கம்பரின் அறிவியல் சிந்தனையை ஏற்கனவே ஒரு பாடலில் கண்டோம். (வெள்ளெருக்கஞ் சடைமுடியான்)
இன்று வேறொரு பாடலில் கம்பரின் அறிவியல் சிந்தனையைப் பார்க்கலாம்.
கல்வியில் பெரியவன் கம்பன் என்றார்களே! ...சும்மாவா சொன்னார்கள். அனைத்துத் துறைகளிலும் கற்றுத் துறைபோகிய காரணத்தாலல்லவோ அப்படிச் சொன்னார்கள்?
இன்று கண்டுபிடிக்கப்படும் பல கண்டுபிடிப்புகளை அன்றே கண்டறிந்து தன் காப்பியத்தில் பதிவிட்டவர் கம்பர் பெருமான்.
இதோ இன்னொரு பாடல்...
விசுவாமித்திரருடன் கானகத்தில் நடந்து கொண்டிருக்கும் இராமன் (இலக்குவனும்) தாடகை எனும் அரக்கியைப் பொருத வேண்டிய சூழல். அவளுடைய ஆர்ப்பரிப்புகளை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் இராமன், அவளைப் பெண்ணென்ற காரணத்தால் தாக்காமல் தயங்குகிறான். பின்பு முனிவரின் கூற்றுப்படி அவளைக் கொல்ல அம்பெய்துகிறான்.
"முனிவரின் சினச்சொல்லைப் போன்ற அம்பை இராமன், இருள்நிற அரக்கியாம் கல்லைப் போலும் தாடகையின் மார்பில் எய்கிறான். அது அவளது நெஞ்சைப் பிளந்து கொண்டு மறுபுறம் சென்றுவிடுகிறது.
அச்செயல் கல்லாதவர்க்கு நல்லோர் கூறும் அறிவுரை பயனற்றுப் போவது போல் இருந்தது " என்கிறார் கவிச்சக்ரவர்த்தி.
"சொல்லொக்கும் கடிய வேகச்
சுடுசரம் கரிய செம்மல்
அல்லொக்கும் நிறத்தி னாள்மேல்
விடுதலும் வயிரக் குன்றக்
கல்லொக்கும் நெஞ்சில் தங்கா
தப்புறம் கழன்று கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன
பொருளெனப் போயிற் றம்மா! "
அடடா.. என்னவொரு சொல்லாட்சி.? அந்தத் தாடகை எப்படிப்பட்டவளாம்.! இருளையொக்கும் நிறத்தவள்...வயிரக் குன்று போன்றவள்... அவளை அழிக்க எந்தச் சரத்தை இராமன் பயன்படுத்துகிறான் பாருங்கள். "சுடுசரம் " ஆம்.,சூடான அம்பை எய்கிறான். அவ்வம்பு....அந்தச் சூடான அம்பு, அந்தக் கொடிய அரக்கியின் வயிரம் போன்ற நெஞ்சைத் துளைத்துப் போகிறது.
பொதுவாக இராமன் செலுத்தும் அம்பு., பகைவரை அழித்தபின் மீண்டும் அவனிடம் திரும்பிவிடும். ஆனால் அரக்கியைக் கொல்ல செலுத்திய அம்பு அவளைத் துளைத்துக் கொண்டு மறுபுறம் சென்று விட்டதாம்.
இதிலென்ன அறிவியல் சிந்தனை? என்று கேட்கிறீர்களா? இதோ பாருங்கள் கம்பரது கல்வியின் சிறப்பை. அவரது அறிவியலறிவை...
பாறைகளைத் துளையிடவும், வைரத்தை அறுக்கவும் பயன்படுத்தப்படும் துளையிடும் துளைப்பான் (Drilling pit) மிகச் சூடாக (High Temp.) இருத்தல் முக்கியம். அப்போது தான் அது பாறையைத் துளைக்கும். ..என்கிறது "உலோக அறிவியல் "(Mettalogical Science)
எனவே தான்,
வயிரம் போன்ற, பாறையான நெஞ்சைத் துளைக்க இராமன் "சுடுசரத்தைப் " பயன்படுத்தியதாகக் காட்டுகிறார் கம்பர் பெருமான்.
சொக்கிப் போகிறது நம் மனம். சொக்காதிருப்பவர் யாருமுண்டோ? கம்பன் கவிநயத்திற்காக நம் வாழ்நாள் முழுதும் கம்பரைப் படித்துக் கொண்டேயிருக்கலாம்.
(தொடரும்...)
No comments:
Post a Comment