பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

2 Nov 2015

கதம்பச் சிந்து



கதம்பச் சிந்து 

கணவனுக்கும், மனைவிக்கும் இடையே நடக்கும் உரையாடல்.
கணவனின் விடைகள் "காவடிச் சிந்து வகையாகவும்,
மனைவியின் வினாக்கள் பலவகைச் சிந்துப் பாடல்களாகவும் உள்ள "கதம்பச் சிந்து


பெண்.(கும்மிச்சிந்து)
முக்கோடித் தேவர்கள் ஏசுஅல் லாவென
மூலைக்கு மூலையில் கோயிலுண்டு.
அக்கறை யாகநம் கூக்குரல் கேட்டிடும்
ஆண்டவன் யாருன்னு சொல்லு மச்சான்?
ஆண் (காவடிச்சிந்து)
தெய்வமுண்டு என்றறிய வேண்டும் - அது
தேர்ந்தஅன்பே என்றுணர வேண்டும் - இதில்
சிவனுமில்லை அரியுமில்லை
சிந்தையில் நிறைந்தஅன்பே
சாமி - சிவ
காமி!

பெண் (நொண்டிச் சிந்து)
சாதிகள் ஆயிர. மேன் - சாதிச்
சங்கங்க ளும்பல ஆயிரமேன்?
சாதித்த தேதுமுண்டா? - அதைச்
சற்றே உரைத்திட வேணும்மச் சான்!
ஆண் (காவடிச்சிந்து)
ஆதியில் இருந்ததில்லை சாதி - அது
அந்நியர் வகுத்துவைத்த நீதி - இங்கு
ஆண்டையென்றும் அடிமையென்றும் யாருமேபி றக்கவில்லை
கண்ணே - செல்லப்
பெண்ணே!
பெண் (ஆனந்தக் களிப்பு)
சாலைக்கொரு பள்ளிக் கூடம் - முட்டுச்
சந்துக்குள் ளும்பள்ளிக் கூடங்களுண்டு
வேலை கிடைத்திட வில்லை - கல்வி
வீணாகப் போச்சுதே ஏனுங்க மச்சான்?
ஆண் (காவடிச்சிந்து)
தேர்ந்தகல்வி ஞானங்கொண்டால் போதும் -நம்மைச்
சேரும்துன்பம் வந்தவழி ஓடும் - சென்று
சேருமிடம் போகும்வழி
செம்மையாகத் தேர்ந்தெடுத்துச்
செல்வாய் - துயர்
வெல்வாய்!
பெண் (தெம்மாங்கு)
ஓட்டுப் போட்டு ஓட்டுப் போட்டு
ஓய்ஞ்சிப் போனோம் மாமா - அதில்
ஒருபயனும் கிடைக்கவில்லை
உடைஞ்சி நின்னோம் மாமா
நாட்டில்பல கட்சிகளும் வந்திருக்கு மாமா - அதில்
நல்லதெது தீமையெதுவென
ஒண்ணும் புரியல மாமா!
ஆண் (காவடிச்சிந்து)
கானலதைத் தண்ணீரென்று நம்பி - மனக்
கவலையில் உழன்றிடுவார் வெம்பிச் - சுட்டிக்
காட்டியென்ன கதறியென்ன
காட்சிகள் மறைவதில்லை
பெண்ணே - செல்லக்
கண்ணே!
பெண் (இலாவணி)
என்மனசில் நின்னவரே
என்னுயிரைக் கொண்டவரே
எங்கநீங்க ஓடுறுங்க
நில்லும் நில்லும்
நன்மைவர வேணுமுன்னா
இந்தநிலை மாறணுன்னா
என்னசெய்ய வேணுமுன்னு
சொல்லும் சொல்லும்!
ஆண் (காவடிச்சிந்து)
வாக்குமனம் தூய்மைகொள்ள வேண்டும் - புவி
வாழ்க்கையிலே நேர்மைகொள்ள வேண்டும் - நம்மை
வாட்டும்துயர் மாறிவிடும்
மக்கள்குலம் தேறிவிடும்
தேனே - சொல்லு
றேனே! - அடி,
தானே தனதானே
தானே தனதானே -( 2)
*பாவலர் மா. வரதராசன்*
★★★
குறிப்பு :
சிந்துப் பாடல்களின் வகைகளையும், இலக்கணத்தையும் பாட்டியற்றுக மற்றும் முயன்று பார்க்கலாம் பயிற்சிகளில் வருங்காலங்களில் (பயிற்சிகளில்) காணலாம்.



No comments: