பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

20 May 2016

‪‎சிந்துபாடுக 9 இன் தொகுப்பு‬ ( காவடிச் சிந்து 3 )


அன்பு நண்பர்களே !
சோலைக் கவிஞர்களே! 
சிந்துப்பாடுக. - 9 இல் பல கவிஞர்கள் கலந்து கொண்டு தங்கள் பாக்களைப் படைத்தனர். அனைவருக்கும் நன்றியும், வாழ்த்தும் உரித்தாகுக.
பயிற்சியின் தொகுப்பு, அப்பயிற்சியில் கலந்து கொண்ட கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. கொடுக்கப்பட்டுள்ள வரிசை எண் தரவரிசைக்குரியதன்று. கவிஞர்கள் கவிதைளை அனுப்பிய வரிசைக்குரியது.
அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்...இந்தத் தொகுப்புப் பாடல்களைப் படிக்க வேண்டா. ‪#‎பாடிப்‬ பார்க்கவும். அப்போது தான் சுவைக்கும்.
கவிஞர்களை வாழ்த்துங்கள்...உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


சிந்து பாடுக - 9
(காவடிச் சிந்து) (3)
1. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
காதலின் நெஞ்சத்தில் கண்மணி -- நாளும் 
காத்திருப் பாயடி பெண்மணி -- நீயும் 
காலங்கள் மாறினும் பொன்மணி -- என்றும் 
கதியாயெனை மதியேநினை 
பதியாயெனை மறவாதிரு
கண்களால் பேசிடும் கண்மணி -- நம் 
காதலும் கூடிடும் பொன்மணி .

சாதலை மாற்றுவாய் கண்ணாலே -- என்றும் 
சாத்திரம் பேசுவாய் பண்ணாலே -- நாளும் 
சாற்றிடும் உண்மைகள் பின்னாலே -- தினம் 
சரியாயெனை மனமேஎன 
வரமேதர உறவாயினி 
சந்ததி ஏற்போமே முன்னாலே -- இனி 
சத்தியம் சொல்லுவேன் உன்னாலே!

2. கவிஞர் பொன்.பசுபதி
எங்கும்த மிழ்வளர் தங்கமே-பகை
ஏற்றுமு டிக்கின்ற சிங்கமே-மொழி
ஏற்றத்தி லேயொரு அங்கமே-என்று(ம்)
எளிதாய்மொழி வளமேபெற 
இனிதாயொரு வழிகாணவும்
இங்குநீ வந்தாயே இன்பமே-இனி
என்றைக்கு மேஇல்லை துன்பமே!

திங்கள்மு கங்கொண்ட தம்பியே-நீயும்
தீயெனத் தோன்றுக எம்பியே-எழில்
தீந்தமிழ் காத்திடும் தும்பியே--நல்ல
செயலேவிழை மறவாஇனி 
அயலார்வினை தனைநீயறி
தீயவர் நீங்குவார் வெம்பியே-மேலும்
சீர்பெறும் தாய்த்தமிழ் நம்பியே!

3. கவிஞர் பரமநாதன் கணேசு
கோடிமு றைதந்தாள் முத்தமே – அவள்
கொட்டும்ம ழையென நித்தமே– இதைக்
கொண்டதில் வென்றது சித்தமே – இனிக்
குறைவேயிலை யெனவேநிலை 
நிறைவாயுற வதிலேகளி
கொள்ளவே சேர்ந்தது பித்தமே – மனக்
கூட்டினில் தான்தினம் யுத்தமே.

கூடிக்க ளித்திடு மஞ்சமே– அங்குக்
கூத்துக்கு ஏனடா பஞ்சமே- எனைக்
கொஞ்சிடத் துள்ளுமே நெஞ்சமே– கார்
குழலேவிரி மலராமெனு
மெழிலாளெனை வதையேபுரி
கொண்டேன வள்மார்பில் தஞ்சமே – எனைக்
கூட்டித்து வைத்தாளே கொஞ்சமே! 

4. கவிஞர் சியாமளா ராஜசேகர்
தென்றலும் பூவுடன் கூடுதே - உனைத் 
தேடிக்கண் கள்நிதம் வாடுதே - என் 
தேவதை யுன்நிழ லாடுதே - உன் 
சின்னஞ்சிறு கண்கொஞ்சிட 
தென்னங்கிளி கொஞ்சும்மொழி
தேனூற என்மன மாடுதே - தக 
தித்தோமெ னத்தாளம் போடுதே !

மின்னிடும் பற்களோ முல்லையே - எழில் 
வெண்ணிறக் கற்பூர வில்லையே - மீட்டும் 
மெல்லிசைக் கீடிங்கே இல்லையே - நல்
வெண்பஞ்சினை விஞ்சும்நிற 
மென்புன்னகை சொந்தங்கொள
வேறில்லை அன்பிற்கோர் எல்லையே - உன்றன் 
மென்மையாம் உள்ளமும் வெள்ளையே !

5. கவிஞர் வெங்கடேசன்சீனிவாச கோபாலன்
அன்புடன் ஈன்றவுன் அன்னையே – அந்த
அற்புத வோர்தெய்வம் தன்னையே – என்றும்
ஆதரிப் பாயந்தக் கண்ணையே – இதை
அறியாமலே தெரியாமலே
புரியாமலே விடுவாயெனி(ல்)
அய்யகோ பாரிங்குப் பின்னையே – இந்த
அண்டமும் மன்னிக்கா துன்னையே!

இன்னொரு தெய்வமாம் தந்தையே - இதை
ஏற்கவே ணுமுன்றன் சிந்தையே - கொஞ்சம்
எண்ணம றந்தது விந்தையே - இதை
எப்போதுமு ளத்தேயிட
முப்போதுமி னிப்பாகிடு(ம்)
என்றும்ம கிழ்வாருன் தந்தையே - உன்னை
இவ்வுல கில்செய்யார் நிந்தையே!

6. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து
காலாலே பின்னியே யாடுவோம் அந்த
கந்தனைப் போற்றியே பாடுவோம் வெருங்
காலாலே மண்ணிலே ஓடுவோம்
கற்றுக்கொடு உற்றத்துணை 
சுற்றத்தொடு பற்றிக்கொள
காவடித் தூக்கியே யாடுவோம் அவன் 
காலடிப் பற்றிட நாடுவோம்.

வேலவா என்றுமே கத்தியே நீயும்
வேண்டிட கந்தனும் முத்தியை தந்து
வேலின்கூர் மையிலே புத்தியை அவன்
வினையாகவும் அழகாகவும் 
அறிவாகவும் தெளிவாகவும்
வைத்தானே ஏற்றியும் மொத்தமாய் வேலில்
வேண்டிய னைத்தையும் சக்தியாய்.!

7. கவிஞர் நாகினி கருப்பசாமி
வந்துநேர் நிற்பவ ரிங்குமே.. உயர்
வாகையும் சூடுவோ ரெங்குமே.. தனி
வாய்ப்பது கோலோச்சு மெங்குமே.... இனி
வருமோயென எழுவாயென 
வகைபேசிய நலமோடிணை
வாடாம லாடலாய்த் தங்குமே..என
வாழ்நாளி லானந்தம் பொங்குமே!

கையூட்டு வாங்காம லிங்குதான்.. நேர்மை
கைகாட்டிக் கொள்வோர்வெண் சங்குதான்.. நலம்
கைமாறா தீபமா யிங்குதான் ..சுடர்
கொலுவாகவோ பலமாயொரு 
கொடியாகிய சிலபேரது
கைகளும் நேர்திசை யங்குதான்.. செல்லும்
கைவிளக் கென்றாகும் பங்குதான்! 

8. கவிஞர் அஷ்பா அஷ்ரப் அலி
சின்னக்கு ழந்தைநீ தங்கமே - நீ
செல்லுமி டங்களில் பங்கமே - உன்
செவ்வழ கானதோ ரங்கமே - இதைச்
சிதைப்பாரடி வதைப்பாரடி
இழப்பாயடி நிலைப்பாடிது
சிந்தனை யோடேநீ எங்குமே - தினம்
சென்றுவந் தால்மனம் பொங்குமே !

கண்ணீரால் சொல்லுமென் சொல்லையே - காணக்
கன்னிப்பெண் ணாகநீ யில்லையே - உனைக்
காத்துவ ளர்ப்பதுந் தொல்லையே - என்
கனவோபல நனவாகுது
கனியேயிது கலிகாலமே
கண்ணெதிர் காண்கிறேன் பிள்ளையே - இங்கு
காமுக ரால்பெருந் தொல்லையே !

9. கவிஞர் குருநாதன் ரமணி
ஆண்டவன் பல்வகை வண்மையே - இந்த
அண்டமு லாவுமந் தண்மையே - நமை
யாளும தஞ்சொலும் நுண்மையே இங்குப்
பலவாயுள வுயிர்யாவுமே
பரமேகொளு முருவேயென
வாகிலும் ஒன்றெனும் உண்மையே - நமை
ஆட்கொளும் நாள்வரும் தெண்மையே.

ஆண்டவன் ஒன்றெனக் கூறிடும் - மதம்
ஆள்கின்ற மன்பதை கூறிடும் - இந்த
ஆருயிர் வாழ்வினில் சேறிடும் - இங்குப்
பலவாயுள வுருமானிடர்
நிலவேரினில் ஒருமைகொளும்
ஆழத்தைச் சொல்லாது வீறிடும் - பகை
ஆரம னத்தில்நாண் ஏறிடும்.

10. கவிஞர் கலாம் ஷேக் அப்துல் காதர்
அன்புடன் வாழ்வதால் வெற்றியே- உன்
ஆற்றலும் நீண்டிடும் பற்றியே- அங்கு
ஆவலாய் உன்னைத்தான் சுற்றியே-வரும்
அசைவாலுனை இசைபாடிடும் 
நிறைவாலினி உளமோதிடும்
ஐயமே இன்றிநீ பெற்றியே-பெறும்
ஆளுமை உன்னிடம் தொற்றியே!

துன்பமும் போக்கிடும் அன்புதான்- அதைச்
சொல்லாத மேனியும் என்புதான் - உன்
சுற்றமும் நட்புமே தெம்புதான்- வரும்
சுகமானதைப் பெறுவாயெனக் 
கவியாலிதைத தருவாயெனச்
சொல்லுதல் என்னுளப் பண்புதான் - இதைத்
தூர்த்தம னத்தினில் வம்புதான்!
★ 
11. கவிஞர் அழகர் சண்முகம்
சாதித்து யர்தனைப் போக்கவே-கொடும்
சாத்திர மென்பதை நீக்கவே-நல்
சட்டத்தி னால்பொது வாக்கவே-நீயும்
சமநீதியை விதியாலிணை
நமதேயென மதியாலுரை
சண்டைம றந்தெழில் பூக்கவே-வரும்
சந்ததி யன்பொடு நோக்கவே!

தீதில்வ ளரந்தபாழ் ஆலமே-பற்றத்
தீயும்நல் வாழ்க்கையின் காலமே-எங்கும்
தீங்கைவி தைத்திடும் மூலமே-நற்
திறனோடெழு அறிவாலறு
விடமாகிடு மரமாமது
திக்கைவிட் டோடிடும் ஓலமே-நட்புத்
தீங்கனி யாயமை பாலமே!
★ 
12. கவிஞர் மஞ்சுளா ரமேஷ்
கண்ணனை எண்ணுக நெஞ்சமே - அவன் 
காலடி பற்றுக கொஞ்சமே - அந்தக் 
கள்வனைப் பற்றினால் தஞ்சமே - உந்தன் 
கனவேயது நனவேபெற 
இனிதேவர வளமேபெற 
காத்திடு வானுனை நெஞ்சமே - நம் 
காலமு மேமாறும் கொஞ்சமே

துன்பங்கள் என்றுமே வாழ்விலே - நம்மைத் 
தூய்மையு றச்செயும் தாழ்விலே - அந்தத் 
தூயவன் என்றுமே சோர்விலே - நம் 
துணையேவர நலமேதர 
சுகமேபெற அவனேதுணை
தோழமை யைக்கொண்டு பாரிலே - நாளும் 
துன்பமென் றில்லையே ஊரிலே 
★ 
13. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
தேர்தலில் பாடத்தைக் கற்றனர்- சிலர் 
தேர்வினில் வெற்றியும் பெற்றனர் _ பலர் 
தேர்தலில் தோல்வியும் உற்றனர் - கட்சி 
திறமானதை முடிவேசெய 
திடஞானமு மிதிலேயிலை 
திட்டங்கள் சொன்னது வெல்லுமோ - இதைத்
தீர்ப்புநாள் எண்ணிக்கைச் சொல்லுமோ

ஆர்தலி னாலொன்று மில்லையே - இன்னும் 
அச்சத்தி னால்மிகுத் தொல்லையே - ஆட்சி 
அன்பது அவ்வழி யில்லையே - என்றும் 
அறமேயது கடையேபிடி 
அறிவேயது துணையாகிட 
ஆசையால் சாத்தியம் ஆகுமே- அது
அத்தனின் மெய்வழிச் சேர்குமே

14. கவிஞர் நிறோஸ் அரவிந்த்
வாராளோ என்முன்னே நெஞ்சமே - அவள்
வந்திடக் காதலும் விஞ்சுமே – இனி
வாவென என்கவி கெஞ்சுமே – உடன்
வருவாளென நினைவேயளி
வலிபோயிட வரமாயினி
வந்திடும் வஞ்சியென் தஞ்சமே – என
வன்மனம் சொல்லியே துஞ்சுமே!

பாராள வந்திட்ட பாவையோ – அவள்
பார்வைக்கு வில்லம்பு தேவையோ – எழிற்
பாங்கிக்கு என்றுமென் சேவையோ – அவள்
பக்கத்துணை நிற்கத்தமிழ்
பற்றிக்கவி கொட்டச்சுவை, 
பஞ்சுமஞ் சும்பதப் பூவையோ – இனிப்
பாடுவேன் முத்தமிழ்க் கோவையோ!
★ 
15. கவிஞர் வீ.சீராளன்
பிஞ்சுக்கு ழந்தையின் முத்தமே - இன்பம் 
பெற்றுக்கொ டுத்திடும் நித்தமே - அந்தப் 
பிள்ளைத்த மிழ்சிவ சித்தமே - நாம் 
பிறப்பெங்கிலும் மகிழ்வெய்திடும் 
பிறப்பின்றியும் சிறப்பெய்திடும்
பேருவ கையவர் சத்தமே - வாழ்வில் 
பீடுகொ டுத்திடும் சுத்தமே !

மஞ்சரி யாய்மனை ஆகுமே - பிள்ளை 
வாஞ்சையால் தாய்வலி போகுமே - சுற்றும் 
மாயங்க ளும்வெளி ஏகுமே -இல்லை 
வண்ணங்களில் எண்ணங்களும் 
முன்னல்களால் கண்ணுள்வர
மார்புட னாசைகள் வேகுமே - அந்த 
மங்கைப்பி றப்பிரு ளாகுமே !

16. கவிஞர் கட்டிக்குளம்.ஓ.சுந்தரமூர்த்தி
அன்னத்த ளிர்நடைப் பெண்ணேநீ-என்றன்
ஆழ்மனம் வாழ்கிறாய் கண்ணேநீ-நல்ல
அன்பினில் ஒத்தாயே விண்ணேநீ - என்றும்
அறமேபடி நலமேதரு 
நிலவேயென சுகமாயிரு
அங்கங்கப்பொ றுமையில் மண்ணேநீ-உற்ற
ஆதர வாயிரு இன்னேநீ !

உன்னிரு கண்களின் பார்வையே! -என்றும்
ஊக்கமு மாக்கமும் கூர்மையே ! எனக்கு
உள்ளூற வைத்தாயோ தேர்வையே !-இனி
உளமோங்கிட உலகேற்றிட 
உயிர்தாங்கிட உறவாகிடு !
உந்தனை வேண்டுவேன் சேர்வையே !-எனை
ஊர்மெச்ச வைத்திடு தீர்வையே !

17. கவிஞர் தாமோதரன் கபாலி
அம்மையே தந்திட்ட நற்றமிழ் - என்னுள் 
அப்பனும் கட்டிய சொற்றமிழ் - ஆக
அன்புமாய் ஒட்டிடும் இன்தமிழ் - சேர 
அறனேயது சிவனேயது  
அழகேயது அமுதேயது
ஆனந்தம் ஏந்திடும் முத்தமிழ் - ஒன்றி 
ஆடிட வந்திடும் செந்தமிழ்!

பொய்மையும் காய்மையும் கொண்டிடும் - கொஞ்சம் 
புத்தியில் ஏறிட உண்டிடும் - கொஞ்சல் 
போலவே சுற்றிட மண்டிடும் - நஞ்சு 
புலவாவுனை அணைத்தேநிதம்  
பொலிவாயுனை அறமேயுனை 
போற்றிட செந்தமிழ் அண்டிடும் - இன்பப்
புன்னகை மென்தமிழ் கண்டிடும்!

18. கவிஞர் வனராசன் பெரியகண்டர்
நல்லவை ஆயிரம் ஏட்டிலே - அதை 
நம்பிட யாருளர் வீட்டிலே - தினம் 
நாடுவர் யாருளர் நாட்டிலே - இங்கு
நலமாயிரம் இனிகூறினும்  
பலவாரிவர் உளமாறுவர்
நானெனச் சொல்வது பாட்டிலே - கெட்ட
நாய்களும் வாழ்ந்திடும் காட்டிலே!

நல்லவர் சொற்களை ஏற்றிடு - அவை
நன்மைகள் தந்திடும் போற்றிடு - அதை 
நாடியே நெஞ்சதைத் தேற்றிடு - உடன்
நனவாகிடும் கனவாவையும்  
மனமேவிடும் சுகமாவையும்
நம்பிக்கைத் தீயினை ஏற்றிடு - இங்கு 
நல்லதாய் வாழ்வினை மாற்றிடு!

19. கவிஞர் அர.விவேகானந்தன்.
நித்தம்பாட் டிசைக்கும் பிள்ளையே- நீ
நெஞ்சில்நின் றாடிடும் கிள்ளையே-உன்
நெஞ்சமும் மாசில்லா வெள்ளையே -தினம்
நிலைமாறிடும் உலகாமிதில்  
நிலையாகிடும் சுகமேதரும்
நீயுமென் வாழ்வதின் எல்லையே-உனை
நீங்கினால் இன்பமும் இல்லையே!

முத்தங்க ளுங்கோடி கூட்டியே-விழி
மூடாது வாயெனை மீட்டியே-நித்தம்
மொத்தமாய் அன்பதைக் காட்டியே- நீயும்
மொழிவாயினி மனமேகுளிர் 
அமுதாகிடும் மொழியாமதை
முன்னிற்கும் இன்னலை வாட்டியே-வந்து
முத்தான வாழ்வதை நீட்டியே!
★ 
20. கவிஞர் மாரிமுத்து
கண்ணிலே காதலைத் தேடினோம் - அதைக்
கண்டதும் நெஞ்சினில் கூடினோம் - இன்பக்
காவிலே வண்டாக ஓடினோம் - அங்கே
கவிபாடிடும் குயிலோசையும் 
மயிலாடிடும் மழைமேகமும்
காணவே யுள்ளத்தி லாடினோம் - எங்க
காலமும் இன்புறப் பாடினோம்....

பாடிம கிழ்கிற வேளையில் - கள்ளன்
பார்த்ததும் சென்றானே சோலையில் - அவன்
பற்றவும் வைத்தானே மூலையில் - அந்தப்
பழியோடிட வழிதேடிட  
மொழிபேசிய மணநாளினில்
பந்தமும் செய்தோமே மாலையில் - நாங்க
பாராட்டும் பெற்றோமே சாலையில்!
★★★

No comments: