வளந்தமிழ்ப் பாவலர்க்கு என் வணக்கம்..!
இவ்வாரத்து #இலக்கியத்_தேன்துளி யில் தங்களைச் சந்திப்பத்தில் மகிழ்வை அடைகிறேன். இதோ இவ்வாரத்துத் துளி
5) வேனிலின் கார்காலம்
அந்தப் பச்சிளஞ் சோலையில் அந்த அழகிய மாலையில் தலைவனும் தலைவியும் காதலில் லயித்து எழில்களை ரசித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது தான் யாரும் எதிர் பார்க்காத அந்த வசந்த கால இளவேனில் வேளையில் அந்த அதிசயம் நடந்தது.
அப்படிப் பட்ட வேளையில் இரு மயில்கள் அந்தக் கடுமையான வேனில் நேரத்தில் தொகையினை விரித்து ஆடத் துவங்குகின்றன. அவை ஏன் ஆடின? எதற்காக மழையின் வருகையில் மட்டும் ஆடும் மயில்கள் வேனிலில் ஆடின ? அந்தச் சோலையில் அழகிய பெண்கள் சிலர் மகிழ்ந்து சிரித்து ஆடிக் களித்துக் கொண்டிருக்கின்றனர்.அவர்களது கரிய நிறத்துக் கூந்தலானது காற்றில் ஆடும் தருவாயில் அவை மழை தருகின்ற கரு மேகங்களைப் போன்று காட்சிக்குத் தென்படுகின்றன. அந்தப் பெண்களின் அழகிய குறுகிய இடை வளைவுகளில் பட்டுத் தெரிகின்ற சூரிய ஒளியானது மழை பொழியும் நேரத்து மின்னலைப் போன்று தோன்றுகிறது.
அந்தப் பெண்களது வெண்ணிறப் பற்கள் முல்லை மலரைப் போன்றும், மூக்கானது குமிழ் மலரைப் போன்றும் , கைகள் காந்தள் மலரை ஒத்து மலர்ந்தும் காட்சி தருகின்றன. அந்தப் பெண்கள் தங்கள் கொங்கைகளில் அணிந்திருக்கும் முத்து மாலை கவிழ்வது மலைகளில் இருந்து கீழே விழும் வெள்ளி வண்ண அருவியினை ஒத்து இருக்கின்றது. அந்த பெண்கள் விளையாடி மகிழும் தருணம் அவர்களது அழகுகள் அத்தனையும் கார்காலம் வரவழைக்கும் சின்னமாகத் தெரிகின்றன. பின் எப்படி மயில்கள் ஆடாமலிருக்கும்....? இப்படியோர் அழகிய கார்காலம் கண்டால் மயில்கள் தொகை விரிக்காமல் போய்விடுமா ? ஆகா நமக்காகத் தான் வேனில் கார்காலமாக மாறி விட்டது என்றெண்ணி ஆட்டம் போட்டு ஆனந்தம் கொள்ளுகின்றன மயில்கள்....
இப்படியொரு வேனில் பருவக் கார்காலத்தைத் தனது கதையில் அதுவும் தலைவனான அருச்சுனனும் தலைவியான பாஞ்சாலியும் மகிழ்ந்திருக்கும் வசந்த காலச் சருக்கத்தில் அமைக்கின்றார் நமது புலவர் வில்லிப்புதூரார். வில்லிபாரதத்து எழுந்து வரும் இந்த கார்காலமே இவ்வாரத் தேன்றுளி.
இதோ பாடல் :
கொண்டலெழ மின்னுடங்கக் கொடுஞ்சாபம் வளைவுறச்செங் கோபந் தோன்ற,
வண்டளவு நறுங்குமிழும் வண்டணிகாந் தளுமலர மலைக டோறும்,
தண்டரள வருவிவிழத் தையலார் வடிவுதொறுஞ் சாயற் றோகை,
கண்டுநமக் கிளவேனில் கார்கால மானதெனக் களிக்கு மாலோ.
- வில்லிப்புத்தூரார்
No comments:
Post a Comment