பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

21 Feb 2016

சோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 14.




#‎சோலைக்கவியரங்கம்‬

கவிஞரை அழைத்தல் : 14.
(காவடிச்சிந்து)

நாளுந்த மிழ்தனை எண்ணி - நலம்
உண்ணி - என்றும்
நற்றமி ழைக்கொள்வார் சென்னி - இவர்
நறுந்தேன்மழை உளவாம்கவி
நலமோங்கிட மனமேகொள
நடப்பார் - புகழ்
படைப்பார்!

‪#‎இராசகிருட்டினன்‬ ஐயா வருக!
இன்றமிழ்த் தேனள்ளித் தருக!!
★★★


போற்றப்பட வேண்டியது...
ஈ. ஒழுக்கம்
**************
கவிஞர் ‪#‎இராசகிருட்டிணன்‬
திருச்சி, ஸ்ரீரங்கம்.
வங்கிப்பணி ஓய்வு பெற்றவர். பல அமைப்புகளில் பொறுப்பு வகித்துத் தொண்டாற்றுபவர். ஈரோடு தமிழ்ச் சங்கப் பேரவையின் செயலர். மரபின் மீது பற்றும், பாசமும் கொண்டவர்.


போற்றப்பட வேண்டியது...
ஈ. ஒழுக்கம்
""""""""""""
இறைவாழ்த்து
(நேரிசை வெண்பா)

தும்பிக்கை யானைத் துணையாகும் கந்தனை
அம்பிகை நாதன் அரனையும் -- நம்பி
ஒழுக்கம் எனுமிவ் வுயர்ந்த தலைப்பில்
பழுதின்றி யாக்கிறேன் பா.

தமிழ் வாழ்த்து
(எண்சீர் விருத்தம்)

வாழ்கின்ற மொழிகளிலே தொன்மை கொண்டும்
            வளர்கின்ற மொழியாக யாண்டும் உள்ள
ஏழுலகில் எங்கெங்கும் தேடி னாலும்
            எந்தமிழுக் கீடாக ஏதும் உண்டோ?
வீழ்ச்சியதும் நெருங்கிடினும் விலகிப் போகும்.
            வீழ்த்தவரும் பகையெல்லாம் சாய்த்து வெல்வோம் 
தாழ்ச்சியதும் உனக்கென்றும் வாரா திங்கே
            தலைமீதே உனைவைத்தோம் அருள்வாய் நீயே!!

தலைவர்க்கு
(நேரிசை வெண்பா)

சிந்தையிலே செந்தமிழின் சீர்மரபைக் கொண்டவராய்ச்
 சந்ததம் சோலை தனிலுழைக்கும் - முந்துபுகழ்
நல்வரத ராசனார் நற்றலைமை போற்றுவேன்
பல்லவையை ஏத்திப் பணிந்து.


ஒழுக்கம்
(எண்சீர் விருத்தம்)

தனிமனிதர், குமுகாய மேன்மை தன்னைச்
             சரியாக வழிநடத்தும் தகைமை யாளர்
மனிதர்கள் நல்வாழ்வு வாழ வேண்டி
             வகுத்திட்டார் மிகச்சிறந்த வழிகள் தம்மை.
நனிசிறந்த அவ்விதிகள் மேன்மை கண்டே
             நானிலத்தார் ஒழுக்கமெனப் பெயரும் இட்டார்
மனிதர்கள் அவ்வொழுக்க வழியில் என்றும்
             மாநிலத்தில் வாழ்ந்திடுதல் மிகவும் நன்றே!

ஒருவனுக்கு ஒருத்தியென வாழ்தல் நன்றே!
             ஒருபோதும் பிறரைத்துன் புறுத்தல் வேண்டா!
வருவாய்க்காய் உயர்விதியை மீறல் வேண்டா!
             வையகத்தில் பிறருக்கே உதவ வேண்டும்!
அருவருக்கத் தக்கவற்றை நீக்க வேண்டும்!
             அகந்தனிலே அடிப்படையில் பண்பு வேண்டும்!
ஒருபோதும் பிறர்பொருள்மேல் ஆசை வேண்டா!
             ஒழுக்கத்தின் உயர்ந்தசில விதிகள் ஈதே!

பெண்களையே தெய்வமெனப் போற்ற வேண்டும்!
             பெரியவர்கள் சொன்னவற்றின் நிலையின் .றென்னே? 
உண்மையிலே அவர்களுக்கெத் தனையோ துன்பம்,
             ஒருவழியில் என்றில்லை பலவும் தொல்லை.
மண்ணாசை பொன்னாசை உளத்தில் கொண்டு
             மனிதருமே ஆடுகின்ற ஆட்டம் கோடி!
எண்ணத்தில் ஒழுங்கீனம் கொண்டோர் இங்கே
             எத்தனையென் றெண்ணிட்டால் நடுங்கும் நெஞ்சே!

சாலையிலே விதிமீறிச் செல்ப வர்கள்
             தம்மாலே பிறருக்கெத் தனையோ துன்பம்!
வேலையதும் சாதகமாய் முடிக்க வேண்டி
             விதிமீறிச் செல்பவர்கள் கோடிக் கோடி!
மாலையதும் மதுவருந்தும் வேளை யென்றே
             வாழ்கின்ற வாழ்க்கையதும் சரியா சொல்வீர்?
தோலைத்தான் தடிப்பாக மாற்றி விட்டால்
             தொல்லுலகில் ஒழுக்கமதும் அரிதாய்ப் போகும்!

படிக்கின்ற மாணவர்கள் கூட இன்று
             பள்ளியிலே மதுவருந்தும் கொடுமை கண்டோம்!
அடித்துத்தான் திருத்திடவே தடைகள் செய்தால்
             ஐயையோ ஒழுக்கத்தின் நிலையும் என்ன?
முடிக்கும்முன் அடியேனும் ஒன்று சொல்வேன்!
             முயன்றாலே முடியாத தொன்றும் இல்லை!
அடிப்படையைத் திருத்துவதும் மிகவும் தேவை!
             அனைவருமே இதற்காக உழைக்க வேண்டும்!


இராச.கிருட்டினன்
நாள் :22/01/2016
★★★★★

No comments: