இலக்கியத்தேன் துளிகள் என்னும்
இன்பமிகு தொடராம் இஃதை
உலகினுக்குப் படைகின் றேனே
உதவிடுவாய் சக்தி தேவி
தலைவணக்கம் உனக்குச் சொன்னேன்
தமிழ்வணக்கம் உனக்குச் சொன்னேன்
நிலைபெருவாய் என்றன் நாவில்
நீக்கிடுவாய் பிழையை நீயே !!!!
அன்பார்ந்த பைந்தமிழ்ச் சோலையின் கவிஞர்களே, வணக்கம்.
நம்மில் யாவருமே எதோ ஒரு காரணத்திற்காக காலில் சக்கரம் கட்டி ஓடும் இனத்தினராய் வாழ்கிறோம். இந்த இயந்திர வாழ்க்கைக்கு இடையில் "படித்தல் கலை" என்பது மிகவும் குறைந்து வருகிறது. அதிலே நமது மாணவப் பருவத்தில் படித்தலென்பது கட்டாயமாகவோ, கடமையாகவோ திணிக்கப்படுவதால் படிப்பின் மீது ஒருவிதச் சலிப்புண்டாகி, ஆர்வக்குறைவு காரணமாக ஊன்றிப் படித்தலின்றி, நுனிப்புல் மேய்வாகவே பலருக்குப் படித்தல் அமைந்து விடுகிறது.
இந்நிலையில், இலக்கியச் சுவை என்பது மிகக் குறைவான அளவே நுகரப்படுகிறது. பொருளுணர்ந்து படித்தால் இலக்கியப் பாடல்கள் மிகுந்த இன்பத்தையும், அக்காலப் புலவர்களின் ஆற்றலையும் ஒருங்கே உணர்த்தும். நேரமின்மை என்னும் தடை மற்றும் எளிதாகத் தோன்றாமை போன்ற காரணங்களால் பலரும் அவற்றைப் படிக்க ஆர்வம் காட்டுவதில்லை.
அவற்றின் பொருளுணர்ந்த ஒருவர் ஒரு சில பாடல்களின் கவிச்சுவையையும், பொருட்சுவையையும் எடுத்துக் கூறினாராயின் அதைப் படிப்பவர்க்கு நம் இலக்கியம் மீது பற்றும், மரபு பாடல்களின் மீது ஈர்ப்பும் உண்டாகும். அக்கருத்தின் வழி உருவானதே இப்பகுதி. "இலக்கியத் தேன் துளிகள்."
ஆம்...இலக்கியக் கடலிலிருந்து ஒருசில துளிகள் உங்களுக்காக.
#இலக்கியத்_தேன்துளிகள்
1) கண்டு கொள்ளே !
ஒரு அழகிய காலை. பசும்பொன் காய்ச்சி நீவிவிட்ட வானம் ஒளிக்கதிர்களை சோலையின் மலர்களின் மீது தூவிக்கொண்டு இருந்தது. அந்த அழகுமலர்ச் சோலையில் இருந்து பூக்களைப் பறித்துக் கொண்டு சோலையின் உட்புறம் அமைந்த ஆலயத்துள் நுழைகிறார் அவர்.
நெற்றியிலும் கைகளிலும் திருநீறு சுவாலைபோல் மின்ன, முழங்கால் தெரியுமளவு வெட்டி அணிந்து, கழுத்து முழுதும் ருத்திராட்ச மாலை ஒளிர்விட, கைகளில் மலர்களை ஏந்திக் கொண்டு, முகத்தில் பக்தி கனிந்த மெருகுடன், அவர் ஆலயத்துள் நுழைகிறார்.
அங்கே கோயிலில் காட்சி தந்தத் திருப்பெருந்துறைப் பெருமானை நேரில் பார்க்கிறார். அவரது உடல் சிலிர்ப்பதை உணர்கிறார். அவரது உடல் கொண்ட முடிகள் அத்தனையும் மலர்கள் போல அரும்பிடக் காண்கிறார். உடல் நிலநடுக்கம் கண்ட கட்டிடம் போல நடுங்கிடக் காண்கிறார்.
ஆராமுதம் போன்று விளங்கும் சிவனுடைய பாதத்தைக் கண்டு, தன் தலைக்கு மேலே கைகளை ஓங்கிக் குவிக்கின்றார். சிவபெருமானைக் கண்ட ஆனந்தக் களிப்பில் கண்ணீரால் தனது கண்களை நிறைக்கின்றார். ததும்புகிறார், உள்ளம் மிக வெதும்பி ஒரு புதுவிதக் கலக்கத்தை உணருகிறார். அப்படி உணர்ந்த அவர்,
"பொய்களைத் தவிர்த்து எப்பொழுதும் உனையே துதிப்பேன்" என்று உரக்கச் சொல்லிவிட்டு, "சிவாய போற்றி ஜெய ஜெய போற்றி" என்று வணங்குகிறார். தான் கைகள் கொண்ட மலர்களைத் தூவித் தொழுகிறார். அப்பொழுது "நான் இந்தப் புனிதமான ஒழுக்கத்தை ஒருநாளும் கைவிட மாட்டேன் ! இறைவனே" என்றொரு பக்திச் சூளுரையும் செய்கிறார் .
இப்படிச் சூளுரைத்த பிற்பாடு "என்னையும் உன் அடியவர்களுள் ஒருவனாகக் கண்டுகொள்வாய்." என்று பக்திமணம் கமழ அழுது அடி அடைகிறார். அவரது பக்தியைக் கண்டுள்ளம் பூரித்த இறைவன், அவரை ஆட்கொள்கிறான். அப்படி இறைவனால் ஆட்கொள்ளப் பட்டவர் தான் மாணிக்கவாசகர். இதுவே இன்றைய இலக்கியத் தேன் துளி. இந்தத் தேன் துளி அவர் இயற்றி அருளிய திருவாசகத்தில் இடம்பெறும் திருச்சதகத்தில் உள்ள முதற் பாடலாகும்.
பாடல் :
மெய்தா னரும்பி விதிவிதிர்த் துன்விரை யார்கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பிவெதும்பி உள்ளம்
போய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றிஎன்னும்
கைதான் நெகிழவிடேன் உடையாய் என்னைக் கண்டுகொள்ளே !
-மாணிக்கவாசகர்
கவிஞர்.ஸ்ரீ .விவேக்பாரதி
No comments:
Post a Comment