பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

12 May 2016

‪சிந்துப்பாடுக 5 இன் தொகுப்பு‬ - இலாவணி



அன்பு நண்பர்களே !
சோலைக் கவிஞர்களே! 
சிந்துப்பாடுக. - 5 இல் பல கவிஞர்கள் கலந்து கொண்டு தங்கள் பாக்களைப் படைத்தனர். அனைவருக்கும் நன்றியும், வாழ்த்தும் உரித்தாகுக.
பயிற்சியின் தொகுப்பு, அப்பயிற்சியில் கலந்து கொண்ட கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
கொடுக்கப்பட்டுள்ள வரிசை எண் தரவரிசைக்குரியதன்று. கவிஞர்கள் கவிதைளை அனுப்பிய வரிசைக்குரியது.
அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்...
இந்தத் தொகுப்புப் பாடல்களைப் படிக்க வேண்டா. ★பாடிப் பார்க்கவும். அப்போது தான் சுவைக்கும்.
கவிஞர்களை வாழ்த்துங்கள்...உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


சிந்து பாடுக - 5
(இலாவணி)
1. கவிஞர் வள்ளிமுத்து
கண்மணியே உன்னழகில் 
காவியங்கள் யாத்திடுவேன்
கண்சிமிட்டும் காதல்விழி 
பாத்துப் பாத் து...
பெண்ணணங்கின் பேரழகே 
பெண்வணங்கும் உன்னெழிலே
பெய்யுமழை நிலமானேன் 
நேத்து நேத் து..!

2. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து
தேக்குமரம் நட்டுவச்சேன் 
தென்னந்தோப்பி னோரத்திலே
தெம்மாங்காய் வாழ்கிறது 
தேங்கித் தேங்கிப்
பாக்குமரம் நட்டுவச்சேன் 
பண்ணையிலே பச்சையாகப்
பக்குவமாய் வாழ்கிறது 
ஓங்கி ஓங்கி.

3. கவிஞர் சேலம் பாலன்
நல்லவர்க்குக் காலமில்லை
நாட்டினிலே இப்படித்தான்
நாள்தோறும் பேசுகிறார்
உண்மை உண்மை! 
அல்லவர்கள் வாழ்ந்திடவே
அடுத்தவரைக் கெடுத்திடவும்
அஞ்சாமல் பலசெய்வார்
வன்மை வன்மை! 

4. கவிஞர் காவியக்கவி இனியா
சிந்தனையைத் தூண்டிவிட்டுச் 
செந்தமிழைப் பாடவைத்துச்
சிகரமதில் ஏற்றிவிடு
மீட்டி மீட் டி! 
சுந்தரமாய்க் கவிகளெல்லாம் 
சுடர்தமிழைக் காத்திடவே
சுற்றமுடன் பாடுககை
ஆட்டி ஆட் டி !

5. கவிஞர் பொன்.பசுபதி
சந்தத்தமிழ்ச் சொல்லெடுத்துத்
தந்தனத்தோம் தாளமிட்டுச்
சங்கத்தமிழ் மெட்டெடுத்துப் 
பாடு பாடு!
வந்ததுயர் நீங்கிவிட. 
வன்மையெலாம் கூடிவர
வண்ணமயில் போலவேநீ
ஆடு ஆடு!

6. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
சாதனைகள் உண்டுமிங்கே 
சாதிக்கலாம் நாமுமிங்கே 
சாதிகளும் மாறிவிடும்
பாரீர் பாரீர் . 
வேதனையும் தீர்ந்துவிடும் 
வேண்டுவன கிட்டிடுமே 
வெற்றிகளும் பெற்றிடலாம் 
காணீர் காணீர்!

7. கவிஞர் மாரிமுத்து
காதலனைக் கண்டவுடன் 
கால்கொலுசு ஓசையிடக்
கன்னிநானும் ஓடிவந்தேன் 
நேத்து நேத்து.
வேதனைதான் காதலிலே 
வேசமிடும் காளையவன்
வேலையிலே கண்டுகொண்டேன்
பாத்துப் பாத்து! 

8. கவிஞர் சியாமளா ராஜசேகர்
அன்னையைப்போலன்புசெய்வாள்
ஆபத்திலே காத்திடுவாள் 
அல்லிமலர்ப் போலழகுத் 
தோழி தோழி !
கன்னக்குழி நெஞ்சையள்ள 
கன்னல்மொழி பேசிடுவாள்
கன்னித்தமிழ்ப்போலப்பெண்ணே
வாழி வாழி !

9. கவிஞர் சிதம்பரம் சு.மோகன்
மாண்டவொரு பூமிதனில் 
மீண்டுவரு மோர்பிறப்பும் 
மானிடனெ னக்கினியும் 
வேண்டும் வேண்டும்..
தாண்டவங்க ளாடுசிவன் 
தீண்டியெனைத் தாயுருவில் 
தாங்கிடவு மோடிவர 
வேண்டும் வேண்டும்.

10. கவிஞர் கலாம் ஷேக் அப்துல் காதர்
வானமதில் மேய்ந்துவரும் 
வெண்மதியின் நீளொளியின்
வார்த்தைகளில் கோத்திடுதல் 
கேட்டுக் கேட்டுத்
தேனமுதம் பொங்கிவரும் 
தேயாத இன்னிசையாம்
தெவிட்டாத செந்தமிழின் 
பாட்டுப் பாட்டு!

11. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்
வெள்ளையனைத் தானெதிர்த்தான் 
நல்லபல பாட்டுதந்தான்
வெள்ளைமனம் தானுடையான் 
யாரு யாரு
அல்லவற்றைக் கண்டபோது 
அச்சமில்லை என்றுரைத்து
அங்கெதிர்த்த பாரதியாம் 
பாரு பாரு!

12. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
முத்தமிழின் சொல்லெடுத்து 
முப்பொருளைக் கூட்டுவித்து
முத்துமுத்தாய் வந்திடும்பார் 
தேடித் தேடி
முத்தருமே கொண்டிடுவார்
முத்திக்கு வித்திடுவார் 
முக்கண்ணாய்ப் போற்றிடுவார்ப் 
பாடிப் பாடி!

13. கவிஞர் பரமநாதன் கணேசு
வயல்காட்டு வரப்போரம் 
இடைகாட்டி நடந்தென்னை
வம்புக்கி ழுத்தபடிச் 
சென்றாள் சென்றாள். 
கயல்விழியாள் கூத்தாடக் 
கார்கூந்தல் காற்றாடக்
கன்னியவள் வாய்மொழியால் 
கொன்றாள் கொன்றாள்!

14. கவிஞர் அஷ்பா அஷ்ரப் அலி
நெம்பதுபோல் நாள்முழுதும் 
நேரடியா யுன்னினைவே
நெஞ்சினிலே குத்துதடிப் 
பெண்ணே பெண்ணே !
செம்பவள வாய்திறந்து 
சேதியொன்னு சொல்லுவந்து
சேர்ந்திருப்போ மிக்கணமே 
கண்ணே கண்ணே!

15. கவிஞர் நிறோஸ் அரவிந்த்
பேசுமொழி அஞ்சுகமோ
தேசுவிழி வெண்ணிலவோ
பேதைமனம் பொய்சொலுமோ
உன்னால் உன்னால்!
வீசும்காற்றில் ஈரமிலை 
ஆசைநெஞ்சம் தூங்கவிலை
'மெல்லியலே வந்திடுவாய் 
முன்னால் முன்னால்!

16. கவிஞர் அழகர் சண்முகம்
நாவினிலே நச்சுவைத்து 
நல்லவர்போல் பேசிடுவோர்
நாட்டினிலே ஏராளம் 
உண்டு உண் டு
பாவியரின் வீச்சினிலே 
பற்றவரும் பாதகத்தைப்
பார்த்தறிவாய் உன்மதியைக் 
கொண்டு கொண் டு!

17. கவிஞர் விவேக் பாரதி
மின்னலிடை காற்றினிலே 
மின்னிடவே ! காற்சதங்கை 
மீட்டியொலி கூட்டிவிட 
ஆடும் ஆடும் 
என்னவளின் நாட்டியத்தை 
தூணின்பின் னேமறைந்து 
என்கண்கள் கண்டுகவி
பாடும் பாடும் !

18. கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி
எங்குலந்த ழைக்கவந்த 
தங்கமக ளென்றுனையான்
என்னுளத்தே வைத்திடுவேன் 
ஏத்தி ஏத்தி
தங்குளத்துத் துள்ளலிலே 
பங்குகொள வந்தவளே
தங்கமகப் பாடலினைச் 
சாத்திச் சாத்தி!

19. கவிஞர் நாகினி கருப்பசாமி
கதவடைப்புப் போராட்டம் 
கல்லெறிந்து அட்டூழியம்
காலமெல்லாம் நடக்குதிங்கே 
ஏனோ ஏனோ
மதவெறி யும்சேர்ந்திங்கு 
மறையாத கூத்தாகி
மாரியெனப் பொழிவது 
தேனோ தேனோ!

20. கவிஞர் கட்டிக்குளம் சுந்தரமூர்த்தி
செந்தமிழின் தாள்பணிந்து 
செம்மையுறத் தேர்வதற்குச்
செங்கமலச் சிந்துபாட 
வாங்க வாங்க!
நந்தமிழின் நற்றிசையை 
நங்கூரத் தேன்கவியை
நாள்முழதும் உண்டிடுவோம் 
ஓங்க ஓங்க! 

21. கவிஞர் கோவிந்த் தண்டா
அஞ்சுதலை விட்டுவிட்டு
ஆறுதலைச் சொல்லிவைத்து
ஆனவரை பார்த்திடுவோம்
வாங்க வாங்க
கெஞ்சிநின்ற காலமது
கேடுகெட்டுப் போயிருச்சு
கேட்டதெல்லாம் கிட்டிடுங்கை
ஓங்க ஓங்க! 

22. கவிஞர் குருநாதன் ரமணி
காதலெழக் காலமிகக் 
கன்னியவள் கால்கடுக்கக்
கடலாடும் கரைதன்னில் 
நின்றாள் நின்றாள்
வேதனையாய் வீரனவன் 
வேறுவொரு வேல்விழியாள்
வீட்டெதிரே விழிபார்த்துச் 
சென்றான் சென்றான்! 

23. கவிஞர் வனராசன் பெரியகண்டர்
மின்னல்வெட்டும் கண்களினால் 
என்னைவெட்டிப் போட்டவளே
மீண்டுவந்து நிற்கறேண்டி 
பாரு பாரு!
பொன்னைவெட்டி உன்னைசெய்து
பூவுலகில் வாழவைத்த 
புண்ணியமும் செய்ததிங்கு 
யாரு யாரு!

24. கவிஞர் தாமோதரன் கபாலி
நெஞ்சினிலே வஞ்சகமே 
நெற்றினிலே புத்திகேடு
நற்றமிழை தேடிவந்து 
சேரா சேரா 
வெஞ்சினமே சீரழிய 
வெல்லுமன முத்தமிழை 
விந்தையாலே விஞ்சிவிட 
நேரா நேரா! 

25. கவிஞர் இரா.கி. இராஜேந்திரன்
செங்கழனிப் பூமலர்ந்து 
செவ்விதழில் வண்டுறங்கும்
செங்கமலப் பாவைதனைச் 
சேர்த்துச் சேர்த்து.,
செஙகனியின் வாயிதழில் 
சொர்க்கமதைக் கண்டிடுவார்
செங்கரும்பு வார்சிலையைப் 
பார்த்துப் பார்த்து! 

26. கவிஞர் அர.விவேகானந்தன்.
வெண்ணைதினம் உண்டவனை 
வெள்ளைமனம் கொண்டவனை
வெற்றியதைச் சேர்ப்பவனைக் 
கண்டு கண்டு
கண்குளிரக் கண்டிடலாம் 
காலமெலாம் பாடிடலாம்
கண்ணனவன் காட்சியதும் 
உண்டு உண்டு!

27. கவிஞர். ஜெயபாலன்
விந்தைகளை வித்தையாக்கி 
விசயங்கள் தொட்டுநின்று 
விரக்தியைக் கைப்பிடித்து 
நின்றேன்!நின்றேன்!
சந்தைக்குள் விலையாக்கிச் 
சக்கரத்தைச் சுற்றிவிட்டுச்
சங்கடத்தை வீசுகின்றார் 
என்பேன்! என்பேன்!

28. கவிஞர் வீ.சீராளன்
எண்ணத்திலே தூய்மைகொண்டு 
கண்ணனையே எப்பொழுதும் 
எண்ணியவர்க் கில்லையொரு 
கேடு கேடு 
உண்மையிதைப் பார்முழுக்க 
ஒண்டமிழில் சாற்றுபவர் 
ஊழிப்பயன் சேர்க்குமொரு 
வீடு வீடு!
★★★★★


No comments: