செய்யுளியல் !
இனிச் செய்யுளியலை நோக்குவோம். மேற்சொன்ன செய்யுள் உறுப்புகள் ஆறையும் பயன்படுத்தி இயற்றப்படுவதே மரபுச் செய்யுள் ஆகும்.
மரபுப்பாக்கள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே முறையாக யாக்கப்பட்டன என்பதற்குத் தொல்காப்பியத்தின் பொருளதிகாரச் செய்யுளியலே சான்றாகும்.
யாப்பதிகாரம் என்றபெயர் பெறுமளவுக்கு மிகுதியான நூற்பாக்கள் செய்யுளியலில் இடம் பெற்றிருந்தாலும் இப்போதைய நிலையில் சிலநூற்பாக்கள் கூறும் இலக்கண விதிகள் வழக்கிழந்து போயின.
நான்கு வகை அசைகளைத் தொல்காப்பியர் கூறுகிறார்.
நேரசை,
நிரையசை,
நேர்பசை,
நிரைபசை
எனத் தொல்காப்பியர் கூறிய நான்கசைகளில் தொல்காப்பியர் உரியசை என அழைத்த நேர்பும் நிரைபும் இன்று வழக்கிழந்து விட்டன. பிற்கால யாப்பியலார் நேரசை நிரையசை ஆகியவற்றை மட்டுமே ஏற்றுக் கொண்டு நேர்பசை,நிரைபசை ஆகியவற்றை ஈரசைகளாகக் கொண்டு அவற்றைத் தேமா, புளிமா என்ற வாய்பாட்டில் அடக்கிவிட்டனர். இன்றும் ஒருசாரார் வெண்பாவின் ஈற்றடி ஈற்றுச்சீர் வாய்பாட்டில் இவற்றைக் கையாண்டு வருகின்றனர்.
தொடை வகைகளைக்கூறும் தொல்காப்பியர் தொடைகளின் உறழச்சியைக் கணக்கிட்டு அவை 13699 எனக் கூறுகிறார்.
இவ்வுறழ்ச்சி நிலையைப் புரிந்து கொள்வது சற்று கடினம். பின்னால் வந்த யாப்பியல் நூல்களான யாப்பருங்கலம் யாப்பருங்கலக்காரிகை முதலானவை இத்தொடை வகை அமைப்பைப் பின்பற்ற வில்லை . அவை முதல்தொடை என மோனை ,எதுகை,முரண்,இயைபு, அளபெடை ஆகியவற்றைக் கூறி இவற்றின் உறழ்ச்சியாக அடி முதல் முற்று வரை எண்வகை உறழச்சிகளைக்கூறி அந்தாதித்தொடை, இரட்டைத்தொடை, செந்தொடை என்ற மூன்றையும் அடக்கித் தொடைகள் மொத்தம் 43 என எளிமைப் படுத்தி விட்டனர். இவை போன்ற இன்னும் சில காரணங்களால் செய்யுளியலின் சிலநூற்பாக்கள் கூறும் இலக்கண விதிகள் வழக்கிழந்து போயின.
தொல்காப்பியம் கூறும் பாக்கள் யாவை?
செய்யுளுக்கான தொல்காப்பியர் கூறும் இருபத்தாறு உறுப்புகளுள் பா என்பது பதினோறாவது உறுப்பாக அமைகிறது.
நால்வகைப்பாக்களைக்குறிப்பிடும் தொல்காப்பியர் அவை முறையே ஆசிரியப்பா,வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா என்கிறார். இன்னும் இவற்றைத் தொகுத்துக்கூறினால் நடையால் ஆசிரியத்துள் வஞ்சி யும் வெண்பாவினுள்கலியும் அடங்கும் என்பார் தொல்காப்பியர். தொல்காப்பியர் கூற்றுப்படி பாவகைளுள் வெண்பா மூன்றாம் இடத்தைப் பெற்றது.
பாக்கள் பற்றியாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை கூறுவனயாவை?
தொல்காப்பியம் கூறிய முறையில் பாக்களை வரிசைப்படுத்தாது யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை ஆகிய இருநூல்களும் வெண்பா,ஆசிரியம், கலி ,வஞ்சி எனப்பாக்களை இம்முறையில் வரிசைப்படுத்துகின்றன. மேலும் ஒவ்வொரு பாவிற்கும் பொதுவான மூன்று பாவினங்களான துறை,தாழிசை,விருத்தம் ஆகிய மூன்று பாவினங்களைக் கூறுகின்றன. இவை கூறும் பாவும் இனமும் உறழப் பாவினம் பன்னிரண்டாகும். காரிகை ஐந்தாவது பாவாக மருட்பா எனும் பாவைக் குறிப்பிடுகிறது.
வெண்பா- வரலாற்றைச் சுருக்கிக் கூறுக?
கால அடிப்டையில் நமக்குக் கிடைத்த சங்கஇலக்கியங்களாகிய எட்டுத் தொகை பத்துப்பாட்டு ஆகிய நுõல்களில்
கலித்தொகை,பரிபாடல் தவிர ஏனையவை ஆசிரியப்பாவால் இயன்றவை. கலித்தொகை மற்றும் பரிபாடலில் வெண்பா வடிவங்களைக் காணமுடிகிறது. இவை தொல்காப்பியர் கூறிய நெடு வெண் பாட்டு, குறுவெண்பாட்டு என்ற அமைப்பைச் சார்ந்ததாகலாம்.
வெண்பாவிற்கான ஒரு முழுமையான வடிவத்தை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில்தான் முதலில காண முடிகிறது. திருக்குறள் முழுதும் குறள் வெண்பாக்களால் ஆக்கப்பட்டுள்ளது. ஏனைய கீழ்க்கணக்கு நூல்கள் வெண்பாவால் ஆனவை.
சிலம்பின்முதல்காதையான மங்கல வாழ்த்துபாடல் சிந்தியல் வெண்பாவில் தொடங்குகிறது.
பக்தி இலக்கியகாலத்தில் வெண்பா சிறப்பான ஓர் இடத்தைப் பெற்றது.காரைக்கால் அம்மையார் பாடிய பாடல்கள்,முதல்மூன்று ஆழ்வார்கள் நம்மாழ்வார் முதலானோர் வெண்பாவில் பக்திப்பாடல்களைப் பாடியுள்ளனர். முத்தொள்ளாயிரம், நள வெண்பா முதலான நூல்கள் வெண்பாவால் பாடப்பட்ட சிறப்பான நூல்களாகும். புறப்பொருள் இலக்கண நூலான புறப்பொருள் வெண்பாமாலையில் ஒவ்வொரு துறைக்கான எடுத்துக்காட்டு வெண்பா ஒவ்வொன்றும் சிறந்தமுறையில் அமைந்ததாகும்.இன்றுவரை வெண்பா பாக்களில் செல்வாக்குப் பெற்ற பா வகையாக மிளிர்கிறது.
வெண்பாவின் பொது இலக்கணம் யாது?
1.வெண்டளை பயின்று (இயற்சீர் ,வெண்சீர்) வேற்றுத்தளை விரவாமல் வரும்
2.ஈற்றடி முச்சீராய் வரும்., ஏனைய அடிகள் நாற்சீராய்(அளவடியால்) வரும்
3.ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள்,மலர்,காசு,பிறப்பு எனும் வாய்பாட்டில் முடியும்
4.செப்பல் ஓசை உடையதாய் வரும்
வெண்பாவின் வகைகள் யாவை?
அமைப்பியல் அடிப்படையில் வெண்பாவை இருபெரும் பிரிவுகளாகப் பகுக்கலாம்
1. இன்னிசை வெண்பா
2. நேரிசை வெண்பா.
தனிச்சொல் இல்லாத வெண்பா இன்னிசை வெண்பா ஆகும். தனிச் சொல் பெற்றுவரும் வெண்பா நேரிசை வெண்பா ஆகும்.
அடிகளின் எண்ணிக்கை அடிப்படையில் வெண்பாவின் வகைகள் ஐந்தாகும்.
1.குறள் வெண்பா(இரண்டடிகளால் ஆனது இன்னிசை, நேரிசை)
முதலடியின் ஈற்றுச்சீர் எதுகையோடு கூடிய தனிச்சொல்லாய் அமைவது நேரிசை. அவ்வாறு தனிச்சொல்லாய் அமையாதது இன்னிசை வெண்பா
எ.கா.
அன்பைக் கொடுத்துப்பார் ஆன்றோர் அறவுரைகேள்
இன்பம் வளரும் இனிது (இன்னிசை)
அல்லி மலர்க்கொடியே அன்புருவே--முல்லையே
சொல்லழகே நீயே சுகம் (நேரிசை)
2.சிந்தியல் வெண்பா(மூன்றடிகளால் ஆனது.இன்னிசை, நேரிசை)
இரண்டாம்அடியின் ஈற்றுச்சீர் எதுகையோடு கூடிய தனிச்சொல்லாய் அமைவது நேரிசை. அவ்வாறு தனிச்சொல்லாய் அமையாதது இன்னிசை
எ.கா.
தீய வழக்கங்கள் தேடியே வந்திடும்
நீயதை நீக்கினால் நிம்மதி நீடிக்கும்
துõயதைச் செய்வாய் தொடர்ந்து(இன்னிசை)
கண்டேன் அவனையே காதலித்தேன் அன்னவன்
வண்டானான் வாக்களித்தான் வஞ்சகமாய்-- உண்டவன்
என்று வருவான் இனி(நேரிசை)
3.(அளவியல்) வெண்பா(நான்கடிளால் ஆனது இன்னிசை, நேரிசை)
இரண்டாம்அடியின் ஈற்றுச்சீர் எதுகையோடு கூடிய தனிச்சொல்லாய் அமைவது நேரிசை. அவ்வாறு தனிச்சொல்லாய் அமையாதது இன்னிசை
துகள்தீர்பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டு
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க
அகடுற நில்லாது யார்மாட்டும் செல்வம்
சகடக்கால் போல வரும்( இன்னிசை )
எ.கா.
முறைதவறி வாழ்வை நடத்தல் முறையன்று
அறநெறி யாக்கமே வாழ்க்கை-----இறைநெறியில்
வாழ்வை நடத்தினால் வாழ்வே வளமாகும்
சூழ்நிலையும் ஈயும் சுகம்(நேரிசை)
4.பஃறொடை வெண்பா(ஐந்தடி முதல் பன்னிரண்டு அடிவரைஆனது. இன்னிசை, நேரிசை)
கருத்துகள் ஓங்கக் கவிதையும் ஓங்கும்
விருப்பம் நிறைவேறும் வேணவா கூடும்
எதுகையும் மோனையும் எப்படியும் பாட்டில்
அதுவாய் அமையுமே அஞ்சேல் அதுபற்றிச்
சிந்திக்கா வண்ணம் சிறந்த கருத்தினைச்
சிந்தித் தெழுதல் சிறப்பு (இன்னிசை)
அன்போடும் ஆன்ற ஒழுக்கோடும் எப்போதும்
பண்போடும் பாங்கோடும் வாழ்கின்ற-- அன்புள்ள
இல்லறத்தில் நல்லறம் என்றும் இருக்குமே
இல்லம் இயங்கும் எழில்சேரும்-- செல்வம்
உலவிடும் துõய்மை நில வு ம் விருப்பம்
நலமுடன் கூடும் நயந்து(நேரிசை)
ஒவ்வோர் இரண்டாம் அடியின் ஈற்றுச்சீர் எதுகையோடு கூடிய தனிச்சொல்லாய் அமைவது நேரிசை. அவ்வாறு தனிச்சொல்லாய் அமையாதது இன்னிசை
1. கலிவெண்பா (பன்னிரண்டு அடிக்குமேல். இன்னிசை, நேரிசை)
எ.கா.கந்தர் கலிவெண்பா போன்றவை.
ஒவ்வோர் இரண்டாம் அடியின் ஈற்றுச்சீர் எதுகையோடு கூடிய தனிச்சொல்லாய் அமைவது நேரிசை. அவ்வாறு தனிச்சொல்லாய் அமையாதது இன்னிசை
இனி வெண்பாவைப்பற்றிய சில சிறப்புச்செய்திகள்.
கோயில் என்ற பொதுப்பெயர் சிறப்பாகச் சிதம்பரம் நடராசர் கோயிலைக் குறிப்பது போல் வெண்பா என்ற பொதுப்பெயர் சிறப்பாக அளவியல் வெண்பாவைக் குறிக்கும்.
அளவியல் வெண்பாவின் பயன்பாடு தமிழிலக்கியங்களில் மிகுந்த பயன்பாட்டோடு இருந்த காரணத்தால் இப்பொதுப்பெயர் சிறப்பான பெயரைக் குறித்தது.
அடி அளவை வைத்துக்
குறள்வெண்பாவிற்கு ஓரடி முக்கால் என்றும்
சிந்தியல் வெண்பாவிற்கு ஈரடி முக்கால் என்றும்
அளவியல் வெண்பாவிற்கு மூவடி முக்கால் என்றும்
பஃறொடை வெண்பாவிற்குப் பலவடி முக்கால் என்றும்
பெயர்கள் உண்டு.
இருகுறள் வெண்பாக்களை இணைத்து அளவியல் நேரிசை வெண்பா உருவாகும் போது முதல் குறள் வெண்பாவின் ஈற்றுச்சீருடன் குறித்துவரும் எதுகையோடு கூடிய தனிச் சொல்லுக்கேற்ப வெண்டளை தட்டாவண்ணம் ஓரைசையையோ ஈரசையையோ இணைத்து உருவாவதே ஆசிடையிட்ட அளவியல் நேரிசை வெண்பா ஆகும்.
வெண்பாவின் எல்லா அடிகளும்
ஒரே எதுகை பெற்றுவருமானால் ஒருவிகற்ப வெண்பா. அளவியல் வெண்பாவில் தனிச்சொல்லொடு கூடிய இரண்டடிகள் ஓர் எதுகையாயும் மற்றஇரண்டடிகள் ஓர் எதுகையாயும் வரின் வெண்இருவிகற்ப பா. கலிவெண்பாவைக் கலிப்பாவின் வகையாகக் கொள்வதும் உண்டு.
செப்பலோசை மூவகையாகும்
1.ஏந்திசைச் செப்பல்- வெண்சீர் வெண்டளை மட்டும் பயின்று வருவது
2. நூங்கிசைச் செப்பல்- இயற்சீர் வெண்டளை மட்டும் பயின்று வருவது
3.ஒழுகிசைச்செப்பல் - வெண்டளையே பயின்று வருவது
நால்வருணத்தாருள்
வெண்பா அந்தணர்க்குரியது என்றும்
ஆசிரியம் அரசர்க்குரியது என்றும்
கலிப்பா வணிகர்க்குரியது என்றும்
வஞ்சிப்பா வேளாளர்க்குரியது என்றும்
யாப்பியலார் பாகுபடுத்தி யுள்ளனர். கலி வெண்பாவை கலிப்பா இனமாகக் கருதவதும் உண்டு.
ஆனால் வேற்றுத்தளை தட்டாது வெண்டளையே பயின்று வருவதால் அதை வெண்பா இனமாகக் கொள்வது ஏற்புடைத்தாகும்.
முனைவர் பத்மநாபன் பட்டாபு
4 comments:
அருமை
மிக்க நன்றி
மிக அருமை அய்யா !!
வருணத்தார்க்கு பாவகை... புதுச்செய்தி... இதற்கு ஏதும் சங்க செய்யுள் உண்டா?
Post a Comment