பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

16 Nov 2015

பாட்டியற்றுக - 13


நண்பர்களே.! கவிஞர்களே.!
அறிஞர் பலரும் பாராட்டும் பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 13" இதோ.!முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, இந்தப் பதிவைப் பகிர்ந்தும், மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.! 
*** *** *** ***
பாட்டியற்றுக - 13

காப்பியக் கலித்துறை
தாயே தமிழே உனையேமனத் துள்நி றைத்துத்
தீயாய் இலங்கும் செறிவானதம் பாக்க. ளாலே
வாயாற் புகழ்ந்து மகிழ்வாரவர் வாழு நாளை
நீயே நிறைவாய்ப் பலவாண்டெனச் செய்கு வாயே.
--பாவலர் மா.வரதராசன்
*** *** *** ***
கருத்தூன்றுக.:
மேற்கண்ட பாடல் "காப்பியக் கலித்துறை" ஆகும். இதற்கு "வண்ணக் கலித்துறை ", "விருத்தக் கலித்துறை " என வேறு பெயர்களுமுண்டு. 
'ஓரளவு சந்தமிருப்பதால் வண்ண விருத்தம் என்றும், காப்பியங்களின் கதைமாந்தர்களின் உணர்வுக்கேற்ற வீச்சுக்கு உதவுவதால் காப்பியக் கலித்துறை என்றும் பெயர் பெற்றது.
பொது இலக்கணம்.
*ஓரடிக்கு ஐந்து சீர்கள் பெற்று,
*முதல் சீரும், ஐந்தாம் சீரும் மோனையால் இணைந்து, (பாடலின் சந்தம் கருதி மோனையை எந்தச் சீரிலும் கொள்ளலாம். சான்று பாடலைப் பார்க்க) 
* ஓரடிக்கு "தேமா, புளிமா, புளிமாங்கனி, தேம, தேமா " என்னும் சீர்வரையறையைப் பெற்றும்,
*நான்காம் சீர் "தேம " என்றது, குறிலீற்றுத் தேமாச்சீர் மட்டுமே வரல் வேண்டும். (துள்நி, பாக்க, வாழு, செய்கு) துள்ளே, பாக்கள், வாழும், செய்வாய் இவையும் தேமாச்சீர்கள் தான். ஆனால் சந்தம் கெடும். குறில் ஒற்று, நெடில், நெடில் ஒற்று ஆகிய தேமா வரலாகாது.
* அடிதோறும் ஒரே எதுகையைப் பெற்றும்,
*புளிமாங்கனிச் சீரை நன்கு கவனிக்கவும். தனதானன என்று நெடிலை நடுவில் கொண்ட புளிமாங்கனிச் சீரைப் பெற்றும்,
* ஈற்றுச்சீர் ஏகாரம் இருப்பின் நன்று. இல்லையெனின் எப்படியும் முடியலாம். 
இந்த வரையறைகளைக் கொண்டு
வருவது "காப்பியக் கலித்துறை " எனப்படும்.
நண்பர்களே.! இப் பா வகை மிக எளிமையானது. கட்டுப் பாடுகள் குறைந்த இவ்வகை தொடர்ந்து பாட ஏதுவாக இருப்பதால் (ஈற்றுச்சீர் வரையறை இன்றி) தொடர்நிலைச் செய்யுள்களை இயற்ற உகந்தது.
கம்பர் இதை 13 இடங்களில் 288 பாடல்கள் பாடியுள்ளார். 
சம்பந்தர் தேவாரம்,சிந்தாமணி, சூளாமணி, நீலகேசி, வளையாபதி, பெரிய புராணம் ஆகியவற்றில் இது பயின்றுள்ளது.
இவ்வகையான ஒரு விருத்தத்தை வரும் வெள்ளிக்கிழமை நண்பகலுக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில் மட்டுமே எழுதி அனுப்புங்கள்.
அன்பு கூர்ந்து ஒருவர் ஒரு பாடலை மட்டுமே அனுப்பவும். பயிற்சிக்கு நேரம் ஒதுக்க உதவியாக இருக்கும்.
★★★

2 comments:

RPSINGH said...

மிக நுட்பமான வலைப்ப்பூவை இன்று கண்டுகொண்டதில் பேருவகை கொள்கிறேன்...மீண்டும் வருவேன்

மரபுமாமணி பாவலர் மா.வரதராசன் said...

வாருங்கள் நண்பரே. தங்கள் வருகை எமக்கு உவகை.! நன்றி!