அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.!
முன் பயிற்சிகளைப் போன்றே இப்பயிற்சியிலும் பலர் பங்கேற்றனர். பலரும் புதிதாகப் பங்கேற்பது இப்பகுதியின் வெற்றியே. அனைவரின் ஊக்கம் மிகுந்த பங்கேற்பால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. அனைவருக்கும் நன்றி.
பாட்டியற்றுக: 8 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
நன்றி.!
***** ***** *****
பாட்டியற்றுக: 8
*ஆசிரிய விருத்தம்*
1.கவிஞர் சுந்தரராசன்.
ஆடிய சிவனின் ஓடிய மகனே
ஆவினன் குடிகுகனே!
நாடிடு வரங்கள் நாடிடு முன்னர்
நலமுறத் தருபவனே!
தேடியே யின்றே நின்றனை நாடித்
தீந்தமிழ்க் கவிகொணர்ந்தேன்!
பாடிடும் சிறுவன் நாவினி லுறைந்தே
பைந்தமிழ் பாய்ச்சுகவே!
★
2. கவிஞர் நடராசன் பாலசுப்பிரமணியன்
மூலவன் முந்தி விநாயகன் தன்னை
முன்னதாய்த் தொழுதிட்டு
மாலவன் மருகன் வேலவன் தன்னை
மனத்திடை வைத்திட்டே
ஆலவாய் அண்ணல் கடுவிட முண்டான்
அவனையும் வணங்கியபின்
வாலையாம் குமரி உமையவள் பாதம்
வணங்கிட உயர்வாயே!
★
3. கவிஞர் வள்ளிமுத்து
அலைகளு மாட கலங்களு மோட
அலவனுங் கரையோடும்
வலைகளில் மீனும் விழுந்துமே துள்ளி
வருந்தியே விளையாடும்
தலைகளில் வெள்ளை நுரைகளைத் தள்ளித்
தளிரலை விரைந்தோடும்
விளைவளம் வற்றாக் கடல்வள மென்றும்
விரிகரம் அழைத்திடுமே..!
★
4. கவிஞர் அர.விவேகானந்தன்
நாடியே நாதன் தாளினை நிலையாய்
நாளுமே பணிந்திட்டால்
வாடிய மனத்தில் வளமதைத் தந்தே
வாஞ்சையாய் வாழ்வளிப்பான்
ஒடிடும் துன்பம் ஒதுங்கியே யெங்கும்
ஒமென உச்சரித்துக்
கூடியே வணங்கிக் கும்பிடு வோம்நாம்
குறைகளைந் திடுவானே!
★
5. கவிஞர் சரசுவதி பாஸ்கரன்
இன்பமும் சுரக்கும் காதலின் பின்னே
இதயமும் சென்றிடுதே . உன்றனை நாடி என்றனின் மனமே
உலகினைச் சுற்றிடுதே .
ஒன்றுமே அறியாப் பெண்மகள் போலே
ஒருவளாய் நிற்பதேனோ
என்றுமே என்றன் கண்களும் நோக்கும்
என்னுயிர் நீயன்றோ ?
★
6. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்.
குன்றினை எடுத்துக் குளிர்மழை காத்தக்
கோகுல நாயகனே
கன்றினை மேய்த்துக் காளியன் அதன்மேல்
களிநடம் கண்டவனே
நன்றுனை நெஞ்சில் கொண்டவர் மகிழ
நலச்செயல் புரிந்தவனே
இன்றுனை அடைந்தோம் இனிதுடன் மகிழ
எந்துயர் களைவாயே!
★
7. கவிஞர் குருநாதன் ரமணி
காலினில் தைத்த முள்ளெனில் அதனைக்
. கையினால் எடுத்திடலாம்
ஓலையில் கீறும் முள்ளெனில் அதனால்
. ஓவியம் எழுதிடலாம்
சோலையில் ஏதும் முள்ளிலை யென்றே
. சுகம்வர நடந்திடலாம்
வேலமுள் உள்ளம் தைத்ததை நானும்
. விண்டெவன் சொல்லுவதே!
★
8. கவிஞர் சேலம் பாலன்
வரவென என்ன வருமென எண்ணி
வாழ்வது நடக்கிறதே !
தரமுடன் வாழ்வோர் தவறுகள் கண்டும்
சகிப்பது நடக்கிறதே!
உரசிடும் கருத்தே உளத்தினில் இருந்தும்
ஒதுங்குதல் நடக்கிறதே!
மரபுடை சிறப்பை மனதினில் கொள்ளார்
வளர்வது நடக்கிறதே!
★
9. கவிஞர் பரமநாதன் கணேசு
மண்ணினைக் கையால் வாரியே யள்ளி
.வாயினில் போட்டிடுவான்!
கண்ணனாய் வந்து கண்ணெதிர் நின்று
.கள்வெறி கொளவைப்பான்!
வெண்ணிலா ஒக்கும் பால்முகம் காட்டி
.விந்தைகள் செய்திடுவான்
பண்ணுவான் குறும்பு மார்பணைப் பேரன்
.பாரிதில் நற்பேறே!
★
10. கவிஞர் வீ.சீராளன்
மொந்தையில் பனங்'கள் முப்பொழு துண்ணும்
மூடரின் பார்வையிலே
கந்தையில் உடலைக் கட்டிடும் ஏழை
கவர்ச்சியில் தெரிந்திடுவர்
மந்தையில் பிறந்த மாடுகள் போன்றோர்
மயக்கமும் கலைத்திடவே
சிந்தையில் மனிதம் சிறுதுளி ஊட்டச்
செழித்திடும் வையகமே !
★
11. கவிஞர் நாகினி கருப்பசாமி
கூடவே இருந்து குழியினில் தள்ளும்
குற்றமும் புரிகின்ற
நாடகத் திறனை முளையிலே கிள்ளி
நசுக்கிடும் துணிச்சலுக்கும்
வாடகை பேசும் புல்லிய குணமும்
வாய்த்திடும் புவியினையே
பாடமாய்க் கற்கும் அனுபவக் கல்வி
பக்குவ நலம்தருமே!
★
12. கவிஞர் இரா.கி.இராஜேந்திரன்
சிற்றிடை அசைய சிரித்தவள் போகச்
சிலிர்த்திடும் மனமுமாகி
முற்படும் முழுமன் மதியொளி தனையே
முங்கியே பார்த்திருந்தான்
பற்றுடன் பார்த்து ரசித்தவன் அழைத்துப்
பரவசம் பலகொண்டான்
வற்றிய பாலை நிலத்தினில் மழையாய்
வடிந்தது நீர்பெருக்கே.!
★
13. கவிஞர் வனராசன் பெரியகண்டர்
தாமெனு மெண்ணந் தழைத்திடும் போது
தன்மைகள் சேராது
நாமெனு மெண்ணம் நம்மிடஞ் சேரின்
நன்மைகள் மாறாது
நாமுறு மின்பம் நால்வருங் காணின்
நலமது குறையாது
போமெனும் வாழ்வில் பொதுநலம் பேணின்
புகழது மறையாதே.!
★
14. கவிஞர். அழகர் சண்முகம்
வஞ்சகர் செய்த சூழ்ச்சியி னாலே
வந்தசா தீயெனும்பேய்
நஞ்சினைக் கக்கி நாட்டினை யாட்டி
நன்மையைத் தின்றிடவே
நெஞ்சுர மோடு நீட்டிய நாக்கை
நேர்மையைக் கொண்டறுத்தால்
அஞ்சிடச் செய்த தீயணைந் தோங்கும்
அன்புடன் சமத்துவமே!
★
15. கவிஞர் கலாம் ஷேக் அப்துல் காதர்
கற்பனை வேண்டும் வாழ்க்கையில் உயர
கனவுகள் வழியாக
அற்புதச் செயல்கள் பிறந்திடும் இதனால்
ஆழ்மன மொழியாக
நற்பலன் கிட்டும் துணிவுதான் உன்னை
நடத்திடும் விழியாக
சொற்களில் கொள்க தாயெனப் போற்றும்
சுவைதரும் தமிழெனவே!
★
16. கவிஞர் சு.மோகன்
விளமொடு மாவும் விளமொடு மாவும்
விளமொடு காயுமென்றே
விளங்கிட நீண்டு வளர்ந்திட ஈண்டு
விளைவது விருத்தமாகும்!
விளமெனி லிரண்டும் மாவெனி லிரண்டும்
விலக்கிலை என்றுரைப்பார்!
விளைந்திடும் கனிபோல் விருத்தமும் கனிந்தால்
விரும்புவர் புலவர்தாமே!!
★
17. கவிஞர் சியாமளா ராஜசேகர்
கண்களில் மின்னல் காந்தமாய்க் கவரக்
காதலில் விழுந்துவிட்டான் !
பெண்ணவள் அழகில் சொக்கியே அவனும்
பித்தனாய் மாறிவிட்டான் !
எண்ணிலாப் பாக்கள் இனிமையாய் வடித்து
எண்ணமும் சொல்லிவிட்டான் !
வெண்மதி முகத்தாள் மெல்லிடைத் துவள
வெட்கியே பூத்தனளே !
★
18. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரப் அலி
கருவறை தொட்டுக் கல்லறை வரையுங்
களிப்பினில் வாழ்வதற்கே
விரும்பிய படியே வாழ்ந்திடு வென்று
விழிகளைப் படைத்தவனாம்
தரும்வளம் யாவும் தரணியி லிங்கே
தரமெனத் தந்தவனாம்
அருள்மிகும் இறைவன் ஆற்றலை இங்கே
அறிந்திட ஆளிலையே!
★
19. கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி
கங்கையும் பிறைகொள் திங்களும் சென்னி;
கண்ணுதல் அறுபொறியும்;
மங்கையும் பாகம் மறைந்தவன் கோலம்
மண்சுமந் திடுவடிவாய்
அங்கெழுந் தருளு மடியவர்க் கடியன்
ஆயினும் முடியடியும்
பங்கய னும்பாற் கடல்வசிப் பவனும்
பார்த்திலன் அதிசயனே!
★
20. கவிஞர் விஜயகுமார் வேல்முருகன்
கிழக்கினில் கதிரும் விழித்தெழும் பொழுது
கிள்ளையும் பறக்கிறது
உழவரும் தம்மின் ஏரினைப் பூட்டி
உழைத்திடச் செல்கின்றார்
கிழவரும் மண்ணை வணங்கியே ஊக்கக்
கிளர்ச்சியை அணிந்துநன்கு
பழகிய தொழிலை அயர்ச்சியே இன்றிப்
பணிவுடன் தொடங்கினரே!.
★
21. கவிஞர் இளம்பரிதியன்
-
செவ்விய மணியைச் சேர்ந்திடு மாடி
திகழ்ந்ததன் ஒளியாகும்
கவ்விடு மிருளில் கவிந்ததன் பண்பு
கருமையின் நிறம்தாங்கும்
எவ்விடம் இருந்தும் பண்பது மாறா
ஏற்றதோர் மணியாகச்
செவ்விதாய் மாற்றும் செவ்வியன் தாளைச்
சேர்ந்திட முனைவோமே!
★
22. கவிஞர் நிறோஸ் அரவிந்த்
மனமது துவளும் பொழுதினில் அவளும்
மழையென நனைத்திடுவாள்
சினமது புரளும் பொழுதினில் அவளும்
சில்லென அணைத்திடுவாள்
தினமது போலும் பொழுதினில் அவளும்
தீதற வந்திடுவாள்
வனமது தவழும் அழகுநல் அதரம்
வஞ்சியும் தந்திடுவாள்!
★
23. கவிஞர் சுதர்சனா
காட்டினில் முழுதும் தேடியே உன்னைக் களைப்பினில் ஆழ்ந்துவிட்டேன்
வீட்டினில் என்னைத் தேடுவ ரென்ற விவரமும் மறந்துவிட்டேன்
நாட்டமாய் வந்த என் மனம் நோக நாடக மிடும்கண்ணா!
நீட்டிட வேண்டா இத்துணை நேரம் நேரினில் தோன்றுகவே!
1 comment:
மரபினைக் காக்கவந்த மாமணியே மன்னா
வரம்பொடு பாபுனைய வார்த்தக் கருத்தில்
தரமான நற்கவிதைத் தந்து பயிற்சி
தரும்நல் தருமதுரை வாழி
Post a Comment