தொடர்ச்சி,...3
பொன்னான சுந்தரரைத் தடுத்தாட் கொண்டு
புவியினிலே நட்புக்குக் காட்டாய் நின்று
என்னப்பன் சிவனாண்டி தோழ னானான்.
ஏழுமலை குசேலரிடம் தோழ னானான்
என்னய்யன் முருகன்வீர பாகு வோடும்
இராமபிரான் குகனோடும்...உலகோர் போற்றும்
பொன்னம்ப லத்துவாசன் வாப ரோடும்
போற்றுவிதம் தோழமையாய்ப் பழகி னார்கள்!
என்னோடும் அருட்கடவுள் நண்ப னாக
இருள்விலக்கும் ஒளியாக இருந்தான் ஓர்நாள்
என்னுளத்தின் ஐயங்கள் யாவும் போக்கி
ஏற்றத்தைப் பெறுவதற்கு வழியைச் சொல்லி
மண்ணுள்ளோர் அனைவருக்கும் வாழு தற்கு
வழிசொன்ன ஒருநிகழ்வைச் சொல்வேன் ஈங்கு.
என்னுள்ளம் மகிழ்ந்தஅந்த நிகழ்வால் தானே
இறைவனைநான் தோழனாகக் கருது கின்றேன்!?
உழைத்துவிட்டுக் களைப்பாகப் படுத்தி ருந்தேன்
ஓடிவந்து மகள்சொன்னாள் 'யாரோ என்னை
அழைப்பதாக '... போய்க்கதவைத் திறந்துப் பார்த்தேன்
அன்பரசன் நின்றிருந்தான்...பழைய நண்பன்.
பழகியநாள் நினைவோடப் பாசத் தோடும்
பரிவோடும் அணைத்தவனை அமர வைத்தேன்
விழைவாக விருந்தோம்பல் முடிந்த பின்பு
மேன்மாடம் சென்றமர்ந்து பேச லானோம்.!
....தொடரும்....
No comments:
Post a Comment