#சோலைக்கவியரங்கம்
கவிஞரை அழைத்தல் : 15
(அறுசீர் விருத்தம்)
கடவுளைப் போற்றிப் பாடக்
கவிசுரே (ஷ்) சீனி வாசன்
நடந்திடுங் கவிய ரங்கில்
நற்கவி தரவந் துள்ளார்.
தொடக்கமே இதுதான்...பாட்டில்
தொய்வுகள் இருந்தால் கூடப்
புடம்பட உதவு மென்று
புகுந்தாரே சோலை தன்னில்!
#சுரேஷ்சீனிவாசன் அவர்களே வருக!
சொற்றமி ழால்கவி தருக!!
★
போற்றப்பட வேண்டியது...
ஆ. கடவுள்
"""""""""""
கவிஞர் சுரேஷ் சீனிவாசன்
Suresh Srinivasan
பைந்தமிழ்ச் சோலையில் மரபு பயின்றவர்.
ஒரு நூலின் ஆசிரியர். திருமாலின் பெருமையைக் குறித்த குறுந்தகடும் வெளியிட்டுள்ளார்.அறிவியலில் இளங்கலை, முதுகலை முடித்துத் தற்போது முதுலைத் தமிழ் பயிலும் தமிழ்ப் பற்றாளர்.
★
அவையடக்கம்
(அறுசீர் விருத்தம்)
கடவுளைப் போற்றிப் பாடவும் எனக்குக்
கிடைத்ததே நல்வாய்ப்பு!
தடமதை யமைத்துப் பைந்தமிழ்ச் சோலை
தந்தது கவியரங்காய்.
உடனிருந் தெமக்குப் பயிற்சியும் தந்து
ஊக்கம ளித்தவரும்
கடமையைச் செய்தே களித்திடும் நமது
கவிஞரை வாழ்த்துகிறேன்!
★
அ. கடவுள்
*************
(கட்டளைக் கலிப்பா)
இறைவா தேடினேன் உன்னையே நாடினேன்
இருட்டில் வாழ்கிறேன் மீட்டிட வாருமே
குறைகள் நீங்கவே நன்மைகள் தோன்றவே
கடவுளே வாருமே காட்சியைத் தாருமே
சிறைதான் பூமியே வாடினேன் நாளுமே
சிரமே தாழ்த்தினேன் சீக்கிரம் வாருமே
நிறைகள் யாவையும் பூமியில் தங்கிட
நேரில் தோன்றியே காத்திடு கடவுளே!
★
(அறுசீர் விருத்தம்)
சங்குச் சக்கரம் கொண்டவனே
சாந்த முகமும் கொண்டவனே
எங்கும் இருப்பாய் என்றார்கள்
எதிலும் இருப்பாய் சொன்னார்கள்
எங்கே உன்னைக் காண்பேனோ
எங்கே நீயும் மறைந்தாயோ
இங்கே கல்லில் உறைந்தாயோ
இல்லை யென்றால் வாழ்வேனோ!
தினமும் உன்னை நினைப்பேனே
துதித்தே பொழுதை கழிப்பேனே
மனத்தில் உன்னை வைப்பேனே
மகிழ்ந்தே நாளும் இருப்பேனே
தனமும் புகழும் சேர்ந்தாலும்
தெய்வ முன்னை மறவேனே
எனது வாழ்க்கை வளம்பெறுமே
எல்லாம் உந்தன் அருளாலே!
★
(கலிவிருத்தம்)
மண்ணையுண்ட மன்னவனை மாதவனைக் கேசவனை
வெண்ணைநாடிச் சென்றவனை வேதமதைச் சொன்னவனைக்
கண்குளிரக் கண்டிடுவேன் கண்ணனையே போற்றிடுவேன்
புண்ணியமே செய்ததனால் பூியிலே கண்டுவிட்டேன்
கண்ணனுனைக் காதலிக்க கன்னியர்கள் காத்திருப்பார்
மன்னனுனை மாலையிட மாதவமும் செய்திடுவார்
விண்ணவரும் போற்றிடுவார் விண்டவரோ தோற்றிடுவார்
எண்ணமெலாம் உன்நாமம் என்றென்றும் பேரின்பம்!
★
சுரேஷ் சீனிவாசன்
நாள் : 22/01/2016
★★★★★
No comments:
Post a Comment