அன்பு நண்பர்களே! கவிஞர்களே!
புதிய பகுதியின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.:
"#சிந்துபாடுக" இந்தப் பயிற்சியிலும் தவறாமல் கலந்து கொண்டு, இசைத்தமிழ் வடிவங்களைக் கற்க அன்புடன் அழைக்கிறேன். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.
★இந்தப் பயிற்சிப் பகுதி புதிதாகப் பாப்புனைவோர் அஞ்சியொதுங்கா வண்ணம் எளிமையாகவும், பாப்புனைய தேவையான குறிப்புகளோடும் தொடரும்.
சிந்துப் பாடல்களின் இலக்கணங்கள் முனைவர் இரா.திருமுகன் அவர்களின் "சிந்துப் பாவியல் " நூலை அடியொற்றியும், என் சொந்தப் பயிற்சியைக் கொண்டும் கூறப்படுகின்றன.
சிந்து பாடுக - 6
******************
(வளையற் சிந்து )
சதியெனவே பிரித்தனரே
சாதியினை இங்கு - மதச்
சாய்க்கடையின் பங்கு - துயர்
சாய்த்திடவே தங்கு - நாம்
தகர்த்தெறிய பலதடைகள்
தழைத்திருக்கு மிங்கு.!
விதியெனவே புலம்பிடாமல்
விழித்தெழுவோம் இன்றே- மறம்
விதைத்திடுவோம் நன்றே - சதி
வினையறுப்போம் சென்றே - துயர்
விலக்கிடுவோம் எனமுயன்றால்
விலகிடுமே அன்றே!
பாவலர் மா.வரதராசன்
கருத்தூன்றுக :
மேற்கண்ட பாடல் வகை "வளையற்சிந்து"ஆகும். வள்ளித் திருமண நாடகத்தில் முருகன் வளையல் விற்போனாக வந்து பாடும் பாடலாதலால் இப்பெயர் பெற்றது.
அண்ணாமலை ரெட்டியாரின்,
"வாருமையா வளையற்செட்டி ... என்ற பாடல் இவ்வகையே.
கிராமியக் கூத்துகளில் இப்பாடல் அதிகளவு இடம்பெறும்.
***
சிந்துப் பாடல்களைப் பாடிப் பார்த்துச் சந்தம் விளங்கிப் பின் எழுத வேண்டும்.
மேற்கண்ட பாடலில், 15 சீர்களும்,
ஒவ்வொரு சீரிலும் நான்கு அல்லது ஐந்து எழுத்துகள் (ஒற்று நீக்கி) உள்ளன.(சதியெனவே, பிரிதனரே, சாதியினை, சாகடையி, சாதிடவே, தகதெறிய, பலதடைக, தழைதிருகு)
4,7,10,15 ஆம்சீர்கள் ஈரெழுத்தே இருந்தாலும் (இகு★★) (பகு★★)(தகு★★) (இகு★★)அந்த எழுத்துக்குப் பதில் அந்த இடத்தில் நீண்டு இசைக்கும் (நீட்டிப் பாட வேண்டும்) . நீண்டிசைக்கும் எழுத்து ★குறியிட்டுள்ளதைக் காண்க. (பாடலை எழுதும் போது குறியிடத் தேவையில்லை. புரிவதற்காகப் போட்டுள்ளேன்.)
5,8,11, ஆம் சீர்கள் சிறுகோடிட்டுத் தனிச்சீர்களாக, ஓரசைச் சீர்களாக வரும்.(மத, துய, நா)
பொது இலக்கணம் :
மேற்கண்ட பாடலின்படி...
* ஓரடிக்கு நான்கெழுத்துச் சீர்கள் 15 வரவேண்டும்
* சதியெனவே...என்பது முதல் இங்கு என்பது வரை ஓரடி.
விதியெனவே. என்பது முதல், அன்றே... என்பது வரை மற்றோரடி.
* இரண்டடிக்கும் எதுகை அமைய வேண்டும். (சதி, விதி)
* ஓரடியின் 1,3,6,9,12,14 ஆம் சீர்களில் மோனை அமைய வேண்டும்.
* குறில் ஒற்று, நெடி., நெடில் ஒற்று - இவற்றில் தொடங்கும் சீர்களில் 4 எழுத்தும், குறிலிணையாய்த் தொடங்கும் சீர்களில் 5எழுத்தும் இருக்கும்.
இந்த இலக்கணப்படி வருவது "வளையற் சிந்து" ஆகும்.
★அடிகளில் இத்தனை மோனைகளும், இயைபுகளும் அமைவது வளையற் சிந்துக்குக்கு மிகச் சுவையைக் கொடுக்கும்.
★ 4,7,10,15 ஆம் சீர்களில் இயைபு அமைய வேண்டும்.
★பாடிப் பார்த்து விளங்கிக் கொள்ள நம் "பைந்தமிழ்ச் சோலை" கட்செவிக் குழுவில் இந்தச் சந்தத்தில் பாடிய என் பாடலைக் கேட்கவும். அதைப் பழகிக் கொள்ளவும். இதே சந்தத்தில் பாடினால் தான் வளையற் சிந்து வகை விளங்கும். எழுதவரும்.
இவ்வகையான பாடல் ஒன்றை விரும்பிய பொருளமைய வரும் வெள்ளிக்கிழமைக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில் (Coment) மட்டும் பதியவும்.
ஒருவர் ஒரு பாடலை மட்டுமே பதியவும். மற்ற பாடல்களைச் செம்மைப்படுத்த நேரமொதுக்க உதவியாகஇருக்கும்.
★
No comments:
Post a Comment