பாட்டியற்றுக - 11
நண்பர்களே.! கவிஞர்களே.!
அறிஞர் பலரும் பாராட்டும் பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 11" இதோ.! முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, இந்தப் பதிவைப் பகிர்ந்தும், மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.!
*** *** *** ***
பாட்டியற்றுக - 11
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
உலகத்தில் எங்கேனும் தாய்மொ ழிக்கென்
றொருதீங்கு நேர்ந்ததென வரலா றுண்டா?
கலகங்கள் செய்கின்றார் கயவர் கூடிக்
கனித்தமிழை அழித்துவிடத் துடிக்கின் றார்கள்
மலையொன்றைச் சுண்டெலிகள் மயிரால் கட்டி
மறுபக்கம் சாய்த்துவிட முயல்வ தைப்போல்
உலையிட்டுத் தமிழ்ப்பொன்னை உருக்கி னாலும்
உருமாறிப் புதிதாக ஒளிரு மன்றோ!
--பாவலர் மா.வரதராசன் --
*** *** *** ***
கருத்தூன்றுக.:
ஆசிரியப் பாவின் இனமாகிய விருத்தம் இக்காலத்திற்கு மட்டுமன்றி நம் இலக்கிய வரலாற்றின் பெரும்பகுதியைத் தன்னகத்தே கொண்டவோர் பாவினமாகும். இன்று பல மரபு கவிஞர்களாலும் இயற்றப்பெறும் பாவினமான "ஆசிரிய விருத்தம்." அறுசீர்கள் தொடங்கிப் பல சீர்கள் வரையிலான அமைப்பில் முற்காலத்தில் பாடப்பெற்றன. தற்கால வழக்கில் மிகச் சிலவே நடைமுறையில் உள்ளன. நம் சோலையின் இப்பகுதியின் வாயிலாக நாம் பல்வேறு விருத்த வகைகளைக் கையாண்டு மரபைக் காப்போம். மேற்கண்ட பாடல் "எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்." (காய்,காய்,மா,தேமா)ஆகும்.
பொது இலக்கணம்.
*அரையடிக்கு நான்கு சீர்கள் பெற்று, ஓரடிக்கு எட்டுச் சீர்களும் பெற்று, *முதல் சீரும், ஐந்தாம் சீரும் மோனையால் இணைந்து,(பொழிப்பு மோனை 1'3' சீர்களில் அமைவதும் சிறப்பு. கருத்தின் முதன்மை வேண்டிப் பலரும் பார்ப்பதில்லை.) * நான்கு சீர்களை அரையடியாகவும், அடுத்த. நான்கு சீர்களை அடுத்த அரையடியாகவும் மடக்கி எழுதப் பெற்று, * அடிதோறும் எதுகையைப் பெற்றும், * அரையடிக்கு "காய்,காய்,மா,தேமா என்ற சீர் வரையறையைக் கொண்டும், நான்கடிகளைப் பெற்றும், * ஈற்றுச்சீர் ஏ, ஆ, ஆல், ஓ, வாழி என்பனவற்றுள் ஒன்றைக் கொண்டு முடிவது(ஏகாரம் சிறப்பு.)
"எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்." எனப்படும்.
காய்ச்சீரெனில் எக்காயும் வரலாம்.
மாச்சீர் எனில் தேமா, புளிமா எதுவும் வரலாம்.
ஆனால் அரையடியின் ஈற்றுச்சீரான நான்காம் சீரும்,
எட்டாம் சீரும் "தேமாச் சீராகவே வரல் வேண்டும்."
முதல்சீர் எக்காய்ச்சீரில் தொடங்குகிறதோ அதே காயில் அடுத்த அடியின் முதற்சீரும் தொடங்குதல் நன்று. ஓசை சிறக்கும். (இக்காலத்தில் யாரும் பார்ப்பதில்லை) ஆனால் நாம் அதைத் தொடரலாமே.
நண்பர்களே.! இப் பா வகை மிகவும் அதிக அளவில் தற்காலத்தில் பெரும்பான்மைக் கவிஞர்களால் பாடப்பெறும் வகையாகும். கருத்தை விரைந்து சொல்ல, உணர்வுடன், வீச்சுடன் சொல்ல ஏற்ற வடிவம்.
இவ்வகையான ஒரு விருத்தத்தை வரும் வெள்ளிக்கிழமை நண்பகலுக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில் மட்டுமே எழுதி அனுப்புங்கள்.
★★★
No comments:
Post a Comment