அன்பு நண்பர்களே !
சோலைக் கவிஞர்களே!
சிந்துப்பாடுக. - 8 இல் பல கவிஞர்கள் கலந்து கொண்டு தங்கள் பாக்களைப் படைத்தனர். அனைவருக்கும் நன்றியும், வாழ்த்தும் உரித்தாகுக.
பயிற்சியின் தொகுப்பு, அப்பயிற்சியில் கலந்து கொண்ட கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. கொடுக்கப்பட்டுள்ள வரிசை எண் தரவரிசைக்குரியதன்று. கவிஞர்கள் கவிதைளை அனுப்பிய வரிசைக்குரியது.
அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்...இந்தத் தொகுப்புப் பாடல்களைப் படிக்க வேண்டா. #பாடிப் பார்க்கவும். அப்போது தான் சுவைக்கும்.
கவிஞர்களை வாழ்த்துங்கள்...உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
சிந்து பாடுக - 8
(காவடிச் சிந்து) (2)
1. கவிஞர் வள்ளிமுத்து
கோடைம ழையதும் கொட் டும்- மரங்
கொள்ளுசின் னத்துளி சொட்டும் - எங்கும்
கொடிமேவிடப் பொடிபோகிடப்
பொலிவாயிளந் தளிரேவிடக்
கொழிக்கும்-வளஞ்-செழிக்கும் !
வாடையு டன்தென்றல் வீசும் - இளம்
வண்டுகள் பூவிடம் பேசும்-அடர்
வனம்யாவிலும் மலர்மேவிடும்
கனநேரமும் சுரும்பாடிடும்
வடிக்கும்-தேன்-குடிக்கும்!
★
2. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
ஏற்றிடும் வீட்டினில் தீங்கும் - தினம்
எத்திக்கும் அன்னனையால் நீங்கும் - நலம்
எனவேநினை வரமேதர
மணமேயென உறவாயினி
ஏற்று - எது - மாற்று?
மாற்றங்கள் செய்திடும் மங்கை - அவள்
மாண்பினில் ஓங்கிடும் கங்கை - அது
மதியேயென நலமேதர
நிகரேயிலை உலகேநினை
மாற்றம் - வரும் - ஏற்றம்!
★
3. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்
வந்தனை செய்திடு வாரே – அவர்
மாயவ லைவிரிப் பாரே – உன்னை
மதிப்பாரவர் பெரியாரெனத்
துதிப்பாரவர் பணத்தாலுனை
வாங்கி – வாக்குக் – கேங்கி!
சிந்தனை யில்நல்ல பார்வை – கொண்டு
செய்திடும் ஓர்தலை தேவை – இந்தத்
தேசத்தினை நாசஞ்செய
யோசிப்பவர் ஆசைதனை
ஒடுக்கு – அது – மிடுக்கு
★
4. கவிஞர் பரமநாதன் கணேசு
பள்ளிக்குப் போய்வரும் பெண்ணே! – பக்கம்
பார்த்துந டந்திடு கண்ணே!- இங்குப்
பலரோதினம் கழுகாமெனப்
பசியோடலை நிலையாமதைப்
படிப்பாய் – பயம் – தடுப்பாய்
அள்ளியே பொய்களைக் கொட்டி – உன்னை
ஆசையாய் எண்ணுவார் கட்டி – நீ
அதையேமனம் தனிலேவளர்
பயிராமென வளர்க்காததை
அழிப்பாய் – வாழ்ந்து - செழிப்பாய்
★
5. கவிஞர் விவேக் பாரதி
வஞ்சத்தில் வீழுது வையம் - சொலும்
வார்த்தையில் சேருது பொய்யும் - இதில்
வாழ்வைத்தின மோட்டித்துயர்
வீழ்வைமனங் காணாதுறல்
மையம் ! அது ஐயம் !
நெஞ்சுக்கு நீதியைத் தேடு - வழி
நேர்மையி லேயதை நாடு - தம்
எண்ணத்தெழும் வண்ணந்தனைத்
திண்ணத்துடன் சொல்லல்பலம் !
கூடு - தினம் பாடு !
★
6. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து
முன்னேராய் போகிறேன் காணுமே - நானும்
முன்னேற வாழ்வினில் வேணுமே - தினம்
முழுதுடுவேன் கொழுமறைய
உழவனது வேர்வையுடனு
முழுது இப் பொழுது
முறையாகக் கற்றுமே யானும்
முத்தமிழ் பாடிட வேணும் - தமிழ்
முடுகியலும் படியலையே
முடிந்தவரை எழுதியுமே
ஆட இங்குப் பாட!
★
7. கவிஞர் நிறோஸ் அரவிந்த்
கண்களில் மின்னிடும் காதல் - அவள்
காட்டாத போதினிற் சாதல் - ஒரு
கனவேவர அதிலேயிள
மயிலேவர இனிதாகிடும்
காட்சி - மையல் - சாட்சி
பெண்ணவள் வந்திட வேண்டும் - விழி
பித்தினைக் கூட்டிடத் தூண்டும் - அவள்
பெருமாமழை பிறவாநிலை
நறவேயளி நறுமாமலர்ப்
பெண்ணாள் - கயற் - கண்ணாள்
★
8. கவிஞர் கலாம் ஷேக் அப்துல் காதர்
பூமணம் வீசிடும் பூமனம் - கண்டு
பொருட்சுவை தேடுதே பாவினம்-எந்தப்
பொழுதாகிய நிலையாகினும்
உனையேநினைந் துருவாகிடப்
பொழிவேன் -உளம் -நுழைவேன்!
இன்பமே காண்கிறேன் உன்னிடம்- அதை
ஏற்பதாய்க் கூறுவாய் என்னிடம் - நீ
இனியாகினும் உணர்வாயெனக்
கனிவாயுனைக் கவிபாடிட
இழுப்பேன் -தினம்- உழைப்பேன்!
★
9. கவிஞர் அழகர் சண்முகம்
வேலன்பு கழ்தொடுப் பேனே-வரம்
வேண்டஅ வன்கொடுப் பானே-நம்பி
வெறுங்காலொடு மலையேறிட
அருங்காவடி நிலையாகிட
வெறுக்கான்-கேட்க-மறுக்கான்!
நீலன்த மக்கையின் பாலன்-குன்றில்
நின்றத வத்திரு வேலன்-என்றும்
நிறையானவன் நிலமானவன்
மறையானவன் மலரானபொன்
நிறத்தான்-வீர-மறத்தான்
★
10. கவிஞர் வீ.சீராளன்
உண்மையைத் தீயினில் இட்டார் - சிலர்
உள்ளத்தி லும்பழி நட்டார் - இங்கே
உதவாதன விலைபோயிட
இதமானவை இறந்தேவிட
ஊரில் பகை நேரில் !
பெண்மையைப் போற்றுதல் விட்டார் - தன்
பெற்றவள் நெஞ்சமும் சுட்டார் - உயிர்
பிறவாதொரு பிறப்பேயில
பிறந்தாலவ ருயிரும்வலி
பெறுவார் களைப் புறுவார் !
★
11. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
பாடல்ப டித்திடு வோமே அதைப்
பாடிம கிழ்ந்திடு வோமே - என்றும்
பணியாமிது பொருளாமிது
பழமையிது துணையாமிது
படிப்பாய் அதைப் பிடிப்பாய்
ஆடலில் வந்திடும் பாரு - அந்த
ஆட்டத்தில் குறிப்பினைப் பாரு -
அறிவேவழி அடைவோமினி
அடியேகுறி அதுவேகதி
ஆட்டம் அதில் நாட்டம்!
★
12. கவிஞர் பொன்.பசுபதி
கண்ணெதி ரேயவள் நின்றாள் என்னைக்
கண்டதும் புன்னகை செய்தாள்-அந்தக்
கன்னியவள் வந்ததுதான்
என்னையவள் வென்றிடவோ
கனவோ?-இல்லை நனவோ?
என்னுயி ரேயிங்கு வாவா-வந்தே
எண்ணியி சைவையே தாதா-நீதான்
இல்லையெனில் எங்ஙனமோ
அல்லலின்றி வாழ்ந்திடுவேன்
எழிலே-மலர்ப் பொழிலே!
★
13. கவிஞர் குமுதினி ரமணன்
நன்குமு யன்றாலே நம்பி - நாளை
நலமாக வெல்வாயே தம்பி- உன்
நற்றவளும் பெற்றவளும்
கற்றவளும் பெற்றிதரும்
நலமே உன் பலமே.
வென்றாகத் தோற்றிடு வாயே - வீண்
விளையாட் டில்மனமே வாயே - வாழும்
வினையேவழி தனையேமொழி
கலையாதிரு கனவேவிழி
வருமே உரம் தருமே.
★
14. கவிஞர் சியாமளா ராஜசேகர்
வாசமி குந்தது மல்லி - என்றும்
வாசம்கு ளத்திலே அல்லி - அதன்
வசமாகிடும் உளமோயிரு
விழிகாண்கையில் அழகோவிய
வண்ணம் மலர்க் கிண்ணம் !
வீசவ ரும்தென்றல் காற்றில் - கயல்
மீன்களும் துள்ளிடும் ஆற்றில் - அதில்
விளையாடிட விரைந்தோடிட
அலையாடிட நுரைகூடிடும்
வெள்ளம் கவர் உள்ளம் !
★
15. கவிஞர் கட்டிக்குளம் ஓ.சுந்தரமூர்த்தி
வான்மழை தூறிடும் சோலை-இங்கு
வந்தவர் சூடுவர் மாலை -நல்ல
வளமேதரு கவியேதொடு
களமேபெறு திருவேயினி
வகுப்பாய் -கவி -தொகுப்பாய்.
கானக்கு யில்சத்தம் ஓங்க-நல்ல
கானமும் கீதமும் தாங்க-இன்பக்
கடலேதரு மணியேயென
மடலேதரு கவியேயினி
பெறுவாய் -கவி -தருவாய்
★
16. கவிஞர் குருநாதன் ரமணி
கண்ணெதி ரில்வரும் மாயை - அதன்
கட்டுக ளோவெறும் சாயை - மனக்
கனவோடிடும் வனமேயுறும்
கதைபோலவே தினமேகொளும்
கன்னல் - அதில் - இன்னல்!
நண்ணுவ தால்வரும் வினையே - அது
நட்டமொன் றேதரும் விலையே - அது
நலமேயென நயங்காணுவர்
நமனேவர பயமாகுவர்
நடுக்கம் - தரும் - ஒடுக்கம்.
★
17. கவிஞர் சேலம் பாலன்
நேற்றுந டந்ததை எண்ணி - உன்
நெஞ்சத்தி லேபல பிண்ணி -நல்
நிகரேஇலை பலரேசொலும்
அகமேமிகு துயரேகொளல்
நீக்கு-செயல் - ஆக்கு
எத்தனை துன்பங்கள் வந்தும் - அவை
எத்தனை சோதனை தந்தும் - நிதம்
இதிலேமனம் செலலைவிடு
பதிவாய்வெலு பணியேசெய
இன்றே – முனை – நன்றே
★
18. கவிஞர் நாகினி கருப்பசாமி
வாசலில் வந்தயி டுக்கண் - இனி
வாராமல் சென்றிடு மிக்கண்- எனும்
வரமேயிது வடிவாயினி
வருமேசுக வரவேற்பென
வாய்க்கும் .. பயிர்.. காய்க்கும்
எல்லோரும் ஓருற வோடு .. நாளும்
ஏற்றமாய் உள்ளத்தன் போடு .. வாழ
எளிதாகவும் வலிதாகவும்
எமைசேரவே துயரானவை
ஏங்கும்.. வற்றி .. வீங்கும்!
★
19. கவிஞர் அஷ்பா அஷ்ரப் அலி
கூடிநீ வாழ்ந்திடு கண்ணே - உயிர்
கூடுக ளைந்திடு முன்னே - என்றும்
குடியாதிரு குலையாதிரு
வடிவாயொரு விடிவேவரக்
கொழிக்கும் - வாழ்வு - செழிக்கும் !
கொள்கைக ளோடேநீ நின்று - கொண்ட
கொள்கைதான் வாழ்வென்ற னென்று - நீ
குறியாயிரு குனியாதிரு
வறியோனென வளையாதிரு
குளிர்வாய் - வாழ்வில் - மிளிர்வாய்!
★
20. கவிஞர் வனராசன் பெரியகண்டர்
தாயவள் கைகளைப் பற்றி -தினம்
தாள்பணி சேர்ந்திடும் வெற்றி- நலம்
தருவாளவள் திருவானவள்
உறவாகியுன் உயிராய்வரம்
தருவாள் தினம் அருள்வாள்!
காயங்கள் யாவையும் ஆற்றி- உனை
கண்மணி போல்தினம் போற்றி - உன்
கனவாவையும் நிறைவேறிட
தினமாயிரம் சுகஞ்சேர்ந்திட
களிப்பாள் நலம் அளிப்பாள்!
★
21. கவிஞர் அர.விவேகானந்தன்
வீசிடும் தென்றலாம் காற்று -அது
வேதனைத் தீர்த்திடும் கீற்று -வரும்
வினையாகிய துயராமது
சுகமேதரு நிலையாகிட
வீசும் தினம் பேசும்
பேசிடும் ஓசையை நாடும் -உளம்
பேரின்ப வாசலைக் கூடும் - உடல்
பெறலாகிய நலமேதரும்
குளிரேதரு இதமாய்தினம்
பேசும் மனம் கூசும்!
★
22. கவிஞர் மஞ்சுளா ரமேஷ்
இயற்கையைப் போற்றிடு வாயே - நாளும்
இன்பத்தைச் சேர்த்திடு வாயே - என்றும்
இனமோங்கிட இயல்பேபடி
வளஞ்சேர்த்திட வழியாமதில்
இருப்பாய்- மிகச் சிறப்பாய் !
இயல்பினை யேமறந் தாயே - இனி
இன்னலைத் தீர்த்திடு வாயே -நாளும்
இதமேவிய வழியேயொரு
புகழ்மேவிய நிலையாமதில்
இதமாய் - வாழ்க. பதமாய்.!
★
23. கவிஞர் மாரிமுத்து
ஆவலில் கொஞ்சிடும் தாயே - எனை
ஆளாக்கி விட்டவள் நீயே - உன்
அருளாலுயர் திருவாழ்வினை
தருவாயெனத் தினம்பாடிடும்
ஆன்றோர் - என்றும் சான்றோர் !
தேவதை என்றுனைப் போற்றி - மின்னும்
தேரினில் சாமியாய் ஏற்றி - மனந்
தெளிவாகிட அறிவைத்தருங்
கவியாலுனைப் புகழாதவர்
தேற்றார் - வாழ்வில் தோற்றார்
★
24. கவிஞர் தாமோதரன் கபாலி
செந்தமிழ் கற்றிடக் கெஞ்சும் - அதை
சிந்தையில் வைத்திடக் கொஞ்சும் - சுவை
தித்தித்திட முத்தித்தர
சித்தப்பொருள் பத்தித்துணை
செம்மை காட்டும் மும்மை!
அன்னைத்த மிழாலே இன்பம் - அங்கே
அன்பினால் மின்னிடும் அங்கம் - அதில்
அறமாகிட வரமாகிட
அறிவாகிட இசைவாகிட
ஆளும் நமை நாளும்
★
25. கவிஞர் இராச.கிருட்டிணன்
ஆணவம் வீழ்ச்சிக்குத் தாயாம் - அதன்
ஆபத்து ணர்ந்திடு வாயாம் - உனை
அறிந்தோர்களைப் பெரியோர்களை
மதியாமையால் உனைக்கேடதில்
ஆழ்த்தும் - உடன் வீழ்த்தும் !
வீணரின் பேச்சினை நம்பும் - தினம்
வெட்டியாய் ஆசையில் வெம்பும் - பின்னர்
விரும்பாமலே தினந்தோறுமே
வினைசேரவே உனதின்மனம்
மிரளும் - துயர் திரளும்.
★
26. கவிஞர் காவியக்கவி இனியா
சத்திய சோதனை தொடங்கும் - பல
சங்கடம் வாழ்வினில் முடங்கும் - மனம்
சரியானவை தவறானவை
புரியாமலே தொடர்ந்தாலுடன்
சரியும் மதி விரியும்!
சாதிக்கும் எண்ணங்கள் தோன்றும் - ஒரு
சத்தியம் நெஞ்சினி லூன்றும் - மதி
சலிக்காமலும்சகிக்காமலும்
வலிக்காமலே வளைந்தோடிடும்
தணிந்து பின்னர் பணிந்து !
★
27. கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி
அன்புச்செல் லத்தாயே போற்றி! - அம்மா
ஆண்டவன் என்றேதான் தோற்றிச் - சொல்லா
அரும்பாடெனுந் துயர்யாவையும்
துரும்பாக்கிடும் பெருந்தாயவள்
அன்பே - அவள் - பண்பே !
இன்பத்தே எந்நாளும் நானும் - நலம்
ஈவதே உன்பால்நான் காணும் - பெரும்
ஈடிணையில் பேறதனில்
பாடிடுவன் ஆடிடுவன்
இணங்கி - உனை - வணங்கி!
★★★
No comments:
Post a Comment