நண்பர்களே.! கவிஞர்களே.! அறிஞர் பலரும் பாராட்டும்
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 17" இதோ.!
முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, இந்தப் பதிவைப் பகிர்ந்தும், மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.!
*** *** *** ***
பாட்டியற்றுக - 17
இயல் தரவிணைக்
கொச்சகக் கலிப்பா
**************-*-*******
தண்ணிலவே கார்முகிலே தாமரையே பொற்றுகளே
மண்ணில் இருந்துலவும் மாதேவப் பெண்மணியே
கண்ணில் நிறைந்திட்ட காரணத்தால் பூமணத்தை
என்னில் தெளிக்கின்ற ஏந்திழையே செந்தமிழ்ப்
பண்ணே எழிலாய்ப் பிறந்திட்ட பாவையே
உன்னை மறவாமல் உள்ளுணர்வும் என்னுணர்வும்
கன்றைக்கா ணாத கறவையென ஆனதடி
கண்ணே கனியமுதே காதலினால் ஏங்குகிறேன்!
--பாவலர் மா.வரதராசன்
*** *** *** ***
கருத்தூன்றுக.:
மேற்கண்ட பாடல் "இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா" ஆகும்.
தரவு இரண்டாக இணைந்து வருவதால் இப்பெயர் வந்தது. வெண்டளை பிறழாமல் அமைவதால் "வெண்டளையான் இயன்ற தரவிணைக் கொச்சகக் கலிப்பா " என்றும் பெயர். திருப்பாவையும், திருவெம்பாவையும் இவ்வகைத்தே..
தரவு கொச்சகத்தைப் போன்றே இதுவும் தாழிசை, தனிச்சொல், சுரிதகமின்றித் தரவு மட்டுமே இணைந்து எழுதப்படுகிறது.
முன்னோர் வழக்கம் எதுவெனில் தரவு, பின் சில தாழிசைகள்,பின் தரவு, பின் சில தாழிசைகள், பின் தனிச்சொல், பின் சுரிதகம்... இம்முறையில் அமைவதுதான். ஆனால் பெரும்பாலும் தரவு இரண்டு இணைந்து எழுதுவதே வழக்கமாகிவிட்டது. நாமும் பயிற்சிக்கு இவ்வகையையே கொள்வோம்.
பொது இலக்கணம்.
*எட்டடிகள் கொண்டதாய்,( இரண்டு தரவுகள்)
*ஓரடிக்கு நான்கு சீர்கள் பெற்று,
*முதல் சீரும், மூன்றாம் சீரும் மோனையால் இணைந்து,(அமைவதே சிறப்பு)
* எட்டடிகளும் ஒரே எதுகையைப் பெற்றும்,
* அடிதோறும் வெண்டளை (கட்டாயம்) இயன்றும்,
* ஈற்றுச்சீர் ஏகாரம் பெற்றும், பெறாமலும்,
வருவது "இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா" எனப்படும்.
இவ்வகையான ஒரு பாடலை வரும் வெள்ளிக்கிழமை நண்பகலுக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில்(comment) மட்டுமே எழுதி அனுப்புங்கள்.
அன்பு கூர்ந்து ஒருவர் ஒரு பாடலை மட்டுமே அனுப்பவும். பயிற்சிக்கு நேரம் ஒதுக்க உதவியாக இருக்கும்.
★★★
No comments:
Post a Comment