பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

12 May 2016

‪சிந்துபாடுக 3 இன் தொகுப்பு‬ - கும்மிச் சிந்து


அன்பு நண்பர்களே !
சோலைக் கவிஞர்களே! 
சிந்து பாடுக. - 3 இல் பல கவிஞர்கள் கலந்து கொண்டு தங்கள் பாக்களைப் படைத்தனர். புதிய யாப்பைப் பயில்கின்றஆர்வம் பலரிடத்தே இருந்ததைக் காண முடிந்தது. அனைவருக்கும் நன்றியும், வாழ்த்தும் உரித்தாகுக.
பயிற்சியின் தொகுப்பு, அப்பயிற்சியில் கலந்து கொண்ட கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. 
கொடுக்கப்பட்டுள்ள வரிசை எண் தரவரிசைக்குரியதன்று. கவிஞர்கள் கவிதைளை அனுப்பிய வரிசைக்குரியது.
அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்...
இந்தத் தொகுப்புப் பாடல்களைப் படிக்க வேண்டா. ★பாடிப் பார்க்கவும். அப்போது தான் சுவைக்கும்.
கவிஞர்களை வாழ்த்துங்கள்...உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


சிந்து பாடுக - 3
(கும்மிச் சிந்து)
1. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்
ஏட்டுச்சு ரைக்காய்க றிக்குத வாதென
என்றோசொன் னாரொரு பொன்மொழி யே!
நாட்டுக்குள் ளேபல தேர்தல றிக்கையும்
நம்வீட்டுச் சிக்கலை தீர்த்திடு மோ?

2. கவிஞர் நிறோஸ் அரவிந்த்
நன்மைகள் சேர்ந்திடத் தீமைகள் ஓடிட
நல்லெண்ணம் கொண்டுநீ கும்மிய டி
இன்பங்கள் என்றுமே உன்சொத்தாய் ஆகிடும்
என்றெண்ணி நன்நெஞ்சே கும்மிய டி!

3. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
நல்லதும் கெட்டதும் கொண்டுள தே - இன்னும் 
நல்லவர் தீயவர் சூழ்ந்துள தே
அல்லலைப் போக்கிட கேட்டிடு வாய் - பிள்ளாய்
அன்புசொல் பேச்சினில் வைத்திடு வாய்!

4. கவிஞர் விவேக் பாரதி
புன்னகைப் பூமகள் பூங்குழ லிற்புது 
புண்ணிய காவியம் வாசிக்கி றேன் !
என்னவள் தந்திடு மின்பமெ லாமந்த 
ஏடுகள் நல்குமா ? யோசிக்கி றேன் !

5. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து
உன்னையும் வாழ்த்தியே உண்மையாய் வாழ்ந்திட
ஊராரும் போற்றிடக் கும்மிய டி
மன்னையில் வந்துமே ஆடியும் பாடுவான்
மாதவன் ஆனந்தக் கும்மிய டி.

6. கவிஞர் வனராசன் பெரியகண்டர்
சின்னக்கு ழந்தைகள் செய்யுங்கு றும்புகள்
சிந்தையி லாயிர மின்பமன் றோ!
தின்னயி னித்திடும் தேன்கனி போல்நிதம்
தித்திக்கு மானந்த விந்தையன் றோ!

7. கவிஞர் வள்ளிமுத்து
மண்புகழ் தோன்றிய மாதவ ளே-தமிழ்
மாநில மெங்கிலு முன்புக ழே
தென்புலந் தோன்றிய தென்தமி ழே-புவி
தேற்றம டைந்திடும் உன்னரு ளே...!

8. கவிஞர் பொன்.பசுபதி
என்னுடல் நோயாலி டர்பட்டி ருப்பினும்
என்றும்த மிழ்ப்பாடல் யாத்திடு வேன்
மன்னும்பு கழ்யாவும் மாத்தமிழ்க் கேயென
மாந்தருள் மாந்தனாய் வாழ்ந்திடு வேன்.

9. கவிஞர் ரமேஷ் மாதவன்
சங்கோடு சக்கரம் கையிலேந் தி - அந்தச்
சக்கர பாணியும் நிற்கின்றா னே!
மங்கள நாயகி ரங்கனின் நாயகி
மார்பினில் வைத்தவன் தாள்பணி வோம்!

10. கவிஞர் அழகர் சண்முகம்
பட்டினி நோய்பசிப் பாட்டினி லேநொந்து
பாமரர் வேகிறார் நாட்டினி லே
கொட்டிக் கவிழ்த்திடும் பாரங்க ளேதினம்
கொஞ்சம் நினைத்திதைப் பாருங்க ளே! 

11. கவிஞர் மாரிமுத்து
பாடிட வாருங்கள் காக்கைக ளேயிந்தப்
பாமரன் தூக்கத்தைப் போக்கிட வே.
நாடியே நன்மையைச் செய்திடு வோமிந்த
நாட்டினர் கூடியே வாழ்ந்திட வே!

12. கவிஞர் அஷ்பா அஷ்ரப் அலி
நெஞ்சுக்கு ளாயிரம் ஆசைக ளோடுது
நேரிழை யேயுன்றன் எண்ணத்தி லே
கெஞ்சுகி றேனுனைக் கேளடி கொஞ்சம்நீ
கொஞ்சிம கிழ்ந்திட லாமிங்கு வா !

13. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
கொட்டுமு ழக்கங்கள் கோடிபெற் றெங்கிலும் 
கோபியர் வாழ்க்கையின் கோட்டையன் றோ. 
பட்டுப்போ லோர்மேனி பாக்கிய மென்னாலும் 
பாடித்தி ரிந்திடும் பட்டாள மே.!

14. கவிஞர் பரமநாதன் கணேசு
வாடிக்கி டப்போரின் வாட்டங்கள் போக்கியே
வாரிய ணைத்திட வந்திடு வீர் 
கூடிக்க ளித்தவர் கேடுக ளைந்திடக்
கொள்கைவ குத்தின்றெ ழுந்திடு வீர்! 

15. கவிஞர் இரா.கி. இராஜேந்திரன்
சில்லிதழ் சிந்திய தேன்துளி மாந்தியே
சேர்ந்தவன் செங்கண்ணன் கோவிந்த னே
மெல்லிடை மேனியள் ராதையின் நெஞ்சினில்
மேன்மையாய் வாழ்பவன் மன்னவ னே!

16. கவிஞர் அர.விவேகானந்தன்
முத்தமிழ் எந்தனின் மூச்சென்பேன் செந்தேனில்
மூழ்கியே எந்நாளும் வாழ்ந்திடு வேன்
வித்தாக நானிங்கே மாறுவேன் வீணரை
வீழ்த்தியே வெற்றியைச் சேர்த்திடு வேன்!

17. கவிஞர் வீ.சீராளன்
சிந்தையி லூறிய செந்தமி ழே - என்னைச்
சீண்டிடு முன்விழிப் பார்வைக ளே 
எந்தப்பி றப்பதன் எச்சங்க ளோ - இன்னும் 
என்னுயிர் ஆளுமுன் நாணங்க ளே!

18. கவிஞர் சியாமளா ராஜசேகர்
சொப்பனத் தில்வந்துச் சொக்கிட வைத்தவள்
சொர்க்கத்தைக் காட்டியே சென்றுவிட் டாள்!
செப்புச்சி லைப்போல சுந்தர மேனியாள்
சிந்தைக்கு ளிர்ந்திடச் செய்துவிட் டாள்!

19. கவிஞர் சேலம் பாலன்
நந்தமிழ் நாட்டிடைத் தேர்தலம் மா- இன்று
நா நயம் கொள்கையும்
இல்லையம் மா
கந்தரக் கோலமாய்க் காட்சியம் மா- பல
காணவும் கேட்கவும் கூசுதம் மா !

20. கவிஞர் நாகினி கருப்பசாமி
ஆடிய லைந்திடும் காற்றுமிங் குள்ளதில்
ஆனந்தக் கும்மிப்பாட் டாகிடு தே
வாடிய உள்ளமிங் கின்பவெள் ளத்தினால்
வார்த்தைத்த டைபட்டு மௌனிக்கு மே!

21. கவிஞர் குருநாதன் ரமணி
பைந்தமிழ்ச் சோலையின் புள்ளினப் பாடல்கள்
. பாவியென் னுள்ளத்தைக் கொள்ளைகொள் ளும்
ஐந்தரு வாசமாய்ப் பாக்கள்பு னைவதில்
. ஆங்காங்கே தென்றலும் துள்ளிவ ரும்

22. கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி
கண்டதைக் கேட்டதைப் பாடிடு வேன்- உளம்
கொண்டதை உண்டதைப் பாடிடு வேன்.
பண்டையோர் வாழ்க்கையைப் பாடிடு வேன் - மலர்
பைந்தமிழ்ச் சோலையைப் பாடிடு வேன்!
★★★

No comments: