பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

20 Apr 2017

#பாட்டியற்றுக_தொகுப்பு - 8 (ஆசிரியத் தாழிசை)


அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:8 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
இந்தப் பயிற்சியில் பிழை திருத்தம் செய்து உதவிய "பைந்தமிழ்ச் செம்மல்கள் " உள்ளிட்ட அனைருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பதிவை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வசதியாக நம்முடைய பைந்தமிழ்ச் சோலையின் வலைப்பூப் பக்கத்திலும் painthamizhchsolai blogspot.com பகுதியிலும் பதியப்பட்டுள்ளது. அனைத்துப் பயிற்சிப் பாடல்களின் தொகுப்பும் அதில் பதியப்படும். 
பார்ப்பதற்கு ஒரு புத்தகத்தின் வழி யாப்பு இலக்கணம் கற்பது போல் இருக்கும்.
நன்றி.!
***** ***** *****
. பாட்டியற்றுக,--8
(ஆசிரியத் தாழிசை)
1. கவிஞர் குருநாதன் ரமணி
உவப்பக் கூடிநான் உள்ளப் பிரிந்தார்
செவிக்குண வாகச் செந்தமிழ் உரைத்தார்
எவர்க்கிது கிட்டுதல் எளிதென் றாமே?
தமரெனக் கொள்ளும் தகவினர் கூட்டில்
தமிழ்மனம் கண்டேன் தமிழ்மணம் கொண்டேன்
எமக்கினி கற்றல் எளிதென் றாமே!
தவப்பய னாகத் தமிழிமொழி கற்றார்
சுவரடி பந்தாய்ச் சொல்லிக் கொடுப்பார்
எவர்க்கிது கிட்டுதல் எளிதென் றாமே?

2. கவிஞர் வள்ளிமுத்து
மருத்துவம் அறிவியல் மண்ணியல் உளவியல்
பொருளியல் வானியல் பொறியியல் கணிதமும்
கருத்துடன் கற்போம் கன்னித் தமிழிலே
அறிவை வளர்க்க ஆயிரம் மொழிகளாம்
செறிவுடன் கற்றுச் சிந்தை மகிழினும்
நெறிமுறை கற்போம் நேயத் தமிழிலே..!
ஆயிரம் மொழிகள் அவணிநின் றாலும்
தாயின் மொழிக்குத் தகுமோ மறுமொழி
போயுடன் கற்போம் பொன்னித் தமிழிலே.

3. கவிஞர் சோமு சக்தி
செந்தூர் வேலா செவ்வேட் கந்தா
செந்தமிழ் விளங்கச் சொல்லாய் வாவா
சந்தமே புனைய சரவண பவவே
சட்டியில் இருக்கவே சடுதியில் வருமே
அட்டியில் குழைத்தநல் லருந்தமிழ் அறிவும்
தட்டுக தடைகளை சரவண பவவே
கற்பனை யெனதோ கற்சிலை யுனதோ
விற்படும் மதியினில் வேற்படு வழியினை
தற்பர னறிவனே சரவண பவவே !

4. கவிஞர் தர்மா
சளைக்கா திங்கே சகலருங் கூடிக்
களைகளை யகற்றிக் காட்டிலே உழைத்தால் 
விளைந்திடும் தீங்கை விரட்டிட லாமே
துன்ப மகற்றித் துயரமும் நீக்கி 
இன்பமும் புகுத்தி இன்னலை விரட்டி 
நன்மையை யுழைப்பே நலமுற நல்குமே
வாழ்வினி லென்றும் வசந்தம் தந்தே 
தாழ்வினை மாற்றித் தைரியம் கொடுத்தே 
ஏழ்மையை யுழைப்பே என்றும் விரட்டுமே

5. கவிஞர் சீனிவாச கோபாலன் மாதவன்
தமிழ்ச்கவிச் சோலை தருநற் பயிற்சி, 
அமிழ்த்தாய் விளங்க, அருஞ்சொற் கவியால், 
உமிழ்வாய் வழியாய், உண்மை யுரைக்குமே !
சென்று, முறையாய்ச் செவியுள் புகுத்தி,
நன்றாய்க் கவிதை, நயமாய் எழுதி,
என்றும் மறவாது, இன்புற் றுரைக்குமே !
கண்ட பயிற்சி, கனிந்திடும் வேளையில்,
அண்டம் படைத்திட் டனைத்தும் நடத்தும்,
கொண்டல் நிறத்தனைக், கும்பிட் டுரைக்குமே ! 

6. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
வான மெங்கும் வான்மழை பொழியும் 
மானம் காக்கும் மாண்புடைத் தொழிலை 
ஊன மின்றி ஊன்று தோழனே !
ஏரினைப் பிடித்தே ஏற்றப் பாதை
பாரினி லுழைத்துப் பண்புடை வழியில் 
மாரியால் வருதலும் மகசூல் தோழனே !
உழைக்கும் வர்க்க முள்ளது வரையில் 
மழைத்துளி தினமும் மண்ணினை நனைக்குமாம் 
செழிப்புடன் வாழ்க்கை செல்லும் தோழனே !

7. கவிஞர் கனகரத்தினம் செல்லமுத்து
கற்றறி விலாதோர் கற்றுத் தெளிந்து
பற்றுடன் கற்றுப் பாங்காய் உய்ய
வற்றிடாத் தமிழது வளருந் தளமே!
சொற்சுவை பொருட்சுவை செழிப்பாய்த் தந்து
நற்பா இயற்றிட நல்வழி காட்டும் 
கற்பனை யில்லாக் கல்வித் தளமே!
அரும்பெருந் தமிழ்ப்பா அள்ளித் தந்தே
அருளும் சோலை பைந்தமிழ் மரபுபா 
திருவுளம் செழித்திடும் திகட்டாத் தளமே!

8. கவிஞர் கி.குஷ்ணமூர்த்தி நந்தகோபால்
உடலுக்(கு) இன்பம் உற்றவாய் உணவாம் 
உடலை மேவும் உயிர்க்கே இன்பம்
உடலில் செவிவாய்ப் பெற்றிடும் உணவே
உயர்வைத் தருமாம் உயர்நலம் அளிக்குமாம் 
உயர்ந்த விருந்தாம் உடலுக் குணவாம் 
உயர்ந்தோர்த் தரும்செவி உணவு மதிக்கே
உணவில் இருவகை உண்டு கேட்பீர் 
உணவில் வாய்வழி உடல்நலம் பெறவும் 
உணவில் செவிவழி உயிரினுக் (கு) அமுதே

9. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரஃப் அலி
எற்றைக் கும்நீ இலங்கிட நன்றாய்க் 
கற்பது வொன்றே கடனெனக் கொண்டால் 
பற்பல வழிகளில் பயன்பெறு வாயே !
கற்றோ ரவரின் கனிச்சொல் கேட்டுப் 
பெற்றோர் சொல்லைப் பெரிதாய் மதித்துப் 
பற்றிட வாழ்வில் பயன்பெறு வாயே !
உற்றா ருறவை உயர்வினில் வைத்துக் 
குற்றம் களைந்து கூடியே வாழ்ந்தால் 
பற்றுட னிருப்பார் பயன்பெறு வாயே !

10. கவிஞர் சேலம் பாலன்
திருக்குறள் போலே சீர்நிறை ஒருநூல்
இருக்கும் மொழிகளில் எதனிலும் இல்லை
இருப்போர் அதன்வழி ஏகிடில் சிறப்பே
திருக்குறள் தன்னைச் சீரிய முறையில்
ஒருமுக மாக உவந்து கற்றிடில்
திருப்பம் வாழ்வில் திகழும் சிறப்பே
திருக்குறள் கற்றவர் சேர்வர் அறவழி
திருக்குறள் கற்றவர் சீலம் நிறைந்தவர்
திருக்குறள் கற்றவர் சேரிடம் சிறப்பே

11.கவிஞர் மதுரா
தீயென அழிக்கும் தீண்டிய மனிதரைப்
பேயென ஆட்டும் பெருங்கோ பமெலாம்
தாயென நினையா தகிக்கும் வெகுளியே
சினமெனும் குணத்தால் சிறப்பே இல்லை
மனமதில் கொண்ட மடமை சினமே
இனமதைச் சேரும் இழிந்த வெகுளியே
கோப மென்னும் கொடுங்குண மெல்லாம்
பாபம் செய்யவும் பதறா தன்றோ
சாப மாகும் சரதம் வெகுளியே! 

12. கவிஞர் அர்ச்சனா குருநாதன்
பழமை போற்றும் பசுமை உரமிட
உழவது சிறந்தே ஊரது மகிழ
அழகாய்ச் செழித்தே ஆற்றும் பசியே.!!
வளமது செழித்து வயல்வெளி தளிர்க்கக்
குளமது பெருக்கிக் குடிநீர் காத்தால்
உளமது மகிழ ஓடும் பசியே.!!
ஊற்று பெருகி உழவது சிறக்க
ஆற்று மணலை அள்ளா திருந்தால்
கூற்று பொய்க்கா குறைந்திடும் பசியே.!!

13. கவிஞர் புனிதா கணேசு
மாயோன் மருகா மஞ்ஞை வாகனா 
சேயோன் வருகவுன் சேவடி நினைந்து 
நாயேன் உனதடி நாளும் தொழவே!
இன்னல் இனியெனக் கில்லை எனத்தன் 
பன்னிரு கரங்கள பயமெனக் காக்கவென் 
முன்னே வருமெழில் முருகா நீதுணை!
பழமும் நீயே பழமுதிர்ச் சோலை 
பழனிப் பதியில் பாங்காய் உறையும் 
பழனி நாதாவுன் பதமதே சரணே!

14. கவிஞர் E.காளியப்பன்
பசுமை இயற்கையைப் படைத்தார் இறைவன்
பசுமையில் கருணையைப் பார்த்திட வைத்தார்!
பசுமையை அழித்தோ படைப்பினில் உயர்வோம்?

15. கவிஞர் அய்யப்பன்
உயர்வுற உயர்த்திடும் உயர்குணம் எதுவது ?
இயல்பினை உயர்த்திடும் இயற்குணம் எதுவது ?
தயைமிகுந் துயிர்க்குயிர் தரும்சிபிப் பரிவே.
தோகை யாடும் தோற்றம் கண்டு 
தோகைக் காக போர்வை தந்ததும் 
ஈகை அன்பாம் இரக்கம் பரிவே
மனுவின் நீதி மறைகளும் போற்றும் 
மனுவின் அன்பை மாநிலம் அறியும்
மனுவின் நீதியும் மனத்தின் பரிவே!

16. கவிஞர் கண்ணன் இரா.
விழியாம் நாட்டின் வேளான் தொழிலும்
அழியா துகாப்போம் அதனை நாமும்
உழவை யொழித்தே உயருமோ நாடே....!
விளைநில மொழித்து வீடுகள் கட்டியே
விளைவைக் கண்டும் வேடம் களையோம்
வளர்கிற துநாடும் வல்லர சென்றே
கழனிக ளழித்துக் கனிமம் எடுப்பார்
உழவை யொழித்தே உற்பத்தி பெருக்கம்
வழக்கை மாற்றி வாழ்வது முறையோ? 

17. கவிஞர் பொன்.பசுபதி
கந்தா கடம்பா கதிர்வே லவனே
எந்தையும் நீயே எந்தா யும்நீ
உன்னடி பணிந்தே உய்வேன் நானே.
என்றமிழ்க் கோவே என்ற னுயிரே
துன்பெதும் வாட்டிடின் துணைநீ தானே
உன்னடி பணிந்தே உய்வேன் நானே
கண்ணென எம்மைக் காக்கும் கடவுளே
மண்ணுயி ரெல்லாம் மகிழ்வுறச் செய்யும்
உன்னடி பணிந்தே உய்வேன் நானே! 

18. கவிஞர் விவேக்பாரதி
தமிழ்மொழி வோங்கத் தரணியில் வாழும் 
அமுதுடை யோரவர் அகத்தும் முகத்தும் 
கமழ்தமிழ் முழக்கங் காணுதல் வேண்டுமே !
பாய்ந்துநந் தமிழும் பாரினை யாளத் 
தாய்மொழி தன்னில் தமதருங் சேயை 
வாய்மொழி கூற வளர்த்திடல் வேண்டுமே !
ஆங்கில மிந்தி அமைபிற மொழியைப்
பாங்குடன் சொல்லும் பள்ளிக ளெல்லாம் 
ஓங்கிய தமிழை யோதிட வேண்டுமே !

19. கவிஞர் ரமேஷ் மாதவன்
சங்கும் ஆழியும் தன்கரம் ஏந்திப்
பொங்கும் கருணை பொழிபவன் எங்கள்
சிங்க முகத்துச் செங்கண் மாலே
பந்தம் நீக்கிப் பற்றை நீக்கி
வந்தே அருள்வாய் வரமும் தருவாய்
சிந்தைக் கடங்காச் செங்கண் மாலே
கருணைக் கடலே கண்ணே அமுதே
உருகித் தொழுதே உன்றன் அழகிய
திருவடி அடைந்தேன் செங்கண் மாலே

20. கவிஞர் மஞ்சுளா ரமேஷ்
சத்தியம் தனையே சொத்தாய்க் கொண்டு
நித்தமும் புனிதராய் நிலமிசை யிருந்த
எத்தனைப் பெரியவ ரெம்நிலந் தனிலே
அத்தனைப் பெரியவ ரனைவரு முரைத்த
இத்தரைச் சிறந்திடும் இனியதாம் மொழியை
நித்தமே் மனிதரும் நினைத்திடுந் தனிலே
ஈடிலாப் புகழது மிணையிலா வளமதும் 
கேடிலா மனமதும் கேண்மையாய் வாழ்வதும்
நாடியே வந்திடும் நம்மிடந் தனிலே|

21. கவிஞர் அரவிந்த் கார்த்திக்
வாழ்வி லென்றும் வண்மை யேற்கவும்
தாழ்விலா வளத்தினைத் தரணியில் பெறவும்
ஊழ்வினை யகற்றிட வுதவிடு மறிவே
அவனியில் நலமா யன்பும் செல்வமும்
எவரும் பெறவே யென்று முதவும்
தவமாம் கல்வியால் . தருமே யறிவே
என்றும் புவியி் லேற்றம் பெறவே
நன்றாம் கல்வியை நலமாய்க் கற்றால்
அன்பை நாளுமே யளிக்கு மறிவே

22. கவிஞர் பரமநாதன் கணேசு
இன்பம் பொங்க இவ்வுல கத்தில்
அன்பை விதைப்பீர் அணைத்து நிற்பீர்
துன்பம் தொலையும் துளிர்க்கும் அறமே!
நெஞ்சுள் அழுக்காய் நிறைந்து கிடந்து
கெஞ்சும் ஆசையைக் கிள்ளி யெறிவீர்
விஞ்சும் அன்பால் தொண்டு செய்தே!
பெரியவன் சிறியவன் பேதம் போக்கி
உரியதைப் பகிர்ந்தி உரியவர்க் களித்துப்
புரியடா நல்லறம் பூத்திடும் அன்பே!

23. கவிஞர் நிர்மலா சிவராச சிங்கம்
மண்ணிர் இன்பம் மகளிர் பெறவே
பொன்னகை யின்றிப் புதுமை செய்யின் 
கன்னியின் வாழ்வு களிப்படை யும்மே.
மண்ணில் பிறந்த மாதருக் கெல்லாம் 
கண்கவர் வாழ்க்கை கடிதே கிடைத்தால் 
பெண்ணின் வாழ்வு பெருமை யுறுமே
நங்கையர்க் கெல்லாம் நல்லதே நடப்பின். 
எங்கும் புதுமை எதிலும் நலமெனின் 
மங்கையின் வாழ்வு மலர்ச்சி யுறுமே!

24. கவிஞர் க.அர. இராசேந்திரன்
வானுற உயர்ந்து வனப்புடன் நின்றாய்
ஊனுற நெகிழ்ந்தே உயிருடன் கலந்தாய்
தேனுற நாவில் தெவிட்டிடு தமிழே
தீதறக் கற்றே தெளிந்தயென் மனமே
சூதறக் களைந்தே சுகம்பெறு முலகில்
வாதறக் கருக்கினும் வளர்ந்திடும் தமிழே
வாடியே நிற்பதேன் வருத்தமேன் கூறிடு
ஓடியே வருவேன் உனைக்காத் திடவே
கூடியே என்னுடன் குலவிடு தமிழே! 

25. கவிஞர் சியாமளா ராஜசேகர்
குருகு கொடியுடன் கோல மயிலில்
மருவு மடியார் மனக்குறை தீர்க்க 
வருவா னழகன் வடிவே லவனே !
திருப்புக ழமுதைத் தினமும் பருகிட 
விருப்புட னாடி வினைகள் களைய 
வருவா னழகன் வடிவே லவனே !
திருவடி பணிய சிந்தை குளிர்ந்தே 
திருமுக மாறுடன் தேவிய ரோடு 
வருவா னழகன் வடிவே லவனே !

26. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து
காய்ந்த கழனியில் காவிரித் தண்ணீர்
பாயந்தும் ஓடவில்லை பாரினில் மாமழைப்
பேய்ந்து நனைந்து பெருகி விளையுமா?
மாரியும் பொழிந்து மண்ணில் விழவே
மாரியே உனையும் வணங்கிக் கேட்கிறேன்
வாரீர் பயிரும் பெருகி விளையவே
பாரில் உழவன் சிறந்து வாழ
ஊரில் உள்ளோர் உவந்து போற்றி
நீரினை தாரும் நெல்லும் விளையவே.

27. கவிஞர் ஃபர்சானா ரசீக்
வன்மைக் குணத்தினை வாழ்வினில் கொன்று 
மென்மைப் பொழிவுடன் மேதினி மீதினில்
என்னைக் கொஞ்சம் ஏங்கவைத் தாயே
வஞ்சனை இல்லா வதனம் கண்டேன்
கெஞ்சிய குரலில் கிறக்கம் கொண்டேன்
வஞ்சி என்னை மயங்கவைத் தாயே
பட்டை தீட்டிய பண்புகள் ஏய்ந்தனை
சிட்டெனை என்றும் சிந்தையில் நிறுத்தினை
மட்டிலா அன்பில் மயங்கவைத் தாயே

28.கவிஞர் சுந்தரி தேவன்
துன்ப மொழித்து தூய்மை செய்ய 
இன்பந் தேடா யியல்பை நிறுத்தி
வன்ம மில்லா வாழ்வளி காளியே
சேரிடம் தன்னைச் செவ்வை யாக்கி 
ஓரிடம் சேர்த்தே உளமதை திருத்திப்
போரிடச் செய்வாய் புவனக் காளியே
கடலாம் மனத்தில் கடலலை போன்றே 
இடவலஞ் சென்றே இடுங்கிய நினைவைப்
புடமாய் மாற்று பொங்குமாக் காளியே
★★★

No comments: