தொடர்ச்சி...4
"என்னிடத்தில் மகிழ்வாகப் பேசும் போதே
ஏன்முகத்தில் கவலை"யென நண்பன் கேட்டான்
"ஒன்றுமிலை" என்றேன்நான்... "மறைக்கா தேநீ
உள்ளத்தில் உள்ளவற்றைச் சொல்லி விட்டால்
உன்மனத்தில் அமைதிவரும்" என்றான் நண்பன்
"உண்மைதான் என்மனத்தின் எண்ண மெல்லாம்
உன்னிடத்தில் சொல்கின்றேன்" எனத்தொ டங்கி
உள்ளத்தின் உணர்ச்சிகளைக் கொட்டு கின்றேன்.!
"நாள்தோறும் செய்தித்தாள் படிக்கும் போது
நற்செய்தி ஏதேனும் இருப்ப துண்டா?
ஆள்கடத்தல், கொலைசெய்தல், வன்மு றைகள்
அண்ணன்தம்பி சண்டைகள் வெட்டுக் குத்து
நாள்கடத்தும் வாழ்க்கையடா இந்த வாழ்க்கை
நாளுக்கு நாள்மிகுந்து வருந்தும் மக்கள்
வாள்கொண்டே அறுத்தாற்போல் என்னுள் ளத்தை
வாட்டுதடா கவலையெனை " என்று சொன்னேன்.!
தம்பிள்ளை தம்குடும்ப நலத்திற் காகத்
தன்னலமாய் வாழ்கின்ற உலகில் நீயோ
இம்மண்ணின் மக்களுக்காய் வாடு கின்றாய்
இத்தரையில் எத்தனைபேர் உன்போல் உள்ளார்?
இம்மக்கள் துன்பத்தின் கார ணத்தை
இயம்புகிறேன் கேள்நண்பா...மக்கள் நெஞ்சில்
நம்பிக்கை அற்றொழிந்தே அன்பும் நீங்கி
நற்பண்பை இழந்ததனால் இந்தத் துன்பம்.!
(தொடரும் .....)
No comments:
Post a Comment