பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

8 Jan 2016

பாட்டியற்றுக : 18 இன் தொகுப்பு


அன்பு நண்பர்களே! மிகச் சிறப்பாக நடந்து முடிந்த இந்தப் பயிற்சி அனைவருக்கும் மிகுந்த நிறைவைக் கொடுத்திருக்கும்.
இத்தொகுப்புக் கவிஞர்கள் அனுப்பிய வரிசையின்படியே வெளியிடப்படுகிறது. தரவரிசைப் படியன்று.
வாழ்த்துங்கள்! கருத்தைக் கூறுங்கள்! பகிருங்கள்.
பயிற்சியில் கலந்து கொள்ளாத மற்ற உறுப்பினர்கள் இதையாவது செய்யலாமே!
பாட்டியற்றுக -18
கட்டளைக் கலிப்பா
1. கவிஞர் விவேக் பாரதி
காத லாந்தவம் காசினி மேல்புதுக்
கன்னி மார்களும் ஆக்கிடும் யாகமாம்
சாத லென்னுமோர் எல்லையைத் தாண்டியும்
சாத னைபல செய்திட ஏற்றதாய்
மோதல் தாண்டியும் மோட்சமுந் தேடியும்
மோன மாம்நிலை யஃதிலி னித்திட
நாத மோங்கிட நானிலம் போற்றிட 
நாமும் செய்குவம் நல்லதோர் காதலே ! 


2. கவிஞர் வள்ளிமுத்து
காற்றில் ஆடிடும் ஓடிடும் பேரலை
கண்கள் காணவே நீள்கரை மோதுமே
நேற்றும் நாளையும் இன்றிலும் என்றுமே
நித்தம் ஓய்திடா மாய்ந்திடா நீரலை
ஆற்று நீரெலாம் தன்னிலே வாங்கியும்
ஆசை நீங்கிடா ஆழ்பசி தீர்ந்திடா
போற்றும் பேய்மழை கொட்டியே தீர்த்திடப்
பொங்கும் சாகரம் காரண மானதே! 

3. கவிஞர் பரமநாதன் கணேசு.
கொட்டும் வான்பனி கொட்டியே தீர்க்குது
கொஞ்ச மோகுளிர் மேனியைத் தேளெனக்
கொட்டித் தீர்க்குது,,வேலையும் வீடுமாய்க்
கொண்ட வாழ்வது கூடவே வாடுது
பட்டித் தொட்டிகள் பால்வெளி போலவே
பார்க்கும் நெஞ்சினுள் ஆசையை மூட்டிடக்
கட்டிப் பொம்மைகள் கள்வெறி கொள்பவர்
காட்சி கண்டிடக் கண்பல வேண்டுமே!

4. கவிஞர் கட்டிக்குளம் சுந்தரமூர்த்தி
ஆதி யாகிய அன்புறு பாதியன்
ஆடும் கூத்தினில் மேவிடும் பாரிது
சோதி யானவன் சுந்தரன் தோழனோ
சோதர் சூரரை வீழ்த்திய நாதனோ
ஓதின் மாமறை ஓம்நம சீவனாம்
ஓம்பக் கூடிடும் நற்கயி லாயனை
நாதி யாக்கிட நன்னெறி சேருமே!
நாடும் மாந்தரும் நல்லன காண்பரே !

5. கவிஞர் ஐயப்பன்
பார்த்த சாரதி பொன்னடி பார்க்கிறேன்
பாதந் தாமரை என்று துதிக்கிறேன் 
பார்த்த சாரதி பொன்னெழில் காண்கிறேன் 
பச்சை மாமலை வண்ணமுங் காண்கிறேன்
கூர்த்த வம்புகள் பட்ட வடுக்களும் 
குத்து(ம்) மீசையும் கொண்ட முகமலர் 
பார்த்து விய(ர்)க்கிறேன் வேத வல்லியே 
பார்த்த தில்லையோ நின்னையே கேட்கிறேன்?

6. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
அன்பே தெய்வமாய்க் கொண்டவர் வாழ்வினில் 
ஆசை என்றுமே வந்திடல் கூடுமோ ? 
நன்றே சொல்வது ; கற்றிதைச் செய்திடில் 
நன்மை தங்கிடும் நட்புடன் நிற்கவே . 
உன்றன் சேவையி லுண்மைக ளுண்டெனில் 
ஊரும் வாழ்த்திடும் மண்ணிலும் கண்டிட 
என்றும் மாற்றமு மில்லையே அன்பிலே 
எங்கும் நல்லதே தந்திடும் காண்கவே!

7. கவிஞர் கணேசன் ராமசாமி
நின்னைச் சர்வமாய் எண்ணிட என்மனம்
நெருடல் கொள்வதேன் நீயதைச் சொல்லுவாய்
மன்னன் வாலியை மாபெரும் வீரனை
மறைந்து நின்றுநீ கொன்றதே குற்றமாம்
உன்னைச் சாமியாய் உத்தமி ஏற்றபின்
உலகு நம்பிட கற்பினைச் சுட்டதேன்
பின்பும் மக்களின் பேதமை ஏசலால்
பிரியத் தூண்டிய நின்மதி சின்னதே!

8. கவிஞர் நிறோஸ் அரவிந்த்
அழகி என்னவள் அஞ்சுகம் போலவள் 
அருகில் வந்திடக் கெஞ்சுதே என்னகம்
பழகி நிற்கவும் பக்கமே போகையில் 
பதைக்கு மென்மனம் மாயமும் என்னவோ
குழவு மிக்கவள் கோகிலம் போன்றவள் 
குரலும் கேட்டிடக் காலமும் கூடுமோ 
முழவு கொட்டவும் முத்தமிழ் பாடவும்
முளரி மென்மையாள் வந்திட வேண்டுமே!

9. கவிஞர் சுரேஷ் சீனிவாசன்
இறைவா தேடினேன் உன்னையே நாடினேன்
இருட்டில் வாழ்கிறேன் மீட்டிட வாருமே
குறைகள் நீங்கவே நன்மைகள் தோன்றவே
குருவே வாருமே காட்சியைத் தாருமே
சிறைதான் பூமியே வாடினேன் நாளுமே
சிரமே தாழ்த்தினேன் சீக்கிரம் வாருமே
நிறைகள் யாவையும் பூமியில் தங்கிட
நிகாயன் தானுமே காத்திடு தெய்வமே!

10. கவிஞர் இரா.கி. இராஜேந்திரன்
செப்புச் செந்தளிர் சுந்தர மேனியள்
தேவ தையவள் ஒல்லிய மின்னிடை 
அப்புப் போலுடல் தெள்ளியர் கோலமாய்
அந்தி வாகுடன் சோலையின் தோற்றமாய்க்
கப்பும் மேவிய மாங்கனி மார்பினள்
கம்மல் ஆடிடும் தோற்செவி சுந்தரி
செப்பம் செய்யவே வந்தனள் பாவினைச் 
செப்பும் யாப்பினில் தந்தனள் சித்தியே!

11. கவிஞர் நடராசன் சீனிவாசன்
மண்ணில் தோன்றிய அம்புலி யோயிவள்
மாயம் செய்திடும் மந்திரக் காரியோ?
விண்ணில் வாழ்ந்திடும் வஞ்சியர் யாவரும்
வீதி வந்திவள் சீர்தனைச் சொல்வரோ!
பெண்ணே! உன்னெழில் செய்திடும் இம்சையில்
பெற்றேன் நித்தமும் தாங்கொணாத் துன்பமுன்
கண்கள் வீசிடும் கூர்மிகு பார்வையில்
காயம் ஆனதிக் காளையின் நெஞ்சமே!

12. கவிஞர் அர.விவேகானந்தன்
பாவ புண்ணிய மின்றியே மெய்கெடப்
பாரி லேதினம் தீமைக ளாக்கியும்
சேவ கங்களை நீக்கியே சிந்தையில்
சேற்றை வாரியி றைத்திடும் சீர்களே
நாவன் மையினால் நன்மையைச் சேர்த்திட 
நாளு மெண்ணிடும் மாக்களை மாய்த்திட
தேவ நத்தமீ தேறியே மக்களின்
தேவன் கல்கியாய்த் தோன்றுவா னுண்மையே!

13. கவிஞர் பசுபதி
முழுதும் முத்தமிழ் கற்றுளே னென்பவர்
முதுவோர் நல்கிய நூலெலாம் கற்றபின்
பழுது மொன்றிலாக் காவியம் தன்னிலே
பலரும் தூற்றிடக் காண்பரோ குற்றமே
விழுமம் நல்கிடும் தீங்குறள் பாங்கிலும்
விரும்பி ஆய்வெனும் பேரிலே சீர்மைகள்
வழுவும் தன்மையில் நூல்களை யாக்குதல்
மணக்கும் பூக்களில் சேற்றினைப் பெய்தலே!

14. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்
கனிவாய்ப் பேசுதல் கற்றவர் தன்மையாம்
கருத்தாய்ப் பேசலும் கற்றவர் தன்மையாம்
இனிக்கப் பேசுதல் இன்பமே நல்குமாம்
இயைந்து பேசுதல் என்றுமே மேன்மையாம்
மனத்தி லுள்ளதை மாண்புறப் பேசுதல்
மணங்கொள் மல்லிகை மாலையைப் போன்றதாம்
அனைத்தும் பேசிடும் வல்லமை கொண்டுமே
அமைதி காத்திடல் ஆன்றவர் தன்மையே!

15. கவிஞர் நாகினி கருப்பசாமி
புதுமை கொஞ்சிடும் பூக்களின் காடெனப்
புகழும் துஞ்சிய ஈரமும் தீயெனத்
ததும்பும் ஏக்கமும் வென்றிடக் காலமும்
தருணம் தந்ததில் நெஞ்சது பொங்கிடப்
பதுங்கும் பொய்யுடன் கள்ளமும் ஆணவம்
பயந்து நாளுடன் கோளது மோடிட
மதுரக் கண்ணென மானுடம் வென்றிட
மதிப்பின் நீழலைத் தொட்டதும் இன்பமே!

16. கவிஞர் வீ.சீராளன்
தனிமை கொள்ளினுந் தன்னிலை தேற்றிடத் 
தகையி லாத்தமிழ் தந்திடு மன்னையே 
இனிவ ரும்பிறப் பெங்கிலு முன்னுடன்
இணைவ ரத்தினை என்னுளே ஊன்றுவாய் 
கனிய மிர்தமும் தோற்றிடும் பண்ணிலே 
கவிதை காப்பியம் தந்துடல் வேகிடப் 
பனிம லர்களை கந்தமாய் நாவிலே 
படர வேண்டினேன் பைந்தமிழ் உன்னையே !

17. கவிஞர் அழகர் சண்முகம்.
காலைச் செங்கதிர் கார்கிழித் தோங்கிடக்
கானம் கேட்டிடும் மார்கழித் திங்களில்
சோலைப் பூக்களின் நன்மண ஈட்டலைச்
சொட்டும் தேன்துளி கொட்டிடும் வேளையில்
நூலைப் போலிடை மின்னிடும் மேனியில்
நூலோர் காட்டுமி லக்கணம் கொண்டவள்
சேலை கட்டிய தாமரைப் பூவெனச்
சீராய் வந்ததென் சிந்தையைக் கொய்யவே!

18. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரஃப் அலி
ஏற்றம் பெற்றவ ரென்கிறோம் நாளெலாம்
ஏனோ யெம்மிடை இத்தனை இன்னலோ
போற்று முள்ளமும் பாங்குட னின்றியே
போற்றார் போலவே வாழ்கிறோ மெங்கிலும்
ஏற்றத் தாழ்வினை எத்தனை காலமாய்
என்றும் நம்மிடை கொண்டுமே வாழ்வது ?
மாற்ற மில்லையேல் மண்ணிலே நாமெலாம்
மாக்கள் போலவே வாழ்கிறோ முண்மையே !

19. கவிஞர் மாரிமுத்து
குருவிக் கொஞ்சலும் பொன்மயில் ஆடலும்
குயிலின் பாடலும் சாரலின் நாடகம்.
அரும்பி வீசிய செம்மலர் வாடையை
அகத்தில் சேர்ந்தது தென்றலின் ஊர்வலம்.
அருவிச் சத்தமும் மூலிகைச் சித்தமும்
அழகு மேனியைக் காத்தலி னாயினும்
மருத நாயகன் மாதிரத் தில்லதில்
மனிதன் போவது மீசனைக் காணவே!

20. கவிஞர் சுந்தரராசன்
ஆண்டு வந்ததும் போனதும், காலமென்
ஆரம் சுற்றிடத் தானதாய் நேர்வதாம்!
மாண்ட நாட்களும் மீண்டதைக் கண்டிலம்!
மற்று முள்ளதை யோர்வது மெங்கணம்?
தூண்டும் போதையில் துள்ளலாய் நாளைதான்
தோன்று மாண்டினை வாழ்த்துதல் நீக்கியே
வேண்டி யாண்டவன் தாள்பணிந் தேத்தியே
வேண்டும் யாவையும் பெற்றுவ ளர்கவே!

21. கவிஞர் குருநாதன் ரமணி
சோலைப் பூக்களில் வண்டினம் நின்றுபின்
சொக்கிப் போவதைக் காண்விழிக் காட்சியும்
மாலைப் போதினில் பிள்ளைகள் ஆடலில்
வாதச் சொற்களைக் கேள்செவி யோசையும்
மேலைச் சூரியன் கீழ்வரும் போதினில்
மென்மை வண்ணமாய் வானுறும் மாட்சியும்
சாலை ஆலய மாமணி யோசையும்
தங்கி யின்புற நெஞ்செழும் பாடலே!

22. கவிஞர் கைலாசநாதன் காளிதாசு
ஓடக் காண்பது வண்டிகள் அச்சினை 
ஒடுங்கக் காண்பது ஏழைகள் குச்சினை!
தேடக் காண்பது நந்தமிழ் ஆடையைத் 
திரளக் காண்பது தேறலின் வாடையை 
பாடக் காண்பது குத்துகைக் கொட்டியும் . படிக்கக் காண்பது மாமதில் ஒட்டியும் நாடக் காண்பது நாணிலா ஆளுமை 
நந்தம் நாடதின் நலமிது வாகுமே!

23. கவிஞர் S.s.Kekirewa
பெருமை யோடறி வூட்டிடும் போதகர்
பெரும னத்துடன் வள்ளலு மாவரே
தரும மாகவே யீந்திடும் பொக்கிசம்
தரணி யாவிலு மிஞ்சிடும் செல்வமாம்
கரும மாயதை நெஞ்சினி லேற்பவர்
கடவு ளின்னருள் பெற்றவர் போல்வராம்
அருமை யானவிப் போதனை கேட்டிடில்
அணையு மாந்தரின் அற்புதம் காண்பிரே!

24. கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி
நாடு நெஞ்சினை நாடிவி ரைந்திடும்
நாவில் நேர்நிரை நாட்டியம் ஆடிடும்
சூடு பாமலர் சுந்தரத் தேனிலா
சுற்றும் பூமியில் கால்பட வேநிலார் 
வீடு பேறளி வித்தக மாமறை
விந்தைப் பேரொளிப் பைந்தமி ழாமறை
காடு; செய்யுளச் செய்யுடம் சோலையே 
கன்று போலுளம் கொண்டவன் மாலையே!

25. கவிஞர் சிதம்பரம் சு.மோகன்
கருவாய் அன்னையர் கொண்டுனைக் காத்திட
கலசம் விட்டொரு கங்குலில் வீழ்ந்தனை!
உருவாய் வந்திடர் பூமியில் தோன்றிய
ஒருநாள் தொட்டுநீ ஓட்டமாய் ஓடினை!
திருவாய்த் தேடியே எப்பொருள் சேர்க்கினும்
எருவாய் நாடியே நாரியர்க் கீந்தனை!
திருவாம் ஐந்தெழுத் தோர்கிலை நெஞ்சமே..
கருப்பை சேர்கிலாக் காவலை உய்வையே!

26. கவிஞர் வனராசன் பெரியகண்டர்
சின்னக் காகித ஓடமும் நீரதன்
சீற்றந் தாங்கியே சீர்பெறக் கூடுமோ?
மின்னும் பூச்சிகள் மேவிடும் பூவதன்
மென்மை காத்துமே மீண்டிட லாகுமோ?
உன்னை நாடியே ஓடிடும் என்னுயிர்
ஓர்நாள் வாழுமா ஊனுனை நீங்கியே?
என்னைச் சேர்ந்திட ஏதுவாய் நல்வழி
இன்றே காணடி இன்பமுந் தாங்கியே!

27. கவிஞர் சியாமளா ராஜசேகர்
அலைகள் மோதிட ஆடிடும் நீரிலே 
அழகாய்ப் பூத்திடும் தாமரைப் பூவுமே 
இலையில் நீருமே ஒட்டிடாத் தன்மையால் 
இயைந்து முங்கிடா வண்ணமாய் நீந்துதோ ?
வலைக்குத் தப்பிய மீன்களும் துள்ளியே 
வழுக்கிச் சென்றதன் தாயிடம் சேருதோ ?
மலைக்க வைத்திடும் நீரினுள் வெண்ணிலா
மயக்கும் காட்சியும் சொக்கிட வைத்ததே !

No comments: