பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

21 Apr 2017

#பாட்டியற்றுக_தொகுப்பு 23 (வஞ்சிப் பா)


அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:23 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
இந்தப் பயிற்சியில் பிழை திருத்தம் செய்து உதவிய "பைந்தமிழ்ச் செம்மல்கள் " உள்ளிட்ட அனைருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பதிவை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வசதியாக நம்முடைய பைந்தமிழ்ச் சோலையின் வலைப்பூப் பக்கத்திலும் 
http://painthamizhchsolai.blogspot.com/?m=0
பகுதியிலும் பதியப்பட்டுள்ளது. அனைத்துப் பயிற்சிப் பாடல்களின் தொகுப்பும் அதில் பதியப்படும். 
பார்ப்பதற்கு ஒரு புத்தகத்தின் வழி யாப்பு இலக்கணம் கற்பது போல் இருக்கும்.
நன்றி.!
***** ***** *****
. பாட்டியற்றுக,--23
(வஞ்சிப் பா)
தலைப்பு : "கற்றோர் சிறப்பு "
1. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்
வளச்செல்வமும் பிறர்காண்கையில்
களவாடிட வழிகாண்பராம்
அறிவொன்றுதான் எவரிடத்திலும்
பறிபோய்விடும் நிலையிங்கிலை
எனவே
கல்வி என்னும் கரைந்திடற் கில்லாச்
செல்வ மதனைச் சேர்த்து
நல்லோ னென்றே நவிலப் பெறுகவே!

2. கவிஞர் நெடுவை இரவீந்திரன்
கனிவாகவும் அழகாகவும்
இனிதாகவும் எளிதாகவும்
குருவானவர் கவிபாடிடக்
கருத்தோடருள் புரிவாரவர்
எனவே
கல்வி கற்றிடக் கருணை புரிந்த
நல்லா சனைநாம் நன்றி
மல்க வளத்துடன் வாழவாழ்த் துவோமே.

3. கவிஞர் சீனிவாச கோபாலன் மாதவன்
குடியுயர்வடை யவேண்டியுலகில்,
படித்தபலரும், தமதுபணியை,
நொடிப்பொழுதினில், நலத்தின்வழி
முடித்துநற்பயன் நமதாக்குவர்
எனவே,
நல்ல வழிபெற, நாமும் கற்க, 
..எல்லாச் செயலும், எமது 
..சொல்லும் இனிதாய்ச், சுவையொடு வருமே !

4. கவிஞர் ரகுநாதன் ரங்கசாமி
மயர்வைத் தரும் மருளழிப்பவர் 
அயர்வால்வரும் துயரறுப்பவர் 
தெருள்நல்கிடும் கருத்துரைப்பவர் 
இருள்நீங்கிடப் படித்துயர்பவர் 
எனவே 
கல்விக் கனலைக் கருத்தில் வளர்ப்போம் 
நல்லன கற்றலை நயப்போம் 
உள்ளுவ துயர்வாய் உள்ளி உயர்வமே!

5. கவிஞர் சாமிசுரேஷ்
படிக்காதவர் மிகையாய்ச்செயும்
கொடுமைகள்பல பலவாயினும்
பலநூல்களைப் படித்தவர்களால்
துலங்கிடுங்கெடு தலேஅதிகமாம்.
எனவே,
கல்வியாற் அறிவும் அறிவால் பண்பும்
பல்கிப் பெருகுவப் பயனென
ஒல்கா துணர்ந்தே ஓதுதல் சிறப்பே!

6. கவிஞர் சோமுசக்தி
அறிவுபெறுக அகங்குளிரவே
நிறைபுவியுன துறவாகுமே
அறிவரெவரு மடிமையிலையே
அருளிளெதுவு மருள்தலிலையே
ஆய்மின்
கல்வியே பிணைக்கும் கண்ணெனக் காக்கும்
நல்வினை நாட்டும் நனிவுறும்
பல்கலைப் பயின்றால் பாரெலாம் நமதே !

7. கவிஞர் பொன்.பசுபதி
பெருஞ்செல்வமும் பெயர்ந்தோடிடும்
திருவும்பல திரிந்தழிந்திடும்
உறவினர்களும் ஒதுங்கிடுவரே
பிறவிடர்களும் பெருகியேவரும்
ஆதலால்,
அறிவும் ஆற்றலு(ம்) அளிக்கும் கல்வியைச்
சிறப்புடைச் செல்வமாய்க் கருதிச்
செறிவுற யாவையும் கற்றுயர் வோமே! 

8. கவிஞர் பரமநாதன் கணேசு
அறம்தனைமனத் தினுலேற்றிடத்
திறம்படச்செயல் புரிவதும்தினம்
படித்திடுமொழி தமிழிலையெனில்
துடித்தெழுவதும் பணியெனக்கொள...
இன்றே
தடைகள் உடைத்துத் தமிழைக் காக்க
உடனிருந் துதவிடல் உயர்வெனும்
கடமை யுணர்தல் கற்றோர் சிறப்பே!

9. கவிஞர் குருநாதன் ரமணி
திறமோங்கிடத் திருவோங்கிடும்
திறம்தூண்டியே செறிகல்வியை
இளவயதினில் இனம்நாடியே
வளம்யாவையும் வகையாய்கொளக்
கற்றார்
காட்டு மந்தையாய்க் கணினித் துறையில்
வீட்டு நலத்தில் மேவுதல் மறக்கும்
வேட்கை யற்றிட மிளிர்வாழ் வறமே.

10. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரப் அலி
கரமேந்திநாம் கரைகாணவே 
வரமானவர் குருவேயுணர் !
குருமாரவர் திருப்பண்பினைத் 
திருவாய்மொழி ! இகழாமலே !
நாளும் 
கற்றநற் கல்வியைக் கடைந்துனக் கூட்டியோர் 
முற்றும் புகழ்ந்திட முனைவாய் !
பற்றுட னவரைப் பணிதலுன் கடனே !

11. கவிஞர் .அர.விவேகானந்தன்
அறமோங்கிட அகமோங்கிடும்
திறம்விரிந்துமே செயல்கூடிடும்
புகழ்கூடிடப் பகையோடிடும்
தகையேவரு மறிவுளரிடம்
அதனால்
நிலையாய் மண்ணில் நிலைத்தே நிற்கும்
கலைபல விரும்பிக் கற்போம்
விலையிலா வாழ்வை மீட்டிடு வோமே!

12. கவிஞர் சியாமளா ராஜசேகர்
இருளகற்றிநல் லொளிகொடுத்திடும் 
செருக்ககற்றிடும் தெளிவுதந்திடும் 
மதிப்பளித்திடும் விளங்கிடச்செயும் 
புதியவற்றினைப் புரியவைத்திடும் 
எதுவெனில்
செல்லு மிடமெலாம் சிறப்பு சேர்த்திடும் 
நல்வழி காட்டி நடத்திடும் 
கல்விதான் என்பதைக் கற்றோ ருணர்வரே !

13. கவிஞர் வள்ளிமுத்து
நற்கவிபடி நடிப்பதைவிடு
சொற்சுவைதொடு சுவடிகள்படை
பெற்றவர்மதி பெரியோர்துதி
மற்றவர்புகழ் மனநிறைவுகொள்
ஏனெனில்
வையகம் பெரிதாம் வாழ்நாள் சிறிதாம்
கையக நாட்களைக் கனிவுடன் படித்தால்
இறப்பின் பின்னும் இருப்பாய்.!
சிறப்புடன் கவிகள் செய்தால் நன்றே.!

14. கவிஞர் நிர்மலா சிவராச சிங்கம்
இலகுவாகவும் இனிதாகவும் 
கலக்கமின்றியே அறிவுபெற்றிட 
மதிப்பேறிடும் வருங்காலமும் 
மதிவாணனென் றுரைத்தேத்திடும்! 
எனவே 
கல்வி என்னும் கடலில் நீந்தி 
நல்ல நிலைக்கு நலமுற 
அல்லும் பகலும் அயரா துழைப்பாயே!

15. கவிஞர் இரா.கண்ணன்
உலகேநமைப் புகழும்படி
கலைகள்பல அறியும்படி
விழிபோலது விடியல்தரும்
அழியாதென அறிவாயினி
உலகில்
கல்வி யொன்றே காலமும் நிற்கும்
செல்வ மதுவாம் சேர்ப்போம்
நல்கு மறிவினை நற்றமி ழாலே...!

16. கவிஞர் விவேக்பாரதி
பொன்னின்புகழ் பொலியும்வரை 
மன்னன்புகழ் பொருதும்வரை 
மற்றார்புகழ் மடியும்வரை 
கற்றார்புகழ்க் கழிவொன்றிலை 
அதனால் 
கற்றான் செல்வம் காசினி மீதில் 
மற்றெதை விடவும் பெரிது 
சற்றிது தெளிந்தால் தவறுக ளறுமே !

17. கவிஞர் அழகர் சண்முகம்
இனியனசொலி எழுத்துரைப்பவர்
கனிவொடுகவிக் கருத்துதிர்ப்பவர்
விழியெனுமொளி விளக்களிப்பவர்
அழிவிலாப்பொருள் அறிந்தளிப்பவர்
ஆதலால்
கற்றோ ரையே கண்ணுடை யோரென
நற்றுணை யீகுனன் னூலெலாம்
பொற்கவி யாலே போற்றலுஞ் சிறப்பே!

18. கவிஞர் மஞ்சுளா ரமேஷ்
நலமேதரும் சுகமேபெறப்
பலகலைகளும் நிதமேபயில்
கனவேநிதம் நனவாகிடும்
தினமேபுகழ் வரமாகிடும்
அதனால்
ஊழ்வினை தனையே மாற்றும் கல்வி
தாழ்விலா மனத்துடன் தரணி
வாழ்க்கையும் சிறக்கக் கற்போம் நாளுமே !!!

19. கவிஞர் இளம்பரிதியன்
அகழ்ந்தெடுத்திட ஆன்றவிந்திட
இகபரத்திலும் இணைந்திருந்திடும்
எழுபிறப்பிலும் எமைத்தொடர்ந்திடும்
முழுமுதலையும் அணிசெய்திடும்
ஆதலின்
கல்வியது வொன்றே கரையில நிலைபிற
நில்லா தொழிதலின் நிலையாம்
கல்விநாம் பெறவே கவலை விலகுமே!

20. கவிஞர் கட்டிக்குளம் ஓ.சுந்தரமூர்த்தி
கனிவேதரு நினைவேசுகத்
தினிமையுளத் தெளிவாந்தமிழ்
அவையோர்தனில் முதலாகிடச்
சுவைத்தார்மனஞ் சிறப்பாகுமே!
அதனால்,
நினைவில் கல்வியை நிதமும் புகட்டு
மனையை உயர்த்த நிமிர்ந்தே
பனைபோ லுயர்ந்தால் பாரினில் சிறப்பே !

21. கவிஞர் கோவிந்தராஜன் பாலு
வணக்கத்தையும் மரியாதையும்
இணக்கத்தையும் எதிர்பார்ப்பையும்
முறைப்படுத்திய வழிகாட்டலைக்
குறையின்றியே வளர்ந்தோங்கிட
வழங்கும்
கல்வி மனிதன் மகிழ்வின் சிகரம் 
செல்வம் வளரும் குறையும் 
இல்லை யெனக்கற் றவர்சொல் வதில்லையே.!

22. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
நலம்பலதரும் படிப்பினைமனம் 
உலகினில்நிதம் பயிலுதல்நலம் 
உறவுகளுனை மதித்திடும்படிச்
சிறப்புகளுனை நெருங்கியும்வர 
இதனாற்றான் 
கல்வியும் தருகிற கருத்துகள் நமக்குப் 
பல்கியும் பெருகிடப் பரம்பொருள் 
நல்கிடத் தமிழ்மொழி நவில்க நாளுமே !

23. கவிஞர் அரவிந்த் கார்த்திக்
கலையேபல பயில்வோமினி
நிலையாய்நிதம் புகழேவரும்
வளஞ்சேர்ந்திடும் வழியாமதில்
உளமேவிட உணர்வாயினி
அதனால்
பண்பாய் நாளும் பாங்குறக் கற்போம் 
கண்ணெனத் திகழும் கல்வி
திண்ணமாய் நலத்தினைத் தருமே வாழ்விலே.

24. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
இருளானது மடிந்தேவிடப்
பொருளானது துணையேவர
அருளானது விடிவேதர
உருவானதை நினைந்தேதொழ
வேண்டும் 
சாகாத் தலையைத் தன்னருள் கல்வியை
வேகாக் காலை விளங்கிப்
போகாப் புனலில் புத்துயிர் பெறவே

25. கவிஞர் நடராஜ் மெய்யன்
திருந்ததாதவர் திருந்தும்வழி 
இருந்தாலது மருந்தாகிட 
மனம்வைத்திடும் குணத்தாலொரு 
தனம்போலதை தரும்நல்லவர்
எதிலும் 
தன்னலம் கொள்ளாப் பொதுநலத் தாலே 
பொன்னென மண்ணில் மினுங்கி 
உன்னத மாவார் உலகிற் சிறந்தே!

26. கவிஞர் தர்மா
குறைவகற்றிநம் நிலையுயர்த்தியே 
நிறைவைத்தரும் குணமுடைத்ததாம் 
குலையாதினி நமைக்காத்திடும் 
நிலையாய்ப்பெறும் வரமாமமறி.. 
என்றும் 
கற்றலின் வழியிலெக் காலமும் சென்றால் 
தொற்றுமோ துன்பம் தொடந்து 
பற்றிடும் தீங்கைப் பறந்திடச் செய்யுமே..!

27. கவிஞர் நியாஸ் அசன் மரைக்காயர்
விலங்கெனஅறி இலங்குநூலதை
உலகின்மிசை அறியாதவர்
பொருளுடையவர் அருளடைந்திடார்
மருவிலாவதை அறியாதவர்
அறிந்தால்
செல்லும் ஊரினில் சிறப்புகள் குவியும்
அல்லல் எல்லாம் அகலும்
வெல்லும் வாய்ப்பும் மெய்யென வாகுமே

28. கவிஞர் புனிதா கணேசு
அறிவாயிது அரியமானிடா
செறியுந்திறன் சேர்த்திடமிகு 
குறியாகவே குறையேதுமில் 
நெறியாமிது நல்மரபறி
அதனால் 
சிறக்கு முன்தமிழ் சீராய்ச் சேர்க்குந் 
திறம்தான் திகழத் தரமும் 
பிறக்கும் தமிழும் பீடும் பெருக்குமே!
★★★

No comments: