அன்பர்களே ....
தங்களை இந்த இரண்டாவது #இலக்கியத்_தேன்துளிகள் தொடரில் சந்திப்பதில் பேரார்வம் கொள்கிறேன்
.
2) தலைவனுந் தூதனும்
அலைகள் ததும்பி வந்து கரையோரம் நுரைகரம் கொண்டு ஓவியம் வரைந்து கொண்டிருந்த நேரம். அந்தக் கடற்கரையோரம் மலை குடைந்த குகை ஒன்றினில் நித்தம் நித்தம் கரை தொடும் அந்தக் கடலின் எதிர்புறத்தில் இருந்து எதையோ எதிர்பார்த்தபடி அமர்ந்து இருக்கிறது ஒரு கூட்டம். அனைவரின் காதிற்கும் கேட்கும் அந்த இரு ஒலிகளும் கிட்டத்தட்ட ஓசை ஒத்தது தான். ஒன்று, அலைகடல் எழுப்பும் சோவெனும் ஒலி. மற்றொன்று சோகக் கடலின் அலைகள் அந்தக் கூட்டத்துத் தலைவன் மனதில் உருவாகும் ஒலி.
அப்படியொரு சோகக் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் அந்தக் கூட்டத்தின் ஒரே கலங்கரை விளக்கம், அவர்கள் யாவரும் எதிர்நோக்கிக் காத்திருக்கும் அந்தத் தூதன். கடலுக்கு அப்பால் இருக்கும் அந்த ஊரில் இருந்து தாங்கள் விரும்பிய செய்தியைக் கொணரும் தூதன். என்ன செய்தியோ ? என்ன நிலவரமோ ? என்று அந்த மொத்தக் கூட்டமும் உள்ளுக்குள் கொந்தளிக்க, அவர்கள் கவலை துடைக்க வல்ல அந்த தூதனும் வருகின்றான்.
தாயைக் கண்ட மழலைபோல, மலரைக் கண்ட குழவிபோல அந்தக் கூட்டம் பெரும் ஆர்வத்தின் வசத்தில் வீழ, அவன் நடந்து வரும் திசை பார்த்துச் சூரியனைக் கண்ட தாமரை போல முகமலர் அவிழ்த்துக் கிடக்கின்றார்கள். அவன், தனது நல்லிதழ் முழுக்கப் புன்னகை ஒளியினை ஏந்தி நடந்து வரும் சூரியனாகத் திகழ்கிறான். அந்த நகையின் காரணம் நல்ல செய்தியாகத் தான் இருக்கும் என்று அந்தக் கூட்டமே மகிழ்ந்து நகை கொள்ள, அவர்கள் ஒளிக் கடன் வாங்கும் சந்திரன் ஆகின்றார்கள்.
வந்த தூதன், தலைவன் முகத்தைக் காண்கின்றான். தலைவனது ஏக்கப் பார்வையின் ஏற்றம் உணருகிறான்,அவன் வந்த கடல் இருக்கும் பக்கம் தனது புயபலம் பொருந்திய பெரிய உடல் தரையில் பட விழுந்து, அந்தத் தென் திசையை வணங்கிக் கை கூப்பித் தொழுகிறான். தனக்குக் கட்டளை இட்டு வினை முடிக்க ஆணை இட்ட தலைவனது பாதத்தை அவன் வணங்கி வாழ்த்தாது, அவன் வந்த அந்தப் பெருங்கடல் இருக்கும் திசையினை வணங்குகிறான்.
அப்படி அந்தத் தூதுவன் செயலால் குழப்பமடைந்து அந்தக் கூட்டமே திகைத்து நிற்கத், தெளிந்த நீரோடையை ஒத்த மனதுடைய தலைவன், அவன் எதிர்பார்த்த செய்தியைத் தூதுவனின் செய்கையால் உணருகிறான். தனது மனதில் பெரு மகிழ்ச்சி ததும்பிக் கவிழப் புன்னகைப் பூத்துப் பூவிதழ் மலர்க்கிறான்.
ம்ம்ம்ம்....பிறகவனால் என்ன செய்ய இயலும், தாமரை மலர்விட்டு மண்ணுலகத்தில் பிறந்த திருமகளான சீதா பிராட்டி தெற்கில் இருக்க அவளைக் கண்டு வந்த தூதுவன் அனுமன் அத்திசை வணங்குதல் அன்றி வேறு என்ன செய்வான் ...? மேலும் அனைத்தையும் குறிப்பினாலேயே உணரும் கொள்கை வாய்ந்த அந்தத் தலைவன் இராமன் இதை எப்படி உணராமல் இருப்பான் ?
கம்பனது காப்பிய அமுதில் இருந்தே இன்றைய தேன்துளி. சுந்தர காண்டத்தில் இடம்பெறும் திருவடி தொழுத படலத்தின் பாடலே இது.
எய்தினன் அனுமனும் எய்தி ஏந்தல்தன்
மொய்கழல் தொழுகிலன் ! முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன் ! கையினன் !
வையகம் தழீஇநெடி திறஞ்சி வாழ்த்தினான் !
-கம்பர்
மீண்டுமொரு துளியில் தங்களைச் சந்திக்கிறேன்....
நன்றி
-விவேக்பாரதி
No comments:
Post a Comment