பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

8 Jan 2016

பாட்டியற்றுக - 18


நண்பர்களே.! கவிஞர்களே.! 
அறிஞர் பலரும் பாராட்டும் பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 18" இதோ.!

"இப்பகுதியில் கொடுக்கப்படும் இலக்கணக் குறிப்புகள், புதிதாகக் கற்பவர்கள் அஞ்சி ஒதுங்காமல், குழப்பமடையாவண்ணம் எளிதில் கற்கும் விதத்தில் (பாட்டியற்றும் வகையில்) தேவையானவை மட்டுமே கொடுக்கப்படுகின்றன. 
மேல்விளக்கம் தேவைப்படுவோர்

முன்னோர் யாப்பியல் நூல்களைப் பார்க்கவும்."
முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, இந்தப் பதிவைப் பகிர்ந்தும், மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.! 
*** *** *** ***
பாட்டியற்றுக - 18
கட்டளைக் கலிப்பா
************************
விழிக ளாகவே யானநம் செந்தமிழ்
விரிவி லக்கணத் தோடுபல் யாப்புகள்
கழிவி லாவகை நற்கவி யாத்திடக்
கவிஞ னேயுனக் கேலுமோ என்றெனை
வழிந டத்திடு மாண்புயர் பாவலர்
மனத்தில் தைத்திடு மாறுவி னாவினார்
பொழிய லுற்றனன் பொற்றமிழ் யாப்புகள்
பொருந்தி னேனவர் காட்டிய பாதையே!
--பாவலர் மா.வரதராசன்
*** *** *** ***
கருத்தூன்றுக.:
மேற்கண்ட பாடல் "கட்டளைக் கலிப்பா" ஆகும். 
எழுத்தெண்ணிப் பாடப்பெறுவதால் இப்பெயர் பெற்றது. காரிகையின் பிற்சேர்க்கையி இதன் இலக்கணம் சொல்லப்பெற்றுள்ளது. 
பெரும்பான்மை தேமா கூவிளம் கூவிளம் கூவிளம் , என நேரில் தொடங்கும் அரையடியும்,
புளிமா கூவிளம் கூவிளம் கூவிளம் என நிரையில் தொடங்கும் அரையடியும் அமைந்த பாடல்களே காணப்படுகின்றன. எந்தச் சீர்களும் வரலாம். ஆனால் எழுத்தெண்ணிக்கை முக்கியம்.
ஒரே பாடலில் முதல் அரையடி நேரசையாகவும், அடுத்த அரையடி நிரையசையிலும் உள்ளவாறும் அமையலாம். (கலந்தும் அமையலாம்)
பாரதியின் "சுயசரிதை " முழுவதும் இவ்வகையே. (சான்றுக்குப் பார்க்க) 
★ஆனால் நாம் செம்மை நோக்கி "ஒரே வகையில் அமைந்த பாடலையே" பயிற்சிக்குக் கொள்வோம்.★ (நேரசையோ, நிரையசையோ எப்படியும் எழுதலாம்)
பொது இலக்கணம்.
*எண்சீர்கள் கொண்டதாய்,
*நான்கு சீர்களை அரையடியாகவும், அடுத்த நான்கு சீர்களை அடுத்த அரையடியாகவும் மடக்கி,
*இதேபோல் நான்கடிகளைக் கொண்டு,
*முதல் சீரும், ஐந்தாம் சீரும் மோனையால் இணைந்து,
* நான்டிகளும் ஒரே எதுகையைப் பெற்றும்,
* அரையடிக்கு நேரசையில் தொடங்க 11 எழுத்துகளையும், நிரையசையில் தொடங்க 12 எழுத்துகளையும் கொண்டு, (ஒற்றுகளைக் கணக்கில் சேர்க்காமல்) 
* தனிப்பாடலாயின்(தொடர்
பாடலாயின் ஈற்றடியின்) ஈற்றுச்சீர் ஏகாரம் பெற்றும், 
வருவது "கட்டளைக் கலிப்பா" எனப்படும்.
இவ்வகையான ஒரு பாடலை வரும் வெள்ளிக்கிழமை நண்பகலுக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில்(comment) மட்டுமே எழுதி அனுப்புங்கள்.
அன்பு கூர்ந்து ஒருவர் ஒரு பாடலை மட்டுமே அனுப்பவும். பயிற்சிக்கு நேரம் ஒதுக்க உதவியாக இருக்கும்.
★★★

No comments: