அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:21 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது.
இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
இந்தப் பயிற்சியில் பிழை திருத்தம் செய்து உதவிய "பைந்தமிழ்ச் செம்மல்கள் " உள்ளிட்ட அனைருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பதிவை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வசதியாக நம்முடைய பைந்தமிழ்ச் சோலையின் வலைப்பூப் பக்கத்திலும்
http://painthamizhchsolai.blogspot.com/?m=0
பகுதியிலும் பதியப்பட்டுள்ளது. அனைத்துப் பயிற்சிப் பாடல்களின் தொகுப்பும் அதில் பதியப்படும்.
பார்ப்பதற்கு ஒரு புத்தகத்தின் வழி யாப்பு இலக்கணம் கற்பது போல் இருக்கும்.
நன்றி.!
***** ***** *****
. பாட்டியற்றுக,--21
(கட்டளைக் கலிப்பா)
தலைப்பு : அவா அறுத்தல்
1. கவிஞர் ரகுநாதன் அரங்கசாமி
கமலத் தாளிணை நண்ணிடும் நல்லவர்
கருத்தில் கொள்வது நாடிடும் தஞ்சமே
நிமலப் பத்தரின் உள்ளுறை பத்தியே
நிலைத்தல் இல்லையே நேரிலா வஞசனை
அமலப் பாசுரம் நாட்டிய பாவலர்
அரியின் பேரருள் பக்குவப் பட்டவர்
விமல ஏற்றமாம் ஏற்புடை முத்தியாம்
விகற்ப வீணவா ் விட்டொழித்(து) ஆர்தலே!
★
2. கவிஞர் பரமநாதன் கணேசு
கோடி யாசைகள் நெஞ்சினுள் சேர்ந்திடக்
கூட்டி யாமதை யுச்சிகு ளிர்ந்திட
ஆடி யேகளிக் கின்றவ ரேதினம்
ஆண்ட வன்மனை தேடியே! பாடியே!
ஓடி யேயழும் நாடகம் நீக்கியே
உண்மை யாதென எண்ணியே மண்ணிதில்
ஈடி லாநிறை யன்பெனும் நல்நெறி
ஏற்று நல்வழி பற்றியே! செல்கவே!
★
3. கவிஞர் வீ.சீராளன்
சினமு யர்த்திய சிந்தனை யாலவள்
சிரச றத்துயிர் சீவிய சொற்பல
தினமு றைந்துளந் தீக்கிரை யாகினும்
சிறக டித்தெழுஞ் சிட்டென வாசைகள்
கனவு லாவிய கண்ணிடை யுட்புகக்
கவியு ரைத்தொரு காப்பிய மாகிடும்
மனத்தி லாடிய மாவிழிப் புன்னகை
மரண மெய்தியும் மண்ணிடை பூக்குமே !
★
4. கவிஞர் வெங்கடேசன் சீனிவா கோபாலன்
வாச மேயுள பூவினுள் சென்றபின்
வண்டு மேயதில் வீழ்ந்துகி டப்பபோல்
ஆசை யென்னுமோர் ஆழ்கடல் உட்புகுந்(து)
ஆழ்ந்த பின்னரும் மீண்டிடக் கூடுமோ
ஈச லாமதன் ஆயுளைக் கொண்டநாம்
இவ்வ கையினில் மாய்வதும் வீணலோ
மாச கற்றியே இன்பமாய் வாழ்ந்திட
மண்ணி லாசையை நீக்கிட வேண்டுமே!
★
5. கவிஞர் சுசீந்திரன் சுப்பிரமணியம்
சித்தத் தத்துவம் பொய்யெனச் செப்புவர்
சிந்த னைத்தவ றில்மயங் கிட்டவர்
மொத்த ஆசைகள் விட்டொழித் திட்டதை
மூத்த ஞானிகள் மட்டுமே சொல்லுவர்
பித்த னேவிடு பொன்னுமாம் மண்ணுமாம்
பேசும் பேரெழி லாசைகள் யாவுமே
புத்த னேயுனைப் போற்றுவர் பாடுவர்
பூத்த பூவெனப் பூங்கரம் கூப்பியே!.
★
6. கவிஞர் சியாமளா ராஜசேகர்
போது மேயெனும் பொன்மனம் கொண்டிடில்
போகு நல்வழிக் குத்துணை யாய்வரும் !
மோது கின்றபே ராசையால் வாழ்வினில்
மூளு மின்னலும் நொந்திடச் செய்திடும் !
மாது டன்மது மண்பொரு ளாசைகள்
மாய மாயுனைச் சூழ்ந்திடும் வேளையில்
ஓது மாதவர் பாக்களைப் பாடிட
ஓடிப் போய்விடும் தீவினை யாவுமே !
★
7. கவிஞர் நிர்மலா சிவராச சிங்கம்
ஊமை யாசைகள் நெஞ்சினில் பேசிட
உள்ள மோடியே தந்திடும் துன்பமே
தீமை யாதென நோக்கியே நீங்கிடத்
தீய எண்ணமும் தூரமாய் ஓடிடும்
ஆமை போலவே யாவும டக்கிட
ஆடி நின்றிடும் ஆழ்மன ஆசைகள்
காம மென்பது கண்டதும் வந்திடும்
கட்டொ ழித்திடில் காலமும் இன்பமே!
★
8. கவிஞர் தர்மா
ஏது(ம்) ஓர்நிலை இங்கிலை தானுணர்..!
எங்கு(ம்) ஏசலும் பூசலு(ம்):: ஏனினி?
போது(ம்) ஆசையை விட்டொழி; துன்பமாய்ப்
பொங்கும் பாரினி(ல்) இன்பமும் தோன்றிடும் ..
தீதும் நன்மையும் தந்தவர் யாரெனத்
தேடித் தேய்வதும் தேவையோ? மந்திரம்
ஓதும் ஞானியா ஒப்பிலாத் தெய்வமா
உண்மை ஏதறி தன்வினை யாமறி...!
★
9. கவிஞர் பொன்.பசுபதி
பெருகு மாசையும் பீடிலா தோர்குணம்
. பெருகி வந்துநம் பேற்றினைத் தாழ்த்திடும்
பெருகு முன்னதை வேருடன் சாய்த்திடல்
பெரிய தோர்கடன் என்றதைக் கொள்கவே
திருவும் சீர்களும் சேர்ந்திடும் வாழ்வினில்
தெளிவு மோங்கிடும் தீமைக ளோடிடும்
மருவிப் பேரவா நம்முளம் மண்டிடின்
மருட்டும் வாழ்வினில் மாட்டுதல் திண்ணமே.
★
10. கவிஞர் குருநாதன் ரமணி
புறக்கண் காண்பது பொய்யென வென்னுளம்
. புகுதல் போக்கறச் செய்வலி வேண்டுவன்
உறுகண் செய்திடும் சொல்லறும் வாயென
, உரைத்தல் செம்மையாய்ப் பெய்வலி வேண்டுவன்
மறக்கும் தன்மையில் தீயன கொள்ளுதல்
. மனத்தில் நீங்கிடும் மாட்சியை வேண்டுவன்
அறத்தில் நின்றவா கொள்வத றுத்திறை
. யறிவில் சென்றிடும் வாழ்நெறி கேட்பனே.
★
11. கவிஞர் மஞ்சுளா ரமேஷ்
பொங்கி வந்திடு மாசைக ளாலுமே
பொன்ம னத்துடை மாந்தரு ளங்களும்
மங்கி யென்றுமே மண்ணிலே வாழுது
மாண்பு தன்னையே நாடியே ஓடுதே
இங்கு வாழ்ந்திடும் மக்களும் நாளுமே
இன்ன லேதுமே இன்றியே வாழ்ந்திடப்
பொங்கி வந்திடு மாசைய னைத்தையும்
போற்றி டாமலே வாழ்ந்திட வேண்டுமே
★
12. கவிஞர் அரவிந்த் கார்த்திக்
செல்வ மொன்றையே கண்ணெனக் கொண்டுநாம்
செய்தி டும்பல கொள்ளைகள் தேவையா?
கல்வி தன்னையே நன்றெனக் கற்றிடக்
கள்வ னென்றுமே நன்றென மாறுவான்
நல்வி னைபெற ஆசையைத் தள்ளினால்
நாளும் தங்கமாய் மின்னிடும் வாழ்வதே
சொல்லு நாளுமே ஆசையைத் தள்ளிடச்
சோக மென்றுமே நீங்கியே சென்றிடும்!!!
★
13. கவிஞர் நடராஜ் மெய்யன்
பதவிக் காகவே பாமரன் கால்களைப்
பணிந்து கும்பிடும் பக்தராய் மாறுவர்
உதவி செய்வதாய் ஒவ்வொரு வீட்டிலும்
உயர்ந்த கொள்கையின் ஓலையை நீட்டுவர்
கதவின் ஓரமாய்க் கட்சியின் முத்திரை
கவரும் வண்ணமாய்க் காட்சியை ஓட்டுவர்
விதவி தக்கனா கண்டுநாம் நின்றிட
வெற்றி கொண்டவர் வேகமாய் நீங்குவர்
★
14. கவிஞர் நியாஸ் அசன் மரைக்காயர்
சுற்ற மெங்குமே தங்கமா யாகினும்
சுற்று முள்மனம் மற்றதைத் தேடிடும்
பெற்ற இன்சுவை செல்வமும் யாவையும்
பெற்றி டாதொரு மாமகிழ் ஈவதில்
உற்ற பொன்னது ஓடியே தேடினும்
உப்பு நீரது தாகமும் கூடிடும்
மற்ற யாவையும் சிற்றின இன்பமே
மாண்பு டைத்தெனில் ஆசையை வெல்வதே
★
15. கவிஞர் கோவிந்தராஜன் பாலு
ஆட வைத்தெனை ஆட்டியே பார்க்கிறாய்.
ஆடி வாடினேன் ஆட்டமும் ஓய்ந்ததால்
தேட வைத்ததால் தேடியே தேய்ந்தனன்.
தேடி நிற்கிறேன் ஆசைகள் போக்கியே
ஓட விட்டெனை ஓய்ந்திட வைத்ததால்
ஓடி வந்துனை ஒற்றெனப் பற்றினேன்.
பாட வந்ததும் பாக்களாய் மாறினாய்
பாடி யுன்னெழில் பாதங்கள் போற்றவே.
★
16. கவிஞர் புனிதா கணேசு
பெருக லானதே பாவையின் செவ்விழி
பெருமை குன்றிடு மோவவள் வாழ்விலும்
செருக லாகிட வேவரும் சீற்றமும்
செறிய முற்றிலு மேகிடத் தாங்கிலள்
தெருவெ லாமொரு தேடலின் கட்டியம்
தெரிய விம்மிடும் தேம்பியு மேங்கிடும்
பொருது மோவுளம் போகுமப் பாங்கினில்
பொறியி லேகுத லாகுத லாவலே
★
17. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
காட்டும் வாய்மையால் ஆசையை வெல்லலாம்
கட்டம் ஏதுமில் நேர்வழிப் பாதையைக்
கேட்டுக் கொள்வதால் உய்வழி காணலாம்
கேள்வி கேட்டதால் சீர்பதில் வந்திடும்
வாட்டம் தீர்ந்திடும் துன்பமும் ஓடிடும்
வாதம் நீங்கிடும் ஆசையும் விட்டிடும்
நாட்டும் இச்செயல் இன்பமும் துன்பிலா
நன்மை சேர்க்குமே மாசினைப் போக்குமே
★
18. கவிஞர் சோமு சக்தி
ஆசை யாட்பட ஆளவும் நாடிடும்
ஆவி கொன்றுமே அல்வழி யேற்றிடும்
பூசை போற்பல பொன்பொரு ளாழ்ந்திடும்
பூவை சூழிட போகமும் நாடிடும்
மீசை யொட்டிடாக் கூழ்குடி யாசையும்
மெல்ல மூச்சற மெய்யிதைப் பொய்யெனும்
ஓசை யின்றியே உள்ளிரு ஞானமும்
ஊறு மாசையை உள்ளற வோதுமே !
★
19. கவிஞர் அழகர் சண்முகம்
கண்ணி லாடிடும் காட்சிய னைத்துமே
கண்ணி மைக்கையில் காற்றுட னோடிடும்
மண்ணி லேதடா மாற்றமி லாதது
மாட மாளிகை மன்னர வைகளும்
எண்ணி லாதவை எப்படிப் போயின
ஏடு சொல்வதை எண்ணிம னத்திலே
உண்மை யொன்றையே உள்ளமு றைந்திட
ஓதி யேத்திடு பேரவா நீக்கியே!
★
20. கவிஞர் இரா.கண்ணன்
தாய்மை யென்றுமே தந்திடும் பாசமும்
தாங்கு(ம்) பூமியாய்த் தன்னிலை மாறிடும்
சேயும் போலவே துள்ளிடு மின்பமும்
செம்மை வாழ்விலே சேர்ந்திடும் சுற்றமும்
ஆய்த(ல்) நாளுமே அன்பினைக் கூட்டுமே
ஆசை விட்டொழி அவ்வழி நன்மையே
வாய்மை தன்னிலே வாழ்ந்திடு் காலமும்
வாஞ்சை கொண்டுனை வாழ்த்திடும் ஞாலமே...!
★
21. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரப் அலி
மனத்தி லேயெழு மாவலி னாற்பலர்
..மதியி ழக்கிறார் மண்ணினை யாளவே
அனலே ழுந்தவர் ஆவலு மோங்குதேன்
..அடிம னத்திலே அச்சமு மின்றியே
தினவெ டுத்திடும் தீதினைக் கொண்டயெத்
..தெளிவி லாதொரு ஆவலோ மேவினால்
கனத்து டன்வரும் காவலர்க் காப்புகள்
..கதிக லங்கிடக் கைகளி லேறுமே !
★
22. கவிஞர் நெடுவை இரவீந்திரன்
அளவு மீறிய ஆசையும் மோகமும்
அழிய நன்மையும் நம்மினில் தேங்கிடும்
கலவி ஆசையும் காதலி யோடுமே
கலந்து மட்டுமே நின்றிட நீதியாம்
உலவு கின்றவா சைகளும் ஓங்கிட
உடம்பு மீதினலும் நோயுமே ஏறிடும்
அளவு மீறில மிர்தமும் நஞ்சுபோல்
அதிக ஆசையால் கேடுதான் என்றுமே.
★
23. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
சோதி எங்கிலும் தீபமும் வேண்டுமே .
சோக கீதமும் பாடுதல் கூடுமோ
பாதி செல்வமும் நீங்கிடக் கண்டிடப்
பாரி லெங்கணும் சிந்தையில் வைத்திட
ஆதி அந்தமு மாண்டவன் ஒன்றென
ஆசை விட்டொழிப் பாயென ஓதுதல்
நீதி நன்னெறி நின்றிடும் யாவிலும்
நீச ரில்லையாம் நிம்மதி நாளுமே !
★
24. கவிஞர் சினிவாச கோபாலன் மாதவன்
மண்ண வாவிடுத் தால்நமக் கேபுகழ்,
...மண்ணின் மைந்தரும் வாழ்ந்திட வாழ்த்துவர் !
பெண்ண வாவிடுத் தாலுல கேத்தியே
..பின்னும் வாழ்வினில் வைத்திடும் வையகம் !
என்ன வாதவிர்த் தேபிற ராசைகள்
...என்கண் பார்த்திடத் தான்வரு மேபுகழ் !
பொன்ன வாவிடுத் தேயுயர் வாயெனப்
..போற்றும் மேலவர் நாவுரை காண்மினே !
★
25. கவிஞர் அர.விவேகானந்தன்
தொற்று நோயெனத் தோய்ந்திடு மாசையில்
...தொண்டு போர்வையில் தூற்றிடல் வாழ்க்கையோ?
வெற்று நெஞ்சமும் வெற்றியை மாய்த்திடும்
...வெந்து தன்னிலைத் தாழ்ந்திட வீழ்ந்திடும்
கற்றக் கல்வியைக் கற்பெனக் காத்திடின்
...கட்டி வெல்லமாய்க் காட்சியு மாறிடும்
அற்றுப் போகிடா வாற்றலு மோங்கிட
...அன்பை நெஞ்சினி லாக்குவா யென்றுமே!
★★★
No comments:
Post a Comment