பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

16 Jan 2016

பாட்டியற்றுக - 20


நண்பர்களே.! கவிஞர்களே.! அறிஞர் பலரும் பாராட்டும் 
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 20" இதோ.!
"இப்பகுதியில் கொடுக்கப்படும் இலக்கணக் குறிப்புகள், புதிதாகக் கற்பவர்கள் அஞ்சி ஒதுங்காமல், குழப்பமடையாவண்ணம் எளிதில் கற்கும் விதத்தில் (பாட்டியற்றும் வகையில்) தேவையானவை மட்டுமே கொடுக்கப்படுகின்றன. 
மேல்விளக்கம் தேவைப்படுவோர்
முன்னோர் யாப்பியல் நூல்களைப் பார்க்கவும்."
முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, இந்தப் பதிவைப் பகிர்ந்தும், மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.! 
*** *** *** ***
பாட்டியற்றுக - 20



வஞ்சிப் பா
**************
இலக்கணமொரு தடையென்கிற
பலபேர்களுள் தமிழ்ச்சோலையில்
மரபின்புகழ் உலகோங்கிட
தரவாய்வரும் கவிகாண்கையில்
இனியும்
மெல்லத் தமிழினிச் சாகும் என்னும்
ஒல்லார் பிதற்றல் ஒழிந்தே
பல்லாண் டுகளாய்ப் பைந்தமிழ் வாழுமே!
--பாவலர் மா.வரதராசன்
*** *** *** ***
கருத்தூன்றுக.:
மேற்கண்ட பாடல் "வஞ்சிப்பா" ஆகும். ஐந்து பாவகைகளுள் நான்காம் வகையிது.
கனிச்சீர்களாலேயே அமையப் பெறுவதல் தூங்கலோசையுடையதாய் விளங்கும் இப்பா வகையை யாரும் பயன்படுத்துவாரில்லை. நாம் பரப்பலாம்.
குறளடி வஞ்சிப்பா,(இருசீரடி) சிந்தடி வஞ்சிப்பா(முச்சீரடி) என இருவகையாக வரும். நாம் பயிற்சிக்கு குறளடியைக் கற்போம்.
இது கனியில் முடிந்து நேரசையில் தொடங்கினால் ஒன்றா வஞ்சித் தளையானும், கனியில் முடிந்து நிரையசையில் தொடங்கினால் ஒன்றிய வஞ்சித் தளையானும் வரும். பின்னதே நாம் பயிற்சிக்குக் கொள்வோம். (புளிமாங்கனி, கருவிளங்கனிச் சீர்களால் அமைய வேண்டும்) மற்றவற்றை நீங்கள் தனிப்பதிவாகப் பதிந்து முயலலாம்.

பொது இலக்கணம்.
*இரண்டு சீர்கள் கொண்டதாய்,
*மூன்றடி முதல் பலஅடிகள் வரை 
(பயிற்சிக்கு நான்கடி போதும்) 
* இரண்டடிகளுக்கு ஒரு 
எதுகையைப் பெற்றும்,
* கனிச்சீர்களை மட்டுமே பெற்று,
* தனிச்சொல் பெற்று,
* நேரிசை ஆசிரியச் சுரிதகம் 
பெற்று,
* சுரிதகத்தின் ஈற்றுச்சீர் ஏகாரம் 
பெற்றும், 
வருவது "வஞ்சிப்பா" எனப்படும்.
இவ்வகையான ஒரு பாடலை வரும் வியாழக்கிழமை நண்பகலுக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில்(comment) மட்டுமே எழுதி அனுப்புங்கள்.
அன்பு கூர்ந்து ஒருவர் ஒரு பாடலை மட்டுமே அனுப்பவும். பயிற்சிக்கு நேரம் ஒதுக்க உதவியாக இருக்கும்.
★★★

No comments: