வினை யாற்றிநற்
கல்வியை யூன்றியே
செல்வது கோவே

17. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
மக்களைக் காத்திட
அக்கறை காட்டிடும் 
சிக்கன அரசது
பக்குவம் மேற்கொளும்
சிறந்தொரு அரசது
அறவழி செயல்படும்
உறவுகள் நிலைத்திடும்
இறப்பினைக் குறைத்திடும்
கல்வியைப் அளித்திடும்
அல்லலைப் போக்கிடும்
நல்லதை செய்திடும்
வல்லமை அரசதே

18. கவிஞர் சோமுசக்தி
நலன்புரி வினைகளும்
நிலந்தரும் வளங்களும்
பலன்தரும் வகையினில்
துலக்கிடும் அரசே !
வளமிகு காடுகள்
களம்புகு மாந்தரால்
தளர்வுறா வண்ணம்
தளமிடும் அரசே !
மக்கள் நலனே
எக்கணம் நினையின்
சிக்கலே இல்லை
திக்கெலாம் முரசே !

19. கவிஞர் சியாமளா ராஜசேகர்
புதுசட்டத் துணையோடு 
மதுவிற்கத் தடைபோட்டுப் 
பொதுமக்கள் நலங்காப்பின் 
அதுவேநல் லரசாகும் !
பணம்பண்ணத் துடிக்காமல் 
மணற்கொள்ளை யடிக்காமல் 
வணக்கத்திற் குரியோர்கள்
இணைந்தால்நல் லரசாகும் !
விவசாயம் தனைப்பேணி 
உவப்போடு தினம்வாழத்
தவறாமல் வழிகாட்டும் 
சுவடேநல் லரசாகும் !

20. கவிஞர் நியாஸ் அசன் மரைக்காயர்
ஆற்றலுடை படைதனையும்
ஏற்றமுடைக் குடிதனையும்
தோற்றுவிடா அரணதையும்
ஏற்றதுவே வல்லரசு
கொடையதனைப் போற்றுதலும்
நடையதனைக் காத்திடலும் 
தடையதனைப் போக்கிடலும்
நடைமுறையில் நல்லரசு
அறனறிந்து குடிகாத்து
முறையறிந்து பொருளீட்டி
மறையறிந்து நீதிசெயும்
திறனறிந்தால் சிறப்பரசு

21. கவிஞர் நடராஜ் மெய்யன்
சுதந்திர நாட்டினில் 
நிதம்பல போட்டிகள் 
மதமென நீள்வதைப்
பதமுடன் நீக்கணும்
புதர்தனில் வீழ்ந்துதான் 
அதர்மமும் மாண்டிட 
விதவித மாகவும் 
உதவிகள் செய்யணும்
கதர்துணி கட்டிடும் 
முதல்வரின் வாழ்விலும் 
மிதந்திடும் ஏழ்மையும் 
சதங்கையில் ஆடணும் 

22. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரப் அலி
எல்லோரு மினிதுவக்க 
இல்லாமை யழிந்தொழிய 
வல்லான்கை இணைத்தபடி 
நல்லாட்சி புரியரசே !
அள்ளாமல் அரசுடைமை 
கள்வாரைக் களைந்தெடுத்துக் 
கொள்ளாரின் குணமறிந்தே 
கொள்ளாட்சி இனி ! யரசே !
இல்லாரி னிழிநிலையை 
இல்லாம லழித்தொழித்து 
நல்லாங்காய்க் குவிவதுவே 
எல்லோர்தம் மிசையரசே !

23. கவிஞர் சாமிசுரேஷ்
கடைக்கோடி மனிதர்க்கும்
தடையில்லா மருத்துவமும்
இடைநில்லா மின்தொடர்பும்
முடையின்றி தருமரசு.
படைவந்தே சூழ்ந்தபோதில்
சடைஎருமை ஆகிடாது
புடைச்சூழக் குடிக்காக்கும்
குடைக்கொண்ட குடியரசு.
எடையெல்லாம் மிகக்குறைந்து
விடைதேடும் உழவனுக்குக்
கடைப்பல்லும் வீழ்வதற்குள்
மடைதிறக்கும் மாவரசு.

24. கவிஞர் தர்மா
உழவரைப் போற்றியே 
கழனியைக் காத்திடும் 
இழப்பினை ஒழிப்பதை 
வழக்கமாய்க் கொண்டிடும்..!
மக்களை மூடரும், 
சிக்கலில் தள்ளினால் 
அக்கணம் தந்திடும் 
தக்கதோர் தண்டனை...!
இல்லையா மென்பதை 
இல்லையென் றாக்கிடும் 
வல்லமை கொண்டதே 
நல்லதோர் ஆட்சியாம்...!

25. கவிஞர் புனிதா கணேசு
பெண்ணவள் பெருமையாய் 
மண்ணிலே மகிமையாய்க் 
கண்ணெனக் கவினுற 
நண்ணிடும் நல்லரசே
கல்வியில் கலைகளில் 
பல்கலை பயிற்றலில் 
வல்லமை வழங்கிடும் 
நல்லதோர் வல்லரசே
உணவிடும் உழவரின் 
பணமுடை போக்கியே 
இணக்கமாய் ஈய்ந்திட
வணங்கும் வளரரசே! 

26. கவிஞர் இரா.கண்ணன்
மக்கள்நலன் போற்றும்படி
திக்கும்புகழ் பரவும்படி
அக்கறையுட னாற்றும்பணி
எக்காலுமே மக்களரசு
உழுவோர்நிலை உயரும்வகை
பழுதாயெதும் நேராவகை
விழுதாய்வளம் வளரும்வகை
விழிப்போடினி விளங்குமரசு
துடிப்போடினி அமைப்போமினி
நடிப்பார்செயல் ஒழியும்படி
விடியல்வரும் விரைவாயினி
படித்தோரினி ஆளுமரசு...!
★★★

No comments: