பாட்டியற்றுக : 20 இன் தொகுப்பு அப்பாடல்களை இயற்றிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது..புதிதாகப் பல கவிஞர்கள் இணைந்திருப்பது மனத்திற்கு மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் தருகிறது.பைந்தமிழ்ச் சோலையில் விருப்பத்துடன் பலர் இணைவது, தமிழ் மரபைக் கற்கப் பலரும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பதையே காட்டுகிறது. கொடுக்கப்பட்டுள்ள எண்கள் தரவரிசைக்குரியதல்ல. கவிஞர் அனுப்பிய வரிசைக்குரியதே.
கவிஞர்களை வாழ்த்துங்கள்.
கவிதைகளைப் படியுங்கள். நண்பர்களுக்குப் பகிருங்கள்.
பாட்டியற்றுக : 20
வஞ்சிப்பா
************
1. கவிஞர் செந்தமிழ்ச்சேய் சின்னசமி
வருவாளுடன் வழுவாளென
இருநாளிவண் இருப்பேனெனைப்
பொருளாயிலைப் புழுவாமன
கருதாளுளங் கடுப்பாளவள்
ஆகப்
பொறுப்பேன் எனினும் புலன்கள் போற்றா
வெறுப்பார் உறவா வேண்டா
சிறப்பாம் நமைவிழை செவ்வியர் சேர்ப்பே.!
★
2. கவிஞர் நிறோஸ் அரவிந்த்
சுகமாயொரு சுமைதானென
அகமாகிட அவள்தான்வரு
நிலைகூடிட நினைத்தேமனம்
அலைந்தாடிடும், அதுநீங்குக!
அதனால்
எற்றென வென்மனம் என்னவள் அறிவாள்
சுற்றிடுங் கிள்ளாய் சொல்லிடு,
கற்றைக் குழலாள் கண்படும் நேரமே!
★
3. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
மறைபொருளது வெளிவந்திடும்
பறையொலியால் நமையடைந்திடும்
பொருள்கொண்டவர் அதைவழங்குவர்
அருளடைந்தவர் சபையடைந்திடப்
பெறலாம்
மெள்ள மெள்ளத் தழைத்து வளரும்
கள்ளப் புலனு மடங்கும்
விள்ளும் நெஞ்சம் விரைகழல் செலுமே!
★
4. கவிஞர் சுந்தரராசன்
தமிழ்த்தாய்ப்பதம் மனம்மேவுதே!
அமிழ்தாமவள் அருள்நாடுதே!
படைத்தாளவள் புகழ்பாடவே!
கிடைத்தாளென துயிர்நீளவே!
அவளால்
சொல்லும் பொருளும் செயலும் விளைவும்
எல்லா நலமும் எளிதாய்
நில்லா உலகில் நிலைபெறு மாமே!
★
5. கவிஞர் அர.விவேகானந்தன்
கனவாய்வரும் மகிழ்வதனையே
நனவாக்கிட நலமோங்கிடும்
பிறமாதரைப் பிறழ்நெறியென
உறவாக்கியே உறைந்துமகிழின்
உலகில்
வாழும் போதே வகையி லாது
தாழும் பிணியால் தவித்தே
ஆழ நரகில் ஆழ்ந்திடு வாயே!
★
6. கவிஞர் காவியக்கவி இனியா
மழையாகவா மனதாளவா
தழைபோலவே இழையோடிவா
பலங்காணவே கதிர்போலவே
நிலையாகநீ வரவேணுமே !
வந்தால்
நாடும் நலம்பெற நானும் வளம்பெற
தேடும் நலன்களும் திகைக்க !
கூடும் திருவருள் ! குறைகளும் நீங்கவே !
★
7. கவிஞர் கைலாசநாதன் காளிதாசு
கலைமாதவள் புகழ்பாடியே
அலையாமன வருள்கூடிடின்
தலையாலவள் பதம்தாங்கியே
நிலையாயுள கவியாக்கலாம்
இனியும்
பொல்லா உலகப் பொருள்பற் றொழித்தே
எல்லா உயிர்க்கும் அளிசெய நல்லாள்
இணையடி நவில்வோ மினிதே!
★
8. கவிஞர் சுதர்சனா
உளனெனமகன் உரைத்திடுமொழி
கிளர்த்திடுமொரு கொடுஞ்சினத்தினால்
உளங்கொதித்திடும் ஒருவரக்கனும்
பிளந்திடுமொரு பெருந்தூண்தனில்
சீற்றமாய்ச்
சின்னஞ் சிறுவன் செப்பிய உரைக்காய்
முன்னம் அரியென மூண்டோன்
பொன்னற் பதங்கள் போற்றிடு வோமே!
★
9. கவிஞர் விவேக்பாரதி
புதிதாயொரு உலகோருடன்
புதிதாயொரு தனிபூமியை
விதியாவையும் கழன்றோடவே
மதியால்நிதம் உருவாக்குவம்
அங்கே
புரட்சிக் கனலும் புதுமைப் புனலும்
திரளும் வீதியில் தினமும்
தமிழும் தமிழர் தரமும் ஓங்குமே!
★
10. கவிஞர் நாகினி கருப்பசாமி
நினைந்தேங்கிய மனங்குளிர்ந்திட
மனையெங்கிலும் வடிவழகென
வரவேற்றிடும் குரலோசையால்
உரமாகிய திறவுகோலிது!
என்பதனால்
இதயம் மயங்கிய ஈருட லாவி
உதய மென்றே உளறும்
கதவெனும் 'செல்'லும் காதல் உயிரே!
★
11. கவிஞர் பரமநாதன் கணேசு
தமிழினத்தினை வழிநடத்திடத்
தமிழினைத்தினம் தலைவணங்கிடும்
நிலைபெற்றிட நிமிர்நடையுடைத்
தலைவனொருவன் உருவாகிடில்
என்றும்
சிறப்புற வுலகினில் செந்தமிழ் மொழியும்
இறப்பிலாப் பெரும்பே றெய்தி
நறுமணம் தந்தே நலத்தொடு வாழுமே!
★
12. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்
அறவழிதனை உதறிடச்செயும்
உறவினர்களுக் குறுதுயர்தரும்
விடியலொன்றிலா நிலைதந்திடும்
குடிகெடுத்திடும் குடிப்பழக்கமாம்
எனவே
தவிர்ப்பீர் மதுவெனும் தரமிலாப் போதை
உவப்பீர் நற்குண மொன்றிச்
சுவைப்பீர் வாழ்வைச் சுகமாய்த் தானே!
★
13. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
வரப்புகளெனத் தமிழ்மொழியினைப்
பரவவிடுதல் நலம்பயக்குமாம்
வகையுறவென இதைமொழிதலும்
பகையழிக்குமாம் தமிழ்நாட்டிலும்
இதனால்
எல்லை எங்கும் ஏற்றமும் பெறவும்
முல்லை போலவும் முகிழச்
செய்திடு தமிழா ! செம்மொழித் தமிழையே!
★
14. கவிஞர் நடராசன் பாலசுப்பிரமணியன்
கவியாகிடும் கனவதனிலே
புவியோரெலாம் வருமிடமிதே
அமிழ்தாமுயர் மரபுகவிதை
தமிழ்க்காவினில் மணந்திடுவதால்
எல்லோரும்
மரபுப் பாவினை மரபு மாமணி
வரத ராசனின் வழியே
தரமாய் யாப்பது தமிழதன் சிறப்பே!
★
15. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து
கருவறையினுள் வருபவரையும்
பொருளதனையும் தருபவரையும்
அருள்வாரென நினைப்போரையும்
அருளாரென முனிவரறிவர்
எனவே
மூக்கின் மீதினில் முழியும் நோக்கி
ஆக்கின் மீதே ஆழ்மனம்
நோக்கி னீசனை நோக்கும் தானே!
★
16. கவிஞர் அழகர் சண்முகம்
இனமதவெறி இழிவறுந்திடச்
சினமெனுமனல் சிதைந்தணைந்திடத்
தினமொருதரம் திருக்குறள்படி
மனமொடுமதி மகிழ்வினைப்பெறும்
ஆதலால்
வள்ளுவன் சொல்லை வணங்கிக் கற்றால்
தெள்ளிய நீர்போல் தெளிவாய்
உள்ளத் திலோங்கும் உண்மை உணர்வே!
★
17. கவிஞர் கலாம் ஷேக் அப்துல் காதர்
கவலைகளெலாம் பறந்திடவரும்
அவளையிதமாய் அணைத்தபொழுதில்
நிலவதுபொழி குளிரினைதரும்
நிலையதுயெனை கனவுலகினில்
ஆங்கு
இட்ட சுகத்தினை எண்ணிப் பார்த்தேன்
வட்ட முகத்தின் வனப்பில்
சொட்டும் ஒளியைச் சொல்வது நாணமே!
★
18. கவிஞர் மாரிமுத்து
விசும்பின்துளி படரமுழுகிப்
பசுந்தோகையே அணியாகிடக்
கதிர்மணிமுகம் ஒளிவீசிட
முதிர்ந்தெழில்மிகு பருவநெல்மணி
உன்னை
ஆடை நீக்கி ஆவியைக் கொன்றும்
உடைமை யாக்கி உணவு
படைத்துயி ருய்யும் பாவி நானே.!
★
19. கவிஞர் அஷ்பா அஷ்ரப் அலி
தெருவோரமாய் இரப்போரையே
விருப்போடுநம் முகங்காணவே
பெரும்பாடுதான் படுகின்றவர்
ஒருநாள்சுமை ஒருவழிப்பட
காணும்
இரப்போ ரவரின் இன்னலைத் துடைத்து
நிரப்பம் மடைந்திட நிதமும்
இரக்கங் கொண்டே ஈவோ மவர்க்கே!
★
20. கவிஞர் குருநாதன் ரமணி
வடிவேலவன் வருவானெனத்
துடிகூந்தலாள் தொலைநோக்கினாள்
கடலோடொலி கரைசேரவே
நடமாடினர் நலம்நாடியே
இங்ஙன்
கடற்கரைக் காதலில் காத்திருப் பவளாய்
உடல்மனம் பெரிதும் உளையப்
படமுகப் பாவை படபடப் பினிலே!
★
21. கவிஞர் கட்டிக்குளம்
ஓ.சுந்தரமூர்த்தி
வளமேதரு வயலோயிவள்
குளமேயென உயர்ந்தேபல
நறுந்தேனுயர் மருந்தாகிய
சிறுகூடலில் பிறந்தாளென
துயிராய்
அறம்பொரு ளின்ப ஆதி யெனவந்
திறவாப் புகழ்பலவும் திரட்டி
மறமாய் உயர்ந்த மாசிலாத் தமிழே !
★
22. கவிஞர் கணேசன் ராமசாமி
குலமுறைப்படி சடங்குநிகழப்
பலர்முன்னிலை பரிசம்பெற
திருமணவிழா திருப்பூட்டிட
இருவீட்டினர் உருக்கொடுக்கிறார்
இருப்பினும்
கொடுக்கல் வாங்கல் குறைவெனச் சொல்லிக்
கொடுத்த வாக்கையு மீறித்
தடுப்பர் மணத்தைத் தவிப்பது பெண்ணே!
★
23. கவிஞர் பொன்.பசுபதி
உழவர்நிலை யுயராவிடின்
விழலாகுமே விளையும்நிலம்
பசியாலுயிர் நசிந்தேகிடும்
இசைந்தேவின புரியாவிடின்
ஆதலினால்,
வருகின்ற தேர்தலில் வாய்மை வல்லமை
இரண்டுமே வாய்ந்த இனியரை
அரசியல் பொறுப்பில் அமர்த்திடு வோமே!
★
24. கவிஞர் தாமோதரன் கபாலி
கனிதரும்மரம் கவிதரும்சுவை
பனிதரும்குளிர் பரம்பொருள்நினை தனிவளர்குணம்
திகழ்ந்திடும்வரம்
நனிசிறந்திட மனம்பெறும்சுகம்
ஓங்கப்
பைந்தமி ழணைக்கும் பழகிட யினிக்கும்
தழல்மிகும் சிவத்தமிழ் தழைக்கும்
வழங்கிடும் யிசையாய் மனமெலாம் சிவமே!
★
25. கவிஞர் வனராசன் பெரியகண்டர்
தினமொருமுறை திருக்குறளினை
மனம்படித்திட மகிழ்வடைந்திட
உனையடைந்திடு முயர்வெனும்வழி
மனைநிறைந்திடும் மதியெனுமொளி
வீணே
எல்லாந் தெரியு மென்றே நினைந்து
பொல்லா மாயைப் புனலில் நனைந்து
நில்லா தேநீ நிமிர்ந்து
கல்லா நிலையாம் காரிரு ளாழ்ந்தே!
★
26. கவிஞர் சுரேஷ் சீனிவாசன்
மனைவியானவள் இனிமையானவள்
மனைமாட்சியால் பெருமைசேர்ப்பவள்
கடவுளாகவே கணவனவனைத்
திடமாகவே நினைத்திருப்பவள்
அதனால்
கவலை யறியாக் குழந்தையைப் போல
எவரும் போற்றும் ஏந்திழை
அவளை வைப்போம் அன்பில் நனைத்தே!
★
27. கவிஞர் வீ.சீராளன்
வருவேனென வழிச்சென்றவள்
திரும்பாமலே திசைமாறினாள்
உடலோடுதான் உயிர்வாடியே
விடமுண்டதாய் விழிமூடுதே
இனித்தான்
ஈரக் கனவுகள் என்னில் முழுதாய்ச்
சேரத் துடிக்கும், சிரிப்பும்
தீரத் தொடங்கும் திருவிழி யாளே!
★★★
1 comment:
கவிஞர்கள் பதிந்த கவிதைத் தொகுப்பினை ஒட்டி
ஒரு பாமாலை இங்கு பதிகிறேன் கருத்துகளை இறைஞ்சுகிறேன்.
வஞ்சிப்பா
1.
வெறுப்பாரினை ஒதுக்கிவைத்திடு,
சிறப்பானது விழைவாருற(வு)
என்றுசெந்தமிழ்ச் சேயுரைசெயத்
தன்னுடைமனம் எற்றெனெவெனத்
தன்னவள்
அறிவாள் என்றே அரவிந் துரைக்க
மறைபொருள் வெளிவரும் வழியின்
முறைசொலும் கிருட்டிண மூர்த்தியின் கவியே!
2.
தமிழ்த்தாய்ப்பதம் மனம்மேவுதல்
அமிழ்தாய்ச்சொலும் கவிசுந்தர
ராசனவரும், பிறமாதரை
நேசித்தலைத் தவிர்த்திடெனுநம்
விவேகா
நந்தரும், தாமும் நாடும் வளம்பெற
வந்தால் சிறக்கும் வாவெனும்
இனியாக் கவியும் இனிது வாழ்கவே!
3.
கலைமாதவள் புகழ்பாடிட
நிலையாயுள கவியாமென
கவிக்கைலாசனா தர்சொலவுடன்
கவிசுதர்சனா அரிமுகத்துடை
அரியின்
பொன்னடி போற்றெனப் புகல்வார், மதியினால்
வென்றிடு வோம்நாம் விதியினை
என்றிடு வார்விவேக் இளங்கவி தாமே!
4.
காதலுயிரைக் கருப்பொருளென
ஓதியொருபா கவிநாகினி
யாருரைத்திட தமிழினத்தினை
சீரெனச்செய வோர்தலைவனைப்
பரம
நாதன் கணேசர் நயந்து வேண்ட
ஓதுவார் மதுவை ஒதுக்கென
வேதமாய்க் கவிஞர் வெங்க டேசரே!
5.
செம்மொழித்தமிழ் முகிழச்செய்யென்(று)
அம்மவோர்கவி செயும்சரஸ்வதி
யார்பின்வரு நடராசனார்
சீருடைத்தமிழ்ச் சோலையுறையும்
பாவலர்
பெருமை யுரைக்க பின்வரு கவிரவீந்
திரனவர் உள்மனம் நோக்கின்
அரனும் ஓடிவந் தருள்வான் என்பரே!
6.
திருக்குறளதன் பெருமையறிவாய்
உருப்படுவழி அதுவென்றுநம்
கவிஞரழகர் சண்முகமவர்
கவிசெயவுடன் அழகியாளவள்
பற்றிக்
கவிஅப்துல் காதர் கவிசெய நெல்லை
அவித்த ரைத்துண்ணு மதுரைப்பார்
கவிமாரி முத்துவும் கவிதை யாலே!
7.
இரப்போரவர்க் கீதலைச்செய
உரைப்பார்கவி அஷ்ரபலியார்
வருவானவன் வடிவேலவன்
அருகேயெனக் கடற்கரையதில்
பாவை
காத்திருப் பதுரைக்கும் கவிரம ணியார்பின்னே
மூத்ததமிழ்ப் புகழினை மொழிவார்
தோத்திரத் தாற்கவி சுந்தர மூர்த்தியே
8.
பணக்குறைவினால் கன்னியவளின்
மணம்நின்றிடும் நிலைமையதனைக்
கவியினிற்கணே சனிராமசா
மிவிவரித்திட உழவர்நிலை
உயர்த்திடும்
அரசினை விழைவார் அரும்பொன் பசுபதி
அருமைக் கபாலியார் அகத்தினில்
இருக்கும் சிவத்தை ஏத்தி யுரைப்பரே!
9.
கல்லாநிலைக் காரிருளதில்
நில்லாதிரு வென்றுரைசெயும்
வனராசனார் பின்னேகியே
மனைவியவளை மழலையெனவே
அன்புசெயத்
தூண்டி உரைப்பார் சுரேஷ்சீ னிவாசனார்
வேண்டிய பாவை விலகலை
ஈண்டுரைத் திடுவார் எம்சீ ராளரே!
Post a Comment