அன்பு நண்பர்களே! கவிஞர்களே!
மிகவும் கடினமான இதழகல் வெண்பா முயற்சியில் பல கவிஞர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர். சிலர் மிகவும் முயன்றும் இயலவில்லை, என்றாலும் நாளடைவில் செம்மையான பயிற்சியின் மூலம் வெற்றிடைவர். முயற்சி திருவினையாக்குமன்றோ? பங்கேற்ற அனைவருக்கும் பைந்தமிழ்ச் சோலையின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். வழக்கம் போலவே, இதில் கொடுக்கப்பட்டுள்ள வரிசை எண் கவிஞர்கள் அனுப்பிய வரிசைமுறைக்கேற்பவே கொடுக்கப்பட்டது. தரவாரியாகக் கொடுக்கப்பட்டதன்று. படித்துப் பார்த்து வாழ்த்துங்கள். அது அனைவருக்கும் ஊக்கமாக அமையும்.
தமிழன்புடன் பாவலர் மாவரதராசன்
*** முயன்று பார்க்கலாம் - 1 இதழகல் பாக்கள். ****
1. கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி
இதழகல் குறள்வெண்பா
எந்தாய்! எழிலாய்! எனைக்காத் தகலச்செய்!
கந்தா!நின் கையால் கலி
* இதழகல் நேரிசை வெண்பா
ஐய!நின் ஆக்கச் செயல்திறத் தையெண்ணிச்
செய்யச்சீர் எண்ணத்தார் சேர்ந்திடச் - செய்யிதனை
யென்றாண் டதனைச் செழிக்கச்செய் யாற்றலை
நன்றாய்நான் சாற்றலெந் நாள்?
* இதழகல் இன்னிசை வெண்பா
கண்ணே யெனநான் அழைத்தேன்நின் கண்காணா
தெண்ணாதே யென்றறைந்தாய்! என்செய்கேன்? ஏந்திழையே!
எண்ணத்தே நீநிறைந்தாய் எங்கே தனித்தியங்க?
தண்ணிய நெஞ்சத்தைத் தா!
★
2. கவிஞர் வெங்கடேசன்
குறள் வெண்பா:
அரியன் எளியன் அரனயன் அன்னான்`
அரியின் இணையடி சேர்!
* நேரிசை வெண்பா :
அரியன் அறியார்க் கடியார்க் கெளியன்
அரியின் அடியை அடைந்திந் – திரன்தான்
இறைஞ்சிடக் கண்டே இரணியனைக் கீண்டான்
அறிந்திடக் கேடே யிலை!
* இன்னிசை வெண்பா
கண்ணினைய காதலியைக் காணாத காதலனாய்க்
கண்ணனையே காணா தயர்க்கின்றேன் என்றன
தெண்ணந்தான் என்னிடத்தி லில்லாதே நீளல்லில்
கண்ணய ராதே யினி!
★
3. கவிஞர் வீ.சீராளன்
குறள் வெண்பா !
இன்னல் அகற்றி இதயத்தைச் சேர்ந்திட்டாள்
என்னை இணைத்த. தளிர் !
* இன்னிசை வெண்பா
சீரெழிலாய்ச் செங்கனியாய்ச் சிந்தாத தேனடையாய்க்
காரிகையாய்க் காதல் கனிந்திட்ட - நேரத்தில்
சேர்கின்ற நாள்தன்னைச் சீக்கிரத்தில் நான்தேட
நேரெதிர் நின்ற நிலா!
★
4. கவிஞர் குருநாதன் ரமணி
இதழகல் நேரிசை வெண்பா
என்னென்ன நானில்லை என்றறியச் செய்தாய்நீ
என்னதான் நானெனக் கேட்டேன்நான் - என்னைநீ
என்றழைக்கா தேநீயே நான்நானே நீதெளி
யென்றானே நெஞ்சி லிறை.!
★
5. கவிஞர் அர.விவேகானந்தன்.
குறள் வெண்பா
அலையாய்ச் சிரித்தே அழைக்கின்றா யென்னைச்
சிலையழகே தந்தே னெனை.
* நேரிசை வெண்பா
காளை அழகினைக் கண்டே நிலைகண்டாய்
தாளை நினைந்தே தழைக்கின்றாய்- நாளையதை
எண்ணியே சாதலென் றேங்காதே ஏந்திசையே!
கண்ணே யெனைக்காதல் செய்!
* இன்னிசை வெண்பா
காணாத காட்சியினைக் கண்டிடக் காரெழில்
ஆணழகன் அண்ணலை நாடியே காணாத
சீரடிக் கண்ணனெனக் கண்டிட்டே சேயாய்நீ
ஈரடியை நெஞ்சில் நினை.
★
6. கவிஞர் நாகினி கருப்பசாமி
குறள் வெண்பா
ஆழ்ந்தநற் சிந்தனை ஆற்றலின் நற்செய்தித்
தாழ்ந்திடாச் செய்கையில் தான் !
* இன்னிசை வெண்பா
ஆணையிட் டாரிடல் ஆக்கச்சிந் தையெனச்
சாணைக்கல் லிட்ட சரியென்ற தாளத்தில்
ஆடியிங்கே நிற்கின்ற ஆட்சி நெறியான
ஈடில் தயையே இறை!
★
7. கவிஞர் பரமநாதன் கணேசு
நேரிசை வெண்பா
சீரெழில் காட்டியென் சிந்தையில் சித்திரத்
தேரென நின்றாயெ னைத்தின்றாய் - நேரினில்
கண்டிடில் நெஞ்சினைக் காந்தக் கனலெனக்
கண்களால் தாக்கினாய் நீ!
★
8. கவிஞர் இரா.கி இராஜேந்திரன்
குறள் வெண்பா
கண்ணில் நிலையிலாக் காட்சிகள் காண்கையில்
எண்ணத்தில் ஏறா களி!
* இன்னிசை வெண்பா
கதையினைக் கேட்டாள் கரைய நேராய்
சிதைகண்ட சீதையாகத் தீயாகிக் கண்ணகி
நகர்சென் றெரித்தாள் தணலான நன்னெற்றி
நாகத்தின் சீற்றதைக் காண்!
★
9. கவிஞர் நிறோஸ் அரவிந்த்
குறள்வெண்பா
கண்ணன் எழில்கண்ட கண்கள் கிறங்கியஃதை
அண்ட நினைந்த தறி!
* நேரிசை வெண்பா
நின்னெழில் காண நிலைத்தன கண்களே
இன்னெழில் நீயே இதழகல் - என்னெனக்
கண்களால் நானறியக் கன்னிநீ காட்டிய
தண்ணெழிற் சாலங்கள் தான்!
* இன்னிசை வெண்பா
நன்றே அடைந்திட நல்லிள நீரதைத்
தென்னையை நட்டிடத் தேடினேன் காணியைத்
தண்ணீர் நிறைந்தநல் தண்காய் தருதலால்
கண்ணெனக் காத்தல் கடன்!
★
10. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
குறள் வெண்பா
திகட்டாத செய்கைகள் தித்திக்க சிந்தை
அகலாத நேயத்தா லாள் .
* நேரிசை வெண்பா.
நிழலாகக் கண்ட நிசங்களே நேரி
லழியாத நேர்த்தி அறத்தால் - செழித்தலாய்ச்
செய்திட்ட நல்லச் செயல்கள் சிறந்திட
நெய்திட்ட என்றனின் நேர் .
★
11. கவிஞர் சியாமளா ராஜசேகர்
நேரிசை வெண்பா
கட்டிலில் கண்ணயர்ந்த கன்னியின் நல்லெழிலைக்
கட்டிளங் காளையே கண்டாயே !- சட்டெனச்
சிட்டாய்ச் சிலிர்த்தாயே ! சிங்கார நங்கையின்
கட்டழகில் காதலா கி !
* இன்னிசை வெண்பா
இதயத்தில் தேனாய் இனிதாய்க் கலந்தே
இதழகல் சிந்தை நிறைந்திடச் செய்யக்
கனிந்தேன் நெகிழ்ந்தேன் அழகில் சிலிர்த்தேன்
தனியாய்க் களித்தேனே யான் .
★
12. கவிஞர் புனிதா கணேசன்
இன்னிசை வெண்பா
யானறியேனின் தாளிணைக் கண்டிலேன் கண்களினால்
தேனனைய நல்லானே தேடுகிறேன் – தேடியே
கண்களிலே கண்ணீராய் நிறைய கலங்கினேன்
திண்நெஞ்சில் சேர்த்தணை நீ!
★
13. கவிஞர் சுதர்சனா
நேரிசைவெண்பா
தேடியே காலைக் கராகடிக்க நாரணனை
நாடியே யானை கதறக் - கடிதாய்க்
கரிதன்னின் இன்னலைத் தீர்த்திட்டான் நெஞ்சே!
அரியைக் கதியாய் நினை!
★
14. கவிஞர் சுந்தரராசன்
இதழகல் குறள் வெண்பா :
கட்டின்றி நின்றேனென் கட்டகலத் தானியங்கிக்
கட்டி யணைத்தாள் சகி!
* இதழகல் இன்னிசை வெண்பா
அற்றைநற் றிங்கள் அழகிய நாளதிலே
கற்றைச் சடையான் சடையினி லேற்றி
இறக்கித் தரணிக்கே கங்கையைத் தந்தான்
இறக்காதே நல்லான் இசை!
* இதழகல் நேரிசை வெண்பா
என்செய்ய நானே? எனக்கிங்கே ஆளில்லை!
நன்செய் நிலஞ்செழிக்க நாளைக்கே - யின்னல்தீர்
நீரிங்கே நிலைகண்டால் நிற்றல் எளிதன்றேல்
நீரில்லை யென்றால் கதி?
★
15. கவிஞர் வள்ளிமுத்து [
இதழகல் நேரிசை வெண்பா]
கலையே கலையிற் கிளர்ந்த சிலையே
சிலையிற்சிக் காச்சீ ரெழிலின்- தலையே
அடியேன் னடினெஞ்சைத் தாக்கிடியே நீயே
கடிதிலென் னைக்காதல் செய்.. !
★★★★★
No comments:
Post a Comment