பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

20 Apr 2017

..பாட்டியற்றுக தொகுப்பு: 4 ...தொடர்ச்சி

..பாட்டியற்றுக தொகுப்பு: 4 
...தொடர்ச்சி


15. கவிஞர் சியாமளா ராஜசேகர்
கலைநயமாய் மேகம் கவின்கோல மிட்டே
அலையலையாய் வந்தே அமைதியாய்த் தூங்கும் 
மலையழகே மண்ணில் மலைப்பு 

தலைதெறித்து வீழ்ந்து சலசலத் தோடும்
மலையருவி கண்டு மனம்பொங்கி வாழ்த்தும் 
மலையழகே மண்ணில் மலைப்பு

விலையிதற் குண்டோ வியந்திடு முள்ளம்
வலைப்பட்டுப் போகும் வனப்பிலது மூழ்கும் 
மலையழகே மண்ணில் மலைப்பு 

16. கவிஞர் அ.ஷ்ஃபா அஷ்ரப் அலி
கன்னி யிளநிலவாள் காலூன்றி வான்வரவே
மின்னுமே மண்ணு மிதற்கீடாய்ப் பேரெழில்
இன்னுமொன் றுண்டோ இயம்பு

மின்னு முடுக்களுக்குள் மேகத் திரைமறைவில்
நின்று முகம்காட்டும் நீல்வா னிலவேதான்
என்றுமெழி லென்றே இயம்பு !

வண்ணக் கதைப்பாட்டில் வாகா யமர்ந்திருக்க
எண்ணிப்பா டாப்புலவ ரிவ்வுலகி லாருண்டோ?
வண்ணநிலா வின்எழிலை வாழ்த்து !

17. கவிஞர் கண்ணன் இரா.
நெடுங்கடல் நீர்சுமந்து நீள்விசும்பில் பெய்யும்
கடுமழை நீரையெல்லாம் காவாது விட்டோம்
படுகின்றோம் பாட்டினைப் பார்!

அடுக்காய்ப்பொய்ச் சொல்லி அரசியல் செய்தோம்
தடுப்பணை கட்டாது தண்ணீர்சேர்க் காது
படுகின்றோம் பாட்டினைப் பார்!

மிடுக்காகக் கட்டடங்கள் மேல்தளம்வான் முட்டும்
அடுக்கடுக்கா யேரிகளில் அத்தனையும் நீரில்
படுகின்றோம் பாட்டினைப் பார்! 

18. கவிஞர் கைலாசநாதன் காளிதாசு
சேற்றில் விளைந்திடு செந்நெல்லின் வாசமும்
ஆற்றில் சுழித்தோடும் ஆச்சரிய ஓசையும்
காற்றில் கரையும் கலந்து.

போற்றும்அக வற்பா புலரியின் இன்பப்பா
சாற்றும் மறையொத்த சங்கரதே வாரப்பா
காற்றில் கரையும் கலந்து.

மீட்டும் யாழொலியும் மூங்கில் குழலொலியும்
நாட்டம் கொளச்செய்யும் நங்கையர் காலொலியும்
காற்றில் கரையும் கலந்து.

19. கவிஞர் நட்ராஜ் மெய்யன்
அங்கம் மறைத்தபடி ஆவியென வானுலவி
எங்கும் மழைகொடுக்க ஏற்ற முகிலுழவர் 
சங்கடம் தீர்தற்குச் சான்று!

எங்கும் குளிர்தனை ஏற்றிவைக்கும் மார்கழியில் 
தொங்கும் இலைநுனித் தூங்கும் பனித்துளியே 
மங்காப் பரவசத்தின் மாண்பு!

மங்காப் புகழ்கொண்டு மாமலை மேல்நின்று
பொங்கும் புனலெடுத்துப் பாயும் நதிமகளே
சிங்காரப் பூமிக்குச் சீர்! 

20. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து
புவியு மதியும் புதனும் சனியும்
ரவியு மதனின் ரகமும் பிறவும்
சிவத்தில் உருளும் பொருள்

இருளும் ஒளியும் இசையும் ஒலியும் 
மருளும் நமது மனமும் இறையின்
அருளில் உணரும் பொருள்

இறையி னருளி லெதுவும் நிகழும்
மறையின் பொருளும் மதியு மறிவு
மிறையி லுலவும் பொருள்! 

21. கவிஞர் கட்டிக்குளம் ஓ.சுந்தரமூர்த்தி
துள்ளும் அருவிகளில் தூங்கும் கடல்நீரில்
எள்ளும் பறவைகளில் என்தாயின் தாலாட்டில்
தள்ளுமனம் நற்சுகமே கொண்டு 

கொள்ளை மலர்வாசம் கோலம் முழுவதற்கும்
அள்ளிக் கொடுக்கும் அமுத சுரபியதில்
தள்ளுமனம் நற்சுகமே கொண்டு 

வள்ளிக் கிழங்கழகும் வந்தமரும் மானினமும்
தெள்ளிய நீரோடைத் தேன் சுவையிற் குன்றாது
தள்ளுமனம் நற்சுகமே கொண்டு

22. கவிஞர் பொன்.பசுபதி
தென்றல் சுமந்துவரும் தேன்மலர்கள நாற்றத்தை
இன்பமெலாம் கூடிவரும் எங்குநோக்கின் சோலையிலே
கண்போன் றியற்கையைக் கா.

இன்குரலில் பூங்குயில்கள் இன்னிசை பாடிவரும்
வண்டுகளும் தேனையுண்ண வண்ணமலர் தேடிவரும்
கண்போன் றியற்கையைக் கா.

மின்னிமின்னிக் கண்சிமிட்டும் விண்மீன்கள் மேல்வானில்
தண்ணொளியைத் தங்கநிலா தந்துநமை இன்புறுத்தும்
கண்போன் றியற்கையைக் கா.

23. கவிஞர் கனகரத்தினம் செல்லமுத்து
புல்லில் பனித்துளியாய்ப் பூவாய் மறைந்திருக்கும் 
சொல்லின் தமிழின் சுரம்போல மெல்லவே 
நல்லெனவாய் உய்யும் நமக்கு!

கல்வியே கண்ணாகக் கண்டிட்டோர் காணாத 
நல்லெழில் வாழும் நதிகளும் இன்பமே
நல்லெனவாய் உய்யும் நமக்கு!

வெல்லுமென எண்ணியே வெட்டிச்சாய்த் திட்டாரே 
கொல்லும் அனலில் கொதிப்பாய்ப் புலம்பியபின் 
நல்லெனவாய் உய்யும் நமக்கு!

24. கவிஞர் அர்ச்சனா குருநாதன்
வெண்பனி தூவும் விடியற் பொழுதினில் 
தென்திசைத் தென்றலும் தேகம் தழுவிட 
என்மனம் கொள்ளும் மகிழ்வு.!!

தென்றலும் பாடிடத் தென்திசைச் சோலையில் 
வெண்பனி முத்தினை வெப்பம் சுவைத்திட
என்மனம் கொள்ளும் மகிழ்வு.!!

அன்பினால் தென்றலே ஆசையாய்க் கொஞ்சிட
வெண்பனிப் பூக்களை வேகமாய்த் தீண்டினால்
என்மனம் கொள்ளும் மகிழ்வு

25. கவிஞர் மதுரா
துள்ளும் அலைகளிலே தூங்கிடும் மீனினமே
அள்ளிக் கொடுக்கும் அழகான ஆழ்கடலே
வள்ளல் இயற்கையைப் பார்.

புள்ளும் முரலும் புலர்காலை நேரத்தில்
கொள்ளை அழகதனை கொண்ட வனமங்கை
வள்ளல் இயற்கையைப் பார்.

கிள்ளை மொழியால் கிளிக்கூட்டம் கூடியிங்குப்
பிள்ளைத் தமிழாலே பேசிடும் ஆவலாய்
வள்ளல் இயற்கையைப் பார்.

26. கவிஞர் ராசாபாபு
நன்றாய் மழைபொழிந்து நானிலம் வாழ்ந்திடவே ! 
மன்றாடிக் கேட்கின்றேன் மண்ணில் மரம்வளர்ப்பீர் 
என்றுமே நன்மை தரும்..

நன்றாய் நலமோடு நாம்வாழக் காற்றுதந்து
நன்மையே செய்திடும் நன்மரங்கள் நட்டிட்டால், 
என்றுமே நன்மை தரும்...

இன்சுவை காய்கள் இலைபூக்கள்எல்லாமே
இன்னிழலுந் தாம்தந்தே ஈர்க்கும் மரங்களும்
என்றுமே நன்மை தரும்....

27. கவிஞர் நிர்மலா சிவராசா
கதிரவன் காலை கவினுறத் தோன்றி
நதியில் மிளிர்வதை நன்குவந்து பாராய்
அதிசயம் என்னவென்று காண்

வேலை அலையில் விரிகதிர் மின்னுதல். 
சேலைச் சரிகையாய்ச் சீர்பெறு மாமந்தக் 
காலையின் காட்சியைக் காண்.

சோலைப் பறவைகள் சோம்பலை நீக்கியே. 
வேலை இருப்பபோல் வேகமாய்ச் செல்லுதே 
காலையின் காட்சியைக் கா!
★★★

No comments: